SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒலியுள் உறையும் பிரம்மம்!

2019-10-10@ 16:39:26

தெய்வம் எப்படியிருக்கிறது? எல்லாமுமாகவும் இருக்கிறது. ஆலயத்தில் கல்லுக்குள் இருக்கிறது. வானத்தில் சூரியனாக சுடர் விடுகிறது. இடியாக கர்ஜிக்கிறது. மழையாகி கருணையைப் பொழிகிறது. அக்னியாக ஜொலிக்கிறது. மலையும்  மண்ணுமாகி எல்லோரையும் தாங்குகிறது. கடலென விரிந்திருக்கிறது. விண்மீன்களுக்குள் மின்னுகிறது. காற்றாக சுழன்று எல்லோரையும் அணைக்கிறது. மரம் செடி கொடியாகி ஜீவன்களை காக்கிறது. இப்படி தெய்வம் எல்லாமுமாக இருப்பதை கூறிய ஞானியர், அது ஒலியாகவும் இருப்பதை கண்டனர். அதோடு நில்லாது அதை அப்படியே கிரகித்து அந்த சப்தங்களை, அசைவை, ஓசையை அப்படியே வேதங்களாக்கி வைத்தனர். எங்கேயோ அண்டத்திலுள்ள வேதங்களை நாம் பயனுற வேண்டியே தொகுத்தனர். அந்த ரிஷிகள் மிக விநயமாக, ‘‘நான் அந்த மந்திரம் அங்கு கிடந்ததை பார்த்தேன். அதை  உங்களுக்கு கொடுக்கிறேன்’’ என்று கூறினார்கள். மறந்துபோய்க்கூட  நான் எழுதினேன் என்று சொல்லவில்லை. இப்படி அநாதியாக கிடந்த மந்திரத்தை பார்த்தவர்களை ரிஷி என்றழைத்தனர். ரிஷி என்றாலே மந்திரத்தை நேரில் தரிசித்தவர்கள் என்று பொருள். அந்த வேதங்களே சப்த பிரம்மமாகும். அதாவது  தெய்வமே ஒலி வடிவாக இருப்பதாகும்.
 
அதற்கு மந்திரம் என்று பெயர் வைத்தனர். ‘மனனாத் த்ராயதே இதி மந்த்ர:’ என்பார்கள். மனதால் நினைப்பவரை, மனனம் செய்பவரை தன் மகத்துவத்தால் காப்பாற்றுவதால் இதற்கு மந்திரம் என்று பெயர். அர்ச்சாவதாரமாக உள்ள சிவாலய  ஈசனை நேரே வணங்குவதும், எங்கேயோ ஒரு பூஜையறையில் அமர்ந்து ருத்ரம் சொல்லுவதும் ஒன்றேயாகும். மந்திரம் பிரம்ம வஸ்துவான அந்த தெய்வத்தின் ஒலி ரூபம். பிரபஞ்சத்தின் படைப்பில் ஆதியில் ஒலி மட்டுமே இருந்தது. அந்த  சப்தமே பொருளாக மாறியது. மீண்டும் பிரளயத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக ஒடுங்கி இறுதியில் ஒலியாகி அதுவும் ஓம் எனும் பிரணவத்திற்குள் சென்று உறைவதாக வேதங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து இன்ப துன்பங்களுக்கும் மந்திரங்கள் உண்டு. மனிதன் சந்தோஷமாக இருந்தாலும் ஸ்லோகங்களை சொன்னான். துன்பத்தின்போதும் மந்திரங்கள் ஓதி மனதை தேற்றிக் கொண்டான். அல்லது மந்திரம்  ஓதுதலை கேட்டான்.

