SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துவார பாலகர்கள் தாத்பர்யம் என்ன?

2019-10-23@ 16:52:32

தெளிவு பெறுஓம்

கடவுளை நினைத்து குழந்தைகள் உண்ணாவிரதம் இருக்கலாமா?
 - மோகன சுந்தரி  கோபி, கிருஷ்ணகிரி.

    விரதம் என்பது மன உறுதியைக் குறிக்கும். அதிலும் உண்ணாவிரதம் என்பது உணவு குறித்த சிந்தனையைத் துறந்து அதிக மனக் கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயம். இதனை குழந்தைகள் மீது திணிக்க வேண்டிய அவசியமில்லை. ஓடி விளையாட  வேண்டிய வயதில் இத்தனை மன உறுதி என்பது அவசியமா என்பதை சிந்திக்க வேண்டும். ஓரெட்டில் வளராத வளர்ச்சி, ஈரெட்டில் கற்காத கல்வி என்று பெரியவர்கள் சொல்வார்கள். இந்த இரண்டிற்கும் காலை உணவு என்பது மிக மிக  அவசியம். ஆக 16 வயது வரை குழந்தைகள் கடவுளை நினைத்து உண்ணாவிரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் இவ்வாறு விரதம் இருப்பதால் எந்தவித தவறும் இல்லை.

?துவார பாலகர்கள் இருப்பதின் தாத்பர்யம் என்ன?
 - கே. ஆர். எஸ். சம்பத், திருச்சி.

‘த்வாரபாலகர்’ என்ற பெயரிலேயே அதன் பொருள் உள்ளதே. த்வாரம் என்றால் நுழைகின்ற இடம் என்று அர்த்தம். பாலகர் என்றால் காப்பவர். த்வாரம் + பாலகர் = வாயில் + காப்போன் = வாயில்காப்போன் ஆகிறது. ஆலயங்களை  நிர்மாணித்தவர்கள் அரசர்கள். அரசர்கள் தங்கள் அரண்மனை வாயிலில் காவலாளிகளை நிறுத்தி வைத்திருப்பது போல, இறை சந்நதிகளின் வாயிலிலும் வாயிற்காப்போனின் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். கர்ப்பக்ருஹம் மட்டுமல்ல,  ராஜகோபுரத்தின் ஒவ்வொரு நிலையின் இருபுறத்திலும் த்வாரபாலகர்களின் சிலைகளைக் காண இயலும். அரண்மனையின் கோட்டை வாயிலில் நிற்கும் காவலாளிகள் போன்று இவர்களை நாம் கற்பனை செய்து கொள்ளலாம். அரசர்கள் தாங்கள்  வாழ்ந்த முறையைப் பின்பற்றி ஆலயங்களை அமைத்தார்கள். ஆக இறைவனின் மெய்க்காப்பாளர்களாக த்வாரபாலகர்கள் சந்நதியின் இருபுறமும் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகங்கள் என்று ராகு - கேது வர்ணிக்கப்படுவது ஏன்?
 - எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.  

இந்த சந்தேகத்திற்கான பதிலை நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கிறோம். நிழல் கிரஹங்கள் என்ற வார்த்தைக்கான பொருளை மீண்டும் ஒரு முறை மனதில் பதியும்படியாக புரிந்துகொள்ள முயற்சிப்போம். ராகு, கேது ஆகிய இந்த  இருவரையும் ‘ச்சாயா கிரஹம்’ என்று சமஸ்கிருத மொழியில் உள்ள ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அதன் நேரடி மொழிபெயர்ப்பாக தமிழில் இவற்றை நிழல் கிரஹங்கள் என்று அழைக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும்  என்றால் பழங்காலத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத ஜோதிட நூல்களில் இந்த இருவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை.

