SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடுக்கண் போக்கிடும் இஞ்சிமேட்டழகர்

2019-11-26@ 15:41:09

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-19

‘‘தெண்ணீர் வயிற்றொண்டை நன்னாடு சான்றோருடைத்து’’ என்று ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் கொண்டாடப்படும் தொண்டைநாடு பல்வளம்  பெருகும் பொன்னாடாக விளங்கியதோடு கலை, கலாச்சாரம், பண்பாடு, அறம் மற்றும் நன்நெறிகளைப் போற்றி வளர்த்துப் புகழ் பெற்று விளங்கிய நாடாகும்.

இத்திருநாட்டில் விண்ணை முட்டும் கோபுரங்கள் கொண்ட திருக்கோயில்கள் சைவத்தையும், வைணத்தையும் பேணிப் பாதுகாத்து மக்களிடையே பக்தி உணர்வை  வளர்ப்பதில் தன்னிகரற்று விளங்கின. காசி போன்ற திவ்ய தலங்களுக்கு ஈடான காஞ்சி மாநகரம் இத்தொண்டை நாட்டின் தலைநகரமாக விளங்கியது மேலும்  சிறப்பானதாகும். பிரம்ம தேவன், ஸ்ரீமந்நாராயணனை அஸ்வமேத யாகம் செய்து வழிபட்ட பெருமையும், 32 வகையான அறங்களைப் பாதுகாக்க அன்னை பார்வதி  தேவி திருக்கயிலை நாதனான பரமேஸ்வரனைக் குறித்து தவமியற்றிய பெருமையும் இத்தொண்டை நாட்டிற்கு உண்டு.

காணும் இடமெல்லாம் தாமரைப் பொய்கைகள், செந்தாமரை, வெண்தாமரை, கருங்குவளை, நீலோற்பலம் போன்ற வண்ண வண்ணத் தேன் மலர்கள்  நிறைந்திருக்கும் அப்பொய்கையிலே அன்னங்கள் விளையாடுவதும் வண்டினங்கள் தேன் பெருகி கீதம் பாடுவதும் தொண்டை நாட்டின் எழில் மிக்க காட்சிகளாகும்.  திருத்தலபெருமைகள் நிறைந்த ‘‘பாஹி நதி’’ என்று போற்றி வணங்கப்படும்  செய்யாற்றின் கரையில் ‘‘யக்ஞ வேதிகை’’ (யாகமேடு) என்று  பூஜிக்கப்படும் மிகப் புராதனமான திருத்தலம் ‘இஞ்சிமேடு’ திருத்தலமாகும்.

இத்திருத்தலத்தில் கேட்கும் வரங்களைக் கேட்டபடி அருளும் திருக்கோலத்தில் ஸ்ரீ பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீ வரதராஜப் பெருமான் எழுந்தருளி  அருட்பாலிக்கின்றார். வேத காலம் தொட்டு எண்ணற்ற பல மகரிஷிகளும் மகான்களும் இப் பெருமானை யாக, யக்ஞங்களினால் ஆராதனை செய்து  சதாசர்வகாலமும் வேத முழக்கங்கள் ஒலித்துக் கொண்டிருந்த மிகப் புனிதமான திருத்தலம் இத்திருத்தலம் என்பதால் ‘‘யக்ஞவேதிகை’’ என்று பூஜிக்கப்பட்டு  தற்போது ‘‘இஞ்சிமேடு’’ என்று வணங்கப்பட்டு வருகின்றது. பெருமாளின் அவதாரங்கள் மிகவும் உயர்ந்தவை.

