SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணப்பெண்ணைப் பார்ப்பது..!

2019-11-29@ 09:35:25

திருமணத்திற்கு முன்பே மணப்பெண்ணை மணமகன் பார்த்துக் கொள்ளட்டும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளையும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

1. இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் மணம் பேசினால், அவளை மணமுடிப்பதற்கு முன்பாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.”(மிஷ்காத், அபூதாவூத்)

2. முகீரா பின் ஷுஅபா எனும் தோழர் ஒரு பெண்ணை மணம் செய்துகொள்ள விரும்பியபோது நபி(ஸல்) அவர்கள் முகீராவிடம், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்.

“இல்லை” என்று முகீரா பதில் அளித்தார். அதற்கு நபிகளார், “பெண்ணைப் பார்த்துக்கொள். அதன்மூலம் உங்களுக்கு இடையில் அதிகமாக அன்பும் இணக்கமும் ஏற்படக்கூடும்” என்றார்கள். (மிஷ்காத்) திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றப்பட வேண்டிய ஓர் ஒப்பந்தம் ஆகும். திருமணத்தின் மூலமே ஓர் ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வைத் தொடங்க இருப்பதை அறிவிக்கிறார்கள். ஆகவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மார்க்கத்திற்கும், ஒழுக்கத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

திருமணத்திற்கு முன்பாகவே மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதன் மூலம் பல நன்மைகள் விளைகின்றன. பல கேடுகள் அகற்றப்படுகின்றன. மாப்பிள்ளையும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது இருவருக்கும் பிடித்திருந்தால் திருமணப் பேச்சை மகிழ்ச்சியாகத் தொடரலாம். பிடிக்கவில்லை எனில் தொடக்கத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டால் எதிர்காலத்தில் சிக்கல்கள் வராது. இரு தரப்பும் பார்க்காமலேயே திருமணத்தை முடித்துவிட்டு, பிறகு இல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் உறவு சரியாக அமையாமல் போய்விட்டால், “சே...என்ன மடத்தனம்... திருமணத்திற்கு முன்பே மணமகளைச் சரியாகப் பார்க்காமல் இருந்துவிட்டோமே” என்று வருந்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

பெண்ணை நேரில் பார்த்த பிறகு திருமணம் முடிக்கும்போதுதான் இல்லற வாழ்வில் இணக்க உறவும் ஒற்றுமையும் ஏற்படும். ஒருவேளை இணக்க உறவு ஏற்படாவிட்டாலும், “நாம் பார்த்து விரும்பி முடித்த பெண்தானே” எனும் எண்ணம் மேலோங்கி பெரிதாக வருந்த வேண்டிய சூழல் ஏற்படாது. இல்லற வாழ்க்கை நிலைத்திருக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் இவ்வாறு பெண் பார்ப்பது தவறு என்கிற கருத்தில் இருக்கிறார்கள். அந்நியப் பெண்ணை எப்படிப் பார்ப்பது என்று கேட்கிறார்கள். பெண் பார்க்க மார்க்கம் அனுமதி தந்துள்ளது.  அப்படிப் பார்க்கக் கூடாது என்றிருந்தால் நபிகள் நாயகம் எப்படி அனுமதித்திருப்பார்?

அதே போல் இன்னொரு கருத்தையும் நபிகளார் வலியுறுத்தியுள்ளார். மணப்பெண்ணைக் குறித்தும் மணமகனைக் குறித்தும் நம்மிடம் ஆலோசனை கேட்கப்பட்டால், விருப்பு - வெறுப்பு இல்லாமல் உண்மையான ஆலோசனைகளை வழங்குவது நம் கடமையாகும். இல்லாத பொல்லாத கதைகளை எல்லாம் சொல்லி நடக்க இருக்கும் நல்ல காரியத்தைப் பாழ்படுத்திவிடக் கூடாது. அதே சமயம் உண்மையிலேயே பெண்ணிடமோ, மாப்பிள்ளையிடமோ ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால் அதையும் மறைக்காமல் சொல்லி விட வேண்டும்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“செல்வம்,அழகு, குலப்பெருமை, மார்க்கம் ஆகிய நான்கு விஷயங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள்.” - நபிமொழி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்