SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணப் பொருத்தம் சொல்லும் சேலம் சித்திரக்கல் மாரியம்மன்

2019-11-19@ 10:11:14

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மனின் பிம்பமாக திகழ்கிறது மேட்டுத்தெரு சித்திரக்கல் மாரியம்மன் கோயில். நகரின் முக்கிய அடையாளமான சுகவனேஸ்வரர் கோயிலில் இருந்து வடக்கே 500 அடி தூரத்தில் உள்ளது இந்த கோயில். மாரியம்மன் அருள்பாலிக்கும் கோயிலில் ஐயப்பன், முருகன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களையும் தரிசிக்கலாம். சேலத்தில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில், 22நாட்கள் நடக்கும் ஆடித்திருவிழா முதலிடம் வகிக்கிறது. கோட்டை மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்தவுடன் மாநகரத்தில் உள்ள மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் விழா நடப்பது வழக்கம். இந்த வகையில் மேட்டுதெருவில் அருள்பாலிக்கும் சித்திரக்கல் மாரியம்மன் கோயிலிலும் ஆடி மாதத்தில் 30 நாட்கள் விழா எடுக்கப்படுகிறது.

‘‘250 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தம்பதியினர் தலையில் கூடை வைத்துக் கொண்டு திருமணிமுத்தாற்றை கடக்க முயன்றனர். அப்போது அந்த தம்பதி எடுத்து வந்த கூடையில், அவர்களுக்கு தெரியாமல் ஒரு கல் தானாக வந்து விழுந்தது. கொஞ்சம் தூரம் சென்றபின், கூடையில் பாரம் ஏற்பட்டது. அப்போது கூடையை இறக்கி பார்த்தபோது, கூடையில் கல் ஒன்று இருந்தது. அந்த கல்லை ஆற்றில் எறிந்துவிட்டு, மீண்டும் ஆற்றை கடக்க முயன்றனர். மீண்டும் அந்த கல் அவர்களுக்கு தெரியாமல் கூடையில் விழுந்தது. மீண்டும் அந்த கல்லை ஆற்றில் எறிந்தனர். பலமுறை அந்த கல்லை தூக்கி எறிந்தும், கல் மீண்டும், மீண்டும் கூடையில் விழுந்தது. இதையடுத்து அந்த தம்பதியினர் கரைக்கு, அந்த கல்லை கொண்டு வந்து, கரையோரம் வைத்து பூஜை செய்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர்.

நாளடைவில் சேலம் வாழ்மக்கள் அந்த கல்லை தெய்வமாக வணங்க தொடங்கினர். பல ஆண்டாக அந்த கல்லை வணங்கி வந்த மக்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லுக்கு மேல் அம்மன் சிலையை நிறுவினர். கல்லாய் வந்து அருள்பாலித்த அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் விழா எடுப்பதை வழக்கமாக்கி கொண்டனர். சித்திரை மாதத்தில் விழா எடுக்கப்பட்டதால், இந்த அம்மனுக்கு சித்திரக்கல் மாரியம்மன் என்ற பெயர் வந்தது’’ என்பது தலவரலாறு. சேலத்தை பொறுத்தவரை யுத்தகாலமான ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு விழாக்கள் நடத்துவது தொன்று தொட்டே இருந்து வரும் வழக்கம். இந்த வழக்கத்தின் படி, தற்போது சித்திரக்கல் மாரியம்மனுக்கும் ஆடியில் விழா எடுக்கப்படுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

திருமணத் தடை நீங்கவும், மகப்பேறு கிடைக்கவும், தொழில் வளம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள், விரதமிருந்து மாவிளக்கு எடுத்தும், பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் இந்த கோயிலில் திருமணப் பொருத்தம் பார்ப்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. பூக்களை கட்டி அம்மன் முன்பு திருமணப் பொருத்தம் கேட்கின்றனர். அம்மன் சொல்லும் குறிக்கு கட்டுப்பட்டு ஜாதகங்களை தேர்வு செய்கின்றனர். அந்த ஜாதகங்கள் பெரும்பாலும் பொருத்தம் நிறைந்ததாக இருப்பது வியப்பு. இதே போல் இந்த கோயிலில் தினசரி நண்பகல் நேரத்தில் அம்மனுக்கு பூஜைகள் நடப்பதும் தனிச்சிறப்பு.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்