தன்னுடைய அவதாரங்களை ஸ்ரீ மந்நாராயணனே கொண்டாடுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. நல்லவர்களைக் காப்பாற்றி ரட்சிப்பதற்காகவும் தீயவர்களை  அழிப்பதற்காகவும் யுகங்கள் தோறும் அவதரிக்கின்றார் பெருமாள். சாது சம்ரட்சணமே பகவான் எடுத்த அவதாரங்களின் முக்கிய நோக்கமே தவிர துஷ்ட நிக்ரஹம்  பிரதானமில்லை. ராமாவதாரத்தில் மனிதர்கள் எப்படியெல்லாம் வாழவேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாக வாழ்ந்து மனித தர்ம நெறியை உலகிற்கு எடுத்துக்  காட்டினார் பெருமாள். பாரதப் போர் முடிப்பதற்குக் காரணமாக இந்தப் பரந்தாமன்  கிருஷ்ணாவதாரத்தில் பல தர்மநெறிகளை பகவத் கீதையின் மூலம் உலக  மக்களுக்கு உபதேசித்து அருளினார்.

அஞ்ஞானத்தில் உழன்று கிடக்கும் சாமான்ய மக்களை நல்வழிப்படுத்தவே பகவான்  பல ஆச்சார்யனாக அவதரித்தும், பல ஆச்சார்யர்களின் மூலமாக தர்ம  சாஸ்திரங்களை உபதேசித்தும் அருளினார். வேத, இதிகாச, புராண காலங்களிலிருந்து நித்ய அக்னிஹோத்ரிகளாக விளங்கிய பல மஹான்களும் புண்ணிய  புருஷர்களும் ஆச்சார்யர்களும் அவதரித்த மனித பூமியான இஞ்சிமேடு புராதன காலத்தில் ‘‘ஸ்ரீநரசிம்மபுரம்’’ என்றும் பூஜிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக  இத்திருத்தலத்தில் லட்சுமி நரசிம்மர் ‘ஸ்ரீகல்யாண லட்சுமி நரசிம்மராக’ நெஞ்சை அள்ளும் பேரழகுடன் எழுந்தருளி அருட்பாலிக்கின்றார்.

லட்சுமி நரசிம்மரின் திருச் சந்நதியில் தன் தந்தை  இரண்யனுக்கும் நற்கதி அளிக்க வேண்டும் என்று 32 தலைமுறைகளுக்கு நற்கதியைப் பெற்ற பிரகலாதன்  பெருமானைத் வணங்கியவாறு எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும். வேத புருஷனும் யாகதேவனாக விளங்கக் கூடிய ஸ்ரீ கருடன் எம்பெருமானின்  திருவடியில் எழுந்தருளி அருட்பாலிக்கின்றார். அழகிய நிலவு போன்ற தன் திருமுக மண்டலத்தால் எதிரிகளையும் ஈர்க்கக் கூடிய பேராற்றல் படைத்த ரகு குல  திலகன் ராமபிரான் இஞ்சிமேடு திருத்தலத்தில் சீதா லட்சுமணர் சமேதராக தன்னை நாடிவந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கி வரப்பிரசாதியாக  சேவை சாதிக்கின்றார்.

இந்த ராமபிரானின் மூல விக்கிரகம் பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்பட்டது என்பது மேலும் சிறப்பாகும். ரகு வம்ச மன்னர்கள்  தங்களின் குல தெய்வமான ரங்கநாதப் பெருமானை யாகங்கள் மற்றும் வேள்விகளால் ஆராதித்தது போன்று இங்கு எழுந்தருளியிருக்கும் ராமபிரானும்  ஆராதிக்கப்பட்டதாக மிகப் பழமையான ஓலைச்சுவடிகளிலிருந்து அறிய முடிகின்றது. ராமபிரான் தன் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் தனுசின் (வில்) மேல் புறத்தில்  ‘நரசிம்ம மூர்த்தி’ எழுந்தருளியிருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத அரிய தரிசனமாகும்.

