SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் ஏப்ரல் 27 முதல் மே 3 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

யோகமான காலமுங்க; அதனால எதிர்பாராத பலன்கள் கிட்டுமுங்க. புதிய தொழில் அமைப்புக்கும் வாய்ப்பு இருக்கு. அதேசமயம், குடும்பத்துப் பெரியவங்க, கூடப்பிறந்தவங்களோட உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கணுமுங்க. பொதுவாகவே வறுமையில இருக்கறவங்களுக்கு பணம் கொடுத்து உதவறதை விட, உடல்நலமில்லாதவங்களுக்கு உதவறது பெரிய தர்மம்ங்க. வீடு, மனை விற்பது, வாங்குவதில் நல்ல ஆதாயம் கிடைக்குமுங்க. கனிமப் பொருட்கள், அழகு பொருட்கள், கால்நடைகள் வியாபாரம் மற்றும் வெளிநாட்டில் தொழில்னு எல்லாமே பிரமாதமாக வளருமுங்க. உத்யோகத்ல உங்க திறமையை நிரூபிச்சு புது உயரத்துக்குப் போவீங்க. ரத்தத்தில் தொற்று, ரத்த சர்க்கரையைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதி இளைஞர்களின் காதல், மனம் இனிக்கக் கைகூடுமுங்க. இந்தத் தேதிப் பெண்களின் யோசனை பிறரால் ஏற்கப்படுமுங்க. வெள்ளிக்கிழமை விநாயகருக்கு அர்ச்சனை செய்ங்க; வெற்றிமாலை சூடுவீங்க.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புதிய பொறுப்புகள், புது வசதிகள், உயர்வுகள்னு வந்தாலும் கூடவே மனசுக்குள்ள இனம் புரியாத பயம் இருந்துகிட்டிருக்குமுங்க. அப்படியா, இப்படியா, அதுவா, இதுவாங்கற குழப்பம் கொஞ்சம் ஆட்டிப் படைக்கும். பேச்சில் கவனமா இருங்க. பொறுமை ரொம்ப முக்கியம்; அதனால வர்ற இழப்புகள் எல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரிதாங்க; அதனால மன உறுதியைத் தளர விடாதீங்க. எந்தப் பலனையும் எதிர்பாராம பொறுப்புகளை நிறைவேற்றுங்க; மனபயம், ஏமாற்றம்னு அவதிப்படமாட்டீங்க. இது தொழில், வியாபாரம், உத்யோகம், குடும்பம், வெளிவட்டாரப் பழக்கம்னு எல்லா இனங்களுக்கும் பொருந்துமுங்க. உணவுக் குழாய்ல ஏற்கெனவே உபத்திரவம் இருந்தவங்க, உணவுக்கட்டுப்பாட்டையும் மருத்துவத்தையும் கைவிடாதீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் அனாவசியமா குழப்பமடையாதீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு அர்ச்சனை செய்ங்க; துன்பம் விலகிப் போகும்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