உண்மைக்கோள்கள் என்று சொல்லப்படுகின்ற சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய இந்த ஏழினைப் பற்றி மட்டுமே ஜோதிட நூல்கள் பேசுகின்றன. கிரஹணங்களைப் பற்றிய ஆராய்ச்சியின் வளர்ச்சியிலும், வேத மந்திரங்களின் அடிப்படையிலும் பின் நாளில் ராகு, கேது என்ற இரண்டு கிரஹங்கள் இருப்பதாக ஜோதிட  அறிஞர்கள் நம்பத் தொடங்கினர். இவர்களது கண்களுக்கு இந்த இரண்டும் புகைசூழ்ந்த மண்டலமாக தென்பட்டதால் (தூம்ர வர்ணம்) நிழலாக பாவித்தனர். இவை இரண்டும் நிலப்பரப்பினைக் கொண்ட உண்மைக் கோள்கள் அல்ல, புகை  மண்டலமான நிலப்பரப்பற்ற நிழற்கோள்கள் என்று அறிவித்தனர். நிழல் என்பது ஒரு ஒளி மண்டலத்தில் ஏதோ ஒரு பொருள் குறிக்கிடுவதால் அந்த ஒளியானது மறைக்கப்பட்டு உருவாகின்ற கருமையான பிம்பம் ஆகும்.

ஆனால் இந்த  இரண்டும் எந்த ஒரு பொருளின் பிம்பமும் அல்ல. அதே போன்று நிழல் என்பது அது சார்ந்த பொருளை பின்தொடர்ந்து வருவது. ஆனால் இவை இரண்டும் யாரையும் பின்தொடர்வது இல்லை. உண்மையில் இவை இரண்டும் ஒரே இடத்தில்  நிற்கக்கூடிய புகை மண்டலமான பகுதிகள். இவற்றை வெட்டும் புள்ளிகள் என்று ஜோதிட அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஒரே இடத்தில் நிற்கக் கூடிய புள்ளிகள் என்றால் பிறகு ராகு-கேது பெயர்ச்சி என்பது பொய்யா, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்கிறார்கள் என்று சொல்கிறார்களே அது தவறா என்ற கேள்வி எழலாம். இதே கேள்வி சூரியனுக்கும் பொருந்தும். அறிவியல் ரீதியாக சூரியன் என்பது ஒரு மிகப்பெரிய விண்மீன் என்று பாடத்தில் படிக்கிறோம்.

அது ஒரே இடத்தில் நின்று  சுழன்று கொண்டிருக்கும் மிகப்பெரிய நெருப்புக் கோளம் என்றும் படிக்கிறோம். ஆனால் மாதா மாதம் சூரியனின் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. அப்படியென்றால் இதில் எது உண்மை என்ற ஐயம் நமக்கு  உதிக்கிறது. உண்மையில் நாம் படிக்கின்ற இந்த சூரியக்குடும்பம் அமைந்துள்ள இந்த அண்டத்தை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்துப் பார்க்கிறோம். இந்த அண்டம் சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த அண்டத்தின் மத்தியில் சூரியன் உள்ளதால்  இது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தில் இடம் பிடிக்கிறது.

ராகு, கேது ஆகிய இந்த இரண்டும் தொலைதூரத்தில் ஒரே இடத்தில் நிற்கின்ற வெட்டும் புள்ளிகள் என்பதாலும், சுழலுகின்ற இந்த அண்டத்தினூடே நமது பூமியும்  சுற்றி வருவதாலும் பூமியில் வசிக்கின்ற நம் கண்களுக்கு அவை பின்நோக்கி செல்வதாக தென்படுகிறது. ஓடுகின்ற ரயிலில் பயணிக்கின்ற நம் கண்களுக்கு அருகில் நிற்கின்ற ரயில் பின்நோக்கி செல்வதாகத் தோன்றுகிறது அல்லவா.. அது  போலத்தான் இதுவும். ராகு-கேது வக்ர கதியில் அதாவது வலமிருந்து இடமாக பின்நோக்கி சுற்றுவதாக நம் கண்களுக்கு புலப்படுகிறது. இந்த அண்டமும் சுழலுவதால் அந்தந்த காலக்கட்டத்தில் எந்த ராசி மண்டலம் இந்த புள்ளிகளுக்கு நேராக  வருகிறதோ, அதில் இந்த நிழற்கோள்கள் வந்து அமர்வதாக நாம் கணக்கில் கொண்டு பலன் காண்கிறோம்.

