SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அளவிலா ஆற்றலை அள்ளித்தரும் அட்சர சக்திகள்

2019-10-01@ 11:17:34

தட்சன் தாட்சாணியை சிவபெருமானுக்கு மணம் முடித்ததாலேயே இறுமாந்திருந்தான். மருமகனான ஈசனைவிட பெண் கொடுத்தோன் என்ற முறையில் தானே முதல்வன் எனும் சிறுமையான எண்ணம் கொண்டிருந்தான். யாகம் வளர்த்து  தேவர்களுக்கு அவிர்பாகம் கொடுத்தாலும் அதை ஏற்ற தேவர்கள் வரம் தரும் சக்தியை அருளியதே அந்த மகாதேவன்தான் என்ற பெரும் உண்மையை உணராது தான்தோன்றியாக தட்சன் யாகம் செய்ய தீர்மானித்தான்.  தாட்சாயிணி தந்தைக்கு ஈசனின் மகாத்மியத்தை விரிவாகச் சொல்லிப் பார்த்தாள். சிறிதளவும் அவன் சித்தத்தில் அவள் சொற்கள் தைக்கவில்லை. மகாயாகம் என்று சொல்கிறாயே பரமனின் பவித்ரமான பாதங்கள் படாத அவ்விடத்தில்  திவ்யவேதங்கள் எப்படி தானாக விளங்கும். யாகத் தீ வெற்றுப் புகையாகப் போகும் என்று அறிவுறுத்த தட்சன் மகாதேவியான மகளை மதியாது சென்றான். மந்திரங்களின் சொற்களுக்கு அழைத்தவர்கள் வந்தேயாக வேண்டும் என திமிறலாகப்  பேசினான். வருகிறார்களா இல்லையா என்று பொறுத்திருந்தி பார் மகளே என்று அலட்சியமாகச் சிரித்தான்.   
 
தட்சன் மகாயாகத்தைத் தொடங்கினான். தாட்சாயிணி யாகத் தீயினுள் புகுந்தாள். அவளின் திருமேனியை ஏந்தியபடி ஈசன் ருத்ர தாண்டவமாடினார். அண்டங்கள் நடுங்கின. அதைக் கண்டு பொறுக்காத மகாவிஷ்ணு தேவியின் உடலை  தன் சக்ராயுதத்தால் சிதறச் செய்தார். அதுவே பாரதம் தவிர பாகிஸ்தான், பலூசிஸ்தான் மற்றும் இலங்கை வரை பரவி விழுந்தன. இந்த விழுந்த உடலின் பாகங்கள் அனைத்துமே சக்தி பீடங்களாக ஒளிர்ந்தன. அதுமட்டுமல்லாது இந்த  தலங்களே அட்சர சக்திகளாவும் திகழ்ந்தன.  அம்பிகை மாத்ருகா வர்ணா ரூபிணி என வழிபடப்படுகிறாள். அதாவது அம் முதல்  க்ஷம் வரை 51 அட்சர சக்திகளாய்  திகழ்கிறாள். அந்த 51 சக்தியரின்  ஆயுதங்கள், வாகனம், தோற்றம் பற்றி  இந்த நவராத்திரி சமயத்தில் அறிந்து  கொள்வோம்.இந்த இதழ் முழுவதும் ஆங்காங்கு முத்துச் சிதறல்போல சக்தியின் சிதறலாக அட்சர சக்திகளின் மூல எழுத்துக்களையும் அவற்றின் ஓவியத்தையும் அது குறித்த விளக்கத்தையும் அளித்துள்ளோம். கண்டு, வாசித்து, உணர்ந்து மகிழுங்கள்.

1. அக்ஷர சக்தியின் நாமம்  அம்(AM)அம் அஜாமுகீ தேவ்யை நமஹ.
அகார(AM) ரூபிணியான அம்ருதா தேவி ஆட்டின் முகத்தையும், ரக்தவர்ணமும் கொண்டவள். நான்கு திருக்கரங்களில் வில், வரமுத்திரை, அம்பு, அபயமுத்திரை தரித்தருள்பவள். தூய வெண்ணிற ஆடை அணிந்து அன்ன வாகனத்தில்  ஆரோகணித்தருள்பவள்.

