SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2019-12-18@ 10:22:05

*ஸ்ரீ கதிர்காம முருகன். (இலங்கை) -  மலாய் லட்டு

கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். இலங்கையில் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது, சிங்களவர், தமிழர்கள், சோனகர்,மற்றும் இலங்கை வேடுவர் போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் வழிபடப்படுகிறது. இலங்கையில் இந்துக்களும் பௌத்தர்களும் ஒரே வரிசையில் நின்று இறைவனை நெஞ்சாரப் பிரார்த்தித்து வரும் ஒரே இடம் எதுவென்றால் நாம் முதலில் கதிர்காமத்தைச் சொல்லி விடலாம். பழம்பெரும் காலத்திலிருந்தே இந்த இரு சமூகங்களுக்கும் கதிர்காமத்தில் வீற்றிருக்கின்ற முருகக் கடவுளுக்கும் இடையில், அழிக்க முடியாத பந்தம் நிலவி வருகின்றது.

ஒரு காலத்தில், வட இலங்கையை ஆண்டுவந்த எல்லாளனுடன் போர் புரியச் செல்வதற்கு முன், சிங்கள மன்னன்,துட்டகைமுனு கதிர்காமத்திற்கு வந்து முருகனை வணங்கி, அதன் பின் அந்தப் போரில் வெற்றி அடைந்தான் என, சிங்களவர்களின் சரித்திரக் கதைகள் கூறுகின்றன. அதன் பின் துட்டகைமுனு மன்னனால் இந்தக் கோயிலுக்கு பல மானியங்கள் அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. தமிழர்களுக்கோ தனிப் பெருங் கடவுள், முருகன்! தமிழ்மொழியை உலகுக்கு அளித்தவனென முருகன் போற்றப்படுகின்றான். தமிழர்களின் பழம்பெரும் வழிபாடாக வேல் வழிபாடு இருந்து வருகின்றது. முருகனின் மூல ஆயுதமான வேலை, அவனாகவே கண்டு தொழுதலே, வேல் வழிபாடாகும்.

இன்று தமிழ்நாட்டில் அருகிவிட்ட அந்த தனிப்பெரும் வழிபாடு இலங்கையின் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் ஆன்மிகத்தில் முருகனுக்கே எப்போதும் முதன்மை இடமுண்டு. ஏழு மலைகளில் ஒன்றின் மீது கதிர்காம கந்தனின் காட்சி கொடுத்ததின் ஞாபகார்த்தமாகவும் மாணிக்க கங்கையின் இடது கரையோரத்தில் வள்ளியை மணம் புரிந்ததைக் குறிக்கும் முகமாகவும் கதிர்காமக்கோயில் அவன் பெயரில் கட்டப்பட்டது. முக்கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில் சுற்றுமதில் 6 அடி உயரத்தில் செங்கட்டியால் கட்டப்பட்டுள்ளது.

சதுரவடிவிலுள்ள கோயில் வீதியில் சிறிய கோயில்கள் உள்ளன. கதிர்காம கந்தனின் அண்ணன் கணபதிக்கும் மூத்த மனைவி தெய்வானைக்கும் தனித்தனி கோயில்கள் உள்ளன. ஞான சொரூபியான பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் அழகும் பொலிவுங் கொண்ட அரச மரமுண்டு. இவ்வரசு புத்தருக்கும் விஷ்ணுவுக்கும் புனிதமானது. மகாதேவாலயத்திற்கு இருவாசல்கள் உள்ளன. தெற்கேயுள்ள பிரதான வாசல் வில்போன்று வளைந்த அலங்கார முகப்பைக் கொண்டது. பக்கத்தே சிறு கதவுண்டு. தேவாலயத்திற்கு எதிரே கந்தனின் இரண்டாவது மனைவி வள்ளியம்மாவின் கோயில், இக்கோயிலுக்கு இட்டுச்செல்லும் வழி 300 யார் நீளமும் 20 யார் அகலமும் உடையது.

ஆதிமூல அறைக்குள் பக்தர்கள் செல்ல முடியாது. திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. இது பரமரகசியமான புனிதத்துவம்மிக்க இடம். காற்றோ, வெளிச்சமோ உட்புகாதமுறையில் சாளரமோ, துவாரங்களோ இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. இவ்வறைக்கும் மத்திய அறைக்குமிடையே சிறுகதவுண்டு. யாரும் இங்கே செல்லமுடியாது. பூசகர் மட்டும் பக்தி சிரத்தையுடன் செல்வார். பக்தர்கள் தத்தம் காணிக்கைகளை செலுத்துவதற்கு மத்திய அறைக்கு அப்பால் செல்லமுடியாது அருணகிரிநாதர் இத்தலத்தினை வணங்கி வழிபட்டு 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார்.

ஆனால், கதிர்காமத்தில் வேல் வழிபாட்டை விடவும் இன்னனும் சூட்சுமமான முருக வழிபாடு தொன்று தொட்டு நிலவி வருகின்றது. கதிர்காம முருகன் ஆலயத்தின் கருவறைக்குள்ளே அதி சக்தி வாய்ந்த சடாட்சர யந்திரம் இருப்பதாகவும், அது தமிழ்ச் சித்தர் மரபில் முதனிலையில் வைத்துப் போற்றப்படும் போகரால் உருவாக்கப்பட்டதெனவும் கூறப்படுகின்றது. அந்தக் கருவறையில் மந்திர பூசனை எதுவும் நிகழ்வதில்லை. கப்புறாளை என்று கூறப்படும் பூசகர் வாய் கட்டி மௌனப் பூஜை நிகழ்த்துகின்றார். கப்புறாளைகளைத் தவிர, வேறு எவரும் அந்தக் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

15 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் வாழ்ந்து, அருந்தமிழ்க் கவி செய்த அருணகிரிநாதர் தனது திருப்புகழில் “வனமுறை வேடர் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே” என்று, கதிர்காமத்தில் வாழும் முருகனைச் சொல்கின்றார். வேடர்களால் வனத்தில் அவர்களின் வழிபாட்டு முறைகளின் படி நிகழ்த்தப்பட்ட பூஜைகளை ஏற்று மகிழ்ந்திருக்கின்றவன் முருகன் என்பது அதன் பொருள். இன்றைய கதிர்காமம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் நாகரிக மக்கள் வசம் வந்ததெனவும் அந்த வழிபாட்டுத் தலம் தோன்றிய காலப்பகுதியில் இருந்து வேடர்களாலேயே அது பரிபாலிக்கப்பட்டு வந்தது எனவும் கூறப்படுகின்றது. இத்தல முருகனுக்கு மலாய் லட்டே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது.

மலாய் லட்டு

தேவையான பொருட்கள்.
பனீர் -- 250 கிராம்
மில்க் மெய்ட் - 150 கிராம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு.

செய்முறை: பனீரை நன்றாக உதிர்த்து விட்டு கொள்கிறார்கள். பின் அதை நன்றாகப் பிசைந்து, ஒரு கடாயில் பனீர், மில்க் மெய்ட் இரண்டையும் கலந்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறுகிறார்கள். கலவை கடாயில் ஒட்டாமல் வரும் போது எடுத்து விடுகிறார்கள். சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் லட்டுகளாக பிடிக்கிறார்கள். மண (ய)க்கும் மலாய் லட்டு பிரசாதம் தயார்.

- ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்