ஜோதிடவியல் ரீதியாக இந்த இரண்டு கிரஹங்களுக்கு என்று தனியாக எந்த ஒரு சக்தியும் கிடையாது. ஆனால் மற்ற கோள்களின் இணைவினைப் பெறும்போது அவற்றின் தன்மையை மாறுபடச் செய்யும் திறன் இவர்களுக்கு உண்டு. புரியும்படியாக சொல்லவேண்டும் என்றால் இவை இரண்டும் வேதிப் பொருட்கள் போல. உப்பு அல்லது சர்க்கரை என்று கூட நினைவில் வைத்துக்கொள்வோம். உப்பு ஆனது பாலில் கலந்தால் பால் திரிந்து விடுகிறது. சர்க்கரையானது சட்டினியில்  சேர்ந்தால் அதன் ருசியை மாற்றிவிடுகிறது. அதுபோல இந்த இரண்டு கோள்களும் ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறார்கள், எந்த கோளின் இணைவினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இவர்கள் தரும் பலனின் அளவு  மாறுபடும்.

பொதுவாக இவை இரண்டும் நேரடியாக வந்து சேர வேண்டிய பலனை மாற்றிவிடுவதால் இந்த இரு நிழல் கிரஹங்களையும் தீய கோள்கள் என்றே சித்தரிக்கின்றோம். நிஜ வாழ்க்கையில் இந்த நிழல் கிரஹங்கள் நமக்கு வந்து சேர  வேண்டிய பலனின் தன்மையை மாற்றிவிடுகின்றன. அது ஒரு சிலருக்கு நன்மையாகவும், ஒரு சிலருக்கு தீமையாகவும் அமைந்துவிடுகிறது. சூரியன், சந்திரன் முதலான ஏழு கிரஹங்களுக்கும் தனித் தனியே சிறப்பு குணங்கள் உண்டு. இந்த கிரஹங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது ஒவ்வொரு மனிதனின் ஜாதகத்திற்கு ஏற்ப அவன் மீது தனது தாக்கத்தினை உண்டாக்குகிறது.  உதாரணத்திற்கு சந்திரன் என்ற கிரஹத்தை எடுத்துக் கொள்வோம்.

ஜென்ம லக்னத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் சாத்வீகமான அழகினை உடையவர்களாகவும், அமைதியான குணத்தினை உடையவர்களாகவும், அன்பானவர்களாகவும்  இருப்பார்கள். சந்திரன் மனோ காரகன் என்பதால் மனிதனின் மனதினை ஆளும் திறன் சந்திரனுக்கு உண்டு. இந்த சந்திரனோடு நிழல் கிரஹங்கள் ஆன ராகுவோ அல்லது கேதுவோ இணையும்போது, அதாவது சந்திரனின் கதிர்வீச்சானது ராகு  அல்லது கேது ஆகிய இந்த புகை மண்டலத்தினூடே புகுந்து வெளிவரும்போது நச்சுத்தன்மை கலந்ததாக மாறிவிடுகிறது. நச்சுத்தன்மை கலந்த கதிர்வீச்சு மனிதனின் மீது விழும்போது அதன் உண்மையான பலன் மாறிவிடுகிறது.

சந்திரனோடு  ராகு இணையப்பெற்றால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுபவர்கள் ஆகவும், கேது இணையப்பெற்றால் மிகுதியான குழப்பத்தினை உடையவர்கள் ஆகவும் இருப்பார்கள். (குரு முதலான சுபகிரஹங்கள் இணையப்பெற்றால் இதன் தாக்கம்  குறைந்துவிடும்.) ஆக ஒரு கிரஹம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவை இந்த இரண்டு நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரஹங்களை விட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக்கூடிய தன்மையைக்  கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பாதிப்பு ஆனது ஒரு சிலருக்கு நன்மையாகக் கூட முடியும். பாதிப்புகள் கூட ஒரு சிலரின் வாழ்வினில் நன்மையை ஏற்படுத்துவதை நாம் அன்றாட வாழ்வினில் காண்கிறோம்.

