SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தர்மபுரி சனத்குமார நதிக்கரையில் அருள்பாலித்து கௌரி நோன்புக்கு வித்திட்ட கல்யாண காமாட்சியம்மன்

2019-10-15@ 09:58:02

தர்மபுரியில் சனத்குமார நதிக்கரையில் நும்பள பல்லவ மன்னர்களால் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மல்லிகார்ஜூனசுவாமி, கல்யாண காமாட்சியம்மன் கோயில். காமாட்சி அம்மன் சன்னதி அஷ்டாதச கோணத்தில் 18 யானைகள் தாங்க, 18 படிகளுடன் அமைந்திருப்பது வியப்பு. பல்லவர் கால கோயில் என்பதால் சிற்பக்கலைக்கும் இது சிறந்த உதாரணமாக திகழ்கிறது. கோயிலை சுற்றிலும் ராமாயணம் முதல் உத்திரராமாயணம் வரை பூமிக்கு மேல் ஒரு அடி உயரத்தில் நுண்ணிய சிற்பவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இந்த வகைச் சிற்பங்களை இந்த கோயிலில் மட்டுமே காணமுடியும் என்பது தனிச்சிறப்பு. கோயில் மகாமண்டபத்தின் மேற்கூரை விதானத்தில் வட்டவடிவமான அமைப்பில் இடம் பெற்றுள்ள அஷ்டதிக் பாலகர்களின் சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. காஞ்சியில் சித்ரகுப்தனுக்கு வழிபாடு செய்வது போல், இங்குள்ள எமதர்மராஜனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. முன்பொரு காலத்தில் பிருங்கி மகரிஷி, சனத்குமார நதிக்கரையில் அமர்ந்து அன்னையை நோக்கி தவமிருந்தார். அவரது வேண்டுகோளின் படி சிவசக்தி ஐக்கியமாக இறைவனும், இறைவியும் காட்சியளித்தனர்.

அந்த இடத்தில் நும்பள பல்லவ மன்னர்கள் கட்டியது தான், ‘‘மல்லிகார்ஜூன சுவாமி, கல்யாண காமாட்சியம்மன் கோயில்’’என்பது தலவரலாறு. பிருங்கி முனிவருக்கு அன்னை திருவருள் புரிந்ததை ஒட்டியே உலகம் முழுவதும் கௌரி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், கௌரி நோன்புக்கு வித்திட்ட கோயில் என்ற பெருமையும் கல்யாண காமாட்சி அம்மன் கோயிலுக்கு உண்டு.இந்த கோயிலில் சூலினி ராஜதுர்க்காம்பிகை எருமைத் தலையும், மனித உடலும் கொண்டு காட்சியளிக்கிறார். ராஜதுர்க்காம்பிகை கொம்பை பற்றி, சூரனை வதம் செய்யும் திருக்காட்சியுடன் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதும், குபேர பாகத்தில் அமைந்த சக்கர வடிவத்தில், பைரவர் படைப்புச் சிற்பமாக இருப்பதும் மிகவும் அபூர்வமானது.

சித்தேஸ்வரர், விநாயகர், வள்ளிதேவசேனா சுப்ரமணியர் என்று எண்ணற்ற தெய்வங்களுக்கும் இங்கே கோயில்கள் உள்ளது. நான்கு யுகங்களிலும் நிலைத்திருந்த திருத்தலம், நரசிங்கப் பெருமாள், ராமபிரான், தர்மர், அர்ஜூணன், துர்வாசர், அகத்தியர் தவமிருந்த திருத்தலம் இது. அதியமான் கொடுத்த கருநெல்லிக்கனியை, தமிழ்மூதாட்டி அவ்வை இங்கு வந்து அன்னையை வழிபட்ட பின்னரே உண்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு அமாவாசையிலும் பெண்கள், பெருமளவில் திரண்டு பதினெட்டாம் படிக்கு பூஜை செய்வதும், கல்யாண காமாட்சி விக்ரகத்தை தோளில் சுமந்து வலம் வந்து வேண்டிக் கொள்வதும் வழக்கமாக உள்ளது.

இது பெண்களின் பெருமையை உணர்த்தும் கோயில். இறைவனின் கருவறை அமைப்பைக் காட்டிலும், பலமடங்கு உயர்வாக அம்பிகையின் ஆலய விமானம் அமைக்கப்பட்டுள்ளது இதற்கான உதாரணம். தாய்நாடு, தாய்மொழி என்று கூறுவதை போல தாய்க்கோயில் என்று இது போற்றப்படுகிறது. கைகூப்பி வணங்கும் பக்தர்களை தாயாய் இருந்து காத்து, வேண்டுதல்களை நிறைவேற்றி மங்கல வாழ்வுக்கு துணை நிற்பவள் அன்னை கல்யாண காமாட்சி என்பது ஆண்டாண்டு காலமாய் வழிபடும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

வைகாசி விசாகத்தின்போது, கோயிலில் 10 நாட்கள் நடக்கும் திருத்தேர்விழா, மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி வசந்த நவராத்திரி, கார்த்திகை சதயவிழா போன்றவை, இங்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. சித்திரை பிறப்பு, சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சன உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி பஜனை விழாக்களும் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதே போல் காலசந்தி மற்றும் சாயரட்சை என்று தினமும் இரண்டு காலபூஜைகள் வழக்கமாக நடப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்