மனதை மந்திரங்கள் தொடும்போது மனதின் தன்மையே மாறிவிடுகிறது. மந்திரத்தினுள் இருக்கும் சக்தி மெல்ல மெல்ல வெளிப்பட்டு மனதை வலிமையாக்குகிறது. திறனைக் கூட்டுகிறது. புத்தியை சுறுசுறுப்பாக்குகிறது. பிராண சக்தியை உடல்  முழுவதும் பரவச் செய்து புத்துணர்ச்சியை கூட்டுகிறது. மூச்சுகளின் கதியை சீராக்குகிறது. மனதை ஒருமையாக்கி பசுமரத்தாணி போல நினைவுத் திறனை பெருக்குகிறது. அதுமட்டுமல்லாது ஆச்சரியமாக மந்திரங்கள் அஸ்திரம்போல  அருவமாகவும் செயல்படுகிறது.
‘உனக்கு திருமணத் தடையா. இதோ இந்த மந்திரத்தை சொல்.’ என்கிறது. அந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல அந்த மந்திரமே அதிசூட்சுமமாக, அந்த மந்திரத்தைச் சொல்பவருக்கேற்றார்போல வரன்களின் மனதைத் தூண்டி யார் மூலமாகவோ  அவர்களைச் சந்திக்கச் செய்கிறது. மந்திரங்களுக்கு அத்தனை சக்தி உண்டு. ‘இந்திராய ஸ்வாஹா...’ என்றால் அங்கு இந்திரன் இருந்தாக வேண்டும். இதுதான் வேத விதி. மந்திரத்தின் அடிப்படை கட்டளை. மகாபாரதப் போரில் நிறைய  அஸ்திரங்களை மந்திரங்களை சொல்லியே செலுத்தினர்.
 
கோயிலின் உச்சியில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது. குடத்தில் இருக்கும் நீர் சற்று முன்னர்தான் எதிரேயுள்ள குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அதுவரை சாதாரணமாக இருந்த நீர் இப்போது புனித தீர்த்தமாக, கும்பாபிஷேக  தீர்த்தமாக மாறிவிட்டது. அதை எடுத்துக்கொள்ள போட்டியே நடக்கிறது. என்ன காரணம்? அந்த நீரில் வேத மந்திரங்கள் ஏற்றப்பட்டிருக்கிறது. மந்திரங்களை அந்த திரவம் தாங்கியிருக்கிறது. அந்த மந்திரங்களுக்குள் தெய்வம் அமர்ந்திருக்கிறது.  

ஒருமுறை சொன்னால் போதுமா?

போதாது. பலன் சித்திக்கும்வரை அது எத்தனை வருடங்கள் ஆனாலும், மன ஒருமையோடு சொல்ல வேண்டும்.  டாக்டர் வேளைக்கு மூணு மாத்திரை. ஆறு நாளைக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள் என்பார். இந்த மருந்தை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதை உணவுக்குப் பிறகு உட்கொள்ளுங்கள் என்றெல்லாமும் கூறுவார். அது அந்த நோயின் தீவிரத்தைப்  பொறுத்து மாறுபடும். அதுபோல மந்திரங்களை ஜபிப்பதற்கும் எண்ணிக்கைகள் உள்ளன. மந்திரங்கள் ஆயிரக்கணக்கான முறைகள் ஜபிக்கப்படும்போதுதான் கனமாகிறது. அதன் சக்தியை வெளிப்படுத்தத் துவங்குகிறது. சில மந்திரங்களை திதி,  வாரம், கிழமைகள் மற்றும் நியதிகளோடு சொல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே, மந்திரங்களை ஒருமுறை உபதேசமாக கேட்டுக் கொண்டு சொல்வதுதான் மிகவும் நல்லது. வேதமறிந்தோர், உபாசகர்கள் என்று சிலரிடம் அமர்ந்து மந்திரங்களை  சொல்லச் சொல்லி நீங்கள் அதைக் கேட்டுச் சொல்லத் தொடங்குங்கள். மந்திரங்கள் மாயமோ, ஜாலமோ செய்வதில்லை. மகாசக்தியின் கட்டளையை ஏற்றுத்தான் காரியங்களை செய்கிறது என்பதை புரிந்து கொண்டாலே போதும். ஏனெனில், மந்திரம் வேறு, மகாசக்தி வேறு அல்ல.
 - பரத்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்