SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னவனே! யானை முகத்தவனே!

2019-10-16@ 17:29:09

* இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் 33

எல்லா மூலமந்திரங்களும், தோத்திரங்களும் ‘ஓம்’ என்னும் பிரணவத்தையே முடிமணியாக ஏற்றுள்ளன. இந்துமதத் தத்துவங்களிலேயே ஓங்காரத் தத்துவம் உச்சியிடம் வகிக்கின்றது. அந்த ஓங்கார வடிவமே விநாயகர் என்றால் அவர்தானே முதல் தெய்வம்! எனவே தான் இந்துமதத்தினர் ஆனை முகனிலேதான் ஆலய வழிபாட்டை ஆரம்பிக்கின்றனர். அவர் மூல முதல் தெய்வம் என்பதால் தான் வெறும் கும்பிடு மட்டும் அவருக்குப் போதாது. தோப்புக்காணமும் குட்டும் அதிகப்படியான வழிபாடாக அவருக்கு மட்டுமே உரித்தாக்கி இருக்கிறது நம்மதம்.

‘‘வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரி புர பொற்பத அர்ச்சனை மறவேனே !’’

என அற்புதமாகப் பாடுகிறார் அருணகிரி நாதர். விநாயகர் வழிபாடு, அன்பர்களுக்கு என்னென்ன தருகிறது தெரியுமா? கபிலதேவர் பாடுகிறார்.

‘‘திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.’’

வி - இல்லை, நாயகர் - தலைவர். தனக்குமேல் இல்லையென்னும் பொருளில் விநாயகர் என்னும் பேர் பெற்றார் அவர். தேகம் இல்லாதவர் விதேகர். மலர் - அற்றவர் விமலர், அவ்வாறே தலைவர் என்னும் நாயகர் தனக்குமேல் இல்லாதவர் விநாயகர். யானைக்கு யார் தலைவர் ? அதை அங்குசம் கொண்டு அடக்குகிற யானைப் பாகன்தான்! ஆனால் இந்த தெய்வீக, யானைக்குத்தான் தலைவன் இல்லையே அங்குசத்தை அவர் மேல் செலுத்த அதிகாரி இல்லை!
எனவே தான் அவர் கரத்திலேயே அங்குசம் இருக்கிறது.

‘அங்குச பாச கர ப்ரசித்தன்’ என இந்துமதத் தத்துவம் இயம்புகின்றது.

 விநாயகர் வழிபாடு என்னென்ன தரும்? பாரதியார் பட்டியலிட்டு ஒரு பாட்டியல் தருகிறார்.

‘‘கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்,
 குணம் அதிற் பலவாம், கூறக் கேளீர் !
 உட்செவி நிற்கும்! அசுக்கண் ஒளிதரும் !
 அக்கினி தோன்றும்! ஆண்மை வலியுறும் !
 திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்!’’
 வித்தை வளரும் ! கேள்வி ஒங்கும் !
 அமரத்தன்மை எய்தவும் பெறலாம் !
 தேசியமும் தெய்வீகமும் இணைந்த தெய்வம் விநாயகர் !

எவ்வாறு என்கிறீர்களா ? விநாயக சதுர்த்தியில் அவரைக் களிமண்ணில் தானே காட்சிப்படுத்துகிறோம்! எனவே ‘பூமியே சாமி’ என்பதை விநாயகர் நமக்கு விளங்க வைக்கிறார் ! விசர்ஜனத்திலும் மீண்டும் கடலில் கரைந்து பூமியோடு ஒன்றாகி ஐக்கிய மாகிவிடுகிறார்.  ’பூமியே சாமி! சாமியே பூமி!’ என்கிற தத்துவத்தைப் புலப்படுத்தும் பூஜையே விநாயக சதுர்த்தி விழா! தனிப்பெரும் தலைவரான விநாயகர் உருவத்தை உற்று நோக்கினால் ஆண், பெண், விலங்கு, பூதம், தேவர் என அனைத்தும் அவரிடம் சங்கமமாகி இருப்பது தெரியும்.

