SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னதானம் செய்யுங்கள் ஆனந்த வாழ்வு கிட்டும்!

2019-12-30@ 10:12:25

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?2018ல் இருந்து பல கொடுமைகளை அனுபவித்து வருகிறேன். இருப்பதற்கு பதில் சாகலாம் போல் தோன்றுகிறது. சுகர் இருப்பதால் கிட்னி பாதிக்கும், கண் பாதிக்கும் என்ற பயம் வாட்டுகிறது. இதை எல்லாம் விட என் மனைவியின் மீது உண்டான சந்தேகம் குடும்பத்தை பிரித்துவிட்டது. நான் வாழ வழி சொல்லுங்கள்.
- கோவிந்தராஜ், நெய்வேலி.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் பிரச்னைக்குக் காரணம் சந்தேக புத்திதான் என்பதைத் தெள்ளத் தெளிவாக உங்கள் கடிதம் உணர்த்துகிறது. உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை. காளசர்ப்ப தோஷம் என்ற ஒன்றைத் தவிர மற்றபடி உங்கள் ஜாதகத்தில் வேறு பிரச்னை ஏதும் இல்லை. லக்னாதிபதி சுக்கிரன், தன ஸ்தானத்தில் அமர்ந்து நிதி நிலையை நன்றாக வைத்திருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் நல்லதொரு குடும்பமும் அமைந்திருக்கிறது. அழகான மனைவி, அன்பான குழந்தைகள் என்று அமைந்திருந்தும் அதனை வைத்துக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவில்லை. பிரச்னைக்கான காரணத்தை அறிந்திருந்தும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஏழாம் பாவக அதிபதி செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் நல்ல மனைவியே அமைந்திருக்கிறார். பரணி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மனைவி மிகவும் நல்ல குணம் படைத்தவர் என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள். நம்பிக்கை இல்லாதவனால் நல்லபடியாக வாழ இயலாது. கிருத்திகை தோறும் வேலுடையான்பட்டு ஆலயத்திற்குச் சென்று சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள். 03.04.2020 முதல் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

?மூன்று வருடத்துக்கு முன்பு சொத்து ஒன்று வாங்கியதில் அதிகமான தொகை செலவழித்துவிட்டதாக உணர்கிறேன். சொத்தின் மதிப்பை விட அதிகமாகக் கொடுத்துவிட்டேன். இது என் மனதை வருத்தி வருகிறது. கஷ்டப்பட்டு ஈட்டிய வருமானத்தின் பெரும்பகுதி என்பதால் மனம் அலைபாய்கிறது. இந்த சொத்தினை என் ஜீவன காலத்திற்கு முன்பாக நல்ல விலைக்கு விற்று மேற்படி நஷ்டம் ஈடுகட்டப்படுமா?
- நடராஜன், சென்னை.

உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிரன் புக்தி நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். லக்னாதிபதி சனி எட்டாம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே தற்காலம் அதாவது சனி தசையில் நீங்கள் செய்த விஷயம் நஷ்டத்தைத் தந்துவிட்டாக எண்ணி வருந்துகிறீர்கள். உண்மையாக உழைத்து சம்பாதித்த பணத்தை சனி பகவான் என்றுமே நஷ்டத்தில் தள்ளமாட்டார். மேலும் உங்கள் ஜாதகத்தில் சுயசம்பாத்ய சொத்து விவரத்தினைப் பற்றிச் சொல்லும் நான்காம் பாவகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து அமர்ந்திருக்கிறார்கள். தனலாபாதிபதி குருவுடன் தன காரகன் சுக்கிரனும் இணைந்து நான்கில் அமர நிச்சயமாக நீங்கள் வாங்கிய சொத்து நஷ்டத்தினைத் தராது. அதனால் அந்த சொத்தினை நீங்கள் விற்க நினைக்காதீர்கள். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அந்தச்சொத்து நூறு மடங்கு பலனைத் தரத்தான் போகிறது. அதையும் உங்கள் வாழ்நாளிலேயே கண்கூடாகக் காண்பீர்கள். தினமும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி மஹாலக்ஷ்மியை வழிபட உங்கள் பிரச்னை தீரும்.
“யாதேவீ ஸர்வ பூதேஷூ ஐஸ்வர்ய ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:”

