SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறை நம்பிக்கை வாழ்வில் வெற்றியை தருமா?

2019-10-09@ 12:14:30

தெளிவு பெறுஓம்

இறை நம்பிக்கை வாழ்வில் வெற்றியை தருமா? - மு. மதிவாணன், அரூர்.

நிச்சயம் கிடைக்கும். அதே நேரத்தில் கடவுளின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது என்ற எண்ணத்தில் உழைக்காமல் இருப்பவனுக்கு கடவுள் ஒருபோதும் உதவுவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். உழைக்காமல் சோம்பல் தன்மையுடன் இருப்பவனுக்கு நிச்சயமாக கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை என்பது இருக்காது. அவ்வாறு சோம்பி இருப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். ஒரு சிலர் கடவுள் உதவுவார் என்ற எண்ணத்தில் ஒரு வேலையையும் செய்யாமல் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வதோடு வாழ்வினில் எந்த வெற்றியையும் அடையாமல் தோற்றுப்போவார்கள். தன்முயற்சியோடு கடவுளின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவனுக்கு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

* செவ்வாயோ வெறும்வாயோ என்கிறார்களே, இது என்ன? - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

“நாளைக்கு செவ்வாய்க்கிழமை, ‘செவ்வாயோ... வெறும்வாயோ...’ன்னு சொல்வாங்க, அதனால வேண்டாம், புதன்கிழமையில பேசுவோம்”, என்று அவ்வப்போது ஒரு பேச்சுவழக்கு நம் காதில் விழக் கேட்டிருப்பீர்கள். ஒரு சிலர் செவ்வாய்க்கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் இருக்கத்தான் செய்கிறது. நவக்ரஹங்களில் செவ்வாய் அங்காரகன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரஹங்களில் ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைக் கொண்டவர். விசுவாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப்பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தருவார்.

தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்தவர்கள். அதாவது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும்.

தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத்திறமையின் மூலம்  கேன்வாசிங் செய்து வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்ற பெரிய நிறுவனங்கள் கூட செவ்வாய்க்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கலாம். அதனாலேயே சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ.. வெறும் வாயோ...’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம்.

* அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்பது ஒரு நாளில் எந்தெந்த நேரங்களில் தோன்றி முடிகின்றன? அதை எவ்வாறு கண்டறிவது என்பதை தெளிவுபடுத்துங்கள். - எஸ். சுப்ரமணியம், சேலம்.

அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்பது அந்த நாளுக்குரிய கிழமையையும், அந்த நாளில் இணையும் நட்சத்திரத்தையும் பொறுத்து அமையும். உதாரணத்திற்கு ஞாயிற்றுக்கிழமையும் ஆயில்யம் நட்சத்திரமும் இணையும் நாளில் சித்தயோகம் என்பது வரும். அதே ஞாயிற்றுக்கிழமை நாளில் மகம் நட்சத்திரம் இணைந்தால் மரணயோகம் என்பது வரும். இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் மதியம் 02.30 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தால் அன்றைய தினம் மதியம் 02.30 மணி வரை சித்தயோகம் என்பது இருக்கும். மதியம் 02.30 மணி முதல் ஆயில்யத்திற்கு அடுத்த நட்சத்திரமான மகம் நட்சத்திரம் துவங்கிவிடுவதால் அந்த நேரம் முதல் மரணயோகம் என்பதும் துவங்கிவிடும்.

எந்தெந்த கிழமையில் எந்தெந்த நட்சத்திரம் இணைந்தால் எந்தயோகம் வரும் என்கிற அட்டவணையை பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள். நாம் தினசரி பார்க்கும் நாட்காட்டியில் கூட அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரம் எத்தனை மணி வரை உள்ளது என்பதையும் அதுவரை எந்த யோகம் இருக்கிறது என்பதையும் தெளிவாகக் கொடுத்திருப்பார்கள். பொதுவாக நம்மவர்கள் அமிர்தயோகம், சித்தயோகத்தில் சுபநிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். மரணயோக நாளில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்க்கிறார்கள். இந்த அமிர்தாதி யோகங்களைப் பார்க்கும் முறை என்பது நம் தமிழகத்திலும் கேரளத்திலும் மட்டும்தான் உள்ளது. மற்ற மாநிலத்தவர்கள் இந்த முறையைப் பின்பற்றுவதில்லை.

