SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரிஷப ராசி ஆண் கௌரவக் காளை

2019-10-16@ 15:50:39

யாருக்கு ரிஷப ராசி குணங்கள் இருக்கும்?

ஏப்ரல் 21 முதல் மே மாதம் 21 க்குள் பிறந்தவர்கள்
கார்த்திகை 2,3,4 பாதங்கள் , ரோகினி நான்கு பாதங்கள் மற்றும் மிருகசிரிடம் 1, 2, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்
ரிஷப லக்னத்தில் பிறந்து லக்னாதிபதி வலுத்து நிற்பவர்கள்
ரிஷப ராசியில் பிறந்து ராசியாதிபதி வலுவாக இருந்தால்

ரிஷப ராசி என்பது சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ராசி. சுக்கிரன் அசுர குரு. அழகுக் கலைகளின் அதிபதி. எதிர் பாலித்தவர் ஈர்ப்பு, நகை, ஜவுளி, கணினி,  சொகுசு வாகனங்களை அருள வல்லவர். ரிஷப ராசி நிலத்தின் ராசி ஆகும். அதனால் இவர்கள் பொறுமையில் பூமாதேவியையும் மிஞ்சி விடுவர். சிலர் எதற்கும்  அலட்டிக் கொள்ளாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி இருப்பார். அழுத்தக்காரர்கள். மாற்றத்தை விரும்பாதவர்கள். உலக இன்பங்களில் விருப்பம்  உடையவர்கள். உணவு, உடை, தூக்கம் ஒய்வு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். யதார்த்தவாதிகள். லட்சியவாதிகள் கிடையாது. தியாகம்,  விட்டுக்கொடுத்தல் போன்றவை இவர்களிடம் இருக்காது. நாக்குக்கு அடிமை. சுவைக்கு அடிமை. சுகத்துக்கு அடிமை. அன்பானவர்கள்; அன்பை அதிகளவில்  வெளிப்படுத்தத் தெரியாதவர்கள். தன்னலம் மிக்கவர்கள்; குடும்ப விரும்பிகள் [family lovers],

ரிஷப ராசி ஆண்

ரிஷபம் என்றால் காளை. அதிலும் கௌரவம் மிக்க காளை. அது தான் கோயில் காளை. அதை ஜல்லிக்கட்டில் கூட யாரும் பிடிக்க மாட்டார்கள். தொட்டுக்  கும்பிட்டு வழி விடுவர். ரிஷப ராசியின் ஆதிக்கத்தில் பிறந்த ஆணுக்கு இயற்கையிலேயே பெண்களை ஈர்க்கும் வசிய சக்தி  உண்டு. ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன்  என்பதால் இவருக்கு இந்த எதிர் பாலின ஈர்ப்பு இயல்பான தன்மை ஆகும். இந்த சுக்கிரன் குருவுக்கு அடுத்தபடி முழு சுபராக இருப்பதால் பொதுவாக ரிஷப  ராசிக்காரர்கள் பிறருக்கு தீங்கு நினைக்காத நல்லவராக இருப்பது வழக்கம். ஆனால் சுயநலம் அதிகம். தான, தர்மங்களில் அதிக பற்றில்லாதவர்.

நடுத்தர உயரமும் நல்ல ஆகிருதியான உடலும் அமைதியான சுபாவமும் கொண்டவர். தன் பெண்டு பிள்ளைகளை கண் போல காப்பாற்றுவார். தான் உண்டு தன்  வீடு உண்டு என்று இருப்பார். அடுத்தவர் வம்பு தும்புக்கு போகாதவர். இவர் பொதுக் காரியங்களில் ஈடுபட்டாலும் தன் காரியத்தில் கவனமாக இருப்பார். ஆரியக்  கூத்தாடினாலும் காரியத்தில் கவனமாய் இருப்பார். அரசியலில் இருந்தாலும் தன் குடும்ப மேன்மைக்கே அதிக முக்கியத்துவம் தருவார். தன் மனைவி மக்கள்  ஆகியோர் நல்லது கெட்டது என என்ன செய்தாலும் அவர்களை உயிராக நேசிப்பார். ஆனால் அவர்கள் இவருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். இவர் அதிகார  போதை மிக்கவர் என்பதால் இவருக்குக் கட்டுப்பட்டு இவரை அன்றாடம் பாராட்டி மகிழ்வோருக்கு இவரால் நல்ல ஆதாயம் உண்டு.