ஒரு வேலையும் செய்யாமல்  சும்மா சுற்றிக்கொண்டிருந்த ஒருவன் வாகன விபத்தில் சிக்கி ஒரு காலை இழக்கிறான், இன்ஷ்யூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடாக லட்சக்கணக்கில் பெரும்தொகையை அவனுக்கு அளிக்கிறது, கால் நன்றாக இருந்த நிலையில் வெறுமனே ஊர்  சுற்றிக்கொண்டிருந்த ஒருவனுக்கு அவன் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க இயலாத தொகையை அந்த விபத்தானது அவனுக்கு வழங்கிவிடுகிறது. இதுபோன்ற எதிர்பாராத பலனை உண்டாக்குவதே இந்த நிழற்கோள்களின் பணி. நடந்து  கொண்டிருக்கும் நிகழ்வினை இடையில் புகுந்து திடீரென்று தலைகீழாக மாற்றிவிடுவதால் இவற்றை பயம் கலந்த பக்தியுடன்தான் அணுக வேண்டியிருக்கிறது.

ரத்த தானம், கண் தானம், அன்னதானம் இவற்றில் சிறந்தது எது?
 - மு.மதிவாணன், அரூர்.

அன்னதானமே சிறந்தது. ரத்ததானம் என்பதை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்துவிட முடியாது. ரத்தம் கொடுப்பவரின் ரத்த வகையும், பெற்றுக் கொள்பவரின் ரத்த வகையும் ஒன்றாக இருக்க வேண்டும், அல்லது  ஒத்துப் போக வேண்டும், அதற்கு என்று தனியாக ரத்த பரிசோதனைகள் எல்லாம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக செய்யப்படுகின்ற அறுவை சிகிச்சையும் வெற்றி பெற வேண்டும். உதாரணத்திற்கு ஒரு விபத்தில் அடிபட்டு உயிருக்கு  போராடிக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது என்றே வைத்துக்கொள்வோம், நினைத்தவுடன் ரத்தத்தை ஏற்றிவிட முடியாது.

பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போய் ரத்தத்தை ஏற்றினாலும் அடிபட்ட மற்ற உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மனிதன் மீண்டும் எழுந்து நடமாட இயலும். எனவே இந்த ரத்ததானத்தில் முழுமையாக நூறு சதவீத பலன் கிடைத்துவிடும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. இதே விதி  கண்தானத்திற்கும் பொருந்தும். இந்த கண்தான விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்னால்தான் கண்தானம் என்பதைச் செய்ய இயலும். அதாவது அவன் இறந்த பிறகு பிரயோஜனம் ஏதுமின்றி மண்ணோடு மண்ணாக, அல்லது எரிந்து சாம்பலாகப் போகின்ற ஒன்றை தானம் செய்கிறார்கள்.

அதாவது பலன் இன்றி தூக்கி எறியும் வேளையில் அந்த பொருள் அடுத்தவர்களுக்காவது உதவியாக இருக்கட்டுமே என்ற  எண்ணத்தில்தான் கண்தானம் என்பது செய்யப்படுகிறது. அதனால் இதனையும் சிறந்த தானமாக கணக்கில் கொள்ள இயலாது. ஆனால் அன்னதானம் என்பது மேற்சொன்ன மற்ற இரண்டு தானங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இது  ஒன்றுதான் கொடுப்பவருக்கும் சரி, பெற்றுக் கொள்பவருக்கும் சரி உடனடியாக பலனைத் தரக்கூடியது. அன்னதானத்தைப் பெற்றுக்கொண்டவனுக்கு வயிறு நிறைகிறது.