* முற்பிறவியில் செய்த பாவங்கள்தான் இப்பிறவியா? இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கான சம்பளம்தான் மரணமா? இப்படியே தொடர்வதில் இறைவனின் நோக்கம்தான் என்னவாக இருக்கும்? - விநாயகராமன், திசையன்விளை.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறார் ஔவையார். அவரது கூற்றினைக் கருத்தில் கொள்ளும்போது நிச்சயமாக வெறும் பாவங்களை மட்டும் செய்தவன் மனிதப் பிறவியினை எடுக்க இயலாது என்பது தெளிவாகிறது. அப்படியென்றால் முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன்தான் இப்பிறவி என்று எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல ‘ஜெனனீ ஜென்ம சௌக்யானாம் வர்த்தனீ குல சம்பதாம், பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதாவது முன்ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் அடிப்படையில் இப்பிறவியில் பலன்களை அனுபவிப்பார்கள் என்று உறுதிபடச் சொல்கிறார்கள். முழுமையாக புண்ணியம் செய்தவனும் கிடையாது, முழுமையாக பாவம் செய்தவனும் கிடையாது என்பதே ஆன்மிகவாதிகளின் கருத்தாக உள்ளது. முற்பிறவியில் செய்த புண்ணியத்திற்கான பலனை இப்பிறவியில் அனுபவிக்கும்போது நிச்சயமாக முற்பிறவியில் செய்த பாவத்திற்கான பலனையும் இப்பிறவியில் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்? ஆக முற்பிறவியில் செய்த பாவத்திற்கான பலன்தான் இப்பிறவி என்று ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்வது தவறு. பாவமும் புண்ணியமும்
கலந்ததுதான் மனித வாழ்வு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கான சம்பளம்தான் மரணமா என்று கேட்டிருக்கிறீர்கள். நிச்சயமாக இல்லை. இவ்வுலகில் பிறந்த எவர் ஒருவரும் நிச்சயம் ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்கிறார் ஆதி சங்கரர். இவ்வுலகில் பிறப்போர் மரணிப்பர், மரணித்தவர் மீண்டும் இவ்வுலகில் பிறப்பார்கள் என்பதே இதன் பொருள். ஜனனமும் மரணமும் இயற்கையோடு ஒன்றிணைந்தது. இவை இரண்டும் இறைவனின் கைகளில்தான் உள்ளது. அதை நிர்ணயம் செய்ய யாராலும் இயலாது. பாவத்திற்கான சம்பளம் மரணம் என்று சொல்வது தவறு.

ஆனால் மரணம் அடைகின்ற முறையை நிர்ணயிப்பது அவன் செய்யும் பாவ-புண்ணியம் என்று சொல்லலாம். புண்ணியம் செய்தவனின் மரணம் நல்லபடியாக அமைகிறது. பாவங்கள் செய்பவனின் மரணம் என்பது நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்து தான் செய்த பாவங்களை எண்ணி எண்ணி மனம் வருந்தி மற்றவர்கள் இவன் எப்போது இறப்பான் என்று தன்காதுபடக் கேட்டு அதன் பின் மரணத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது. இப்படியே தொடர்வதில் இறைவனின் நோக்கம் என்னவாக இருக்கும் என்றும் கேட்டிருக்கிறீர்கள். இறைவன் நடத்தும் இந்த தொடர் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்: கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை எடுத்திருக்கிறோம்.

இந்த அற்புதமான பிறவியில் அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காமல் வாழ வேண்டும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், அன்பே சிவம், அன்பே கடவுள் என்ற கருத்தினை மனதில் ஆழப் பதித்து அதன்படி செயல்பட வேண்டும், அது கல்வியாக இருந்தாலும் சரி செல்வமாக இருந்தாலும் சரி இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும், ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஒருகாரணம் இருக்கும், இறைவன் நம்மை ஏன் படைத்தான் என்பதை உணர்ந்து நம்மால் என்ன செய்ய இயலுமோ அதை இந்த உலகிற்கு பயன்படும்விதத்தில் செய்து காட்டவேண்டும். ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்கிறது பகவத் கீதை. கடமையைச் செய்பவனைத் தேடி கடவுள் ஓடோடி வருவார் என்பதைப் புரிந்துகொள்ளும் மனிதனுக்கு மறுபிறவி இல்லாத வீடுபேறு அதாவது மோட்சப்ராப்தி என்பது கிடைக்கும். இந்தக் கருத்தினை மனிதன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதே கடவுள் நமக்கு மனிதப்பிறவியை அளித்ததற்கான நோக்கம்.

* தீவிர வைஷ்ணவரான என் நண்பரின் ஒரே மகன் கலப்புத் திருமணம் செய்துகொண்டுவிட்டார். என் நண்பர் இறந்துபோனால் அவருடைய குமாரர் வைஷ்ணவ முறைப்படி அனைத்து கர்மாக்களையும் செய்யும் அதிகாரம் உள்ளதா?
 - சம்பத்குமார், திருமயம்.

தாய் - தந்தையின் கர்மாக்களைச் செய்யும் அதிகாரம் நிச்சயமாக அவரது மகனைத்தான் போய்சேரும். மகன் உயிருடன் இருக்கும் பட்சத்தில் அந்த மகனைத் தவிர மற்றவர்கள் செய்யும் கர்மா அந்த ஆன்மாவினை கரை சேர்க்காது. வைஷ்ணவ முறைப்படி செய்யும் அதிகாரம் உள்ளதா என்று கேட்டிருக்கிறீர்கள். அவரது மகன் எந்த முறையைப் பின்பற்றுகிறாரோ அந்த முறைப்படி செய்யலாம். உங்கள் நண்பரின் மகன் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார். ஒருவேளை அவர் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் கூட தான் கடைபிடித்து வரும் மதத்தின் சம்பிரதாய முறைப்படி தனது தந்தைக்கான கர்மாக்களை செய்து முடிக்க வேண்டும். மதம் மாறி இருப்பவர்களுக்கும் இதே விதி பொருந்தும்.