விநாயகருக்கு ஒரு தந்தம் தான்!  ‘ஏக தந்தாய நமஹ என வழிபடுகிறோம். ஆண் யானைக்குத்தான் தந்தம். பெண் யானைக்குத் தந்தம் கிடையாது என நாம் அறிவோம்! எனவே தந்தம் உள்ள பகுதி ஆண்! தந்தம் இல்லாத பகுதி பெண்! அவரிடம் உள்ள பெருத்த வயிறும் குறுகிய கால்களும் பூத அம்சம் ! தலை யானைத்தலை ! எனவே விலங்கு. ஐந்து கைகள் தேவ லட்சணம்! எல்லாமாகிக் கலந்து நிறைந்தவரே பிள்ளையார் !  ‘எங்கும் எவையும் போல் தங்கும் அவன் தானே தனி’ என அறிவோம்! அவன் அடிமலர் பணிவோம்!

கமண்டல நீரைக் கவிழ்த்து காவிரியை வரவழைத்தார் விநாயகர். கல்யாணத்தை முருகனுக்கு நிகழ்த்தினார் விநாயகர், நம்பியாண்டார் நம்பிக்குச் சகல கலைகளையும் இமைப்பொழுதில் அறிவித்த வரும் அவரே, ஔவையாருக்கு அருளியவர். மகா பாரதத்தை மேருமலையில் வியாசர் சொல்ல எழுதியவர் என விநாயக புராணம் விரிக்க பெருகுகின்றது. அவர் அற்புதச் செயல்கள் கேட்டு மனம் உருகுகின்றது. அவர் பேராற்றல் பெற்றவர்! அதனால் தான் இப்போதும் அசாத்திய காரியங்களைச் செய்து முடிப்பேன் என யாரேனும் சொன்னால் அவன் பெரிய கொம்பனா? எனக் கேட்கிறார்கள்.

கணேசரைப் போல் கணக்கில்லாத ஆற்றல் பெற்றவனா என்பதே அதன் பொருள்! பொதுவாக தாய், தகப்பன், பாட்டன், தமையன், தமக்கை இவர்களுக்குத்தான் சிறப்பாக ‘ஆர்’ விகுதியை நமது தமிழ் இலக்கணம் தருகிறது. அதனால் தான் தாயார், தகப்பனார், தமக்கையார் என அழைக்கிறோம். ‘பிள்ளை’க்கு ‘ஆர்’ விகுதி பொருந்தாது. ஆனால் இவர் ஒருவருக்கு மட்டும் ‘பிள்ளையார்’ என சிறப்பு விகுதி தந்து அழைக்கிறோம் என்றால் இவர் பெருமை ஒரு கட்டுரையில் அடங்கிவிடுமா என்ன?

‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’
‘கணபதி பூஜை கைமேற்பலன்’
‘நம்பிக்கை உடையவரைத் தும்பிக்கை காக்கும்!’

என பழமொழிகளில் உலாவருகிறது பிள்ளையார் பெருமை! மகிமையில் சிறந்த இத்தகைய மகாகணபதி எவ்வளவு எளிமையாக நமக்காக இறங்கி வருகிறார் பாருங்கள்!  மற்ற தெய்வங்கட்டு உருவம் அமைக்க வேண்டுமானால் ஆகம சாஸ்திரப்படி செய்ய வேண்டும். ஒரு சிறு குறைபாடு இருந்தாலும் அது வழிபாட்டிற்குப் பொருந்தாது. ஆனால் பிள்ளையாரோ மண், மஞ்சள், ஏன் சாணம் என எதில் பிடித்து வைத்தாலும் அருட் பாலிக்கிறார். அதனால் தான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்கிறோம். அதில் குறைபாடு ஏற்பட்டாலும் அவருக்கு நிறைவே! அதனால் வெல்லத்தில் பிள்ளையாரைச் செய்து அதையே கிள்ளி நிவேதனம் செய்தாலும் அவர் அகம் மகிழ்வார்!
தன் தந்தத்தைத் தானே ஒடித்துக் கொண்டவர் தானே அவர்!

