SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘நகந்தாய் நரசிங்கம் அது ஆய உருவே’ - நம்மாழ்வார்

2019-10-22@ 15:52:24

நலம் தரும் நரசிம்மர் 14

கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள நரசிம்ம தலங்களில் ஒன்று. இத்திருத்தலம்  தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரில் அமைந்துள்ளது. பனைமரங்கள் நிறைந்த இப்பகுதியில் கருப்பட்டி தயாரிக்க பதனீர் காய்ச்சும் தொழில் முன்பு சிறப்பாக நடைபெற்றதால் ‘பாகு ஊர்’ என்று வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் ‘பாவூர்’ என மருவி தற்போது கீழப்பாவூர் என அழைக்கப்படுகின்றது. இங்கு நரசிம்ம மூர்த்தி பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற இரு கோயில்களில் ஒன்று ராஜஸ்தானிலும் மற்றொன்று தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் ஊரிலும் அமைந்துள்ளன.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம்.  மற்ற அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. பிரகலாதன் என்ற பக்தனுக்காகவே நரசிம்மஅவதாரம் நிகழ்ந்தது. அச்சிறுவனின் தாத்தா காஸ்யபர். இவர் சப்த மகரிஷிகளுள் ஒருவர். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்து, பூமியில் நீடித்திருந்தது வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. அப்போது காஸ்யபரால் நரசிம்மரை தரிசனம் செய்ய முடியாமல் போயிற்று.

எனவே அவர் தன் பேரன் பிரகலாதனுக்காக  திருமால் எடுத்த நரசிம்ம  வடிவத்தை   தரிசனம் செய்ய விரும்பி தவம் இருந்தார். அவருடன் வருண பகவான், சுகோ‌ஷன் என்ற முனிவர் ஆகியோரும் தவமிருந்தனர். முனிவர்களின் தவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்தது. அதன் பலனாக, திருமாலின் அசரீரி ஒலித்தது. “பொதிகைமலையில்-மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தைத் தொடருங்கள்.  என் நரசிம்ம வடிவ தரிசனத்தைக் காண்பீர்கள்!” என்பதே அந்த அசரீரி வாக்கு.

அந்த அசரீரி வாக்கின்படி புனித நீராடியபின், பகவான் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தனர் அந்த ரிஷிகள். ரிஷிகளின் தவத்திற்கு மகிழ்ந்து அவர்களுக்கு அருள மனம் குளிர்ந்தார் திருமால். அக்கணமே, தேவி, பூதேவிகளுடன் மகா உக்ரமூர்த்தியாக, 16 திருக்கரங்களுடன் நரசிம்ம அவதார வடிவில் காட்சி கொடுத்தார். சிந்தை குளிர நரசிம்மரை தரிசனம் செய்து மகிழ்ந்த ரிஷிகள், “மகா பிரபு! தாங்கள் இந்த திருக்கோலத்திலேயே இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அருள வேண்டும்” என்று வேண்டியதும் “அப்படியே ஆகட்டும்!” என்றபடி நரசிம்மர் அர்ச்சாவதாரத் திருமேனியில் நிரந்தரமாகக் குடிகொண்டார்.

இரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். சிறிய கருவறையில், கேரள பாணியில் உப்பிய கன்னங்களுடன் பல்லவர்கால புடைப்புச் சிற்பமாக கம்பீரமாக காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர், இரணியனை தன் இடது மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப்பிடிக்க, நான்கு கரங்கள் வயிற்றைக் கிழிக்க, இரண்டு கரங்கள் குடலை உருவ, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் பூரண அவதார புருஷராக 16 திருக்கரங்களுடன் அருள்புரிந்து வருகிறார்.

சிலிர்க்கும் பிடரியுடன் பிரகாசிக்கும் சிங்கமுகம், குகைபோல் இருண்ட வாய், தூக்கிய காதுகள், தடித்த புருவம், உருக்கிய பொன் போன்று ஒளிரும் கண்கள், நேர்கொண்ட பார்வை, அகன்ற நெற்றி, வீங்கிய கழுத்து, விசாலமான மார்பு, ஒட்டிய வயிறு, தலைக்குமேல் வெண்குடை என்று காட்சியளிக்கிறார்.சூரியனும், சந்திரனும் சாமரங்கள் வீச, சங்கு - சக்கரம் கொண்டவராகத் திகழ்கிறார். காஸ்யப முனிவர், காசி மன்னன், பிரகலாதன், பிரகலாதனின் தாய் ஆகியோர், அவர் காலடியில் அபயம் கேட்டு, தஞ்சமடைந்து நிற்கிறார்கள்.

 கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது.  இத்தலத்தில் லட்சுமி நரசிம்மராக வீற்றிருந்து திருமால் அருள்புரிந்து வருகிறார். பொதுவாக நரசிம்ம அவதாரத்தின் பல வடிவங்களில், லட்சுமி நரசிம்மரும் ஒன்று. இதில், அவர் மகாலட்சுமியை தன் மடியில் அமர்த்தியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள லட்சுமி நரசிம்மர், மகாலட்சுமியை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறார்.