2. அக்ஷர சக்தியின் நாமம் ஆம் (Aam)ஆம் அதர்விணீ தேவ்யை நமஹ.
‘ஆ’கார(Aam) வர்ண தேவியின் பெயர் அதர்வணீ எனும் ஆகர்ஷணீ. அவள் பச்சைநிற திருமேனி கொண்டவள். தூய வெண்ணிற ஆடையை அணிந்தவள். தன் திருக்கரங்களில் கத்தி, கேடயம், அபய, வரதம் தரித்தவள்.

3. அக்ஷர சக்தியின் நாமம் இம் (Im)இம் இலாதேவ்யை நமஹ.
‘இ’கார (Im) அட்சர தேவி வெண்ணிறம்  கொண்டவளாக, மதஜலம் பெருகும் வெள்ளை யானையை வாகனமாகக் கொண்டவளாக, தன் திருக்கரங்களில் சந்திரஹாஸம் எனும் கத்தியையும், கதையையும், அபய, வரத முத்திரை தரித்தும்  திருக்காட்சி நல்குபவள்.

4. அக்ஷர சக்தியின் நாமம் ஈம். (Eem)ஈம் ஈஸ்வரி தேவ்யை நமஹ.
ஈகார (Eem) தேவி பொன்னிறம் உடையவள். மேலிரு கரங்களில் முறையே அங்குசம், தர்ப்பம், கீழிரு திருக்கரங்களில் வரம், அபய முத்திரையுடன் ரிஷபவாகனத்தில் ஆரோகணித்தருள்பவள். இவளின் திருமேனி சந்திரகாந்த ஓளியைப் போன்ற  பிரகாசம் கொண்டது.

5. அக்ஷர சக்தியின் நாமம் உம் (Um)உமா தேவி எனும் உக்ரா தேவ்யை நமஹ.
உகாரதேவி (Um) வெண்மைநிறம் கொண்டவளாக,ஆறு திருமுகங்களுடனும் வலது கைகளில் முறையே திரிசூலம், அங்குசம், வரமுத்திரையுடனும், இடது கைகளில் பாசம், கதை, அபய முத்திரையுடனும் சிம்ம வாகனத்தில் அருட்காட்சி  நல்குகிறாள்.

6. அக்ஷரத்தின் நாமம் ஊம் (Oom) ஊர்த்வகேசி எனும் ஊர்ஜஸ்வலாதேவ்யை நமஹ.
இந்த ஊகார (Oom) தேவி சிவப்பு நிறமுடையவளாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். தேவியின் வலக்கரம் கத்தியும் அபயமும் தாங்க இடக்கரம் கேடயம் வரதம் தாங்கியுள்ள திருக்கோலம். புலியை தன் வாகனமாகக் கொண்ட  தேவி இவள்.

7. அக்ஷரத்தின் நாமம் ரும்(Rum) ருத்திதாயீ எனும் ருதுதாமா தேவ்யை நமஹ.
ருகார தேவி (Rum)  ரக்த வர்ணத்தினள். வலக்கரம் பாசம், வரமுத்திரையை தரிக்க இடக்கரம் அங்குச அபய முத்திரை தரித்துள்ளது. ரிஷபவாகனத்தில் ஆரோகணித்து வரும் தேவியிவள்.

8. அக்ஷரத்தின் நாமம் ரூம்(Rroom)ரூகாரதேவி எனும் ரேணுகாதேவ்யை நமஹ.
ரூகாரதேவி(Rroom) வெண்ணிறமுடையவள். ஆறு முகங்கள். ஆறு திருக்கரங்கள் கொண்டவள். வலது திருக்கரங்கள் சூலம், பாசம், வர முத்திரை தாங்க, இடது திருக்கரங்கள் கத்தி, கதை, அபய முத்திரையுடன் வீரமான சிங்கத்தின் மீது  ஆரோகணித்தருள்பவள்.

