SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இஸ்லாமியப் புத்தாண்டு..!

2019-09-10@ 09:59:11

இஸ்லாமிய வாழ்வியல்

இறைத்தூதர் நபிகள் நாயகம் காலத்தில் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கு இல்லை. ஆனால் மாதங்கள் பன்னிரண்டு என்பதும் சந்திரனின் தோற்றம் - மறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்களைக் கணக்கிடுவதும் இருந்தன.குர்ஆன் கூறுகிறது: “உண்மையாக இறைவனிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானத்தையும் பூமியையும் படைத்த நாள் முதல் இறைவனின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது.” (குர்ஆன் 9:36)
பெருமானார் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு ஆண்டுகள் கழித்து உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.639 இல்) இஸ்லாமிய நாட்காட்டியின் அடையாளமாக என்ன பெயரைச் சூட்டலாம் ஆண்டின் தொடக்கமாக எதைக் கருதலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

இப்படி ஓர் ஆலோசனை நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கிய பெருமை நபித்தோழர் அபூமூஸா அல் அஸ்அரீ (ரலி) அவர்களையே சாரும். அவர் ஒரு முறை உமர் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதிய போது அரசாங்கக் கடிதங்களில் தேதி இல்லாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் விளைவாக  இஸ்லாமிய நாட்காட்டி ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் கலீஃபா உமர் (ரலி) உணர்ந்தார்கள்.எனவே இதுகுறித்து நபித் தோழர்களுடன் உமர் கலந்தாலோசித்தார்.   அதில் நான்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. நான்கும் நபிகள் நாயகத்தின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்தன.

1) நபிகளாரின் பிறப்பு
2) நபிகளாரின் இறப்பு
3) நபிகளார் இறைத்தூதராகத் தேர்வு
செய்யப்பட்டது
4) நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்குப்  புலம்பெயர்ந்தது. (ஹிஜ்ரத்)

உமர்(ரலி) அவர்கள் நபிகளார் புலம்பெயர்ந்த நிகழ்வையே ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கமாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. மக்காவிலிருந்து நபிகளார் புலம்பெயர்ந்து மதீனா வந்ததுதான் இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்தது.  நபிகளாரின் மக்கா வாழ்க்கை துன்பங்களும் துயரங்களும் சொல்லொணாக் கொடுமைகளும் நிறைந்த வாழ்க்கையாகும். புலம்பெயர்ந்து செல்வதற்கான உத்தரவை இறைவனிடமிருந்து நபிகளாரும் எதிர்பார்த்திருந்தார். மதீனாவில் வாழ்ந்த மக்கள் நபிகளாருக்கு அடைக்கலம் தந்ததுடன் அவர் பரப்புரை செய்த இஸ்லாமிய வாழ்வியலையும் ஏற்றுக்கொண்டனர்.  உலகில் முதன்முதலாக ஓர் இஸ்லாமிய அரசும் சமூகமும் மலர்ந்த இடம் மதீனாதான். அங்கிருந்துதான் வேத ஒளி உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. ஆகவே நபிகளார் புலம்பெயர்ந்த நிகழ்வையே ஹிஜ்ரத் - இஸ்லாமிய நாள்காட்டியின் தொடக்கமாக உமர் அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஹிஜ்ரி ஆண்டு தொடங்கியது.

இஸ்லாமிய நாள்காட்டியின் முதல் மாதம் முஹர்ரம் ஆகும். முஹர்ரம் மாதம் கண்ணியமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். (துல்கஅதா, துல்ஹஜ், ரஜப் ஆகியவை இதர மூன்று மாதங்கள்)  பல தியாக நிகழ்வுகள் நடைபெற்ற மாதமாகவும் முஹர்ரம் திகழ்வதால் அந்த மாதமே ஆண்டின் முதல் மாதமாகத் தேர்வு செய்யப்பட்டது.2019 செப்டம்பர் ஒன்றாம் தேதி புதிய ஹிஜ்ரி 1441ஆம் ஆண்டு தொடங்குகிறது. எத்துனைத் துயரங்கள், இடையூறுகள் ஏற்பட்டாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்னும் பாடத்தையே நபிகளாரின் ஹிஜ்ரத் - புலம்பெயர்தல் நமக்குக் கற்றுத்தருகிறது. அனைவருக்கும் இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

- சிராஜுல்ஹஸன்


இந்த வார சிந்தனை

“(நபியே, தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உங்களிடம் கேட்கிறார்கள். அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” (குர்ஆன் 2:189)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2021

  18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்