இந்த ஆலயத்திற்கு தனிச்சிறப்புகள் பல உண்டு. பொதுவாகவே ஆகமவிதிப்படி மலைப்பகுதி அல்லது வனப்பகுதியில்தான் நரசிம்மருக்கு ஆலயம் அமைந்திருக்கும். ஆனால் இங்கு, ஊரைவிட்டு சற்று ஒதுங்கி, வடக்கு பகுதியில் அமைதியான சூழலில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. வயல்களும், தோட்டங்களும், மரங்களும், நீர்நிலைகளும் சூழ்ந்திருக்க, குளக்கரை அருகில், சமதளப் பகுதியில் பக்தர்கள் எளிதில் வந்து வழிபடும்விதமாக திருக்கோயில் உருவாகியுள்ளது. இக்கோயில் சுயம்புவகை ஆலயமாக கருதப்படுகின்றது. முறைப்படி கோயில் கட்டி சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயம் அல்ல இது. ஆகவே, இங்கு கொடிமரமோ, கோபுரமோ, உற்சவரோ கிடையாது.

நரசிம்மரை, சிங்கப்பெருமாள் என்பார்கள். உலக நன்மைக்காக நேராக வைகுண்டத்திலிருந்து மண்ணில் தோன்றியுள்ள சிங்கப்பெருமாளின் அவதாரக் காலம் வெறும் இரண்டே நாழிகைதான்! படைத்தல், காத்தல், அழித்தல் எல்லாம் நிகழ்ந்தது இக்காலத்தில்தான். எதிர்பாராமல் நிகழ்ந்த நரசிம்ம அவதாரத் திருக்கோலத்தை திருமகள் தரிசிக்க இயலவில்லை என்பதால் இத்தலத்தில் தங்கி இங்குள்ள நரசிம்மரை அவள் எந்நேரமும் பூஜித்தும், தியானித்தும் வருவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வறட்சியான காலங்களில்கூட கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையாகவும், செழுமையாகவும் இருக்கின்றன.

இங்கு அலர்மேல்மங்கை-பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம் உள்ளது. அதற்குப் பின்பகுதியில் மேற்கு நோக்கிய தனி சந்நதியில், திரிபங்க நிலையில், விரும்பியதை அருளும் விசித்திர லட்சுமி நரசிம்மர் எழுந்தருள் புரிந்து வருகிறார். நரசிம்மர் சந்நதியின் முன்பு அவரின் உக்கிரம் தணிய தெப்பக் குளம் (நரசிம்மர் தீர்த்தம்) அமைந்திருப்பது, தென்னிந்தியாவில் வேறெங்கும் காண இயலாத சிறப்பு என்கிறார்கள். மகாலட்சுமியே இதில் தினமும் நீராடி நரசிம்மரை வணங்கி வருவதாக ஐதீகம்.

நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டதன் எதிரொலியாக தினமும் சாயரட்சை வேளையில் சிங்க கர்ஜனை ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. இதனால் நரசிம்மர் ஆவேசமாக இருப்பதாகக் கருதிய பக்தர்கள் அவரது சந்நதி முன்பு தெப்பக்குளம் ஏற்படுத்தியும், முறையாக பால், இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கியதும் சிங்க கர்ஜனை நின்றுவிட்டதாம். சுமார் 300 ஆண்டுகளுக்குமுன்புவரை இந்த சிங்க கர்ஜனையை இப்பகுதி வாழ் மக்கள் கேட்டு வந்துள்ளனர். இந்த தகவல் செவி வழிச் செய்தியாக இன்றும் உலாவி வருகிறது.

ரிஷிகளுக்குக் காட்சி கொடுத்த இடத்திலேயே நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது வேறெங்கும் காணஇயலாத சிறப்பாகும். ரிஷிகள் தவம்புரிந்த-நரசிம்மர் காட்சியளித்த புனித க்ஷேத்திரம்தான் கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் க்ஷத்திரிய சிகாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்ததை செப்பனிட்ட கல்திருப்பணி ரீதியாக 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இவ்வாலயம், தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது.  

அக்காலத்தில், ராணுவத் தலைமை இடமாக விளங்கிய- கீழப்பாவூரில் இருந்த ‘முனைஎதிர் மோகர்’ படைப்பிரிவிலுள்ள 2 ஆயிரம் வீரர்களின் துணைகொண்டு, சிற்றரசுகளை வென்று பேரரசனாக முடிசூட்டியுள்ளான். முதலாம் மாறவர்மன் திரிபுவன் சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய மன்னன். தாம் ஆட்சிக்கு வந்த ஏழாம் ஆண்டில் இத்திருக்கோயிலுக்கு நித்யபூஜைகளுக்கு நிலங்கள் வழங்கியுள்ளான்.இங்குள்ள பெருமாளுக்கு ‘முனை எதிர் மோகர் விண்ணகர்’ என்னும் பெயரும் உண்டு. ‘முனைஎதிர் மோகர்’ என்பதற்கு ‘போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர்’ என்பது பொருளாகும்.