9. அக்ஷர சக்தியின் நாமம்லுரும்(Lrum)லூகாரா தேவி எனும் லுதும்பரா தேவ்யை நமஹ.
லுதும்பரா (Lrum) தேவியின் மேனி பச்சைவண்ணமாக உள்ளது. புலி வாகனத்தில் மஞ்சள் வண்ணப்பட்டாடை அணிந்து காட்சி அளிக்கிறாள். இத்தேவி எட்டுக்கரங்கள், வலப்புறமுள்ள நான்கு கைகளிலும் திருசூலம், பாசக்கயிறு, உடுக்கை,  வரமுத்திரை ஏந்தியும், இடப்புறமுள்ள நான்கு கைகளிலும் கத்தி, கபாலம், குறுந்தடி, அபயமுத்திரை ஏந்தியும் அருட்காட்சியளிக்கிறாள்.

10. அக்ஷரத்தின் நாமம்லூர்ம் (Lroom)லூகார தேவி எனும் லூஞ்சிகா தேவ்யை நமஹ.
லூகார தேவி(Lroom)  சிவப்பு நிறத்தினள். பத்து திருக்கரங்கள். புஷ்பதந்தம் எனும் யானை மீது ஆரோகணித்தருள்பவள். வலது திருக்கரங்கள் திரிசூலம், பாசம், முஸலம், அரிவாள், வரமுத்திரை தாங்க இடது திருக்கரங்கள் கட்கம், கதை கத்தி,  கேடயம், அபயமுத்திரை தாங்க அருட்கோலம் காட்டுகிறாள்.

11. அக்ஷர சக்தியின் நாமம் ஏம்(Yem)ஏகபாதா தேவி எனும் ரேவதி தேவ்யை நமஹ.
ஏகார தேவி(Yem)பத்து திருமுகங்களுடன் அருள்பவள். கபால ஓடுகளையும், எலும்புகளையும் மாலையாக அணிந்தவள். சிவந்த நிறத்தினள். நெற்றிக்கண்ணோடு அருள்பவள். தன் இருபது கரங்களிலும் பல்வேறு வகையான ஆயுதங்களை  தரித்தருள்பவள். சிம்மவாஹினி.

12  அக்ஷரத்தின் நாமம் ஐம்(Ayem)
ஐஸ்வர்யாத்மிகா தேவி எனம் சுஷ்கரேவதி தேவ்யை நமஹ.
ஐகார தேவி(Ayem) மும்முகத்தாள். ரக்தகேசம் கொண்டவள். ஆறு திருக்கரங்களில் சக்ரம், திரிசூலம்,வரமுத்திரை, சங்கு, கதை, அபயமுத்திரை தரித்து மயில் வாகனத்தின் மீதமர்ந்து அருட்கோலம் காட்டுபவள்.

13.அக்ஷரத்தின் நாமம் ஓம்(Om)ஓங்காரதேவி எனும் அஷ்வினி தேவி.
ஓ கார(Om) தேவி சிவப்பு வர்ணத்தினள். ஆறு முகங்கள், பன்னிரெண்டு திருக்கரங்கள் கொண்டவள். இவள் வலது திருக்கரங்கள் அங்குசம், அம்பு, கத்தி, பாசக்கயிறு, சங்கு, சின்முத்திரை முதலியவற்றையும், இடக்கரங்கள் சூலம், வில்,  கேடயம், முஸலம் எனும் குறுந்தடி, புஸ்தகம், அபயமுத்திரை போன்றவற்றை ஏந்தியுள்ள திருக்கோலம். கோலமயில் மீது கொலுவிருக்கும் தேவியிவள்.

14. அக்ஷரத்தின் நாமம் ஒளம்(Aum)ஓளஷதாதேவி எனும் அகோர தேவ்யை நமஹ.
ஒள கார(Aum) தேவி பிளந்த வாய், நீண்டு தொங்கும் தடித்த நாக்கு, முகத்தில் கடும்பார்வை, தெரித்த புருவங்கள் ஆகியவற்றுடன், நீலமேக நிறத்தில் ஒளிர்பவளாக, கடுங்கோபம் மற்றும் பயங்கரத் தோற்றத்துடன் விளங்குகிறாள். தன் ஆறு  கரங்களில் சூலம், கட்கம், வரமுத்திரை, கதை, கேடயம், அபய முத்திரை தாங்கி பெரும் வயிற்றோடு கண்டபேரண்டத்தில் ஆரோகணித்து அருட்பாலிக்கிறாள்.

