SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செம்பாயி செவுந்தாயி

2019-12-18@ 14:52:16


   சாணிபட்டி, நாமக்கல்


 நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பரமத்திக்குக் கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் சாணிபட்டி என்னும் கிராமத்தில்  அமைந்துள்ளது காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயில் இடும்பன் குளக்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அக்கா, தங்கை செம்பாயி,  செவுந்தாயி இருவரும் வழிபாட்டு தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறார்கள்.

 நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் குல தெய்வங்கள் அமைந்துள்ள இடத்தை ‘கோயில் வீடு’ என்றே அழைப்பது வழக்கு அவ்வகையில்  இக்கோயிலையும் ‘காமாட்சியம்மன் கோயில் வீடு’ என்றே அழைக்கின்றனர். தொடக்கக் காலத்தில் சோளத் தட்டுகளைக் கட்டி அந்தக் கட்டுகளை  ஒரு கூடாரம் போல் அமைத்து அதற்குள் கும்பத்தை வைத்து வழிபட்டு வந்தனர். இதனைச் சுற்றிக் கற்களால் அடுக்கப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது.  பிறகு உள்ளிருந்து கூடாரத்தை மட்டும் அகற்றிவிட்டு செங்கல்லில் சுவர் அமைத்து, கூரையை ஓடு போட்டு வேய்ந்தனர். பின் 1996ஆம் ஆண்டு கல்  அடுக்கப்பட்ட சுற்றுச்சுவரையும் அகற்றிவிட்டு செங்கல்லால் ஆன சுற்றுச்சுவர் அமைத்து கோயில் எழுப்பினர்.
 
முதலில் வட இந்தியாவின் சிலபகுதிகளைக் கைப்பற்றிய முகமதியர்கள் தங்களுடைய ஆட்சியை விரிவுபடுத்த எண்ணி தென்னிந்தியாவிலும் தங்கள்  ஆதிக்கத்தை விரிவடையச் செய்தனர். அவ்வாறு முகமதியர்கள் தமிழ்நாட்டை ஆண்டபோது, திருச்சி திருவரங்கத்தில் ஒரு வேளாளர் குடும்பத்தினர்  விவசாயத் தொழில் செய்து வந்தனர். தம்பதிகளாக வசித்த அவர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். நீண்ட நாள்  குழந்தை இல்லாத அந்த தம்பதியர்களுக்கு காமாட்சி அம்மன் அருளால் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு செம்பாயி, செவுந்தாயி என  பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
 
 அக்கா, தங்கை இருவரும் தோழியர் போலவே பழகி வந்தனர். இருவரும் தினமும் காவிரித்துறைக்குச் சென்று நீராடி விட்டு, வீட்டிற்கு தண்ணீர்  எடுத்து வருவது வழக்கம். அவ்வாறு அவர்கள் ஒருநாள் தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகையில் முகம்மதியத் தளபதிகள் இருவர் அவர்களைக்  கண்டனர். நடமாடும் சிலைகளாக அழகு பதுமையாக திகழ்ந்த செம்பாயி, செவுந்தாயி அழகில் மயங்கிய முகம்மதிய தளபதிகள். செம்பாயி, செவுந்தாயி  இருவரும் தெருமுனையிலிருந்து அவர்கள் வீடு செல்லும் வரை தளபதிகள் இருவரும் அவர்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.  அவர்கள் சென்றபின் வரிவசூலிப்பவர் மூலம் அவர்களைப் பற்றியும் அவர்களது தந்தைப்பற்றியும் அறிந்து கொண்டு, அவர்கள் வீடு நோக்கிச் சென்றனர்.   
 செம்பாயி, செவுந்தாயி தந்தையிடம் சென்று உங்கள் பெண்களை எங்களுக்கு மணம் செய்து வையுங்கள். மாட்டுக்கொட்டாய் போல் இருக்கும் இந்த  வீட்டுப் பெண்களை மகாராணி போல் வாழ வைக்கிறோம் என்றனர். அதற்கு பதில் கூறிய அவர்கள் தந்தை என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கள்.  யோசனை என்ன வேண்டியிருக்கு, இப்போதே தூக்கிட்டு போக முடியும். ஒரு மரியாதைக்கு கேட்டால் எங்கள் பேச்சை மீறுவதா என்றனர். அப்போது  பேசிய செம்பாயி, செவுந்தாயி தந்தை, இன்று திங்கள் கிழமை, நாளை செவ்வாய் நல்ல காரியம் செய்யக்கூடாது. அதனால் புதன் கிழமை வாருங்கள்  எங்கள் பெண்களை உங்களுக்கு மணமுடித்து தருகிறோம் என்று கூறினார்.
 
