SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தவிர்க்க வேண்டிய இழுக்கு!

2019-10-29@ 17:45:22

*குறளின் குரல் 112

இழுக்கு என்ற சொல் `குற்றம், பொல்லாங்கு, நிந்தை, தாழ்வு, அவமதிப்பு,அவமானம், மரியாதைக் கேடு, களங்கம்’ என்றெல்லாம் பல விதத்தில் பொருள் தரக் கூடிய ஒரு சொல். இச்சொல்லைத் திருவள்ளுவர் ஐந்து இடங்களில் மிகப் பொருத்தமாக எடுத்தாள்கிறார்.

'யாகாவார் ஆயினும் நாகாக்கக் காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு!’ (குறள் எண் 127)

மக்கள் வேறு எதைக் காக்காவிட்டாலும், கட்டாயம் தங்கள் நாவைக் காக்க வேண்டும். அப்படிக் காக்கத் தவறினால் அவர்கள் சொல்குற்றம் ஏற்பட்டுத் துன்பப் படுவார்கள். திரெளபதி நாக்கைக் காக்கத் தவறினாள். பாண்டவர் நிர்மாணித்த மாளிகையைப் பார்க்க வந்தான் துரியோதனன். நிலத்தில் நடக்கும்போது அதன் பளபளப்பைக் கண்டு நீரென மயங்கினான். நீர் நிறைந்த குளத்தை நிலமெனக் கால்வைத்து விழுந்து எழுந்தான். பின் நிலத்தைக் கூட நீராயிருக்குமோ என்றெண்ணி உடையைத் தூக்கிப் பிடித்தவாறு மெல்ல நடந்தான். இந்தத் தடுமாற்றத்தையெல்லாம் உப்பரிகையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் திரெளபதி.

கலகலவென நகைத்தாள். யார் நகைப்பது என ஏறிட்டுப் பார்த்தான் துரியோதனன். திரெளபதி பேசாதிருந்திருக்கலாம். கண்ணில் ஒரு பரிவைக் காட்டித் தன் சிரிப்பை மறைத்திருக்கலாம். ஆனால் பண்பட்ட மனமுடைய திரெளபதியின் மனத்தைச் சற்றுத் தடுமாறச் செய்தது விதி. அவள் நா பேசத் தகாத வார்த்தைகளைப் பேசியது. `துரியோதனனே! உன் தந்தைதான் பார்வையற்றவர் என்றால் நீயுமா?’ எனக் கேட்டு நகைத்தாள் அவள். துரியோதனன் மனத்தில் அன்று விழுந்தது ஒரு பழிவாங்கும் உணர்வு. மகாபாரதப் போருக்கான விதை அன்று பாஞ்சாலியின் வார்த்தைகளால் அவன் மனத்தில் ஊன்றப்பட்டது.

பாஞ்சாலி சொல்லிழுக்குப் பட்டாள். அதனால் பின்னர் அடுத்தடுத்து வனவாசம் உள்ளிட்ட பல துன்பங்களை அனுபவித்தாள். அவள் தன் சொற்களுக்கு உள்ளூரப் பின்னர் வருந்தியதாலும் கண்ணனையே பக்தி செய்து அவன் துணையைப் பெற்றதாலும் இறுதியில் வெற்றி அடைந்தாள். என்றாலும் பெற்ற புதல்வர்கள் அனைவரையும் பறிகொடுத்தாள். நாகரிகமற்றுச் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம் எத்தனை இழுக்கை இழுத்துக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது! ராமன் பொன்மானைத் தேடிக் கானகம் போனான்.

அந்த வஞ்சகப் பொன்மான் `சீதா! லட்சுமணா!’ என ராமனுடையதைப் போன்ற குரலில் கத்தியவாறு உயிர்விட்டது. ராமனுக்கு ஆபத்தோ என அஞ்சினாள் சீதை. லட்சுமணனை ராமனை மீட்டுக் கூட்டிவருமாறு கூறினாள். அண்ணன் வீரத்தை அறிந்திருந்த தம்பி ராமனுக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்றான். அப்போது சீதையின் நாவில் புகுந்து விளையாடியது விதி. `அண்ணன் இல்லாத நேரத்திற்காக நான் தனித்திருக்கும் சமயம் வேண்டிக் காத்திருந்தாயா லட்சுமணா?` எனக் கேட்டாள் அவள். தன் மகனே போன்ற மைத்துனனைப் பார்த்துச் சொல்லலாமா அந்தச் சொற்களை? லட்சுமணன் பதறியவாறு சீதையை விட்டு விலகி அண்ணனைத் தேடிக் கானகத்திற்குள் சென்றான்.