15.அக்ஷரத்தின் நாமம் அம்(கினீ)அம்பிகா தேவி எனும்  அஞ்ஜனா தேவ்யை நமஹ.
அம்கார (AM) தேவி கரியநிறத்தினள். ஐந்துதிருமுகங்கள், முதிர்ந்த இளைத்த தோற்றத்தினள். பருத்த வயிறு கொண்டவள். புலி வாகனத்தில் ஆரோகணித்தருள்பவள். சூலம், பாசம் ஏந்தி வரத அபய முத்திரை தரித்தவள்.

16. அஹ(Aha)அக்ஷராதேவி எனும் அஜாதேவி.
அஹ தேவி :(Aha) மும்முகங்கள் முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் உடையவள். சிவந்த திருமேனியை மஞ்சள் பட்டாடை அலங்கரிக்கும். அங்குசம், கேட்யம், அபய முத்திரை, சூலம், பட்டாக்கத்தி, அபய, வரதம் தரித்தவள். புலியை வாகனமாகக்  கொண்டருள்பவள்.

17. கம்(Kam)காளராத்ரி தேவி எனும் பூதவிந்யாஸிநீதேவ்யை நமஹ.
க கார தேவி(Kam) வெண்ணிற திருமேனியள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். வலக்கரங்கள் திரிசூலம், வரமுத்திரை தரிக்கும். இடக்கரங்கள் அங்குசம். அபயமுத்திரை தரிக்கும். யானை வாகனத்தில் ஆரோகணித்து திருவருட்பாலிப்பவள்.

18.க2 (kham) கண்டிதா தேவி எனும் கத்யோதினி தேவ்யை நமஹ.
ககார (kham) அட்சர தேவி மஞ்சள் நிற திருமேனியுடையவள். மும்முகங்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் த்ரிசூலம், கட்கம் எனும் குறுவாள் ஏந்தி அபய வரத முத்திரை தரித்தருள்பவள். கஜ்ஜரீடம் எனும்  வாலாட்டிக்குருவியை வாகனமாக கொண்டவள்.

19. கம்3(Gam)காயத்ரி தேவி எனும் தூம்ரா தேவ்யை நமஹ.
ககார தேவி (Gam) நான்கு திருமுகங்கள் கொண்டவள். தாமிர நிறத்துடன் எட்டுத் திருக்கரங்களில் சூலம், அக்ஷமாலை, குளிசம், வரமுத்திரை, புத்தகம், கிண்டி, கபாலம், அபய முத்திரை தரித்து சிம்மவாகனத்தில் அமர்ந்து அருள்பவள்.

20. கம்4 (Gham)கண்டாகர்ஷிணி தேவ்யை நமஹ.
க (Gham) எனும் இத்தேவி கருநீல வடிவத்துடன் வராக முகத்தோடு மெலிந்த வயிறு மற்றும் ஆறு திருக்கரங்களுடன் துலங்குபவள். வலக்கரங்கள் சூலம், கட்வாங்கம், வரமுத்திரை ஏந்த இடக்கரங்கள் கட்கம், கேடயம், அபய முத்திரையைத்  தரிக்கின்றன. பத்மபீடத்தில் தன் இடக்காலை வைத்தருளும் தோற்றம் கொண்டவள் இத்தேவி.

21. ஙம்(Ngam)டார்ணா தேவி எனும் அருந்ததி சக்த்யை நமஹ.
ஙகார தேவி(Ngam) ரக்த வர்ணத்தில் ஆறு திருமுகங்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். அவள் திருக்கரங்கள் அம்பு, வில், கேடயம், கத்தி, வர,அபய முத்திரைகள் ஏந்தியுள்ளன. கோலமயில் மீது ஆரோகணித்தருளும் தேவி இவள்.

