SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குதிரை மேய்ந்தது பொன் விளைந்தது

2019-09-19@ 13:36:30

*பொன்விளைந்த களத்தூர்
*நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 12


பொன்விளைந்த களத்தூர் என்னும் திருத்தலம் பசுமையான வயல்கள் சூழ்ந்த ஓர் அழகிய கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்விளைந்த களத்தூர். பொன்விளைந்த களத்தூரில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோயில், கோதண்டராமர் கோயில், தர்ப்பசயன ராமர் கோயில் மற்றும் பொன்பதர்க்கூடம் சதுர்புஜ ராமர் கோயில் ஆகிய நான்கு கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்யலாம். ஸ்வாமி தேசிகன் யாத்திரையாக திருவஹீந்திபுரம் செல்லும் வழியில் களத்தூரில் தங்கியிருந்தார். அவர் ஆராதிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவ விக்கிரகத்தையும் உடன் எடுத்துச் செல்வது வழக்கம். ஸ்ரீ ஹயக்ரீவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுவதும் அவர் வழக்கம்.

களத்தூருக்கு வந்த அன்று, பெருமாளுக்கு அமுது கண்டருளப் பண்ண எதுவும் கிடைக்காததால், தீர்த்தத்தையே நிவேதனம் செய்து, அதையே தானும் பருகிவிட்டு உறங்கினார். அன்று இரவு அந்த ஊர் நிலங்களை ஒரு வெள்ளைக் குதிரை மேய்ந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் அதைத் துரத்த, அந்தக் குதிரை, ஸ்வாமி தேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த ஸ்வாமி தேசிகனிடம், ஊர் மக்கள் குதிரை மேய்ந்த விஷயத்தைக் கூற, ஸ்வாமி தேசிகனுக்கு அது சாதாரணக் குதிரை அல்ல, சாக்ஷாத்  ஹயக்ரீவரே என்று புரிந்தது. உடனே நிலத்துக்குச் சென்று பார்த்ததில் அந்தக் குதிரை மேய்ந்த இடங்களில் எல்லாம் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொன்மணிகள் விளைந்திருப்பதைக் கண்டார். மக்களிடம் இவையனைத்தும் ஹயக்ரீவப் பெருமாளின் செயலே என்று விளக்கிக்கூறி பின்னர் ஸ்வாமி தேசிகன் அங்கிருந்து புறப்பட்டார் என்பது வரலாறு. வயலில் (களத்தில்) பொன் விளைந்ததால், அந்த ஊருக்கு பொன்விளைந்த களத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது என்பது தலவரலாறு.

பொன்விளைந்த களத்தூரில் விளைந்த பொன் நெல்மணிகளைத் தூற்றியபோது அந்த பொன் பதர்கள் காற்றில் பறந்து போய் விழுந்த இடம், அருகே உள்ள பொன்பதர்க்கூடம் என்ற திருத்தலம். பொன்விளைந்த களத்தூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்பதர்கூடம். இங்கேதான் ஸ்ரீ ராமபிரானின் சதுர்புஜ ராமர் கோலத்தை தரிசிக்க முடிகிறது. மிக அழகான, அற்புதத் திருக்கோலம். ராமனாக அவதரித்த மகாவிஷ்ணு, தன் தாய் கோசலை, பக்தன் ஆஞ்சநேயர், சீதையிடம் பரிவு காட்டிய திரிசடை, ராவணன் மனைவி மண்டோதரி ஆகியோருக்கு நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியவராக,  திருமால் வடிவாய்க் காட்சி தந்தார். இதேபோல தனக்கும் திருக்காட்சி அருள வேண்டமென தேவராஜ மகரிஷி பெருமானை வேண்டித் தவமிருந்தார். அதன்படி, சங்கு சக்கரம் ஏந்தியவராக, நான்கு கரங்களுடன் காட்சி தந்தார் ஸ்ரீ ராமபிரான்.