விபரீத கற்பனைகளே உங்க வாழ்க்கையை திசைமாற்றிடலாம், அதனால மனகுதிரைக்குக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்க. இதனால பிறர் வெறுப்புக்கும் ஆளாவீங்கங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. உங்களாலதான் குடும்பம் ஓடுது, அலுவலகம் நடக்குதுங்கற இறுமாப்பை ஒழிச்சுக் கட்டுங்க. உங்களை விடவும் புத்திசாலிகள் இருக்காங்கன்னு நினைச்சுகிட்டு உங்க ஆற்றலை வளர்த்துக்கறதுதான் நல்லது. உங்க அணுகுமுறைகளை மாற்றிக்கோங்க; அது வாழ்க்கையை நல்வழிப்படுத்தும். சிறு பொறியும் பெருந்தீயாகும்ங்கறா மாதிரி, குடும்பத்ல சிறு வாக்குவாதமும் பெரிய ரகளையாகிடும், நிதானமா இருங்க. உங்களைச் சார்ந்தவங்களோட சின்ன தப்பையும் பிறரிடம் சொல்லி, கேலி செய்து, பகையைத் தேடிக்காதீங்க. தூக்கமின்மை, நரம்பு உபாதைன்னு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் விஷயத்ல தலையிடாதீங்க; ஒதுங்கியே இருங்க. புதன்கிழமை பெருமாளுக்கு அர்ச்சனை செய்ங்க; தெளிவு பிறக்கும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த ஆவணத்திலும் கையெழுத்திடுமுன், பலமுறை யோசிச்சுச் செய்ங்க. யாருக்கும் ஜாமீன் கொடுக்காதீங்க. சட்டத்துக்குப் புறம்பான சமாசாரங்கள்ல ஆர்வம் காட்டாதீங்க. தொழில், வியாபாரத்ல கூட்டாளிகளை விட்டுப் பிடிச்சுதான் உங்க வழிக்குக் கொண்டுவரணுமுங்க. அலுவலகத்ல சக ஊழியர்களோட ஏட்டிக்குப் போட்டின்னு கோதாவில இறங்காதீங்க; கொஞ்சம் பணிஞ்சு போனா உங்க மதிப்பு எப்படி உயருதுன்னு பாருங்க. வளர்ப்புப் பிராணி, விஷ ஜந்துகளால கடிபடலாம்ங்க; வீட்ல பழகின பிராணிதான்னாலும் கொஞ்சம் விலகியே இருங்க; அதேபோல தோட்டம், காடு, ஒதுக்குப்புறமான இடம்னு போக வேண்டியிருந்தா, பூச்சி, பொட்டுகளைப் பார்த்துப் போங்க. காது-மூக்கு-தொண்டை, நரம்புக் கோளாறு வருமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் எடுத்தேன், கவிழ்த்தேன்னு நடந்துக்காதீங்க. வெள்ளிக்கிழமை புற்றுள்ள அம்மன் கோயில்ல அர்ச்சனை செய்ங்க; நிம்மதி உண்டாகும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சோம்பல், தயக்கம், சந்தேகம் எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுடுங்க, ஏன்னா இந்த வாரம் உங்களுக்குப் பல வாய்ப்புகள் வரப்போகுதுங்க. அதையெல்லாம் முழுமையாகப் பயன்படுத்திக்கோங்க. தைரியமாக மேற்கொள்ற முயற்சிகள் எல்லாம் வெற்றியாகவே முடியுமுங்க; நம்பிக்கையோடு செயல்படுங்க. உத்யோகத்ல இடமாற்றம் கிடைச்சா, உடனே ஏற்றுக்கோங்க; அது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்குமுங்க. தொழில், வியாபாரத்லேயும் நவீன உத்திகளைப் புகுத்துங்க; லாபம் பெருகும். தொலைதூர செய்திகள் ஆதாயதோடு வருமுங்க. எந்த காரணத்துக்காகவாவது குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருந்தவங்க மறுபடி ஒண்ணு சேருவீங்க. ரத்தத்ல ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிச்சுக்கோங்க. சிலருக்கு முதுகு எலும்பு உபாதை ஏற்படலாம்.

இந்தத் தேதிப் பெண்கள் எதிர்பாராத நன்மைகளை அடைவீங்க. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்ங்க; வளம் பெறுவீங்க.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

உழைப்பை ஒரு சாக்காக வெச்சுகிட்டு குடும்பத்துக்காக நேரம் செலவிடறதைக் குறைச்சுக்காதீங்க. முக்கியமா வாழ்க்கைத் துணையின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. வீட்ல மட்டுமல்லாம வெளிவட்டாரப் பழக்கத்லேயும் பொறுமையைக் கடைப்பிடிக்கணுமுங்க. நண்பர்கள் உங்களைக் கொண்டாடறதுக்குத் தகுதியானவராக நீங்க தொடர்ந்து நடந்துக்கோங்க. உத்யோகத்ல யாரோ செய்த தவறுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டி வரலாம்; அப்ப தற்காத்துக்கொள்ள முயற்சிக்காம நிதானமாகவே பேசுங்க.  குலதெய்வப் பிரார்த்தனை ஏதாவது விடுபட்டிருந்தா அதை உடனே நிறைவேற்றிடுங்க. குடும்பத்தார், நல்ல நண்பர்களோட யோசனையைக் கேட்டு பெரிய முதலீடுகளைச் செய்யுங்க. சிலருக்கு காது-மூக்கு-தொண்டை பகுதிகள்ல பாதிப்பு வரலாம்.

