SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சோகங்களை களையும் சோகத்தூர்

2019-11-29@ 10:00:48

*நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 20

சோகத்தூர் யோகநரசிம்ம சுவாமி திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயிலாகும். பெருமாளின் நாபிக் கமலத்தில்இருக்கும் பிரம்மா வேதங்களின் உதவி கொண்டு படைப்புத் தொழிலை செய்துவந்தார். அசுரர்கள் பிரம்மாவின் வேதங்களைத் திருடிச் சென்றனர். இதனால், பிரம்மாவின் படைப்புத்தொழில் நின்று போனது. தொழிலை இழந்த பிரம்மாவுக்கு தாங்க முடியாத சோகம் தொற்றிக் கொண்டது. பெருமாளைக் குறித்து தவம் செய்யத் தொடங்கினார். தவத்திற்கு இணங்கிய பெருமாள், “பூலோகத்திலுள்ள லட்சுமிசரசின் (குளம்) கரையில் அருளும்யோகநரசிம்மனை வேண்டி சோகம் போக்கிக் கொள்,’’ என்றார். இந்தக்குளமே, காஞ்சிபுரம் அருகிலுள்ள வந்தவாசியை ஒட்டிய சோகத்தூரில் உள்ளது.

இதில் நீராடி யோகநரசிம்மனை வேண்டி மீண்டும் வேதங்களைப் பெற்று படைப்புத்தொழிலைத் தொடங்கினார் பிரம்மா. பிரம்மாவின் சோகம் தீர்த்த இத்தலம் “சோகத்தூர்’ என்று அழைக்கப்படுகிறது. வடமொழியில் “”சோஹ அபஹத்ருபுரம்’’ என்று பெயர். இதன் பொருள் “துக்கத்தைப் போக்கும் திருத்தலம்’ என்பதாகும். கிழக்கு நோக்கி யோகானந்த நிலையில் நரசிம்மர் இங்கு காட்சி தருகிறார். இவரை வழிபட்டவர்களின் வாழ்வில் சோகம் இருந்த இடம் தெரியாமல் மறையும் என்பது ஐதீகம். கலியுகம் ஆரம்பித்த போது மக்களுக்கு ஏற்படப்போகும் துன்பங்களை நினைத்து வருந்திய பிரம்மதேவர் தவம் செய்து தம் சோகத்தைப் போக்கிக் கொண்ட திருத்தலம். மக்களுக்கு தாம் துணையிருப்பதாக யோகநரசிம்மர் பிரம்மதேவருக்கு வாக்களித்த திருத்தலம். வைணவ அடியார்களில் முக்கியமானவரான நாதமுனிகளின் எட்டு சீடர்களில் ஒருவர் மகான் ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான். சோகத்தூர் ஆழ்வாரது அவதாரத்தலமிது. அகோபில மடத்தின் 16ஆம் பட்டத்தவரான ஸ்ரீ மதே ஸ்ரீ வண்சடகோப ஸ்ரீ சடகோப யதீந்திர மகாதேசிகனின் அவதாரத்தலமாகவும் போற்றப்படுகிறது.

மூலவர் யோகநரசிம்ம சுவாமியாகவும்  தாயார் அமிர்தவல்லித் தாயாராகவும் திருவருட்பாலிக்கும் திருத்தலம்.  ஸ்ரீ நரசிம்மர் கிழக்கு திசை நோக்கி ‘‘ஸ்ரீயோகாநந்த வடிவினனாய், பீடத்தில் தசாவதார மூர்த்திகளுடன் அதி அற்புதமாக எழுந்தருளியுள்ளார். பெருமாள் உத்ஸவர் ஸ்ரீபிரகலாத வரதனாய் அருட்பாலிக்கின்றார். மேலும் ஸ்ரீ சோகத்தூர் ஆழ்வான், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகள், ஸ்ரீஆதிவண் ஸடகோப யதீந்த்ர மஹாதேசிகன் ஆகிய மூர்த்திகள் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அமைந்துள்ள ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சகலமும் நன்மையில் முடியும் என்று நம்பப்படுகிறது.