அவர் வேண்டிக்கொண்டபடி, இங்கே எழுந்தருளிய சதுர் புஜ கோதண்டராமனுக்கு பிற்காலத்தில் கோயில் எழுப்பப்பட்டது. கருவறையில் ராமபிரான், வலது புறம் சீதையுடன் ஒரே பீடத்தில் அமர்ந்து, மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இடப்புறம் லட்சுமணர் நின்றிருக்க, எதிரே இம்மூவரையும் வணங்கியபடி, வலது திருவடியை சற்று முன்புறமாக வைத்து, வலக்கரத்தை வாயில் வைத்துப் பொத்தியபடி, அனுமன் விநயக் கோலத்தில் திகழ்கிறார். அந்த மூலவரை நாம் கருவறை உள் சென்றுதான் தரிசிக்க முடியும். அனுமனின் உத்ஸவ மூர்த்தியும் அதே அழகுக் கோலம்! ராமன் இங்கே விஷ்ணுவாகக் காட்சி தந்த தலம் என்பதால், இவர் மார்பில் மகாலட்சுமி இருப்பது விசேஷம். தைப்பொங்கல் நாளில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம். அன்று அவர் பாரிவேட்டைக்குச் செல்வார்.

சதுர்புஜ கோதண்டராமரின் உத்ஸவ மூர்த்தி அதி அற்புத அழகுடன் திகழ்கிறார். விரல் நகம், கை ரேகைகள், கணுக்கால், முட்டி, உருண்டு திரண்ட கால் சதை, தோள்கள் என தத்ரூபமாக ராமனின் அழகு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து உணர்ந்து செய்துக்கப்பட்ட சுந்தர பிம்பம். இவர் இடது திருவடியை முன்புறமாக மடித்து வைத்த நிலையில் காட்சியளிக்கிறார். சீதையை மணந்துகொள்ளும்முன் ராமர், இடதுகாற் பெருவிரலால் வில்லின் ஒரு பகுதியை மிதித்தபடி ஒடித்தார். இதன் அடிப்படையில் இவ்வாறு விக்ரஹத்தை வடித்துள்ளனர். மகான் தர்மதிஷ்டருக்கு ஒரு சாபத்தால் ஏற்பட்ட தோல் நோய் குணமாக இங்கே ராமனை வழிபட்டார். ராமனருளால் அவர் நோய் நீங்கியது. எனவே, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கே சுவாமிக்குத் துளசி மாலை அணிவித்து, கல்கண்டு படைத்து நோய் குணமடைய வேண்டிக் கொள்கிறார்கள். தம்பதியர் ஒற்றுமை வேண்டியும், பிரிந்த தம்பதியர் சேரவும் இங்கே வேண்டிக் கொள்கின்றனர்.

பெருமான் இங்கே புஷ்பக விமானத்தின் கீழ் அருட்பாலிக்கிறார். லட்சுமி நாராயணர், விஷ்வக் ஸேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், தேசிகர் ஆகியோரும் இங்கே அருட் பாலிக்கின்றனர்.ஸ்ரீ ராமநவமி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திர திருக்கல்யாணம் ஆகியவை முக்கிய விசேஷங்கள். ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். ஐந்துநிலை ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர். உற்சவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர். ஆனால் சிங்கமுகம் இல்லை. சாந்தமான ரூபத்தில் சேவை சாதிக்கிறார். இவர் மாமல்லபுரத்தில் இருந்தவராம்.

 ஸ்ரீ நரசிம்மரே விரும்பி வந்து குடிகொண்ட தலம். அந்நிய படையெடுப்பின்போது ஸ்ரீ நரசிம்மரே அசரீரியாக, தன்னை மாமல்லபுரத்திலிருந்து எடுத்துச் செல்லும்படியும், கூடவே பறந்து வரும் கருடன் எங்கே தரை இறங்குகிறதோ, அங்கே தன்னைப் பிரதிஷ்டை செய்யும்படி அருளினாராம். மாமல்லபுரம் ஆலயங்கள் கடலில் மூழ்கிய நிலையில், ஒரு வயோதிகரின் கனவில் நரசிம்மர் தோன்றி சொன்னார் என்றும் சொல்வதுண்டு. தாயார் அஹோபிலவல்லித் தாயார். ராமர், ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்களுக்கும் தனி சந்நதிகள் உள்ளன.இங்கே மூலவர் லட்சுமி நரசிம்மர் சிங்கமுகப் பெருமானாக இல்லாமல், நாராயண ரூபியாகவே காட்சி தருகிறார். ‘சிங்க முகத்துடன் சேவை சாதித்தால் என் போன்ற குழந்தைகள் பயப்படுவார்களே’ என்று பிரகலாதன் கேட்டபடி, சாந்த ரூபியாய், அழகுக் கோலத்தில் நரசிம்மர் காட்சியளித்தபடி அகோபிலவல்லித் தாயாருடன் காட்சி தருகிறார் நரசிம்மர்.

