SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமணத்திற்காக வயதினைக் குறைத்துச் சொல்லலாமா?

2019-11-13@ 10:52:47

* என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

என் மகனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் இதுவரை திருமணம் அமையவில்லை. எம்.எஸ்.சி, எம்.பி.ஏ படித்திருக்கும் அவனுக்கு திருமணம் எப்போது நடக்கும்? கடந்த 10 வருட காலமாக பெண் பார்க்கிறோம். மிகுந்த மன வேதனையில் உள்ளோம். எந்த திசையில் பெண் பார்க்கலாம்?
- ருக்மணி ஆறுமுகம், பழனி.

பத்து வருட காலமாக பெண் பார்த்து வந்தாலும் 35 வயதில்தான் திருமணத்திற்கு பெண் தேட ஆரம்பித்திருக்கிறீர்கள். தற்போது 45 வயது முடிந்து 46 துவங்கியுள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி 25வது வயதில் திருமண யோகம் என்பது வந்து சென்றுவிட்டது. சரியான வயதில் திருமணத்தை நடத்தாமல் காலம் தாழ்த்திவிட்டு பின்பு வருத்தப்படுவதில் பயன் என்ன? உங்கள் மகனின் ஜாதகத்தை முறைப்படி கணிதம் செய்து பார்த்ததில் தற்காலம் ராகு தசையில் சுக்கிர புக்தி நடப்பதை  அறிய முடிகிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவருக்கு கோச்சாரத்தின்படி ஜென்மசனியின் தாக்கமும் தொடர்கிறது. அவரது ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் சுத்தமாக  இருந்தாலும், ஏழாம் வீட்டின் அதிபதி சனி 12ம் வீட்டில் ராகுவின் சாரம் பெற்றிருப்பது திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. லக்னாதிபதி சந்திரனும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வாழ்க்கையில் போராட்டத்தை சந்தித்து வருகிறார்.  திருமணம் செய்ய வேண்டிய வயதில் செய்யாமல் காலம் தாழ்த்தியதால் தற்போது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி இதற்கு மேல் தானாக பெண் வந்து அமையும் வாய்ப்பு என்பது இல்லை. அவருடைய  திருமணம் என்பது பெற்றோர் ஆகிய உங்களின் விடாமுயற்சியால் தான் அமைய வேண்டுமே தவிர, ஜாதக பலத்தால் அல்ல என்பதையே உங்கள் மகனின் ஜாதகம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

என் மகனும் அவன் மனைவியும் காலம் முழுவதும் நேசமாக வாழ்க்கையை நடத்துவார்களா? அவன் மனைவி அவனுடன் சுமுகமாக பேசுவதே கிடையாது. எப்பொழுதும் அவனுடன் கடும் பேச்சுடன் சண்டையே இருந்து வருகிறது.  இத்தனைக்கும் அவன் தன் சம்பளம் முழுவதையும் மனைவியிடமே கொடுத்து விடுகிறான். அவள் ஆடம்பரமாக வாழ எண்ணி சேமிப்பு சிறிதும் இன்றி செலவு செய்கிறாள். ஜாதகத்தை விரிவாக அலசி ஆராய்ந்து பலன் சொல்ல  வேண்டுகிறேன்.
- நாராயணன், தர்மபுரி.

மகனின் மனைவி என்றுதான் உங்கள் கடிதம் முழுவதிலும் எழுதியுள்ளீர்களே தவிர ஒரு இடத்தில் கூட ‘என் மருமகள்’ என்ற வார்த்தையை நீங்கள் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆகிய நீங்கள் உங்கள்  பென்ஷனில்தான் வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்றும் மக்களின் தயவில் இல்லை என்பதையும் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எண்பது வயதிலும் இன்னமும் மனதளவில் நீங்கள் முதிர்ச்சி அடையவில்லை என்பதை உங்கள் கடிதம்  தெளிவாக உணர்த்துகிறது. உத்திராட நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் ஆதிக்க குணம்  கொண்ட மனைவி அமைந்திருக்கிறார். இந்தப் பெண்தான் என்றில்லை, எந்தப் பெண் அவருடைய மனைவியாக அமைந்திருந்தாலும் உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி ஆதிக்க குணம் கொண்டவராகத்தான் இருப்பார்.

 அதில் எந்தவிதமான  சந்தேகமும் இல்லை. மேலும் உங்கள் மகனின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. ஆடம்பர செலவுகள் அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் என்பது  அவருக்கு தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் மருமகளும் விருச்சிக லக்னத்தில் பிறந்தவர் என்பதால் இருவருக்கும் ஜென்ம லக்ன ரீதியான பொருத்தம் என்பது மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது. இருவரின் விதியின்படிதான் இந்த பந்தம்  என்பது உருவாகி உள்ளது. அவர்களது குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள். உங்கள் மகன் தனது மனைவியை எவ்வாறு அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதை நன்கு அறிவார். உங்களிடம் தன் மனதில் உள்ள வருத்தத்தை  பகிர்ந்து கொள்ளும்போது அவருக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகளைச் சொல்லுங்கள். அதனை விடுத்து மருமகளின் மீது தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்கள் மகன் மற்றும் மருமகளின் ஜாதகங்கள் அவர்களது  தாம்பத்திய வாழ்வு என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதையே தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.

என் பேத்தி 2016ல் எம்.பி.ஏ படிப்பு முடித்து தற்போது தனியார் கம்பெனியில் மிகக்குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார். சரியான உத்யோகம் அமையவில்லை. திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. பரிகாரம் பலவும்  செய்துள்ளோம். அவர் எதிர்கால நிலை குறித்து பதில் வேண்டுகிறோம்.
- சண்முகவேலு, சோளிங்கர்.

நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகத்தினை ஆய்வு செய்ததில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில்  ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் செவ்வாயும் சந்திரனும் இணைந்து அமர்ந்திருக்கிறார்கள். செவ்வாய் தன ஸ்தான அதிபதியாக இருப்பதோடு அவரே ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாகவும் இருப்பதோடு நீர் கிரகமான சந்திரனுடன்  இணைந்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் பேத்திக்கு கடல் கடந்து சென்று உத்யோகம் பார்க்கும் அம்சம் நன்றாக உள்ளது. அத்துடன் லக்னத்திற்கும், பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய குரு பகவான் எட்டில் அமர்ந்திருப்பதால்  உள்நாட்டில் வசிப்பதில் அதிக நற்பலன் விளையாது. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தின்படி தற்போது 29.09.2019 முதல் சூரிய தசையில் புதன் புக்தி துவங்க உள்ளது.

திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன்  என்பதாலும் அந்த புதன் ஒன்பதாம் பாவகத்தில் தசா நாதன் சூரியனுடன் இணைந்திருப்பதாலும் தற்போது இவரது திருமணம் அமைந்துவிடும். வேலை தேடுவதில் அதிக கவனம் செலுத்தாமல் திருமணத்தை நடத்த அதிக முயற்சி  மேற்கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பின் அவர் தனது உத்யோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள இயலும். திருமணத்திற்காக நீங்கள் வெளியில் மாப்பிள்ளை தேட வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாட்டில் பணிபுரியும் உங்கள் உறவு  முறையில் உள்ள மாப்பிள்ளையாகவே பார்க்கலாம். அவரது ஜாதக பலத்தின்படி வருகின்ற 05.08.2020ற்குள் அவரது திருமணம் முடிவாகிவிடும் என்பதோடு அந்நியதேசப் பணி என்பது இவருக்கு நல்ல சம்பாத்தியத்தைத் தரும் என்பதையே  இவரது ஜாதக அமைப்பு நமக்கு தெளிவாக உரைக்கிறது.எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் என் மகனின் திருமணம் தடைபட்டுக்கொண்டே செல்கிறது. வேண்டாத தெய்வம் இல்லை. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. பிள்ளையின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் விடாத நாளே கிடையாது.  நல்ல பண்பும் ஒழுக்கமும் உள்ளவன். எங்களுக்குப் பிறகு அவனது நிலை என்ன? என் மகனுக்கு திருமண வாழ்க்கை அமையுமா? எப்பொழுது திருமணம் நடக்கும்?
- வாசுகி, திருச்சி.

வயது கூடிக்கொண்டே செல்லும் நிலையில் இன்னமும் மகனுக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஆதங்கத்தில் பிறந்த வருடத்தை மாற்றிச் சொல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்  என்பதை வருத்தத்துடன் குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகிறது. நீங்கள் அனுப்பியிருக்கும் உங்கள் மகனின் ஜாதக நகலில் இரண்டு இடங்களில் அவர் பிறந்த ஆங்கில வருடத்தை மாற்றி எழுதியிருக்கிறீர்கள். இது எழுத்துப் பிழையினால்  யதேச்சையாக உண்டாகக் கூடிய தவறு அல்ல என்பதும், வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக மாற்றப்பட்டிருக்கிறது என்பதும் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது. 1981 என்பதில் கடைசி இலக்கமான ஒன்றினை  ஆறு என்று மாற்றி 1986 என்று அழுத்தம் திருத்தமாக மாற்றி எழுதியுள்ளீர்கள். அவ்வாறு ஆங்கில வருடத்தை மாற்றிய நீங்கள் தமிழ் வருடத்தையும், மாற்றி எழுதிய வருடத்திற்கு உரிய கிரக நிலையையும் மாற்ற மறந்துவிட்டீர்கள். பெண்  வீட்டாருக்கு இந்த ஜாதகத்தை அனுப்பி அவர்கள் அதனை தங்கள் குடும்ப ஜோதிடரிடம் ஆய்வு செய்து பார்க்கும் போது இந்தத் தவறினைக் கண்டு பிடிக்கும் பட்சத்தில் என்ன நினைப்பார்கள் என்பதை யோசித்தீர்களா? பையனின் வயது  விஷயத்தில் பொய் சொல்லும் இவர்கள் மற்ற விவகாரங்களில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று உங்களை தவறாக எடைபோடுவார்கள் அல்லவா? மகனுக்கு 38 வயது ஆகிறது என்ற உண்மையை மனதில் நிலை நிறுத்தி பெண் தேடுங்கள்.  

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது உண்மையான ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் நேரம் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை உண்டாக்கித் தருகிறது. களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டிற்கு  அதிபதி சனி இரண்டாம் வீடாகிய குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், அந்த இரண்டாம் வீடு புதனுக்கு உரியது என்பதும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியும் சனி மற்றும் புதனின் தொடர்பினைப் பெற்றுள்ளது என்பதும் சாதகமான  விஷயங்கள். சனிக்கிழமை நாளில் வீட்டினில் பெருமாள் படத்தினை வைத்து பூஜை செய்து ஆதரவற்ற நிலையில் உள்ள வறியவர்களுக்கு உங்கள் மகனின் கையால் அன்னதானம் செய்யுங்கள். உண்மையான ஜாதக நகலை பெண் வீட்டாருக்குத் தாருங்கள். அவர் பிறந்த ஊரில் இருந்து மேற்கு திசையில் இருந்து பெண் அமைவார். வருகின்ற சித்திரை மாதத்திற்குள் உங்கள் மகனின் திருமணம் நல்லபடியாக
நடந்துவிடும்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்