SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2019-12-31@ 10:24:37

நாத ஹரே! ஜகன்நாத ஹரே! பூரி, ஒடிஸா மாநிலம்.

அந்த அடர்ந்த வனப்பகுதிக்கு உத்கல் என்று பெயர்.அங்கே பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர்.அவர்களில் விசுவாவசுவும் ஒருவர்.மிகச் சிறந்த திருமால்  பக்தர்.கானகத்தின் நடுவிலே அவர் ஓர் அபூர்வமான மரத்தைக் கண்டார். நீல நிறத்தில் அமைந்திருந்த அந்த அதிசய மரத்தை கிருஷ்ணராகவே கருதி அவர்  வழிபட்டு வந்தார். யாருமறியாமல் ரகசியமாக பூஜைகள் செய்தார்.நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகின.

அதே சமயம் பூரி மன்னன் இந்திரத்யும்னன் கனவிலே பகவான் கிருஷ்ணர் தோன்றி, தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்தார். மெய் சிலிர்த்துப் போனான்  மன்னன். எத்தனை பெரிய பாக்கியம்! ஜகன்நாதரே தனக்கு கோயில் எழுப்பு என்று கூறும் அற்புதம் வேறு யாருக்குக் கிட்டும்? என்று உடனே பணியைத்  தொடங்கினான்.இதுவரை எங்குமே இல்லாத திருவடிவில் அற்புதமாக கிருஷ்ணரின் விக்ரகத்தை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய விரும் பினான்.பலவிதமான  சிலைகளைப் பார்த்தான்.எதுவுமே அவனுக்கு திருப்தி தரவில்லை. கருவறை நாயகனைத் தேடிக் கண்டுபிடிக்க நாற்புறங்களிலும் ஆட்கள் சென்றனர். எங்கிருந்தும்  உற்சாகத் தகவல் வரவில்லை.

இந்திரத்யும்னனின் அமைச்சரான வித்யாபதிக்கு காட்டுக்கு நடுவே ஒரு கிருஷ்ணர் இருப்பது தெரிய வந்தது. அதுதான் விசுவாவசு வழிபட்ட மர   கிருஷ்ணர்.  விசுவாவசுவிடம் கேட்டுப் பார்த்தார் அமைச்சர்.மானசீகமாக தான் வழிபடும் கண்ணனை அவர் எப்படித் தருவார்?அந்த மர கிருஷ்ணர் இருக்கும் இடத்தைக்கூட  சொல்லவில்லை.எப்படியும் மன்னனுக்கு அந்தக் கிருஷ்ணரைத் தர வேண்டும் என சங்கல்பம் செய்தார் அமைச்சர்.விசுவாவசுவுக்கு ஒரு அழகிய பெண்  இருந்தாள்.அவளைத் திருமணம் செய்து கொண்டார் வித்யாபதி.சிறிது சிறிதாக மாமனாரின் மதிப்பைப் பெற்று, அந்த மர கிருஷ்ணரை வழிபட அனுமதி  கேட்டார்.ஒருநாள் வித்யாபதியின் இரு கண்களையும் கட்டி அவனைக் காட்டிற்கு அழைத்துச் சென்றார் மாமனார்.

வித்யாபதி ரகசியமாக ஒரு காரியம் செய்தார். மாமனாருக்குத் தெரியாமல் செல்லும் பாதை நெடுக கடுகைத் தூவிக்கொண்டே சென்றார். கிருஷ்ணரை தரிசித்த  பின் மீண்டும் வித்யாபதியின் கண்கள் கட்டப்பட்டன.வீடு திரும்பினர்.மழை பெய்து கடுகுகள் எல்லாம் செடிகளாயின. அதை அடையாளம் வைத்து வித்யாபதி  கானகம் சென்று மர கிருஷ்ணரைத் திருடி இந்திரத்யும்னனிடம் தந்தார். மகிழ்ந்த மன்னன் அந்த சிலையை கோயிலில் வைக்க, அன்றே அந்த கிருஷ்ணர்  காணாமல் போனார்.புதிய இடத்தில் இருக்க விரும்பாமல், கிருஷ்ணர் காட்டுக்கே திரும்பிச் சென்று விட்டார். கிருஷ்ணரைக் காணாத மன்னன்  அதிர்ச்சியடைந்தான். அதே போன்ற புதிய சிலையை அமைக்க விரும்பினான்.