அருகே ஸ்ரீ கோதண்டராமர் சந்நதி. இந்தக் கோயிலில் ஸ்ரீ ராமர் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் சேவை சாதிப்பது விசேஷம். ஸ்ரீ கோதண்ட(பட்டாபி) ராமர் திருக்கோயிலில் ஸ்ரீ பட்டாபி(கோதண்ட)ராமர் (மூலவர்) அமர்ந்த திருக்கோலத்திலும், உற்சவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற திருக்கோலத்திலும், ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர் (மூலவர்) ஸயனத் திருக்கோலத்திலும் சேவை சாதிக்கிறார்கள். உற்சவரும் மிக அழகாக இருக்கிறார். மூலவர் ஸ்ரீபட்டாபிராமர், சீதாபிராட்டியை இடது மடியில் அமர்த்தியபடி, பட்டாபிஷேகக் கோலத்தில் சேவை சாதிக்கிறார். பொதுவாக ஸ்ரீ ராமருக்கு வலப்புறம் சீதாதேவியும், இடப்புறம் ஸ்ரீலட்சுமணனும் இருப்பார்கள் என்றும் இங்கே பட்டாபிஷேகக் கோலம் என்பதால் ஸ்ரீ ராமருக்கு இடப்புறம் சீதையும், வலப்புறம் லட்சுமணரும் இருக்கின்றார்கள் என்றும், இந்தத் திருக்கோலம் அரியது என்றும் பட்டர் சொன்னார்.

 அருகில், ஆஞ்சநேயரும் உள்ளார். உத்ஸவர் ஸ்ரீ கோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார். இதே கோயிலில் தனிச்சந்நதியில் ஸ்ரீ தர்ப்பஸயன சேதுராமர். ஸயனக்கோலம். திருப்புல்லாணியில் சேவிக்கும் அதே திருக்கோலம். ராமருக்குப் பின்னால் லக்ஷ்மணரும், திருவடிக்கு அருகில் ஸமுத்ரராஜனும், ஆஞ்சநேயரும் நிற்கிறார்கள். உத்ஸவ மூர்த்தி சீதா, லக்ஷ்மண அனுமத் ஸமேத ஸ்ரீராமர். தேவி பூதேவி ஸமேத அபய வேங்கடவரதர் சந்நதியும் உள்ளது. ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ ஆதிசேஷன், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சார்யர்கள்  சந்நதிகளும் உள்ளது.  

ஸ்ரீ மந் நாராயணரின் அர்ச்சாவதார நிலைகள் நான்கு. நின்ற, இருந்த, நடந்த, கிடந்த கோலங்களில் பெருமான் தரிசனம் அளிக்கிறார். இவற்றில், நின்ற, இருந்த, கிடந்த கோலங்களே நாம் பெரும்பாலும் தரிசிப்பது. நடந்த கோலமாகிய திரிவிக்ரமரெனும் வாமனர் கோலத்தை வெகு சில தலங்களிலேயே தரிசிக்க முடியும்! மகாவிஷ்ணுவின் அவதார மாகிய ஸ்ரீ ராமபிரானை, பொதுவாக நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த கோலத்திலோ தரிசிக்க முடியும். சயனக் கோலத்தில் திருப்புல்லாணி திவ்ய தேசத்தில் தர்ப்ப சயன ராமராக தரிசிக்கலாம். இந்த மூன்று கோலமும் சேர்ந்தவாறு ஸ்ரீ ராமபிரானை தரிசிக்கும் ஒரே திருத்தலமாக, செங்கல்பட்டு அருகிலுள்ள பொன்விளைந்த களத்தூர் திகழ்கிறது.பொன்விளைந்த களத்தூர்! கிராமத்தின் பெயரே லக்ஷ்மிகரமாகத் திகழ்கிறது. இங்கே வரிசையாக மூன்று கோயில்கள். எல்லாமே ஓரளவு பெரிய கோயில்கள்!

