SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜயோகம் கிட்டச் செய்யும் ராஜேஸ்வரி!

2019-09-18@ 16:39:41

அருணகிரி உலா-81

காயத்ரி மண்டபத்தில் அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்து மூலஸ்தானத்தில் விளங்கும் அன்னை காமாட்சி முன் நிற்கிறோம். அருணகிரியாரின் வேல் விருத்தத்தை நினைவு கூறுகிறோம்.
       
‘‘கங்காளி, சாமுண்டி, வாராகி, இந்திராணி,
கௌமாரி கமலாசனக் கன்னி
நாரணி குமரி, த்ரிபுரை, பயிரவி, அமலை
கௌரி, காமாட்சி, சைவ
சிங்காரி, யாமளை, பவாநி, கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன் ’’

என்று முருகனை அம்பிகையின் பெருமைகளைக் கூறி வணங்குகிறார். பசித்து வரும் குழந்தையை ஒரு நொடியில் தாய் புரிந்து கொண்டு அதற்கு வேண்டியதை அளித்து விடுவாளே அதே போன்று அன்னை காமாட்சியும் அடியவர் வேண்டியவற்றை வேண்டியவாறே அளித்து வருகிறாள். காமாட்சி சந்நதிக்கு வலப்புறமாய் ஊசி முனையில் ஒற்றைக் காலில் தபஸ் செய்யும் தபஸ் காமாட்சி எழுந்தருளியுள்ளாள். இந்த அன்னைக்கு எதிர்ப்புறமாக பிலாகாசம் எனும் வளைப்புற்று உள்ளது. இங்கிருந்துதான் தேவி வெளியே வந்து கருவறை உள்ள இடத்தில் அமர்ந்தாள் என்கிறது தல புராணம். அம்பாளுக்கு எதிரில் ஸ்ரீ சக்ரம் உள்ளது.

அசுரர்களை வதைத்த உக்ரத்தைத் தணி்க்க ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ரத்தை, மற்ற ஆலயங்களிலுள்ளது போல் பீடத்தில் அடியில் அமைக்காமல், அம்பிகையின் முன்னால் பிரதிஷ்டை செய்துள்ளார். சக்ரத்தைச் சுற்றி வஸின்யாதி வாக்தேவியர் உள்ளனர். அன்னை சந்நதியில் குங்குமம் பெற்று அரூப் லட்சுமிக்கு அர்ச்சனை செய்து எடுத்துக் கொள்கிறோம். மிக அருகிலேயே தங்கக் கவசமிட்ட பிலத்வாரம், வாராஹி, சந்தான கணபதி, சௌபாக்ய கணபதி ஆகியோரையும் தரிசிக்கிறோம். அன்னை காமாட்சியைத் தரிசிக்கும் போது இதுவரை குறிப்பிட்ட அனைத்துத் தெய்வங்களையும் தரிசித்த பலன் கிட்டுகிறது.

‘‘ராஜ ராஜேஸ்வரியாகிய எனது இச்சக்ரவர்த்தினி கோலத்தில் எனக்குச் சேனாபதியான தண்டநாதையே ஆனைக்காவில் உள்ள அகிலாண்டேசுவரி அவளே இங்கு வாராஹி என்ற பெயரில் விளங்குகிறாள்’’ என்று அன்னையே கூறுகின்றாள். ஐப்பசி பூரத்தில் பிலத்திற்குப் பால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. கோயிலின் வெளிப்புறம் உள்ள அனைத்து சந்நதிகளும் மின் ஒளியில் அழகுற மிளிர்வது காணக் கண்கோடி வேண்டும். பகல் வெயிலில் கோயிலை வலம் வரும் போது அங்குள்ள அனைத்துச் சந்நதிகளையும் நிதானமாகப் பார்க்கலாம். முதலில் நாம் காண்பது காசி விஸ்வநாதர் சந்நதி.

பல்லவ அரசன் ஒருவன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இங்கு லிங்கம் பிரதிஷ்டித்துப் பூஜை செய்து வந்தான் என்று அறிகிறோம். சில கோயில்களில் ‘திசை மயக்கம்’ என்று ஒன்று இருக்கும். காமாட்சி கோயிலிலும் இது உள்ளது. கோபுரங்கள் ஒன்றுக்கு நேர் ஒன்றாக அமையவில்லை. அம்பிகையும் தென் கிழக்கை நோக்கி அமர்ந்துள்ளாள். இதனால் இக்கோயிலில் திசைகளை அறிவது மிகக்கடினம் . விஸ்வநாதர் சந்நதி நேராகக் கிழக்கில் அமைந்துள்ளதால் இதை வைத்து திசைகளைப் புரிந்து கொள்ளலாம். கோயிலுக்கெனத் தனி நந்தவனம் ஒன்று உள்ளது.