இந்தச் சூழலில் இறந்து போனவரின் மதத்தையோ அல்லது அவர் கடைபிடித்து வந்த சம்பிரதாயத்தையோ கருத்தில் கொள்ள முடியாது. உங்கள் நண்பரின் மகன் எந்த இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும் அவர் வைஷ்ணவ சம்பிரதாயங்களை அன்றாட வாழ்வினில் கடைபிடித்து வரும் பட்சத்தில் அதே முறைப்படி தனது தாய்-தந்தைக்குச் செய்ய வேண்டிய அனைத்து கர்மாக்களையும் செய்து முடிக்கும் அதிகாரம் நிச்சயம் உண்டு. அதே நேரத்தில் அந்தணர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் தன் குலாச்சாரத்திற்கு விரோதமாக திருமணத்தைச் செய்துகொண்டால் அவன் ‘பதிதன்’ என்ற நிலையினை அடைவான். இந்த பதிதன் செய்ய வேண்டிய கர்மாக்களுக்கும், அவனே இறக்கும் பட்சத்தில் அவனுக்குச் செய்யப்பட வேண்டிய கர்மாக்களுக்கும் தனித்தனியாக விதிமுறை உண்டு. இந்த விதிகளை அவரவர் குடும்பத்தின் சாஸ்திரிகளை அணுகித் தெரிந்துகொள்வது நல்லது.

* கோயில்களில் விழாக்காலங்களில் ஹோமகுண்டத்தில் போட்ட நாணயங்களை பக்தர்களுக்கு கொடுக்கிறார்கள். அவ்வாறு பெற்றுக்கொண்ட நாணயத்தை எவ்வாறு பக்குவப்படுத்துவது என்பதை விளக்கமாகக் கூறவும். - சுப்ரமணியன், கோயமுத்தூர்.

முதலில் ஹோமத்தின்போது இரும்பினால் செய்யப்பட்ட நாணயங்களைப் போடுவது என்பது தவறு. இது சாஸ்திர விரோதம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஹோமத்தின்போது நாம் தருகின்ற ஆஹூதிகள் அனைத்தும் அக்னிபகவானின் மூலமாக அந்தந்த தேவதைகளுக்குப் போய் சேருகிறது என்பதை வேதம் அறுதியிட்டுச் சொல்கிறது. ஹோமத்தில் நாம் இடுகின்ற பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட வேண்டும். ஆனால் இரும்பினால் ஆன இந்த காசுகள் நிச்சயமாக ஹோமத்தில் எரிந்து சாம்பல் ஆவதில்லை. அப்படியென்றால் இவைகள் அந்த தேவதைகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றே பொருளாகிறது. ஹோமத்தில் ஸ்வர்ணம் என்று அழைக்கப்படும் தங்கக்காசினைப் போட சாஸ்திரம் அனுமதிக்கிறது. இந்தத் தங்கமானது ஹோமத்தில் உருகி பஸ்பம் ஆகிவிடும். தங்கபஸ்பம் கலந்திருக்கும் அந்த சாம்பலை எடுத்து நாம் உடம்பினில் பூசிக்கொள்வதால் உடல் ஆரோக்யம் பெறுவதோடு நாம் எதிர்பார்த்த பலனும் கிட்டும்.

அதே நேரத்தில் தற்காலத்தில் தங்கம் விற்கும் விலைக்கு இந்த முறை சாத்தியப்படாது என்று நினைப்பவர்கள் குறைந்த பட்சம் வெள்ளிக்காசினை ஹோமத்தில் இடலாம். அதுவும் சாத்தியமில்லை என்று எண்ணுபவர்கள் காசு எதுவும் போடாமல் இருந்துவிடலாம். அதனை விடுத்து தங்கத்திற்கு மாற்றாக இரும்பு காசினை ஹோமத்தில் போடுவதால் எந்த பலனும் இல்லை என்பதோடு அது தவறான செயல் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். சுருங்கச் சொன்னால் ஹோம அக்னியில் போடுகின்ற பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆக வேண்டும். அவ்வாறு சாம்பால் ஆகாமல் நின்றுவிட்டால் அந்த ஹோமத்திற்கான பலன் முழுமையாக வந்து சேராது என்பதையே சாஸ்திரம் உறுதியாகச் சொல்கிறது. உண்மை இவ்வாறு இருக்க ஹோமத்தில் இடப்பட்ட காசுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அவற்றை என்ன செய்ய வேண்டும் என்ற உங்களது கேள்விக்கே இடமில்லாமல் போகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்