களத்தில், அதாவது வயலில் பொன் விளைந்ததால் இந்த ஊர் பொன்விளைந்த களத்தூர். அந்தப் பொன்னின் பதர்கள் காற்றில் பறந்து சென்று விழுந்ததால் அந்த ஊரின் பெயர், ‘பொன்பதர்க் கூ(ட்)டம்!’ இந்த நான்கு ராமர் கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்தால் வறுமை அகன்று செல்வம் சேரும். வணங்கு பவர் இல்லங்களில் பொன் முதலான ஐஸ்வர்யங்கள் பெருகும். ஆண்டாள், அழகிய வடிவில் நின்ற கோலத்தில் கோதண்டராமர், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் ஆகியோரும் இங்கே அருட்பாலிக்கிறார்கள். இக்கோயிலை அடுத்து அமைந்திருக்கிறது கோதண்டராமரான பட்டாபிராமர் திருக்கோயில். தனிக்கோயிலில் மூலவர் பட்டாபிராமர், பட்டாபி ஷேகக் கோலத்தில் சீதா பிராட்டியை இடது மடியில் அமர்த்திக் கொண்டுள்ளார். லட்சுமணர் வலப்புறத்தில் கைகூப்பிய நிலையில் காட்சி தர, கருவறையிலேயே ஆஞ்சநேயரும் அருட்பாலிக்கிறார்.

ஸ்ரீ னிவாசப் பெருமாளும், ஸ்ரீ தேவி பூதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். இவரின் திருவடிவு மிகப் பிரமாண்டமாக உள்ளது. மூன்றாவதாக அமைந்திருப்பது தர்ப்பசயன சேது ராமர் திருக்கோயில். இந்தக் கோயில் உத்ஸவ மூர்த்தி, அருகே உள்ள கிணற்றில் இருந்து கிடைத்தவர். இந்த மூர்த்தியின் சிரசிலும் பாத பீடத்திலும் எழுதப்பட்டிருப்பதை வைத்து இவர் தர்ப்பசயன ராமரின் உத்ஸவர் என்று கொண்டு, இங்கே சந்நதி அமையப் பெற்றதாம். இங்கே ராமபிரான், திருப்புல்லாணியில் சேதுக்கரையில் உள்ளதுபோல் சயனித்த கோலத்தில் காட்சி தருகிறார். சீதை, லக்குமனுடன் தற்போது அனுமன் உத்ஸவ மூர்த்தியும் அழகு செய்ய, சந்நதி அருமையாகத் திகழ்கிறது. உபந்யாசகராகத் திகழ்ந்த சேலம் விஜயராகவாச்சாரியாரின் கைங்கரியத் தில் இந்த சந்நதி விரிவடைந்ததாம். இந்த வகையில், ராமபிரானை இவ்வூரில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலத்திலும் தரிசிக்க முடியும்.

ஸ்ரீ ராமநவமியை ஒட்டி, இந்த நான்கு ராமர்தரிசனத்துடன், ஐந்தாவதாக, செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம ஸ்வாமி கோயிலில் ஒரே பீடத்தில் திகழும் சீதா பிராட்டி சமேத கோதண்டராமரையும், லட்சுமணரையும் அருகே பிராகாரத்தில் சனியை அடக்கிய நிலையில் திகழும் அனுமனையும் தரிசித்து வரலாம். சென்னையில் இருந்து வருபவர்கள், இந்த நான்கு ராமர் கோயில்களையும் தரிசிக்க அருமையான வாய்ப்பு. மாலை 3 மணிக்கு மேல் கிளம்பி, செங்கல்பட்டு வந்து, திருச்சி செல்லும் சாலையில் சற்று தொலைவு வந்து, நீதிமன்ற வளாகம் கடந்ததும் வரும் இடதுபுற சாலையில் திரும்பி (7 கி.மீ. தொலைவு) ஒத்திவாக்கம் ரயில்வே கேட் கடந்ததும் வரும் வலதுபுறம் திரும்பினால் பொன்விளைந்த களத்தூர். இருப்பினும், அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பொன்பதர் கூடத்துக்கு முதலில் சென்று (சரியாக 5 - 5.30 மணி அளவில் திருவாராதனம் செய்ய அர்ச்சகர் வருவார்) சதுர்புஜ ராமரை தரிசித்து, அதன் பின் பொன்விளைந்த களத்தூரில் மூன்று ராமர்களை யும் தரிசித்து, பின் செங்கல்பட்டு கோதண்டராமரை தரிசித்து சென்னை திரும்பலாம்!

செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு சென்று, செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் ரோடில் பொன்விளைந்த களத்தூர் கோவிலுக்குச் செல்லலாம். ஒத்திவாக்கம் ரயில் நிலையம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்ஸி வசதியும் உள்ளது.

ந.பரணிகுமார்

(தரிசனம் தொடரும்)
 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்