கன்னியரைக் கவரும் காளை ராசிக்காரர்

பெண்கள் விஷயத்தில் ரிஷப ராசி ஆண் தாராளமாக செலவு செய்வார். அவர் மனதில் ஒரு பெண்ணைக் குறித்துவிட்டால் தினந்தோறும் உயர்ந்த பரிசுகள்  அனுப்பி அப்பெண்ணைத் தானாகவே தன்னைத் தேடி வர வைப்பார், அவளை முழுதாக கவர்ந்துகொள்வார். அது நடக்காத போது சற்று மூர்க்கராக மாறிவிடுவதும்  உண்டு. தன்னைப் போல தகுதியானவரை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாளே என்ற ஆதங்கத்தினால் உண்டாகும் கோபம் தானே தவிர பழி வாங்கும்  உணர்ச்சியால் அல்ல. [சேது படத்தில் கதாநாயகன் கதாநாயகியிடம் தன் அன்பை விளக்கி முரட்டுத்தனமாக நடந்துகொள்வாரே அது போல என்று சொல்லலாம்.].

பொதுவாக ரிஷப ராசிக்காரர் பழைய பொருட்களை வாங்க மாட்டார். ஆனால் பெண்கள் விஷயத்தில் இவரது விருப்பமே அங்கு முதலிடம் பெறுவதாலும் சுக்கிரன்  அசுர குரு என்பதாலும் வீனஸ் உணர்ச்சிகளின் தேவதை என்பதாலும் மாற்றான் மனைவியாக இருந்தாலும் இவருக்கு பிடித்திருந்தால் அப்பெண்ணைக் கவர்ந்து  வந்துவிடுவார். பின்விளைவுகளுக்கு அஞ்ச மாட்டார். அரக்கத்தனமாக இருப்பார். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார். படையே எதிர்த்து வந்தாலும் அதுவே  இவரது உறுதி கண்டு பின்வாங்கிவிடும். கவர்ந்து வந்த பெண்ணை ராஜகுமாரி போல வைத்துக்கொள்வார்.

விருப்பும் வெறுப்பும்

பெண்களின் அறிவாற்றலைக் கண்டு மனதுக்குள் மிகவும் ரசிப்பார். அவர்களை மிகவும் மதிப்பார். ஆனால், வெளிப்படையாக அதைச் சொல்லி அதிகமாகப் பாராட்ட  மாட்டார். இவருக்கு நெகட்டிவாகப் பேசுவது சுத்தமாகப் பிடிக்காது. எப்போதும் நல்லதையே பேச வேண்டும் என்று விரும்புவார். கொலை, கொள்ளை, களவு, புறம்  பேசுதல், கிசு கிசு போன்றவற்றில் ஆர்வம் காட்ட மாட்டார். ரிஷப ராசி ஆணுக்கு நிலம் மற்றும் நீர் ராசி பெண்களே பொருத்தமாக இருப்பார்.

நெருப்பு மற்றும் காற்று ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பொருந்துவதில்லை. இவர் ஒரு முறை நேசித்த பெண் தன்னை விட்டுப் பிரிந்து போவதை இவரால்  சகித்துக்கொள்ளவே இயலாது. டைவர்ஸ், ப்ரேக் அப் போன்றவை இவர் வாழ்வில் நிகழக் கூடாதவை ஆகும். அதனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே மிகவும்  கவனமாக இருப்பார். அப்படி நடந்துவிட்டால் இவர் படும் வேதனையில் கல்லும் கரைந்துவிடும்.

பொதுவிடப் பண்பாடு

ரிஷப ராசிக்கார ஆண் தன் மனைவி மக்கள் பணியாட்கள் நண்பர்கள் ஆகியோரிடம் ஒரு விஷயத்தை கண்டிப்பாக எதிர்பார்ப்பார். பொதுவிடத்தில் வைத்து  இவருக்குப் பிரியமில்லாத அரட்டை, சத்தமாக சிரித்தல், கேலி பேசுதல், பரிகாசம் செய்தல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இவரது இருப்பை மதித்து  அமைதியாக மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இருக்காவிட்டால் இவருக்கு அதிகாரம் இருந்தால் அடுத்த முறை அது போன்ற  இடத்துக்கு அவர்களை அழைத்து வர மாட்டார்.