போரில் வெற்றி பெற்றதன் நினைவாக நரசிம்மர் கோயிலின் அருகிலேயே 1,700 ஏக்கர் நன்செய் நிலத்தை வளப்படுத்தும் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் ஏற்படுத்தி, அதற்கு ‘முனைஎதிர் மோகப்பேரேரி’ என்று பெயர் சூட்டியுள்ளான். அரசு வெளியிடும் பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோக நாணயங்கள் வெளியிடும் பகுதி என்பதையும், போருக்குத் தேவையான ஆயுதங்கள் செய்யப்பட்ட பகுதி இவ்வூர் என்பதையும் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோயில் நினைவூட்டுகிறது.

ஆகவே இங்கு நரசிம்மரை வழிபாடு செய்தால், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, நியாயமாக கிடைக்க வேண்டிய அரசாளும் யோகம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த திருத்தலத்தில் மேற்குத்திக்கில் நரசிம்மர் சந்நதி முன்பாகவே அவரது சினத்தைத் தணித்த தீர்த்தக்குளம் அமைந்துள்ளது தனிச்சிறப்பு. கங்கா-நர்மதா ஸ்ரீநரசிம்ம புஷ்கரணி என அழைக்கப்படும் இந்த தீர்த்தத்தின்மீது நரசிம்மரின் அருட்பார்வை உள்ளது. இந்த தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டால் வேண்டாத கோபம், கவலை, பதற்றம் நீங்கி மனஅமைதி ஏற்படும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

ஒரு ஆலயத்திலுள்ள மூர்த்திக்கு எந்த அளவு ஸான்னித்யம் (சக்தி) உண்டோ அதே அளவு ஸான்னித்யம் அங்குள்ள தீர்த்தத்துக்கும் உண்டு என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. எனவே இங்கு சுவாதி, திருவோணம், பிரதோ‌ஷம், வளர்பிறை சதுர்த்தசி, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் ‘தீர்த்த வல வழிபாடு’ நடக்கிறது. சுவாதி பூஜை இங்கு சிறப்பானது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றன. சுவாதி பூஜையில் தொடர்ந்து கலந்து கொண்டால் கடன் தொல்லை நீங்கி செல்வம் சேரும்.

வியாபாரம் பெருகும். திருமணத்தடை அகல, நீதிமன்ற வழக்கு முடிவுற, நீண்டகால நோய் தீர, கடன் தொல்லை நீங்க, இங்கு பரிகாரம் செய்து கொள்ளலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகவும் இது திகழ்கிறது. நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்தவை. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் முழு அருளுக்குப் பாத்திரமாகலாம் . இங்கு நரசிம்மர் உக்ரமாக உள்ளார். உக்ரம் என்றால் மிகுந்த ஆற்றலுடன் என்று பொருள். ஆகவே இங்கு வழிபட்டால் 1000 மடங்கு பலன் அதிகம் கிட்டும் என்பது ஐதீகம். கருங்கல் புடைப்புச்சிற்பத்தில் வீற்றிருக்கும் இந்த நரசிம்மரை வழிபடுவோருக்கு போன, இந்த ஜென்மத்தில் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிட்டும். இப்பிறவியில் உலகியலான எல்லா நன்மைகளும் உண்டாகும்.

நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் ஆலயம் களைகட்டும். கல்யாணத்தடை, கடன் தொல்லை, நீண்டநாள் நோய்கள், நீதிமன்ற வழக்கு போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது. கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் சூரிய, சந்திர தோஷம் போக்கும்; கேதுவுக்கு அதிபதியான இவரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், பிணி, பசி, மூப்பு, துன்பம், பொறாமை எதுவுமே அண்டாது; திருமணத் தடைகளைத் தகர்த்தெறிந்து கல்யாண வரம் தருகிறார்; (செவ்வாய்க்கிழமை மாலை அபிஷேகம் செய்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது.) நரசிம்மருக்கு உகந்த கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் குளித்து 16 சுற்றுகள் சுற்றிவந்து வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியங்கள் யாவும் உடனே நிறைவேறுகிறது என்கிறார்கள் பலன்பெற்ற பக்தர்கள்.

ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி நரசிம்மர் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்ட பிறகு, கன்னிமூல கணபதியை வணங்கி, வேங்கடாஜலபதி-நரசிம்மரை 16 முறை பிரதட்சணமாக வலம்வந்து வழிபாடு செய்து, அருகிலுள்ள வாலி பூஜை செய்து வழிபட்ட சிவகாமி அம்மாள் சமேத திருவாலீஸ்வரரை வணங்கினால்தான் க்ஷேத்திர வழிபாடு நிறைவு பெற்று முழுப்பலனும் கிட்டும்.குளுமையான தென்றல் வீசும் பகுதியில் எழுந்தருளியிருக்கும் இந்த லட்சுமி நரசிம்மரை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் உடனே தந்திடுவார் இந்த லட்சுமி நரசிம்மர் என்பது ஐதீகம். இத்தலம் தென்காசி - திருநெல்வேலி நெடுஞ்சாலையிலுள்ள பாவூர்  சத்திரத்திலிருந்து 2 கி.மீ. அருகில் உள்ளது.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-04-2021

  11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • harffghh

  புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

 • robbbaa

  சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!

 • 09-04-2021

  09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-brezil8

  எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்