22.சம்(Cham)சாமுண்டா தேவி எனும் ஸுஷ்மாதேவி.
சகார தேவி(Cham) ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கட்கம், கேடயம் ஏந்தி அபய வரத முத்திரை தரித்தவள். கம்பீரமான ஜாதிகுதிரையே இவளின் வாகனம்.

23. சம் (Chham)சயார்தா தேவி எனும் நிர்ஜரா தேவ்யை நமஹ.
சகாரதேவி(Chham) மஞ்சள் நிறத்தினள். தன் திருக்கரங்களில் திரிசூலம், கொடுவாள், பாசம், கேடயம் தாங்கி மர்கடம் எனும் வானரக்குரங்கின்மீது காட்சியளிப்பவள்.

24. ஜம் (Jam)ஜயாதேவி எனும் போகதாதேவ்யை நமஹ.
ஜகாரதேவி(Jam) ரக்த வர்ணத்தினள். முக்கண்ணி. நான்கு திருக்கரங்கள் கொண்டவள். கட்கம், கேடயம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். சிங்கமதை தன் வாகனமாகக் கொண்டருள்பவள்.

25. ஜம்(Jham)ஜங்காரிணி எனும் நிர்ஜரநதி தேவ்யை நமஹ.
ஜகார (Jham) தேவி மழைக்கால மேகம் போன்ற நிறம் கொண்டவள். நான்கு திருக்கரங்களும் தாமரை, பாசம், வர, அபய முத்திரை தரித்து அருள  முதலை வாகனத்தின் மீது ஆரோகணித்தருள்புரிபவள்.

26. அக்ஷரத்தின் நாமம் ஞம்(Njam)
ஞானரூபா தேவி எனும் பிரபோதினி தேவ்யை நமஹ. ஞகார(Njam)தேவி வெண்ணிறமுடையவள். நான்கு திருக்கரங்கள் திரிசூலம், அம்புஜம், சின்முத்திரை, அபய முத்திரை தரித்த வண்ணம்  மங்களகரமான திருவடிவில் சிம்ம வாகனத்தில் ஆரோகணித்தருள்பவள்.

27, அக்ஷரத்தின் நாமம் டம் (Tam)
டங்கஹஸ்தா தேவி எனும் தாரிணி தேவ்யை நமஹ. டகார தேவி(Tam) இளஞ்சிவப்பு வர்ணமுடையவள். நான்கு கரங்களில் சூலம், டங்கா எனும்கோடரி, வரத, அபயம் தரித்தவள். யானை வாகனத்தின் மீதேறி அருள்பவள்.

28.அக்ஷரத்தின் நாமம் டம்(Ttam)
டங்காரிணி தேவி எனும் க்ரியாசரஸ்வதி தேவ்யை நமஹ.ட கார தேவி(Ttam) சிவந்த நிற திருமேனியள். நான்கு கரங்களில் டங்கா எனும் கோடரி, அங்குசம், வரத, அபய முத்திரை தரித்தருள்பவள். ஆக்ரோஷமான சிங்கத்தை தன் வாகனமாகக் கொண்டவள்.

29. அக்ஷரத்தின் நாமம் டம்(Dam)
டாமரி தேவி எனும் டகாரணி தேவ்யை நமஹ.டகார தேவி(Dam) வெண்ணிறத்தினள். ஐந்து முகங்கள். இவளது திருக்கரங்கள் டங்கா, கதை, வர, அபய முத்திரைகள் தரித்தருளும். சேவலை வாகனமாகக் கொண்ட தேவியிவள்.

30. அக்ஷரத்தின் பெயர் டம்(Ddham)
டங்காரிணீ தேவி எனும் ஸ்ரீதநா தேவ்யை நமஹ.டகார தேவி(Ddham) மின்னலைப்போன்று ஒளி வீசுபவள். ஐந்து முகங்களோடு அருள்பவள். டங்கா, சூலம், வர, அபய முத்திரை தரித்த திருக்கரத்தினள். மயில்வாகனத்தில் ஆரோகணித்து திவ்யதரிசனம் தருபவள்.