தெற்குக் கோபுரத்திற்கருகில் நவராத்திரி மண்டபம் உள்ளது. சுத்தமான நீர் நிரம்பிய குளம் மனதிற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது. திருமால், காஞ்சி உலகளந்தார் கோயிலில் நின்றவராகவும், பாண்டவ தூதர் கோயிலில் இருந்தவராகவும், சொன்ன வண்ணம் செய்தார் எனும் யதோத்காரி கோயிலில் கிடந்தவராகவும் காட்சி அளிக்கிறார். ஆயினும் இம்மூன்று கோலங்களிலும் காமக்கோட்டத்தின் தீர்த்தக் கரையில் விளங்குகிறார். மிக எளிமையாக அதே சமயம் கம்பீரமாகவும் விளங்கும் பெருமாளைக் கண்டு வணங்குகிறோம். மல்லகன் என்ற அசுரனைத் திருமால் தாக்கவே அவனது சரீரத்தினின்றும் விழுந்த ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் ஒரு அசுரன் தோன்றினான்.

சிவபெருமான் தனது ஜடாபாரத்திலிருந்து இரண்டு பூதங்களை உண்டாக்கி அசுர ரத்த பிந்துக்களைக் குடிக்க வைத்தார். அசுரர் கூட்டம் குறையவே திருமால் மல்லகனை அழித்தார். அசுர ரத்தம் குடித்த இரண்டு பூதங்களும் அசுரத் தன்மையை அடைந்து திருமாலை எதிர்த்தன. திருமாலும் அவ்விரு பூதங்களையும் கீழே தள்ளி அவற்றின் மேல் நின்றார். மீண்டும் பூதங்கள் எதிர்க்கவே திருமால் பூதங்களைக் கீழே தள்ளி அவை எழுந்திராவண்ணம் அவற்றின் மேல் அமர்ந்தார். அவை எழுந்திருக்க பெரும் முயற்சி செய்தபோது, திருமால் அவற்றின் மேலே படுத்துக் கொண்டு பூதங்களின் கர்வத்தை அடக்கி பூத நிக்ரஹப் பெருமாள் என்று பெயர் பெற்றார்.

சிவபெருமான் தனது ஜடையிலிருந்து கங்கையைப் பஞ்ச தீர்த்தத்தில் பெருகச் செய்து அதில் அனைவரையும் மூழ்கி வரச்செய்தார். திருமாலிடம் மன்னிப்புக் கேட்ட பூத கணங்களை அவர் பஞ்சதீர்த்தக் காப்பாளர்களாகப் பிரதிஷ்டை செய்தார். அவற்றின் மத்திய பாகத்தில் தீர்த்தக் கரையில் முன் பூதங்களுடன் சண்டையிட்ட போதில்  கரையில் முன் பூதங்களுடன் சண்டையிட்ட போதில் நின்றும், இருந்தும், கிடந்தும் இருந்தது போல் மூன்று பேத ரூபங்களாகவே மூன்று அடுக்குக் கோயிலில் காட்சி தருகின்றார். இரவின் விளக்கொளியில், குளத்தின் மறுகரையில் நேர் எதிரே நின்று மூன்று கோலங்களையும் தரிசிக்கமுடிகிறது.

இங்கும் திருமால் பற்றிய குறிப்புகள் வரும் ஒரு காஞ்சித் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம். பாடலில் முற்பகுதியில் ஞானத்தின் வரம்பான மோன நிலை நிறைந்த மெய்ப் பொருளை நான் மடிந்து போகாமலிருக்கும் படி, என் ஆன்மா சிரஞ்சீவிப்பதம் அடையும் பொருட்டு எனக்கு நீ உபதேசிக்க வேண்டும் என முருகனை வேண்டிக் கொள்கிறார் அருணகிரி நாதர். (இதையே மரணமில்லாப் பெருவாழ்வு’ என்பார்). பிற்பகுதியில் பாண்டவர்களுக்கு உதவிய கண்ணபிரானைப் பற்றிய குறிப்பு வருகிறது.