சீதையின் சொல்லில் நேர்ந்த இழுக்குத்தான் அவளுக்கு எண்ணற்ற துன்பங்களைக் கொண்டு வந்தது. லட்சுமணன் அவள் அருகே காவல் காத்து நின்றிருந்தால் ராவணனால் சீதையைத் தூக்கிச் சென்றிருக்க முடியுமா? அவள் அசோக வனத்தில் சிறைப்படக் காரணமானது லட்சுமணனை நோக்கி அவள் சொன்ன அந்த வாக்கியம் தானே? அதை எண்ணி அவள் அசோக மரத்தடியில் மனத்துயர் கொண்டு வருந்துவதாகக் கம்பர் சுந்தரகாண்டத்தில்

எழுதுகிறார்:
'வஞ்சனை மானின் பின் என் மன்னைப்  போக்கயென்
மஞ்சனை வைதுபின் வழிக் கொள்வாயெனா
 நஞ்சனை யானகம் புகுந்த நங்கையான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் ஒப்புமோ?' -

 என்பது சீதையின் கழிவிரக்கம் தோய்ந்த வரிகள். சொல்லிழுக்குப் பட்டு அவள் துன்பத்தை அடைந்தாள் என்பது, திருக்குறளுக்குச் சீதை தன் வாழ்வால் எழுதிய உரைவிளக்கம்.

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு!'  (குறள் எண் 467)

எந்தச் செயலைச் செய்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன் நன்கு அதன் கஷ்ட நஷ்டங்களை ஆராய்ந்து எண்ணிப் பார்த்துத் தொடங்க வேண்டும். அல்லாமல் தொடங்கியபின் ஏன்தான் தொடங்கினோமோ என்று எண்ணினால் அது இழிவு தரும்.`வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்’ என இன்னொரு குறளில் எப்படி எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதையும் வள்ளுவர் கற்றுத் தருகிறார். செயலின் அருமை, நமது வலிமை, எதிரியின் வலிமை, நமக்குத் துணையிருப்போர் வலிமை இவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கச் சொல்கிறார்.

 எடுத்தேன் கவிழ்த்தேன் என்பதுபோல அவசர அவசரமாக எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை பாதிக்கப்படும்.இன்று பணியில் உள்ள மன நெருக்கடி காரணமாகப் பலருக்குப் பணியை விட்டுவிடலாம் எனத் திடீர் திடீரென்று தோன்றுகிறது. வெளிதேசங்களில் பணிபுரிவோருக்கு இந்த நிலைமை அடிக்கடி நேர்கிறது. காரணம் வெளிதேசங்களில் மனிதாபிமானக் கண்ணோட்டம் அதிகம் இருப்பதில்லை. நீ தவறு செய்தாயா, உன்னால் நாங்கள் விரும்பும் அளவு நிறுவனத்தின் வருவாயைக் கூட்ட இயலவில்லையா, உனக்கும் முதலாளிக்கும் சரிப்பட்டு வரவில்லையா. உடனே பணியை விட்டு நீயாகவே விலகிப் போ என்கிற மனோபாவமே வெளிதேசங்களில் அதிகம்.