31. அக்ஷரத்தின் நாமம் ணம்(Nnam)
ணார்ணா தேவி எனும் அனந்தசக்தி தேவ்யை நமஹ். ண கார(Nnam) தேவி சிவந்த வர்ணத்தில் ஒரு முகத்துடன் சூலம், சக்தி ஆயுதம், வர அபய முத்திரைகள் தாங்கும் நான்கு கைகளுடன் மயில் வாகனத்தில் ஆரோகணித்தருள்பவள்.

32 அக்ஷரத்தின் நாமம். தம்(Tham)
தமஸ்யா தேவி எனும் சரஸ்வதி தேவ்யை நமஹ. தகார தேவி(Tham) வெண்ணிற ஆடையில் பொலிபவள். வெண்தாமரை மலரையொத்த திருமுகமண்டலத்துடன் திகழ்பவள். வீணை, தந்த்ரி, வர, அபய முத்திரைகள் கொண்ட நான்கு திருக்கரங்கள் கொண்டவள். வெண்தாமரை மலரே இவளது  ஆசனம்.

33 அக்ஷரத்தின் நாமம் தம்(Ttham)
ஸ்தாண்வீ தேவி எனும் நீலகண்ட சரஸ்வதி தேவ்யை நமஹ. தகார (Ttham) தேவி அறுகம்புல், தர்ப்பை, உடுக்கை, வர அபய முத்திரைகள் ஏந்தியருள்பவள். நான்கு திருக்கரங்களுடன் ரிஷபவாகனத்தில் ஆரோகணித்தருள்பவள்.

34. அக்ஷார சக்தியின் நாமம் த(Dam)
தாக்ஷாயணி தேவி எனும் போகதாயினி தேவ்யை நமஹத கார(Dam)தேவி உதயசூரியனின் நிறத்தினள். தன் திருக்கரங்களில் தாமரை மலர்கள், சாரிகா எனும் வீணை, உடுக்கை, மான், மழு, வர அபய முத்திரை தாங்கிய வண்ணம் அருட்கோலம் காட்டுபவள். தாமரை மலரில் தன் திருப்பாதங்களை  வைத்தவண்ணம் அருள்பவள்.

35. அக்ஷரத்தின் நாமம் தம்(Ddham)
தத்யா தேவி எனும் அமலா தேவ்யை நமஹ..தகார தேவி(Ddham) பச்சை நிற மேனியள். சாரிகை, கமலம், வர, அபயம் தாங்கும் நான்கு திருக்கரங்கள் கொண்டவள். ரிஷபவாகனத்தில் ஆரோகணித்தருள்பவள்.

36. அக்ஷரத்தின் நாமம் நம்(Nam)
நார்யா எனும் அநந்த சக்த்யை நமஹ.நகார தேவி(Nam) தூயவெண்ணிறம் கொண்டவள். நான்கு திருக்கரங்கள். மேலிரு கரங்கள் தாமரைமலர்களைத் தாங்க கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தரித்தவள். மின்னலைப் பழிக்கும் ஒளியுடன் மத யானையின் மீது அமர்ந்தருள்பவள்.

37. அக்ஷரத்தின் நாமம் பம்(Pam)
பார்வதி தேவி எனும் இச்சா சக்த்யை நமஹ.பகார தேவி(Pam) சூலம், சக்தி ஆயுதம், வர, அபய முத்திரைகள் கொண்ட நான்கு கரங்களுடனும் ஐந்து திருமுகங்களுடனும் தாமரை மலர் மீதமர்ந்த அருட்கோலம் கொண்டவள்.

38. அக்ஷரத்தின் நாமம் பம்(Pam)
பட்காரிணி தேவி எனும் ஆதபகோமளா தேவி.