தனியாகப் போகவும் அனுமதிக்க மாட்டார். சில சமயம் அந்த இடத்திலேயே அவர்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்க மாட்டார். கோபம் வந்துவிட்டால்  இவரைப் போன்ற மூர்க்கரைக் காண இயலாது, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது இவருக்கே முற்றும் பொருந்தும். சமயங்களில் அடித்து உதைத்து  இழுத்துக் கொண்டு போகவும் தயங்க மாட்டார். ஆனால் வாழ்வில் இவர் இரண்டொரு முறை மட்டுமே கோபிப்பார். அதுவே இவர் கூட இருக்கும் ஆட்களுக்கு  வாழ்க்கை முழுக்க போதுமானதாக இருக்கும்.

கவின் கலை ஆர்வம்

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர் என்பதாலும் மண் ராசி என்பதாலும் இவருக்கு கவின் கலைகளில் ஆர்வமும் ரசனையும் மிகுதி அதாவது இவர் பெரும்பாலும்  ஆடல் பாடல்கலைகளின் ரசிகனாக புரவலனாக இருப்பார். சுவையான உணவுகளை சாப்பிட்டுவிட்டு இவர் ஆடல் பாடல் கலைகளை உட்கார்ந்து ரசிப்பார். வீர  விளையாட்டுக்களில் பெரிதும் ஈடுபாடு இருக்காது. உடலை வருத்தும் எந்தக் காரியத்தையும் இவர் விரும்ப மாட்டார். அமைதியான ‘மெலடி’, கர்நாடக  சங்கீதம் பரத நாட்டியம் போன்றவை இவருக்கு மிகவும் பிடிக்கும். அலட்டாமல் அமர்ந்து ரசிப்பார். இவர் ஒரு நல்ல ரசிகர். வாழ்க்கையை அணு அணுவாக ரசிக்கப்  பிறந்தவர் இவர் என்று சொல்லலாம்.

உணவின் ரசனை

உண்ணும் உணவில் கூட ‘கலர்’களை விரும்புவார். மஞ்சள் நிற மாம்பழம், ஆரஞ்சு கலர் கமலா பழம், செவ்வாழை, கேரட், பீன்ஸ், பீட்ரூட், பாதாம் அல்வா,  பொன் நிறத்தில் மெது வடை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என்று இவர் மிகவும் ‘காஸ்ட்லி’யான சுவையான ‘ரிச்சான’ உணவுகளை விரும்புவார்.  அவை அழகாக பரிமாறப்பட்டு கலா ரசனையுடன் ஒன்றுக்கு அடுத்து ஒன்று வரிசையாக வழங்கப்பட வேண்டும். இவர் சாப்பிடுவதில் கூட கடக் முடக் என்ற  பல்லை உடைக்கும் கடின பொருட்களை விரும்பமாட்டார். தொட்டு எடுப்பதற்கு மெதுவானதாகவும் நாக்கில் பட்டவுடன் சுவையூட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

மெதுவாக ரசித்து ருசித்து மென்று தின்பார். லபக் லபக் என்று விழுங்க மாட்டார். ரிஷப ராசிக்காரர் ஒவ்வொரு வேளையும் புதிதாக சமைத்த உணவையே சாப்பிட  விரும்புவார். சுண்ட வைத்த பழைய குழம்பு, பழைய சோறு போன்றவை இவருக்கு பிடிக்காது. தினமும் பகலுணவு இவருக்கு முழு சாப்பாடாகவே [ஃபுல் மீல்ஸ்]  இருக்கும். சாம்பார், வற்றல் குழம்பு, மோர்குழம்பு, ரசம் மோர் அப்பளம் வடகம் வற்றல் என்று ஒவ்வொன்றாகக் கேட்டு வாங்கி ரசித்து சாப்பிடுவார். வீட்டில்  சாப்பிடும்போது கூட இரண்டு குழம்பு கேட்பார், இரண்டு காய் வைத்தாலும் வற்றல் வடகம் அப்பளம் கேட்பார். உணவு வேளையில் எதற்காகவும் எழுந்து வர  மாட்டார்.

இலையில் எதையும் மிச்சம் வைக்காமல் கடைசி கைப்பிடி உணவு வரை ரசித்து சாப்பிடுவார். உண்ட பிறகு சிறிது ஓய்வெடுப்பதை விரும்புவார். அதனால் இவர்  பெரும்பாலும் சொந்தத்தொழில் செய்வதையே விரும்புவார். வெளியே உணவகத்துக்கு சாப்பிடப் போனால் யாரும் இவரை முந்திக்கொண்டு மெனு சொல்வதை  இவர் விரும்ப மாட்டார். காரணம் இவர் சொன்னால் அது மற்றவர் சொல்வதை விட மிகச் சரியாகவே இருக்கும். ஏன் இப்படி முட்டாள்தனமாக அவசரப்பட்டு  மோசமான உணவை ஆர்டர் செய்தார்கள் என்று கருதுவார். சிலசமயம் அதை சொல்லிவிடுவார். லைட்டாக சாப்பிடுவது இவருக்கு பிடிக்காது; எப்பவும் ஹெவி  ஃபுட் தான் இவர் சாய்ஸ்.