அங்கே பல இடங்களில் மனிதர்கள் வேலை செய்யும் கருவிகளைப் போல்தான் நடத்தப்படுகிறார்கள். அவர்களைத் திடீரென்று வேலையை விட்டு நீக்கினால் குடும்பத்தோடு வாழும் அவர்கள் கடும் பொருளாதார இடர்ப்பாட்டால் சிரமப்படுவார்களே என்பதுபோன்ற மனிதாபிமானக் கண்ணோட்டங்களை அங்கெல்லாம் எதிர்பார்க்க இயலாது. ஆனால், உணர்ச்சி வசப்பட்டு வேலையை விட்டுவிட்டால் என்ன ஆகும்? அடுத்த வேலை உடனே கிடைக்குமா? இடைப்பட்ட காலத்தில் குடும்பத்தை முன்போல் பொருளாதார ரீதியாக நிர்வகிக்க இயலுமா? வேலை கிடைக்கப்பல்லாண்டுகள் ஆனால் என்ன செய்வது? கையிருப்பில் உள்ள பொருளாதாரம் எவ்வளவு? அதில் எவ்வளவு வட்டி வரும்? எத்தனை நாள் அதை வைத்துத் தாக்குப் பிடிக்கலாம்? இப்படி எத்தனையோ கேள்விகளை எழுப்பிச் சிந்தித்து பக்குவமாக முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்துவிட்டால் பின்னர் அதை மாற்ற இயலாது. துணிந்தபின் எண்ண முடியாது என்பதால் துணிவதற்கு முன் நன்கு எண்ணித் துணிய வேண்டும் என்று பெரியவர் வள்ளுவர் உணர்ச்சிவசப் படும் இளைஞர்களுக்கு அழகாக அறிவுரை சொல்கிறார்! இந்தக் கால நிலையை அந்தக் காலத்திலேயே தீர்க்கதரிசனமாகக் கண்டு எழுதியுள்ளதுபோல் அல்லவா இருக்கிறது இக்குறளின் கருத்து!

'ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு!' (குறள் எண் 716)

கற்றறிந்தார் நிறைந்த அவையில் குற்றப்படுதல், ஒழுக்க நெறியிலிருந்து தவறுவதைப் போன்று இழுக்குத் தருவதாகும்.முன்பு நடைபெற்ற நூல் அரங்கேற்றம் என்பது, இப்போதைய நூல் வெளியீட்டு விழாக்களைப் போன்றது. அப்படி நூலை அரங்கேற்றும்போது அதில் குற்றமில்லை என்று கற்றோர் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நூலாசிரியனுக்கு அது பெரும் இழுக்காக அமைந்து விடும். கம்பராமாயண அரங்கேற்றத்தின் போது கம்பர் துமி என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதற்குத் துளி என்பது பொருள் எனக் கூறினார். ஆனால் அப்படி ஒரு சொல்லைப் படித்ததுமில்லை, கேள்விப் பட்டதுமில்லை என்றார் கம்பர் மேல் பொறாமை கொண்ட கவி ஒட்டக் கூத்தர்.

செய்யுள் வழக்கில் இல்லையென்றாலும் மக்கள் வழக்கில் உள்ளது என்றார் கம்பர். (கி. ராஜநாராயணன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் படைக்கும் வட்டார இலக்கியம் மக்கள் வழக்கைச் சார்ந்ததுதான்.) அந்தச் சொல்லுக்கு மக்கள் வழக்கில் ஆதாரம் காட்டவேண்டி ஒட்டக் கூத்தரோடு கம்பர் வீதியில் நடந்தபோது கலைவாணியே ஆய்ச்சியர் குலப் பெண்ணாக வந்து ஓர் இல்லத்தின் முற்றத்தில் தயிர் கடைந்து கொண்டிருந்தாளாம். அருகிலிருக்கும் குழந்தைகளைப் பார்த்து 'தள்ளிப்போ! துமி தெறிக்கும்!' என்று சொன்னாளாம். இப்படிக் கலைவாணியே கம்பருக்குச் சாட்சி சொல்லி அருட்புரிந்ததாக ஒரு செவிவழிக் கதை உண்டு.

கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை அரங்கேற்றியபோது, 'திகட சக்கரம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதற்கு இலக்கணப் புணர்ச்சிவிதி உண்டா என்று கேட்கப்பட்டது. அதனால் அரங்கேற்றம் நின்றது. பின்னர் வீரசோழியம் என்ற இலக்கண நூலில் திகழ், சக்கரம் என்ற இரண்டு சொற்கள் சேரும்போது திகட சக்கரம் என ஆகும் என்று கூறப்பட்டிருப்பது ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சமாதானத்தைச் சொன்னபின் தான் அரங்கேற்றம் தொடர்ந்தது என்றும் அதன் பின்னர்தான் அந்த நூலைப் புலவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்றும் ஒரு செய்தி உண்டு.

'கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.'  (குறள் எண் 893)

மூத்தோர் அறிவுரையைக் கேளாமல் தான் விரும்பியவாறே செயலைச் செய்வது கேட்டையே தரும். இழுக்கையும் ஏற்படுத்தும். பெரியவர்கள் சொல்லும் அறிவுரையைக் கண்போல் போற்றிக் கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த அறிவுரை ஞானத்தின் வெளிப்பாடு. கல்வி கற்பதால் கிட்டுவது தகவல் அறிவு மட்டுமே. அனுபவத்தால் கிட்டுவதே ஞானம். அறிவை விட ஞானம் எப்போதும் உயர்ந்தது. எனவே மூத்தோர் சொல்லும் அறிவுரைகள் தங்கள் வாழ்வை வளப்படுத்தும் ஆற்றல் கொண்டவை என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். 'மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்' என்றே ஒரு பழமொழி உண்டு.

 'சிக்கனமாக இரு!' என்று மூத்தோர் சொல்வது ஆடம்பரமாக வாழ நினைக்கும் இளைய தலைமுறைக்கு இன்று கசப்பாகத் தோன்றலாம். ஆனால், எதிர்காலத்தில் பொருளாதாரச் சங்கடங்கள் எழும்போது மூத்தோரின் அறிவுரை எவ்வளவு இனிமையானது என்பதை அவர்களே உணர்வார்கள்.மூத்தவரான தர்மபுத்திரர் அறிவுரையைக் கேட்டு மதித்து நடந்ததால்தான் பாண்டவர்கள் இறுதி வெற்றியை அடைய முடிந்தது. பழங்காலத்தில் எல்லா ராஜசபைகளிலும் அறிவுரை சொல்வதற்கென்றே ஒரு குலகுரு இருப்பார். அவர் அறிவுரையைக் கேட்டே மன்னர் நடப்பார்.

அயோத்தியில் வசிஷ்டர் குலகுரு. மிதிலையில் சதானந்தர் குலகுரு. விஸ்வாமித்திரருடன் ராம லட்சுமணர்களைக் கானகம் அனுப்ப முதலில் தயங்கினார் தசரதர். ராமன்மேல் கொண்ட பாசம் அவர் கண்ணை மறைத்தது. ஆனால் ரகுவம்சத்தின் குலகுருவான வசிஷ்டர், கட்யம் விஸ்வாமித்திரருடன் அனுப்பு என அறிவுரை சொன்னார். அதை உடனே ஒப்புக்கொண்டு தசரதர் கேட்டதால் பெரிய பயன்கள் ஏற்பட்டதை ராமாயணம் சொல்கிறது. ராமனின் வில்லாற்றல் தாடகையைக் கொன்றதால் வெளியுலகத்திற்குப் புலப்பட்டது விஸ்வாமித்திரரால்தான்.

ராமனுக்கு சீதை மனைவியாகக் கிடைத்ததும் ராமன் விஸ்வாமித்திரருடன் சென்றதால் தான். வசிஷ்டர் என்ற மூத்தவரின் உயர்ந்த அறிவுரையை தசரதன் கேளாதிருந்தால் இதுபோன்ற இன்னும் ஏராளமான பயன்களை அவன் இழந்திருப்பான்.நாவை அடக்காமலிருப்பது, ஒரு செயலைத் தொடங்கியபின் ஏன் தொடங்கினோம் என எண்ணுவது, கற்றார் நிறைந்த சபையில் சொல்லிழுக்குப் படப் பேசுவது, பெரியவர்கள் அறிவுரையை லட்சியம் செய்யாமல் இருப்பது, விலை மகளிரின்  இன்சொல்லுக்கு ஆட்படுவது என இந்த ஐந்துமே இழுக்குத் தருபவை என்கிறது வள்ளுவம்.  பெருமையுடன் வாழ வேண்டுமானால் இந்த ஐந்தையும் தவிர்த்துவிட வேண்டும். வள்ளுவத்தின் வழிநடந்தால் இழுக்கேதும் அற்ற பெருமிதமான நல்வாழ்க்கை கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்