‘‘தருமன், பீமன், அர்ஜூனன், நகுலன், சகாதேவன் எனும் பாண்டவர்களுக்குப் புகலிடம் அளித்த மகா புருஷனாகி, யுத்த களத்தில் வீரம் மிக்க பாஞ்சசன்யத்தை ஏந்தி, பதினெட்டு  நாட்களில், துரியோதனன் ஆண்ட குரு சேஷத்ரத்தை போர்க்களமாக்கி, தான் மனதில் சங்கல் பித்துக்கொண்ட படி அரச குலங்கள் அநேகம் அழிந்து போகுமாறு, அர்ஜூனனது சிறந்த தேரைச் சாரதியாக அமர்ந்து செலுத்திய திருமாலின் மருகனே! கச்கிக் குமரேசனே ’’ (இப்பாடல் காஞ்சி பாண்டவ தூதப் பெருமாள் கோயிலில் பாடியதாகவும் கொள்ளலாம் என்பர்) பஞ்சதீர்த்தக் கரையில் நீர் நிலையை ஒட்டி திருமஞ்சன கணபதி வீற்றிருக்கிறார். பஞ்ச தீர்த்தக் கரையில் அமைந்துள்ள மற்றமொரு அழகிய சந்நதியில் அஷ்டபுஜ துர்க்கையைத் தரிசிக்கலாம்.

வெளிப்பிராகாரத்தை வலம் வரும்போது தங்கரதம் நிறுத்துமிடம், வாகன மண்டபம், கோசாலை, கனு அன்று அம்பிகை கொலு வீற்றிருக்கும் கனுமண்டபம், வில்வமரம், யாகசாலை ஆகியவற்றைக் காணலாம். அம்பிகை கோயில் நுழைவாயிலில் உள்ள கிணற்றிலிருந்து தான் முன்பு அபிஷேக நீர் எடுக்கப்பட்டு வந்தது. இது சிம்மக்கிணறு எனப்பட்டது. இப்போது தூர்ந்து விட்டது. கோயிலிலுள்ள சாஸ்தாவின் கையில் செண்டு என்கிற சவுக்கு வைத்திருக்கிறார். கரிகாலன் சோழன் வடநாட்டுக்குச் செல்லும்போது இவரை வணங்கி அவர் கையிலுள்ள செண்டாயுதத்தை வாங்கிச் சென்றாராம். தன்னை எதிர்த்த மன்னர்களை வென்று இமயமலையை அடைந்து அதைச் செண்டால் அடித்துத் தன் புலி அடையாளத்தைப் பொறித்தானாம். இச்செய்தியை ஒரு பழைய பாடல் தெரிவிக்கிறது.
          
‘‘கச்சி வளைக்கைச்சி காம கோட்டம் காவல்
மெச்சி இனிதிருக்கும் மெய்ச் சாதிதன் கைச் செண்டு
கம்பக் களிற்றுக் கரிகால் பெருவளத்தாள்
செம்பொற் கிரி திரித்த செண்டு’’

(வளைக்கைச்சி = வளையை அணிந்த கையை உடைய காமாட்சி அம்மை. காவல் தெய்வம்= சாஸ்தா கம்பக்களிறு = அசையும் யானை. செம்பொற்கிரி = மேரு) காஞ்சியில் தான் அம்பிகைக் கென்று முதன் முதலில் தனிக் கோயில் அமைந்தது. எனவே 64 சக்தி பீடங்களுள் காமகோடி ஆதிபீடம் எனப்படுகிறது. காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி  எனப்படும். ஆதிபராசக்தியின் மூன்று வடிவங்களுள் அன்னை காமாட்சி முதலில் வைக்கப்பட்டுள்ளாள். அம்பிகையின் மீது பல நூல்கள் இயற்றி இங்கு அம்பிகையுடனே ஐக்கியமான ஆதிசங்கரர், தனிச்சந்நதியில் சீடர்களுடன் வீற்றிருக்கிறார். ஆண்டு தோறும் சித்திரை மாதம் பத்து தினங்கள் சங்கர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அம்பாள் சந்நதியில் தினமும் சௌந்தர்ய லஹரியின் பத்து ஸ்லோகங்கள் வாசிக்கப்படுகின்றன. அருணகிரியார் திருவானைக்காவில் அன்னை அகிலாண்டேசுவரியைப் பாடுகையில் காஞ்சி காமாட்சியையும் நினைவு கூறுகிறார்.

‘‘கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
மலை சிலை ஒரு கையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள், காஞ்சி மாநகர் உறை பேதை
களிமயில், சிவனுடன் வாழ்ந்த மோகினி,
கடலுடை உலகினை ஈன்ற தாயுமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி அருள்பாலா ’’என்பது அப்பாடல்.

சித்ரா மூர்த்தி
(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்