 மணமுடித்து தராமல் கொடுத்த வாக்கை மீறினால் நடப்பதே வேறு என்று மிரட்டிவிட்டு சென்றனர். அவர்கள் சென்றபின் செம்பாயி,  செவுந்தாயின்பெற்றோர் ஆட்சி நடத்தும் அதிகாரம் மிக்கவர்களிடம் பகைத்துக்கொண்டு எப்படி இம்மண்ணில் வாழ்வது.நம் மகள்களை அவர்களுக்கு  கட்டிக்கொடுத்து கண்முன்னே நம் பிள்ளை அடிமை வாழ்க்கை வாழ்வதை எப்படி பார்த்துக்கொண்டிருப்பது. அதற்கு நம்ம சாதி,சனங்க
ஒத்துக்கொள்வார்களா, நம்மளை மதிப்பார்களா என பலவாறு அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
 
 கடைசியாக அவர்களுக்குள் முடிவு எடுத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு தங்களுடைய விவசாய நிலங்களை விட்டுவிட்டுத் தங்களுடைய  உடைமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியூர் செல்லத் திட்டமிட்டனர். உடமைகளை உறவுக்கார இளைஞர்களிடம் கொடுத்து அனுப்பினர்.  புறப்படும் சமயத்தில் செம்பாயி, செவுந்தாயி இருவரையும் அழைத்து நெற்குதிர்களுக்குள் இறங்கி இந்த செம்பு பொருட்களை வையுங்கம்மா என்றபடி  இரண்டு குதிர்களுக்குள்(தானியம் வைக்கப்படும் கலன்) இருவரையும் இறங்கி செம்பு பொருட்களை வைக்கக்கூறினர். பெற்றோர் கூறியதன்பேரில்  இருவரும் குதிர்களுக்குள் இறங்கி தானியங்களை வைக்க முற்படும்போது அவர்கள் இருவரும் இறங்கிய இரண்டு குதிர்களையும் மூடிவிட்டனர். அன்றிருந்த கலாச்சாரம், வேறொரு மதத்தினருக்குப் பெண்களை மணம் முடிக்காத நிலைமை, மேலும் வேறு பகுதிக்கு மகள்களை அழைத்துச்  சென்றாலும் எப்படியாவது அந்த தளபதிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தால் தங்கள் இரு மகள்களையும் பெற்றவர்களே கொன்றாலும்  பரவாயில்லை என்று அவர்கள் திட்டமிட்டு இவ்வாறு செய்தனர்.
 
அவ்வாறு செய்துவிட்டு ஊரை விட்டு சென்றுவிட்டனர்.பின்னர் திருவரங்கத்திலிருந்து மேற்கு நோக்கி வந்த அவர்கள் ஒரு ஆண்டு முடிந்த நிலையில்  சாணிபட்டி கிராமத்திற்கு வந்து தம் மக்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்கைச் செய்துள்ளனர். யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காகவும், தம்  குலதெய்வ கோயிலிலே ஒரு குழி தோண்டி அந்தக்குழியில் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அதிலே இட்டு, துணி, வாசனை மற்றும் அழகு  பொருட்கள் அனைத்தையும் போட்டு மூடிவிட்டனர்.