ராமபிரானின் சந்நதியில் அஞ்சனை மைந்தன் அனுமன் அஞ்சலி அஸ்தத்தில் ஸ்ரீ ராமனைத் தொழுதவாறு எழுந்தருளியிருக்கின்றார். கருடாழ்வார் அருகில்  இருப்பது சிறப்பு. இத்ருத்தலத்தில் பெருந்தேவித் தாயார் தனிச் சந்நதியில் கருணையே வடிவமாக அருட்காட்சி தந்து தாயுள்ளத்துடன் தன் பக்தர்களின்  குறைகளைக் களைவதில் தன்னிகரற்று விளங்குகிறார். கோள்சார நிலைகளினால் திருமணத் தடை மற்றும் மழலைப் பேறு இன்றி வருந்தும் அன்பர்கள்  பெருந்தேவித் தாயாரை திருக்கோயிலுக்கு வந்து தரிசித்து தங்கள் குறை தீர மஞ்சள் மாலை சாத்துவதாக பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

அவ்வாறு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள் தங்கள் இல்லத்திற்குச் சென்றதும் ஸ்ரீ பெருந்தேவித் தாயாரை நினைத்து பிரார்த்தித்து ஒரு நாளுக்கு ஒரு மஞ்சனை  தங்களது பூஜையறையில் எடுத்து வைத்து பூஜை செய்துவர 48 தினங்களுக்குள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன்  தெரிவிக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இந்த மஞ்சளை மாலையாகத் தொடுத்து எடுத்து வந்து தங்களது அன்புக் காணிக்கையாக அன்னைக்கு  சமர்ப்பிக்கிறார்கள். தாயாரின் திருச்சந்நதியில் பக்தர்களால் சாத்தப்பட்ட மஞ்சள் மாலைகள் குவிந்துள்ளதால் அன்னையின் அளவற்ற சக்தியை அறிந்து நெஞ்சம்  நெகிழ்கிறோம்.

மாதவத்தால் மண்ணுலகில் அவதரிக்கும் பேறு பெற்று நித்தம் நித்தம் ஸ்ரீமந் நாராயணனின் புகழ் பாடிய அருளாளர்கள் பலர் அவதரித்த இப்புண்ணிய பூமியில்  வைஷ்ணவ சித்தாந்தக் கோட்பாடுகளை இப்பூவுலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீமத் அஹோபில மடத்தின் 34- வது பட்டம் ஸ்ரீ சடகோப ராமானுஜ  யதீந்த்ர மஹா தேசிகன் மற்றும் 42- வது பட்டம் ஸ்ரீ ரங்க சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் என்ற இருமகான்களும் அவதரித்ததால் மேலும் புனிதமடைந்த  புண்ணிய பூமி இத்திருத்தலமாகும்.

ஒவ்வொரு மாதமும் சுவாதி, மூலம் நட்சத்திரத்தில் நரசிம்ம, சுதர்ஸன யாகங்கள் இத்தலத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் ஆலயத்தின் சார்பில்  ஏழைகளுக்கு அன்னதானம், வித்யாதானம், திருக்கோயில் உற்ஸவ காலங்களில் வேத பாராயணம் மற்றும் அத்யயனம் ஸ்வாமிகளுக்கு ஸம்பாவனை மற்றும்  ததீயாராதனை, கோஸம்ரக்ஷணம், இஞ்சிமேடு இலவச மருத்துவ உதவி மற்றும் ஏழை பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கு இயன்ற உதவி போன்ற  கைங்கர்யங்கள் நடை பெற்று வருகிறது.

(தரிசனம் தொடரும்)
ந.பரணிகுமார்

சயனக் கோலத்தில் புத்தர்

பொதுவாக புத்தர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவதைக் காணலாம். ஆனால், மதுராவில் நின்ற நிலையில் உள்ள புத்தரைக் காணலாம். இந்த இரு கோலத்தில்  காட்சி தரும் புத்தர், ‘ஜப்பான் நாட்டில் ‘புகுஓகா’ என்னும் கோயிலில் சயனக் கோலத்தில் (படுத்த நிலையில்) காட்சி தருகிறார். இந்த புத்தர் வெண்கலத்தால்  உருவானவர். அந்தச்சிலையின் எடை 300 டன். படுத்த நிலையில் உள்ள நீளம் 11 மீட்டர். 41 மீட்டர் சுற்றளவு.

- டி.ஆர்.பரிமளரங்கன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்