தொழிலில் நேர்மை

பொதுவாக ரிஷப ராசிக்காரர் சிறு வயதிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க ஆரம்பித்து விடுவார். அதனால் அவரது தாயாரும் சகோதரரும் அவரை மிகவும் மரியாதையாக நடத்துவார்கள். சிறு அளவில் தொழில் ஆரம்பித்தாலும் நேர்மையாகத்  தொழில் செய்வார். பணத்துக்காக தரம் குறைந்த பொருட்களை விற்க  மாட்டார். பெரும்பாலும் கமிஷன் ஏஜென்ட், ரியல் எஸ்டேட் [மண் ராசி], நகைக் கடை, அடகுக் கடை, ஜவுளிக் கடை, ஷேர் புரோக்கர், ஃபைனான்ஸ் போன்ற  தொழில்களே இவருக்கு அமையும். சுக்கிரன் நவரத்தினம் மற்றும் ஜவுளிகளுக்கு அதிபதி. மார்க்கெட்டிங், சேல்ஸ் ரெப் போன்ற அலைச்சலும் வள வளவென்று  பேசும் வேலைக்கும் இவர் செல்ல மாட்டார்.

எப்போதும் இவரிடம் யாருடைய பணமாவது இருந்துகொண்டே இருக்கும். பணத்தை எண்ணிக்கொண்டிருக்கும் வேலையே இவருக்கு பெரும்பாலும் அமையும்.  உட்கார்ந்த இடத்தில் இருந்தே இவர் நல்ல லாபம் சம்பாதிப்பார். தான் உட்காரும் அளவுக்கு ஒரு பெரிய வசதியான இருக்கை - சோஃபா செய்து போட்டு அதில்  சொகுசாக உட்கார்ந்துகொள்வார். அங்கிருந்தபடியே வேலை செய்து பணம் பார்ப்பார். மெல்ல மெல்லத் தொழிலில் முன்னேறி வருவார். ஆனால் இவர் வளர்ச்சி  ‘ஸ்டெடியாக’ இருக்கும். பெரும்பாலும் ரிஷப ராசியினர் வாழ்வில் அதிக மேடு பள்ளங்கள் [ups and downs] இருப்பதில்லை. எதற்கும் பதட்டப்பட  மட்டார். நிதானமாக யோசித்து செயல்பட்டு வெற்றி காண்பார்.

ஆடம்பரம்

ரிஷப ராசிக்கார்ர் வீட்டுக்குத்  தேவையான பொருட்களைத்  தானே செலெக்ட் செய்து வாங்குவார். அவ்வாறு வாங்கும்போது சிறப்பான பொருட்களைத்  தேடி  வாங்குவார். பழைய மலிவான பொருட்களை வாங்கமாட்டார். அப்போது மார்க்கட்டில் அறிமுகமான புதிய வரவுகளை வாங்குவார். தன் வீட்டில் இருக்கும் பொருள்  பெரிதாக ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ஒரு பொருளை இவர் வாங்கிய பின்பு அதைப் பார்ப்பவர் ‘‘இதை எங்கு வாங்கினீர்கள்? அழகாக  இருக்கிறதே; விலை அதிகம் இருக்குமே’’ என்று பாராட்ட வேண்டும் என்பது இவரது விருப்பம் ஆகும்.

அன்பும் அரவணைப்பும்

ரிஷப ராசிக்காரரைத்  தந்தையாக பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவர் தன் குடும்பத்தை தன் பிள்ளைகளை அரவணைப்பதில் நிகரற்றவர். இவருக்கு நிகர்  இவரே. அன்பு காட்டுவதிலும் எது நடந்தாலும் நான் இருக்கிறேன் என்ற தன்னம்பிக்கையைப் பிள்ளைகளுக்கு அளிப்பதிலும் ரிஷப ராசிக்காரரை வெல்ல வேறு  எவரும் உலகில் இலர். அவர்களின் முன்னேற்றத்தில் சிறு வயது முதல் நல்ல வழிகாட்டியாக விளங்குவார். ஒரு தடம் அமைத்துத் தந்து அதில் அவர்களை  அழைத்துச் செல்வார்.