?எங்கள் குடும்பத்தில் வாழையடி வாழையாக என் தந்தைக்கு, எனக்கு என் மகனுக்கு என்று இரண்டு திருமணம் நடைபெறுகிறது. எனது மகனின் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். வழக்கு விவகாரங்கள் முடிந்தபிறகு இரண்டாவது திருமணம் நடைபெற்று தற்போது அவரும் சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மகனும் மருமகளும் சேர்ந்து வாழ பரிகாரம் கூறுங்கள்.
- ராஜாராமன், பெங்களூரு.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சுக்கிரன் புக்தி நடந்து வருகிறது. குடும்பத்தில் பரம்பரையாகவே இரு தார அமைப்பு தொடர்ந்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த பிரச்னையை குறித்து உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். பரம்பரையில் உள்ள சாபம் இதற்குக் காரணமாக இருக்கலாம். தற்போது இரண்டாவது மனைவியும் உங்கள் மகனுடன் குடும்பம் நடத்த வர மறுக்கிறார் எனும்போது பிரச்னை எங்கிருந்து துவங்குகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். பரம்பரையில் பெற்ற சாபத்திற்கு விமோசனம் தேட முயற்சியுங்கள். வீட்டிற்கு விளக்கேற்ற வந்த பெண்கள் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே குடும்பம் நல்லபடியாக வாழும். மூத்த மருமகள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை நீங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. நாராயணபலி செய்து கர்மாவினை பூர்த்தி செய்ததாக மட்டும் எழுதியிருக்கிறீர்கள். மூத்த மருமகள் தற்கொலை செய்து
கொண்டதற்கான காரணத்தைக் கண்டறிந்து அந்த ஆன்மாவிற்கு அமைதி கிடைக்க முயற்சி செய்யுங்கள். பரம்பரையில் ஏற்கெனவே உள்ள சாபம் தீர குறைந்த பட்சம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஓரளவிற்கேனும் பிரச்னையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த இயலும். குலதெய்வ வழிபாட்டோடு வருடந்தோறும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்வதையும் சங்கல்பமாக எடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக மகனின் வாழ்வில் மாற்றத்தை உணர்வீர்கள்.

?30 வயதாகும் நான் குடும்பத்திற்கு ஒரே மகள். இன்னும் திருமணமாகவில்லை. அரசுப்பணியில் இருக்கும் நான் வேறு மதத்தைச் சார்ந்த ஒருவரை கல்லூரியில் படிக்கும் போதிருந்தே விரும்புகிறேன். என் பெற்றோருக்கு இதில் விருப்பமில்லை. இதற்கு காரணம் பித்ருதோஷம் என்கிறார்கள். உரிய வழி சொல்லுங்கள்.
- தணிகை, தர்மபுரி.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி ஆறில் அமர்ந்திருப்பதும், ஆறாம் பாவகத்தில் ராகுவின் இணைவும் திருமண விஷயத்தில் தாமதத்தை உண்டாக்குவதோடு சிறிய குறையையும் தருகிறது. பித்ரு தோஷத்திற்கான அறிகுறி உங்கள் ஜாதகத்தில் தென்பட்டாலும் அதற்கும், திருமண விஷயத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பித்ரு தோஷம் என்பதை தனியாகவும், திருமண விஷயத்தை தனியாகவும் பிரித்து வைத்து செயல்படுங்கள். தற்போது நடந்து வருகிற நேரம் திருமணம் செய்து கொள்வதற்கு சரியாக இருப்பதால் நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் கால தாமதம் செய்யாது நீங்கள் விரும்பும் நபரோடு திருமணத்தை நடத்த முயற்சி செய்யுங்கள். உங்கள் வயதினை கருத்தில் கொண்டு திருமணத்திற்கான முயற்சியில் இறங்குங்கள். பித்ருதோஷம் என்பது திருமணத்தை தடை செய்யாது. உங்கள் பெற்றோர் முயற்சித்தால் மட்டுமே பித்ருதோஷத்திற்கான தீர்வினைக் காண இயலும். ராமேஸ்வரம் போன்ற ஸ்தலத்திற்குச் சென்று பித்ருதோஷ பரிகாரத்தைச் செய்ய இயலும். பித்ருதோஷத்திற்கான பரிகாரத்தைச் செய்த பின்பு திருமணத்தை நடத்துவதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இந்த தோஷம் என்பது உண்டாகாது. அவர்களின் வாழ்வினில் குழப்பம் ஏதுமின்றி நிம்மதியுடன் வாழ்வார்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். 02.09.2020ற்குள் மனதில் உள்ள மணாளனின் கரத்தைப் பற்றுவீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்