SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடியாத பிரச்னைகளை முடித்து வைப்பாள் முத்துமாலையம்மன்

2019-10-12@ 15:44:13

* குரங்கணி, தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கிராமம் குரங்கணி. இங்கு கோயில் கொண்டிருக்கும் முத்து மாலையம்மன், குடும்பம் பிரச்னை மற்றும் சொத்து, தீராத கடன்கள், மாறாத துயரங்கள், விலகாத பிணிகள் இவற்றிற்கெல்லாம் தீர்வளித்து நம்பி வரும் மக்களை காத்துஅருள்கிறாள். ராவணனை போரில் ராமன் வெல்வதற்கு துணையாக நின்றது வானரப்படை. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கடையம் வழியாக வந்த குரங்கு படை அணி, அணியாக தங்கியிருந்த இடம் தான் இந்த குரங்கணி.  குரங்குகள் அணி வகுத்து நின்றதால் இந்த இடம் குரங்கணி என அழைக்கப்படலாயிற்று.கானகத்தில் இருந்த சீதாதேவியை, ராவணன் மாய மானாக வந்து கவர்ந்து சென்றான். புஷ்பக விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, தான் கொண்டு செல்லப்படும் இடத்தை ராமபிரானுக்கு காட்டுவதற்காக, சீதாதேவி, தனது கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து கீழே வீசினாள். அந்த முத்துமாலை குரங்கணியில் விழுந்தது.

தாமிரபரணிக்கரையில் விழுந்த முத்துமாலை ஜோதிப்பிழம்பாய்  காட்சியளித்தது. சில காலங்களுக்கு பிறகு அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் கண்ணில்  அந்த முத்துமாலை தென்பட்டது. அதை கையில் எடுத்து பார்த்த பனையடியான், வீட்டுக்கு கொண்டு செல்ல நினைத்தார். அக்கம் பக்கத்துக்கு தெரிந்தால் அரண்மனை ஆட்கள் பறித்துசென்று விடுவார்கள். அதுமட்டுமல்ல, கண்டெடுத்த உடனே ஏன் தரவில்லை என்று கேட்டு தண்டனையும் கொடுத்து விடுவார்கள் என்ன செய்வது என்று நினைத்தவர் முத்துமாலையை ஒரு மண் தாழிக்குள் வைத்து மூடி அதை குழி தோண்டி மறைத்து வைத்தார். காலங்கள் உருண்டோடியது. ஒரு காலத்தில் பெய்த மழையின் காரணமாக மண்ணில் புதைத்து வைத்திருந்த மண்தாழி மேல வந்தது.

அதை அந்த வழியே வந்த லிங்கம் என்பவரும் அவரது தம்பிகளும் கண்டனர். அப்போது இளைய தம்பி கூறினான், அண்ணா, இது ஏதோ மந்திரித்து வைத்த தாழி போல் தெரிகிறது. நாம் அதை தொடாமல் சென்று விடுவோம் என்று கூற, அண்ணன் தம்பிகள் 4  பேரும் வீட்டுக்கு சென்றனர். அன்று இரவு அவர்கள் கனவில் தோன்றிய பெண், அந்த தாழியில் முத்துமாலை இருக்கிறது. அதை யாரும் அபகரிக்க கூடாது. ஆகவே அந்த தாழியை கொண்டு வந்து அதன் மேல் எனக்கு பீடம் அமைத்து, கோயில் கட்டி வழிபட்டு வந்தால், நீங்கள் கேட்டதை தந்து உங்கள் வாழ்வை வளமாக்குவேன் என்றார்.