நல்ல இடத்தில் அவர்களை அமர்த்துவதில் இவர் மிகுந்த ஆர்வம் காட்டி அதற்காகக் கடுமையாக தகவல்களைத்  திரட்டி ஆவன செய்வார். அவர்களின் படிப்பு,  தொழில் போன்றவற்றை முடிவு செய்வதில் இவரது பங்கு அளப்பரியது. இவர் கைபிடித்து தான் இவர் குழந்தைகள் இறுதி வரை நடப்பார்கள். அவர்களின்  சந்தோஷத்துக்கு இவர் எந்தக் குறையும் வைக்க மாட்டார். இவரது குடும்பத்தினருக்கு எந்தக் கவலையும் வராமல், எந்தக் குறையும் ஏற்படாமல் பாதுகாப்பார்.  எனவே இவரது அதிகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என அவர் கருதுவார்.

தேசப் பற்று

ரிஷப ராசிக்காரருக்கு தன் வீடு என்பது போல தனது ஊர், தனது மாவட்டம், தன் மக்கள், தன் தாய்நாடு, தாய் மொழி என்று தான் சார்ந்த அனைத்து  விஷயங்களிலும் பற்று அதிகமாக இருக்கும். இவை குறித்த விஷயங்களை அதிகம் அறிந்துகொள்ள விரும்புவார். இவற்றின் மேன்மைக்காக தன் பங்கை செலுத்த  விரும்புவார். நூல் வெளியிடுதல், கோயில் கட்டுதல், விழா நடத்துதல்  போன்ற விஷயங்களில் ஆர்வமாக ஈடுபடுவார். அவற்றில மகிழ்ச்சியுடன்  கலந்து  கொள்வார்.

வாக்கும் செயலும்

ரிஷப ராசிக்காரர் எதையும் சுற்றி வளைத்துப் பேச மாட்டார். நாசூக்காக எடுத்துச் சொல்ல மாட்டார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேச மாட்டார். பின்  எப்படி பேசுவார்? இதயத்தில் ஊசி ஏற்றுவது போல சுருக்கென்று குத்தும் வார்த்தைகளால் பேசுவார். அமைதியாக ஓரிரு வார்த்தைகளால் பரிகாசம் செய்வார்.  குதர்க்கமாக பேசுவார். இவர் கேட்கும் கேள்விகளுக்கு எதிராளிக்கு  நாக்கை பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் போலத்  தோன்றும். ஆனால் அடுத்த நிமிஷம்  அதை இவர் மறந்துவிடுவார். சூது வாது கிடையாது. அடுத்து கெடுக்கும் நோக்கம் கிடையாது.

எல்லாம் direct dealing தான். ரிஷப ராசிக்காரரின் அதிகார ஆசை காரணமாக சில சமயம் சட்டென்று பால் மாறிவிடுவர். அரசியல்வாதியாக இருந்தால்  ஆளுங்கட்சிக்கு தாவி விடுவார். இவர் இரட்டை நாக்கு மனிதர். Turn coat அடிப்பதில் வல்லவர். தேவை என்றால் ஆதரிப்பார்; தேவை இல்லையென்றால்  எதிர்ப்பார். யாருக்கும் இரண்டாம் நபராக இருந்து கொண்டு ஒத்து ஊத மாட்டார். எங்கும் தான் தனித்து இலாபம் அடைய வேண்டும் என்றே விரும்புவார். பணம்,  செல்வாக்கு, அதிகாரம் இருக்கும் இடத்தில் இருக்கவே இவர்  விரும்புவார்.

தியாகம், சேவை என்று சொல்லிக்கொண்டு தன்னவர் அல்லாத மற்றவர்களுக்குத்  தனக்கு லாபமில்லாத வேலைகளைச்  செய்ய மாட்டார். தனக்கும் தன்னைச்   சேர்ந்தவர்களுக்கும்  பலன் தரக்கூடிய முடிவுகளையே இவர் எப்போதும் எடுப்பார். இந்த ராசிக்காரர்களில் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது; எல்லாம் நம்  உழைப்பால்தான் நடக்கிறது என்பார். ஆனால் அதிர்ஷ்டம் சகுனம் சென்டிமென்ட் போன்றவற்றில் ஆழமான நம்பிக்கை உண்டு. மொத்தத்தில் இவர் ஒரு கோயில்  காளை; குடும்பத்துக்குக் குபேரன்.

(தொடரும்)
முனைவர் செ. ராஜேஸ்வரி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்