வியாசர் மகாபாரதத்தைச் சொல்லச் சொல்ல அந்த 60 லட்சம் கிரந்தங்களையும் மேருமலையில் எழுதினார் விநாயகர். மலையில் எழுத வலிமையான எழுதுகோல் வேண்டுமே! எதன் மூலம் எழுதினார் தெரியுமா ? தன் அழகான உறுதியான தந்தத்தை ஒடித்து எழுதினார்! யானைக்குத் தந்தம் தான் அழகு! அந்த அழகான தந்தம் போனாலும் பரவாயில்லை. அறிவான மகாபாரதக் கிரந்தம் மக்களுக்குக் கிடைக்கட்டும் என்ற உயரிய நோக்கம் அவருக்கு ! வில்லிபுத்தூர் ஆழ்வார் இதை விமரிசையாகப் பாடுகிறார் !

‘‘நீராழி உலகத்து மறை நாலொடு ஐந்து என்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்னநாள்
ஏடாக மாமேரு வெற்பாக அங்கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாமரோ !’’

ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபடுகிறோம். தன்னிகரற்ற அவரைத் தங்கம், வெள்ளியிலா உருவம் செய்து பூஜிக்கின்றோம்? இல்லையே!  களிமண்ணில் வடிவம் ஏற்கிறார்! எருக்கம் பூ மாலையை ஏற்றுக் கொள்கிறார்! பூஜை செய்ய பூ வேண்டாம், புல் போதும் என்று அறுகம் புல்லால் அர்ச்சிக்கச் சொல்கிறார். பூ வேண்கொற்றக்குடை விரித்து வைக்கவேண்டும் என்றா விளம்புகிறார்? காகிதக்குடை போதும், கனிந்த அன்புடன் எளிமையாய்ச் செய்யும் எதனையும் ஏற்கிறேன் என்கிறார் பெருமைக்கு உகந்த பிள்ளையார்.

ஸ்ரீ கணேச பஞ்ச ரத்னத்தில் ஆதிசங்கரர் ‘முதாகராத்த மோதகம் சதாவிமுக்தி சாதகம்’ என பாடுகிறார்.  கொழுக்கட்டை செய்து விநாயரை வழிபடுகிறோம். மோதகம் நிவேதனம் செய்தால் நம் பாதகம் களையப்படுகிறது. அனைத்தும் சாதகம் ஆகிறது.  பிள்ளையார் வடிவம் பற்றி நிறையவே சிந்தித்து விட்டோம்! அவருக்கு நிவேதனம் செய்யும் கொழுக் கட்டையையும் கொஞ்சம் பார்ப்போமே! அரிசி மாவில் சொப்பு போல செய்கிறோம். தித்திக்கும் வெல்லத்தில் பூரணம் ெசய்து அதில் வைக்கிறோம். கொழுக்கட்டையை அர்ப்பணிக்கிறோம்.

மேலே வெண்மையாக விளங்கும் அரிசி சொப்பு தான் உடம்பு, அதில் பூரணமாக விளங்கும் வெல்லம் தான் ஆத்மா.இரண்டையும் அவர் கையில் ஒப்படைத்துச் சரணடைகிறோம் என்றால் நம்மைப் பரிபூரணமாக அவரிடம் தருகிறோம்
என்பதுதானே பொருள்!

கடிதமா ? பிள்ளையார் சூழி!
காவியமா ? விநாயகர் துதி!
கட்டிடமா ? கணபதி ஹோமம் !
கல்யாணமா ? மஞ்சள் பிள்ளையார் !

இவ்வாறு நம் வாழ்வைச் சிறப்புற பொலிய வைக்கும் விநாயகர் வெற்றி அளிக்கும் விநாயகர் தானே! அவரை வழிபடுவோம்! அனைத்திலும் முதல் நிற்போம்! ‘‘ வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்’’

(தொடரும்)
திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்