தூக்கத்தில் விழித்தெழுந்த 4 பேரும், ஒருவருக்கு ஒருவர் தான் கண்ட கனவை பற்றி பேசிக்கொண்டனர். பின்னர் கோயில் கட்ட முடிவு எடுத்தனர். அந்த கானகம் சென்று தாழி இருந்த தாமிபரணி கரையிலேயே கோயில் கட்டினர். முத்து மாலையில் வந்த அம்மன் என்பதால் முத்துமாலை அம்மன் என்று அழைத்து வந்தனர். தற்போது கூட முத்துமாலை அம்மனின் பீடத்திற்கடியில் அந்த மாலை இருப்பதாக கூறப்படுகிறது.அம்மனுக்கு கல்லால்  மண்டபம், கோபுரம் மற்றும் கோட்டை மதிலுடன் கோயில் கட்டினார்கள். பின்னர் நவாப் ஆட்சி நடந்தபோது, இந்தக் கோயில் கோட்டைச்சுவர் தாமிரபரணிக்கரையை துண்டு படுத்துகிறது. இதனால் கோட்டைச்சுவரை இடித்து கரையை நேராக அமைக்க வேண்டும் என்று நவாப் ஆசைபட்டார்.   இதையறிந்த நான்கு சகோதரர்களின் வம்சா வழியில் வந்த வாரிசுகள் ஒன்று திரண்டு, கோயிலை இடிக்க வேண்டாம் என நவாப்பிடம் கெஞ்சிக்கேட்டனர். ஆனால், நவாப், சரி, உன் அம்மனுக்கு சக்தி இருந்தால், ‘‘நான் கூப்பிட்டால்  என்னை நோக்கி  அந்த அம்மன் திருப்பி பதில் குரல் கொடுக்குமா’ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் ‘‘ஆம்! பதில் சத்தம் தரும்’’ என்று கூறினர். உங்கள் அம்மனை எப்படி அழைப்பது என்று கேட்க, முத்துமாலையம்மா என்று அழையுங்கள் என சொல்ல, நவாப், அம்மனை நோக்கி ‘‘முத்துமாலை... முத்து மாலை’’ என்று  மூன்று முறை கூப்பிட்டார். அப்போது கோயில் கரு வறையில் இருந்து இடி போன்ற பெரும் சத்தம் ஒலித்தது. அந்த பகுதியே பூகம்பம் ஏற்பட்டது போல் அதிர்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நவாப்பும்,  அவருடன் வந்த அதிகாரிகளும்  குதிரையுடன் மயங்கி கீழே விழுந்தனர். அப்போது அங்கே கூடி இருந்த அம்மனின் பக்தர்களும், படை வீரர்களும் பயபக்தியுடன், ‘‘தாயே.. மன்னித்து விடு’’ என்று கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி வேண்டி நின்றனர்.  உடனே, அம்மன் அருள்வந்து ஆடும் நபர், அம்மன் தீர்த்தத்தை எடுத்து நவாப் முகத்தில் தெளித்தார். அதன் பிறகு தளபதிக்கும் குதிரைக்கும் சுய நினைவு வந்தது. கோயிலை இடிக்காமல் அம்மனிடம்  மன்னிப்பு கேட்டார் நவாப்.  இந்த சம்பவத்தின் நினைவாக  கோயில் வளாகத்தில் இரண்டு குதிரைகளை நிர்மானிக்க அவர் உத்தரவிட்டார்.  

அந்தக் குதிரை  சிலைகளை  தற்போதும் இங்குள்ள  பெரிய சுவாமி சந்நதி அருகில் காணலாம். பழங்காலத்தில்  செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடை திறக்கப்பட்டு மதியம், இரவு பூஜைகள்  நடந்து வந்தது.  அம்மனுக்கு மண் திருமேனியே இருந்ததால் அபிஷேகம் நடக்கவில்லை. அம்மனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வந்தனர்.1957ல்  அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கல்லால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பிறகு தினசரி அம்மனுக்கு  அபிஷேகம் செய்து நைவேத்தியங்கள் படைத்து  பகல், இரவு பூஜைகள் சிறப்பாக நடக்கிறது.தாமிரபரணி கரையில் உள்ள இந்த கோயிலின் முகப்புதோற்றம் சிறியதாக உள்ளது. ஆற்றங்கரையை நோக்கியும் ஒரு வாசல் இருக்கிறது.  அம்மனுக்கு இடது புறம் நாராயணர், ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கோபுரத்துடன் கூடிய தனிச்சந்நதியில்  அமைந்துள்ளார்.  முத்துமாலை அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி  பெரிய சுவாமி சந்நதி உள்ளது. மேலும் கோயிலில், முப்பிடாதி அம்மன், சப்த கன்னியர்கள், பார்வதி அம்மன். உஜ்ஜைனி மாகாளி அம்மன், பேச்சியம்மன், பிரம்மசக்தி, மாரியம்மன், சந்தன மாரியம்மன் மற்றும் பைரவர், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள் அருட்பாலிக்கின்றனர். விநாயகர், காசிநாதர், விசாலாட்சி  ஆகியோர்  ஒரே சந்நதியில் வீற்றிருக்கின்றனர். நவகிரக சந்நதி பலி பீடத்துடன் துர்க்கை அம்மன்,   கோயிலை நிறுவிய பனையடியான் ஆகிய பீடங்களும் உள்ளது.   மூலஸ்தானத்தில் உள்ள முத்து மாலையம்மன் கிழக்கு நோக்கி அமர்ந்து நிலையில் அருட் பாலிக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • wildfire-13

  கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

 • plane-crashe-13

  அமெரிக்காவில் குடியிருப்பு மீது விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்!: ஏராளமான வாகனங்கள், வீடுகள் தீக்கிரை..2 பேர் பலி..!!

 • wine-12

  இஸ்ரேலில் மண்ணில் புதையுண்டு கிடந்த 1,500 ஆண்டுகள் பழமையான ஒயின் தயாரிப்பு ஆலை கண்டெடுப்பு..!!

 • Tiruppp1

  திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்... கண்கவர் புகைப்படங்கள்!!

 • andhratirupp

  திருமலை ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்