 ஒவ்வொரு முறையும் காமாட்சி அம்மனுக்குப் பூஜை, செய்யும்போது தங்களுடைய இரு மகள்களுக்கும் பொங்கலிட்டு, படையலிட்டு அவர்களைக்  குதிர்கள் புதைத்த நினைவாக அப்படையல்களை மூடி விடுவது வழக்கம். இவ்வழக்கம் இன்றும் அக்கோயிலில் வழிபடும் மக்களிடையே  காணப்படுகிறது.காமாட்சியம்மன் கோவிலுனுள்ளே மூன்றடி உயரமுள்ள கும்பத்தின் (கரகம் என்றும் கூறுவர்) உச்சியில் சிறிய காமாட்சியம்மன் சிலை  வைக்கப்பட்டு உள்ளது. இது பித்தளையால் ஆனது. காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மனின்  கையிலுள்ள கரும்புபோன்று இந்த அம்மன்  கையிலும் கரும்பு உள்ளது.

 பிறகு பூசை செய்வதற்குரிய பொருட்களை வைக்கும் போலைக் கூடை (ஓலையினால் பின்னப்பட்ட கூடை) ஒன்றும், நிறைய வேல்களும்,  அரிவாள்களும் அம்மனின் இருபுறங்களிலும் உள்ளன. அதற்கு வெளியே காவல் தெய்வமாக இடதுபுறம் மலையாளி என்ற தெய்வமும், வலது புறம்  மதுரை வீரனும் உள்ளனர்.

 காமாட்சி அம்மனுக்கு பலியிடும் முறை இல்லை. ஆனால் கோயிலின் வெளியே அமைந்துள்ள மதுரைவீரனுக்கும், மலையாளிக்கும் ஆட்டுக்கிடா,  கோழி ஆகிய உயிர்களைப் பலியிடுவர். கருலாம்புளியில் பலியிடும்போது விநோதமான நிகழ்வு ஒன்று நடைபெறுகிறது. பலியிடக்கூடிய பன்றியினை  அங்கு கொண்டுவந்து சேர்த்தவுடன் அப்பன்றி கோயிலை வலம் வந்து கோயிலின் எதிர்ப்புறமுள்ள கல்படுக்கையில் தானாகவே கழுத்தை நீட்டிப்  படுத்துக்கொள்ளும். பிறகு வேலால் அப்பன்றியின் கழுத்தைக் குத்திப் பலியிடுவர்.இவ்வாறு முப்பூசை என்பது அக்கோயிலில் மிகச் சிறப்பாக  நடைபெறுகிறது.இக்கோயிலில் வழிபாடு செய்யும் பங்காளிகளுள் ஒருவரே கோயில் பூசாரியாகவும் உள்ளார்.

‘‘காஞ்சி எனும் சாந்தியிலே.... கரும்புவில் காமாட்சி ஆனாய்!
மதுரை எனும் மாநகரில்...மச்சாமனும் மீனாட்சி ஆனாய்!
காவிரியின் ஓரமாய் ஆனைக்காவில்...அகிலாண்டேஸ்வரி ஆனாய்!
இடும்பால் குளக்கரையாம் சாணிபட்டியில்....எங்கள் குலதெய்வமானாய்!
வாழையடி வாழையாய்...எங்கள் குலம் வாழ்ந்திடவே
கருணையெனும் மழை பொழிவாய் காமாட்சி உமையவளே!’’

என்று இதன் பங்காளிகள் காமாட்சி அம்மனைப் போற்றி வழிபடுகின்றனர்.

படங்கள்: நாமக்கல் ஏ.செல்வன்சு.

சு.இளம் கலைமாறன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • singapore-door-robot

  சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!

 • uk-lockdown13

  பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!

 • mask_ramadaaa1

  சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!

 • chenaabbb11

  இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!

 • 13-04-2021

  13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்