அப்போது முதியவர் ஒருவர், பெரிய மரத்துண்டுடன் மன்னனைக் காண வந்தார். அவர்தான் தேவசிற்பி விஸ்வகர்மா. தான் சிலை செய்து தருவதாகச் சொன்ன  அவர், ஒரு நிபந்தனையும் விதித்தார்.‘‘சிலை செய்ய 21 நாட்கள் ஆகும். ஒரு தனியறையில் அதைச் செய்வேன்.செய்து முடிக்கும் வரை யாரும் கதவைத்  திறந்து பார்க்கக் கூடாது. உருவம் முழுமையடைந்ததும் நானாக வெளியே வருவேன்’’ என்றார். மன்னன் அதற்குச் சம்மதிக்க மரக் கட்டையுடன் தனியறையில்  புகுந்தார் விஸ்வகர்மா.நாட்கள் நகர்ந்தன. அறையிலிருந்து சிலை செதுக்கப்படும் எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை.சிற்பிக்கு ஏதேனும் ஆபத்து  ஏற்பட்டிருக்குமோ என மகாராணி குண்டிச்சா தேவி பயந்தாள்.நிபந்தனையை மறந்து சட்டென்று கதவைத் திறக்க, விஸ்வகர்மா மறைந்து விட்டார்.

மரக்கட்டை மூன்று துண்டுகளாக, முற்றுப் பெறாத அமைப்பில் பலராமர், சுபத்ரா, ஜகன்நாத மூர்த்தங்கள் இருந்தன. இறைவன் திருவுளம் அதுதான் என நினைத்த  விசுவாவசு, அந்த மூன்று முற்றுப் பெறாத சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். அப்போது அசரீரியாக நாராயணன் குரல் ஒலித்தது.‘‘என்  வடிவத்தை யாரும் சிலையாக வடிக்க முடியாது. தேவசிற்பி விஸ்வகர்மா வடித்த இதே வடிவங்களிலேயே இக்கருவறையில் அருள்வேன். வைகுண்டத்தின்  பரிபூரண சாந்நித்யம் இத்தலத்திலும் இருக்கும்’’ என்று கூறினார் திருமால். இப்பொழுதும் அங்கு கண்ணன், பலராமர், சுபத்ரா மூவருமே கை, கால்  அவயவங்களுடன் இருக்க மாட்டார்கள்.

மூன்று தனித்தனி தாரு(கட்டைகளாக), அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதைத்தான் ஜகந்நாதராக வழிபடுகிறார்கள். கறுப்பு நிறத்தில் வட்ட  வடிவமான பெரிய கண்களுடன் ஜகன்நாதர் காட்சி தருகிறார். அந்த கண்கள் ச(க்)கதோலா, ச(க்)கனன்யனா என அழைக்கப்படுகின்றன. பலராமர் வெள்ளை  நிறத்தில் தாமரைக் கண்களுடன், மஞ்சள் நிறத்திலுள்ள சுபத்ராவிற்கு அருகில் உள்ளார்.ஜகன்நாதரது நீட்டிய கைகள் அவர் பக்தர்களை அரவணைத்துக் காப்பதைக்  குறிக்கும். பெரிய கண்கள் எல்லாவற்றையும் காண வல்ல பரமாத்ம தன்மையைக் குறிக்கிறது. இவர்களைத் தவிர சுதர்சனர், ஸ்ரீதேவி, பூதேவி, நீலமாதவர்  போன்றோரும் இங்கு அருளாட்சி செய்கின்றனர்.

ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பஞ்சலோகத்தாலும், சுதர்சனர் வெறும் கட்டை வடிவிலும் ஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை வலம் வரும் குறுகலான பாதை  சஹனமேலா எனப்படுகிறது.மேலா என்றால் திறப்பு என்று பொருள்.ஜகன்நாதரை அனைவரும் அருகில் சென்று தரிசிக்கலாம். ஜகன்நாதர் ‘அன்ன பிரம்மா’  என்று வணங்கப்படுகிறார். ஆலயத்தின் பிரசாதம் தயாரிக்கும் சமையலறை, ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் வசதிகள் கொண்டது.  தினமும் நானூறு மூட்டை அரிசியை, பாதாளத்தில் இருந்து பெருகும் வற்றாத கிணற்றில் இருந்து தண்ணீரை வாளி மூலம் இழுத்து, மண் பானைகளில் விறகு  அடுப்பு கொண்டு சமைக்கிறார்கள்.

ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பானைகளை வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும்போது மேலே உள்ள ஏழாவது பானை அரிசி முதலில் சாதமாகும் அற்புதம்  இத்தலத்தில் நிகழ்கிறது. சமைத்த அத்தனை விதமான பிரசாதங்களையும் வாயை மூடிக்கொண்டு, தோளில் காவடி போன்று சுமந்து, ஜகன்நாதர் அருளும் ரத்தின  சிம்மாசனக் கருவறை வரை எடுத்துச் சென்று, அவருக்கும் விமலா தேவிக்கும் நிவேதித்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. உலகிலேயே பெரிய  பிரசாத சாலை இத்தலத்து ஆனந்த் பஜார்தான்.

இங்கு ஜகன்நாதருக்கு படைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. காஜா எனும் மைதா, நெய், சர்க்கரை சேர்க்கப்பட்ட பிரசாதம், பக்தர்களால் பெரிதும் விரும்பி  சுவைக்கப்படும் பிரசாதமாகும். விமலா தேவி இங்கே சந்நதி கொண்டிருக் கிறாள். 51 சக்தி பீட நாயகிகளுள் ஒருவளான இந்த தேவியே, புது ஜகன்நாதர் செய்ய  வேண்டிய வேப்ப மரத்தை குறிப்பாக உணர்த்துபவள்.ஜகன்நாதரின் பிரசாதங்கள் இந்த அம்பிகைக்குப் படைக்கப்பட்ட பிறகே, மகாபிரசாதமாக மாறுகிறது.  அவ்வளவு மகிமை வாய்ந்த வரப்பிரசாதி இவள்.
 
காஜா
 
தேவையான பொருட்கள்
 
மைதா மாவு - 600 கிராம்
சர்க்கரை - ஒன்றரை கிலோ
நெய் - 2 கிலோ
டேபிள் சால்ட் - 2
 
சர்க்கரை பாகு வைக்க

முதலில் சர்க்கரை முழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு, மிதமான சூட்டில் கனமான பெரிய பாத்திரத்தில் கொதிக்க விட்டு, இரண்டு கம்பி பதம் பாகு  வைத்துக்கொள்கிறார்கள்.
 
செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து, டேபிள் சால்ட், 2 கரண்டிநெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்கிறார்கள். பிறகு  பிசைந்து வைத்த மைதா மாவை இரண்டு அல்லது மூன்று அப்பளமாக மெல்லியதாக இட்டுக்கொள்கிறார்கள். பின் நெய்யை  அப்பளங்களின் ஒரு புறம்  முழுமையாக தடவி கொண்டு. பின் அப்பளங்களை மெல்லியதாக சுருட்டிக் கொள்கிறார்கள் (ரோல்). ரோல் செய்த அப்பளங்களை வேண்டிய அளவுக்கு சிறிய  துண்டுகளாக வெட்டிக் கொள்கிறார்கள். வெட்டிய துண்டுகளை மீண்டும் மெல்லிய அப்பளங்களாக இட்டுக் கொள்கிறார்கள். அப்பளத்தை பாதியாக வெட்டி  ஒவ்வொரு பாதியையும் இரண்டாக மடித்துக் கொள்கிறார்கள் (முக்கோணமாக). அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முக்கோணங்களை நெய்யில்  போட்டு பொரித்து எடுத்து.தயாராக வைத்திருக்கும் சர்க்கரை பாகில் போட்டு ஒரு நிமிடம் பொரித்து எடுத்து தனியாக வைக்கிறார்கள். நாவையும் மனதையும்  ஈர்க்கும்காஜா பிரசாதம் தயார்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்