ப கார (Pam) தேவி ஐந்து திருமுகங்கள் பத்து திருக்கரங்கள் கொண்டவள். மேனியின் நிறம் சிவப்பு. வலக்கரங்கள் அபயம், கிளி, கத்தி, அம்பு, உடுக்கை ஏந்த, இடக்கரங்கள் வரம், மான், கேடயம், பாசம், சூலம் ஏந்தியருளும். மிகப்பெரிய  சிங்கத்தின்மேல் ஆரோகணித்தருளும் அன்னை இவள்.

39. அக்ஷரத்தின் நாமம் ப(Bam)
பந்தினிதேவி எனும் சித்சியாமளா தேவி.- பகார(Bam) தேவி ஐந்துமுகங்களோடு பழுப்புவண்ண திருமேனியள். பத்து திருக்கரங்கள் உடையவள். இவளது வலக்கரங்கள் முறையே அபயமுத்திரை, கிளி, கத்தி, அம்பு, சூலம் போன்றவற்றை ஏந்தியருள, இடக்கரங்கள் முறையே  வரமுத்திரை, மான், கேடயம், பாசம், உடுக்கை முதலியவற்றை தாங்கியருளும் திருக்கோலம். இத்தேவி சிம்மவாஹினி.

40. அக்ஷரத்தின் நாமம் ப(Bham)
பத்ரகாளிதேவி எனும் சியாமளாதேவி.பகார(Bham) தேவி உதய சூரியனின் நிறத்தையொத்த திருமேனியள். பத்ராசனத்தில் ஒரு முகம், நான்கு கரங்கள் கொண்டவளாக அம்பு, வில், வரம், அபயமுத்திரை தாங்கிய வண்ணம் அருட்கோலம் காட்டுபவள்.

41. அக்ஷரத்தின் நாமம் ம(Mam)
மஹாமாயா தேவி எனும் வித்யா ச்யாமளாதேவி.மகார(Mam) ரூபிணியான வித்யா ஸ்யாமளாதேவி, குதிரை முகத்துடன் வெண்ணிற திருமேனி கொண்டவள். சுத்தஸ்படிகம் போல் ஒளிரும் தேவியின் இரு திருக்கரங்கள் வர அபய முத்திரை தரித்து வீணையுடன் அருட்காட்சி நல்குகிறாள்.  தத்துவ ஞானத்தை போதிக்கும் திருக்கோலம் கொண்டருளும் அன்னை இவள்.

42. அக்ஷரத்தின்  நாமம் யம்(Yam)யக்ஷஸ்வினிதேவி எனும்
தீபினி தேவி.யகார (Yam) தேவி எண்கரத்தினள். அவள் திருக்கரங்கள் சூலம், அம்பு, வில், பாசம், கத்தி, கேடயம், வர, அபய முத்திரைகள் தாங்கும். அழகான சிங்கத்தின்மீது ஆரோகணித்தருளும் அம்பிகை இவள்.

43.அக்ஷரத்தின் நாமம் ரம்(Ram)ரக்தாதேவி எனும் ரேசிகா தேவி.
ர கார (Ram) தேவி பச்சை நிற மேனியள். சிவந்த ஆடை உடுத்தி, ஐந்து முகங்கள், எட்டுக்கரங்களுடன் துலங்குபவள். தன் திருக்கரங்களில் கட்கம், கேடயம், அங்குசம், கதை, பாசம், சூலம், வர, அபய முத்திரை தரித்தருள்பவள். இத்தேவி  சிங்கத்தின் மீது கம்பீரமாக ஆரோகணித்தருள்பவள்.ரம்(Ram) பீஜ த்யானத்தினால் வாக்ஸித்தி ஏற்படும். கலைகளில் சித்தி கிட்டும்.

44. அக்ஷரத்தின் நாமம் லம்(Lam)லம்போஷ்டி தேவி எனும்
மோகினி தேவி.லகார(Lam) தேவி பொன்னிறத்தவள். ஆறுதிருக்கரங்களிலும் அங்குசம், சூலம், கத்தி, கேடயம், வரம், அபயம் தரித்தருளி யானையின் மேல் அமர்ந்த திருக்கோலம் கொண்டவள்.