அதைக் கொடுத்தவனுக்கு மனம் நிறைவடைகிறது. இது  எல்லாவற்றையும்விட போதும் என்று சொல்லுகின்ற எண்ணம் அன்னதானத்தினைப் பெறும்போது மட்டுமே உண்டாகிறது. மற்ற எந்த தானத்தினை வாங்கும்போதும் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் பெற்றிருக்கலாமோ என்று தோன்றும்.  ஆனால் வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சொல்லுகின்ற எண்ணம் அன்னதானத்தில் மட்டுமே தோன்றுகிறது. ஆக இது ஒன்றுதான் முழுமையான பலனைத் தருகிறது. முழுமையான பலனை உடனடியாகத் தருவதால் ரத்ததானம், கண்தானம் ஆகிய அந்த இரண்டைவிட அன்னதானமே முதலிடத்தைப் பிடிக்கிறது.

கோயிலில் பிரசாதம் தயாராகும் இடத்தை மடப்பள்ளி என்று சொல்வதேன்?
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.

மடையன் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டிருப்பதால் இந்த சந்தேகம் நம் மனதில் எழுகிறது. சுத்தம் எது, அசுத்தம் எது என்று பொருள்களைப் பிரித்து அறியக்கூடிய பக்குவமும், கைப்பு (கசப்பு), இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு,  கார்ப்பு என்று அழைக்கப்படும் அறுசுவைகளின் வேறுபாட்டினையும், ஒவ்வொரு உணவுப் பொருளின் குணத்தினையும், அதனால் விளையும் நன்மை, தீமைகளையும் முறையே அறிந்தவனை மடையன் என்று அழைப்பார்கள். முறையாகக்  கற்றறிந்த சமையல் கலைஞர் என்று பொருள் கொள்ளலாம். பல்வேறு சமையல் கலைஞர்களை வழிநடத்துபவரை மடைத்தலைவன் என்ற வார்த்தையைக் கொண்டு குறிப்பிடுவதை சங்க இலக்கியங்களில் காண முடியும்.

படையினை வழிநடத்துபவன் படைத்தலைவன் அல்லது தளபதி என்று குறிப்பிடப்படுவதைப் போல சமையல் கலையை முற்றிலுமாக குறையின்றி கற்றறிந்தவரை மடைத்தலைவன் என்று சொல்வார்கள். குறிப்பாக இவர்கள் மடி என்று சொல்லப்படுகின்ற  சுத்தம், ஆசாரம் ஆகியவற்றை கடைபிடித்து சமைப்பவர்களாக இருப்பார்கள். இவ்வாறு மிகுந்த மடியுடன் அதாவது ஆசாரத்துடன் சுத்தமாக சமைக்கப்படுகின்ற பொருட்களை இறைவனுக்கு நைவேத்யம் செய்வதால் அந்த இடம் மடைப்பள்ளி  என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மடப்பள்ளி ஆகிவிட்டது. இந்த மடைப்பள்ளி என்பது தமிழ் வார்த்தையே ஆகும்.

திருமணத்தில் பல வகைகள் உள்ளதாமே? இது உண்மையா?
- ஜி.டி.சுப்ரமணியன், கொளத்தூர்.

உண்மைதான். எட்டு வகையான திருமணங்கள் உண்டு பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. பிராம்மம், தெய்வம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசரம், காந்தர்வம், ராக்ஷசம், பைசாசம் என்ற பெயர்களில் அவற்றை அழைப்பார்கள். இந்த எட்டு  வகைத் திருமணங்களில் பிரஜாபத்யம் என்ற வகையில் செய்யப்படுகின்ற திருமணமே சிறந்த முறை என்று சாஸ்திரம் அறிந்த பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டு பெரும்பாலும் நம் இந்திய தேசத்தில் இந்த முறையே பின்பற்றப்பட்டு வருகிறது.  மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை அணுகி முறையாகப் பெண் கேட்டு, பெண்ணுக்கு ஆபரணங்களை அணிவித்து, பெண்ணைப் பெற்றவருக்கு பொன், பொருள் முதலானவற்றை தக்ஷிணையாகத் தந்து கன்னிகாதானம் பெற்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை பிரஜாபத்யம் என்கிற இந்த முறை வலியுறுத்துகிறது. இன்றளவும் இந்த முறையே நம் இந்து மதத்தில் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

திருக்கோவிலூர் k.b.ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்