இந்தத் தேதிப் பெண்களுக்கு உடல் கோளாறுகள் நீங்கிடுமுங்க. ஞாயிற்றுக்கிழமை அனுமனுக்கு அர்ச்சனை செய்ங்க; ஆரோக்கியமாய் வாழ்வீங்க.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

யாருடைய சின்னத் தவறுகளையும் பெரிசுபடுத்தாதீங்க. நீங்க ஒழுக்கமா, சட்டதிட்டத்துக்கு உட்பட்டு வளர்ந்தது, வாழறது மாதிரி எல்லாரும் இருக்கணும்னு எதிர்பார்த்தா, இந்த காலத்ல அது சாத்தியமில்லீங்க. குடும்பத்லேயே ஒழுங்கு, சுத்தம், கட்டுப்பாடுன்னு சொல்லிகிட்டு கடுப்படிக்காதீங்க. உங்க பிரச்னை என்னன்னு சொல்லி விளக்கினீங்கன்னா, நீங்க எதிர்பார்க்கற நல்ல பதில் கிடைக்குமுங்க. பொதுவாக விட்டுக்கொடுக்கற பழக்கத்தால பிறரை சந்தோஷப்படுத்தறதோட நீங்களும் நிம்மதியா இருக்க முடியும்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க - ஈகோ பார்க்காதீங்க. எல்லாம் தெரியும்ங்கற மனப்பான்மை ஏமாற்றத்தையும் அவமானத்தையும் தருமுங்க; அகம்பாவத்தை வளர்த்துக்காதீங்க. ஒற்றைத் தலைவலி, சளித் தொந்தரவால அவதிப்படுவீங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப ஒற்றுமைக்கு உறுதுணையா இருப்பீங்க. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ங்க; மகோன்னதமாக வாழ்வீங்க.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல மட்டுமல்லாம, வெளிவட்டாரப் பழக்கத்லேயும் தொழில், வியாபாரம், உத்யோக இடங்கள்லேயும் எச்சரிக்கையாக வார்த்தைகளை விடுங்க. குடும்பத்ல வீசற தென்றலை உங்க ஆக்ரோஷத்தால புயலாக மாத்திடாதீங்க. எந்த இடத்ல இருந்தாலும் சுற்றியிருக்கறவங்களை அனுசரிச்சுப் பேசறதுதான் பொதுவாக நல்லதுங்க. உங்க பேச்சை, நடவடிக்கைகளை பிறர் கவனிக்கறாங்க, தொலைபேசியில் பேசும்போதுகூட பிறர் கவனத்துக்கு உட்படரீங்க, புரிஞ்சுக்கோங்க. ரொம்பநாளா பார்க்காதிருந்த உறவுக்காரங்க, நண்பர்களைப் போய்ப் பாருங்க. அது தற்போதைய நிம்மதிக்கும், எதிர்கால நன்மைக்கும் வழிவகுக்குமுங்க. சிற்றின்ப நாட்டத்தைத் தவிர்த்திடுங்க; அது பெரிய அபவாதத்துக்கும் வழிவகுக்கலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் யார்கிட்டேயும் எதிர்வாதம் செய்யாதீங்க. செவ்வாய்க்கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்ங்க. மாற்றங்கள் நிகழும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

நெருங்கின உறவு, நட்புன்னாலும்கூட கொடுக்கல்-வாங்கல்ல எச்சரிக்கையா இருங்க. ரொம்ப வேண்டப்பட்டவங்கதான்னாலும் பணம்னு வரும்போது மனசு மாற வாய்ப்பு இருக்குங்கறதால, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காதீங்க; சாட்சியை கூடவே வெச்சுக்கோங்க. இதனால தற்காலிகமான மனவருத்தத்தை ஏற்படுத்தலாமே தவிர, மற்றபடி நிரந்தரமான உறவு அல்லது நட்பு இழப்பு ஏற்பட்டுடாதுங்க. கூட்டுத் தொழில்ல பங்காளிகளோட கண்டிப்பாகவே இருங்க; இதனால ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். அரசாங்கம் சார்ந்த விஷயங்கள்ல வீண் பிடிவாதம் பிடிக்காதீங்க; இது வழக்காகி, நீதி மன்றத்துக்கும் போயிடலாம். கண் நரம்பில் பாதிப்பு தெரியுதுங்க. கண்நீர் அழுத்தத்தைப் பரிசோதிச்சுக்கோங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புது அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையா இருங்க. வெள்ளிக்கிழமை லட்சுமிநரசிம்மருக்கு அர்ச்சனை செய்ங்க; வாழ்க்கையில் தென்றல் வீசும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்