தட்சிண சிம்மாசலம் என்ற சிறப்பு பெற்ற, சித்தர் பெருமக்களும் வானுறை தேவர்களும் கொண்டாடும் புண்ணிய பூமி இது. எப்படிப்பட்ட துக்கமாயினும்  பாவ தோஷங்களாயினும் வேருடன் களையக்கூடிய ஆற்றல் கொண்டவர் இந்த யோக நரசிம்ம சுவாமி. கமல ஸரஸ் என்ற புண்ணிய தீர்த்தம் இன்றும் லட்சுமி ஸரஸ் என்றே வழங்கப்படுகின்றது. எத்தனை சிறிதாயினும் தீ சுடும்.  அது போன்றதே நரசிம்ம அவதாரம். திருமாலின் மிகுந்த உக்கிரம் கொண்ட, நான்காவது அவதாரம், இந்தப் புண்ணிய க்ஷேத்திரத்தில் தமது உக்கிரங்களை உதறி எறிந்துவிட்டு தம்மை நாடி வரும் பக்தர்களின் துயரைத் துடைத்து அவர்தம் சோகத்தை அறவே துடைத்து, சாந்தம் கொண்டு, கிழக்கே திருமுக மண்டலம் காட்டியவாறு  திருக்கோலம் கொண்டிருக்கின்றார்.

திருமணத் தடைகளை உடைத்தெறிந்து நமது தகுதியை ஆராய்ந்து அதற்கேற்ப வரனை முடித்து தரும் தெய்வம் இவர். வஞ்சனை கொண்டவர் என்றால், மனதில் பொறாமை, கபடு, சூது வைத்து நம்மோடு தம் சுயலாபத்திற்காக பழகுவோர். ஏவல், பில்லி, சூன்யம் என்ற  மாந்தரீக விஷயங்களுக்கு வாதனை என்றும் பொருள். பெரு நோய்கள் விலகவும் கருவாகின்றார் இத்தலத்தில் அருளும் நரஹரி.

இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று நரசிம்மருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கிறது. நரசிம்ம ஜெயந்தியன்று சுவாதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், பெருமாள் திருவீதியுலா நடக்கிறது. இந்த சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய பலன், நினைத்த காரியம் நடக்கும். புத்திரப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி போன்ற வைபவ காலங்களிலும் புரட்டாசி சனிக்கிழமைகளிலும் இப் பெருமானை  தரிசித்தால் , பிரம்மதேவன் பட்ட சோக நாசனத்தை நாமும் பெறலாம் ,எனவே சகலவித தோஷங்களை போக்கி, சகலவிதமான பயங்களை நீக்கி தைரியத்தை தரவல்லவன் இந்த யோகநரசிம்ம  சுவாமி என்பது உண்மை.

சோமப்பிரதோஷமும், சனிப்பிரதோஷமும் சிறப்பு போல நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதியிலும் வழிபடுதல் சிறப்பு. நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் நல்லது.

அமிர்தவல்லித் தாயாரின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர் இங்கு குடி கொண்டிருக்கும் ஆஞ்சநேயர். புதன், சனி கிரகங்கள் தமக்குற்ற நாட்களில் பகல் பொழுது முழுவதும் இங்கு எழுந்தருளி, அனுமனை ஆராதிக்கின்றனர். இவர்கள் இமைப்பது இல்லை. ஆக, புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளி லும் முடிந்தவரை கண் இமைகளை மூடாது, வெற்றிலை, வடைமாலைகளை அனுமனுக்கு சாத்தி, அனுமத் ஜபம் செய்து பதினோறு முறை வலம் வந்து தொழுதிட எதிரிகளின் தொல்லை ஒழியும். வம்பு வழக்குகள் விலகிப் போகும். ஆபத்துகள், களவு, பேய், பிசாசு பயங்கள் அழியும் என்பது ஐதீகம். தொடர்புக்கு- நரசிம்ம பட்டாச்சார், 82485 64734. சென்னையிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும், காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள வந்தவாசியிலிருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது சோகத்தூர் கிராமம்.  வந்தவாசியிலிருந்து நல்லூர் செல்லும் வழியில் அமைத்திருக்கிறது.

(தரிசனம் தொடரும்)

* ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்