45. அக்ஷரத்தின் நாமம் வம்(Vam)வரதா தேவி எனும்
நாராயணி தேவி.வ கார(Vam)தேவி சுத்த ஸ்படிக நிறத்தினள். செந்நிற பட்டாடை அணிந்து மேலிரு திருக்கரங்களில் தாமரை மலரை ஏந்தியும் கீழிரு கரங்களில் அபய வரத முத்திரை தரித்தும் அருட்கோலம் காட்டுபவள்.

46. அக்ஷரத்தின் நாமம் சம்(Sam)ஸ்ரீதேவி எனும் மங்களாகெளரி.
சகார சம்(Sam) தேவி பொன்னிறத்தில் ஒளிர்பவள். ரத்னாபரணங்கள் அலங்கரிக்கும் திருமேனியைக் கொண்டவள். மேலிரு கரங்களில் தாமரை மலரை ஏந்தி கீழிரு கரங்கள் அபய வரத முத்திரை தாங்கியவள். ஆயிரம் இதழ் கொண்ட  தாமரையே இவளின் ஆசனம்.

47. அக்ஷரத்தின் நாமம் ஷம்(Sham)ஷண்டாதேவி எனும்
அனுக்ரியா தேவி.ஷகார(Sham) தேவி சிவந்தநிறத்தினள். மஞ்சள் பட்டு உடுத்தி மேலிரு தாமரைக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி கீழிருதிருக்கரங்கள் அபய வரத முத்திரைகள் தரித்து ராஜஹம்ஸத்தின் மீது கம்பீரமாக ஆரோகணித்தருபள்பவள்.

48. அக்ஷரத்தின் நாமம் ஸம்(Ssam)ஸரஸ்வதி தேவி எனும் ஸித்தக்ரியா தேவி.
ஸகார(Ssam) தேவி இளஞ்சிவப்பு நிறத்தினள். சிவப்பு பட்டுடுத்தி சின்முத்திரை, தாமரை,அபய வரத முத்திரைத்தாங்கி தன் திருப்பாதத்தினை தாமரைமலரில் வைத்தருளும் திருக்கோலம் கொண்டவள்.

49. அக்ஷரத்தின்  நாமம் ஹம்(Ham)ஹம்ஸவதி தேவி எனும் ஆத்யாயினி தேவ்யை நமஹ.
ஆத்யாயனீ ஹகாராக்யா மத்தமாதங்க வாஹனாபாடலாபா கரைர்தத்தே சிதம்  புஜ வராபயாந்.ஹ(Ham) கார தேவி செந்நிறம் கொண்டவள். செந்நிற பட்டாடை அணிந்து மேலிரு கரங்களில் சின்முத்திரை தாமரைமலர் ஏந்தியும், கீழிரு கரங்களில் அபய வரதம் தரித்தவள். மதநீர் வழியும் வெண்ணிற யானையே இவள் வாகனம்.

50. அக்ஷரத்தின்
நாமம் ளம்(Llam)பந்தமோசினி தேவ்யை நமஹ.ளம(Llam)கார தேவி பொன்னிறம் கொண்டவள். பொன்னிற பட்டாடை தரித்து தன் கரங்களில் அங்குசம், கேடயம், சூலம், கத்தி, வரதம், அபயமுத்திரை தரித்தருள்பவள். யானை மீது ஆரோகணித்தருள்பவள்.

51. அக்ஷரத்தின் பெயர் க்ஷ.
அக்ஷர சக்தியின் பெயர் க்ஷமாவதி எனும் மாயாமாலினி. இத்தேவி ஐந்து திருமுகங்கள் கொண்ட சிவந்த நிறம் உடையவள். திருக்கரங்களில் சூலம், கட்கம் ஏந்தி அபய வரத முத்திரை தரித்தருள்பவள். கம்பீரமான சிம்ம வாகனத்தில் ஆரோகணித்து பக்தர்களுக்கு திருவருட்பாலிப்பவள்.  பீடசக்தியின்  திருநாமம் இந்த்ராக்ஷி. இந்த பீடத்தை ராக்ஷஸேஸ்வரர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். இந்த சக்திபீடம் இலங்கையில் உள்ளது.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்