SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருக்கும் பொழுதை இனிதாக்குங்கள்

2019-09-10@ 09:55:00

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 31

கொண்டாட்டம் என்பது தனியாக ஏற்படுத்திக் கொள்கிற ஒன்று மட்டுமல்ல. சில எளிய நிகழ்வுகளில் மூலம் வாழ்க்கை தன்னைத்தானே  கொண்டாடி கொள்கிறது. அதனை கண்டடைய வாய்த்தவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அதிகாலை ஐந்தரை மணி இருக்கும். நடைப்பயிற்சியின் போது ஒரு கடை திறந்து இருப்பதைப் பார்த்தேன். அந்த கடையின் உரிமையாளர் அதிகாலையில்  நீராடி உற்சாகமாய் அமர்ந்திருந்தார். நான் அந்தக் கடையைக் கடந்தபோது வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் “அவனை இன்னும் காணோம்! படுத்து  தூங்கிறானோ” என்று வேறு கேட்டுக் கொண்டிருந்தார். இதில் முக்கியமான அம்சம் என்னவெனில் அது பாய்கள் விற்கும் கடை. பாய் என்பது உறக்கத்தின் குறியீடு. அவ்வளவு அதிகாலையில் ஒரு பாய்க்கடை திறந்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அந்த காட்சி ஓர் உற்சாகத்தைக் கொடுத்தது.

சுவர் ஓரமாக சுருட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாய்கள் “நாங்களும் காலையிலேயே  எழுந்து விட்டோம்” என்று சொல்வதைப் போல நின்றுகொண்டிருந்தன. அதிகாலை எழுவது என்பது எவ்வளவு அழகானது என்பதை நின்று கொண்டிருந்த பாய்கள் நீளப் பேசுவதுபோல் தோன்றியது.
வெவ்வேறு ஊர்களில் வைகறைப் பொழுதுகளில் விடியற்காலை உழைப்பாளிகளைக் கண்டிருக்கிறேன். அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் தன் தையல் கடையைத் திறந்து வைத்து கர்ம சிரத்தையாய் தைத்துக் கொண்டிருப்பவர்கள், தூக்கம் கலைந்தும் கலையாமலும் நடைப்பயிற்சி செய்யும் மக்களுக்காக அவர்களுக்கு முன்னர் விழித்தெழுந்து அப்போது பறித்த கீரை வகைகளையும் வாழைத்தண்டுகளையும் விற்பனைக்கு வைத்துக் கொண்டு விடியும் என்று காத்திருப்பவர்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

பறவையின் அதிகாலை சங்கீதம் அதற்கான சுருதியில் அமைந்து அந்த நாளுக்கான உரையாடலைத் தொடங்கி வைக்கிறது. சின்னஞ்சிறிய உயிரினங்களாகிய பூச்சிகளும் மீன்களும் தங்கள் அசைவுகளின் மூலம் தூங்கிக் கொண்டு இருக்கும் நீர்நிலைகளை துயில் எழுப்புகின்றன.விடியலுக்கு முன்னரே எழுபவன் அந்த நாளை கைப்பற்றி ஆட்சி செய்கிறான். விடிந்த பின்னர் எழுபவனோ அந்த நாள் தன்னைக் கடந்து போவதை வேடிக்கை மட்டுமே பார்க்கிறான். மனிதர்கள் தங்களுக்குள் கடன் வாங்கிக் கொள்வதும் திருப்பித் தருவதும் சகஜம். பள்ளியில் ஆரம்ப வகுப்பிலேயே கணக்குப் பாடத்தில் கடன் வாங்கித் தானே கழிப்பதற்கு கற்றுத் தருகிறார்கள். தந்த கடனைத் திரும்ப வாங்க ஒருவர் போகிறார். கடன் வாங்கியவரின் குழந்தை வந்து கதவைத் திறக்கிறது. அப்புறம் என்ன நடந்தது என்பதை இந்தக் கவிதையில் பாருங்கள்.

மலர்ந்தும் மலரா மழலை மொக்குகள்
வீட்டு வாசலில் வந்து நிற்கிற
அறிந்திராத  முகங்களின் முறுவலை
உணர்ந்திடும் முன்னர் உதிர்க்கும் ஒருசொல்
“அப்பா வெளியே போயிருக்காங்க”
வெளியே போகாத அப்பாவின் இருப்பை
வெளியே நிற்கிற மாமா அறிந்தும்
கடனுக்கு வாங்கிய பிஸ்கட் பொட்டலம்
கடன்காரனுடைய பிள்ளையின் கைகளில்
தந்து சொல்வார்; சொல்லிச் செல்வார்
“அப்பாகிட்டே சொல்லு நீ
ஸ்கூலுக்கு போன அப்புறம் வரேன்”

இந்தக் கவிதையில் கடனின் கணிதம் தாங்கிய மனிதம் முகம் காட்டுகிறது, சின்ன விஷயம்தான். ஆனால் எவ்வளவு அற்புதமான உணர்வு!சமீபத்தில் கோவையில் கடும் மழை. பருவ காலத்தில் வராத மழை காலம் தப்பி வந்தது. இளஞ்சேரல் எனும் கவிஞர் இதை முகநூலில் இப்படிக் குறிப்பிட்டார்.

“கோவையில் மழை
அரியர்ஸ் எழுதுகிறது”

எல்லா மனிதர்களும் காணாமல் கடந்து போகிற அம்சங்களுக்குள் இருக்கும் நுட்பங்கள் பலவற்றை கவிஞர்களும் கலைஞர்களும் கண்டுணர்கிறார்கள். அதை கலை செய்கிறார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் கவியரசர் கண்ணதாசன் ஒன்றைச் சொல்வார். உறங்குவது என்றால் நன்றாக உறங்க வேண்டும். விழித்துக் கொள்வது என்றால் சுறுசுறுப்பாக எழுந்துவிட வேண்டும் என்று. நம்மில் பலபேர் உறக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் நடுவில் ஒரு திரிசங்கு நிலையைக் கண்டுபிடித்து மந்திரித்து விட்டது போல் தெருவில் திரிகிறோம். ஒரு முக்கிய வேலைக்காகப் போகிறோம் என்றால் பதட்டத்துடன் பாதை முழுவதும் அதே நினைவாகப் போகவேண்டும் என்று பொருளல்ல. மனதை இலகுவாக வைத்துக் கொண்டு இடையில் தென்படும் காட்சிகளை ரசித்தபடி சென்றால் மனதில் புதிய சக்தி பிறக்கும்.

போக வேண்டிய இடத்திற்குப் போய் சேர்ந்த பின் கூடுதல் திறனுடன் அந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அமரர் நா.மகாலிங்கம் பற்றி அவருடைய மருமகனும் சிறந்த சிந்தனையாளருமான கிருஷ்ணராஜ வாணவராயரிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு தகவல் சொன்னார். பெங்களூரில் மிகவும் சிக்கலான விஷயம் ஒன்றை நிர்வகிக்க பங்குதாரர்கள் கூட்டம் ஒரு நாள் காலையில் தொடங்கியதாம். கடும் விவாதங்கள் மதிய உணவு வரை நீடிக்க அதில் தீவிரமாகப் பங்கேற்றாராம் மகாலிங்கம். மதிய உணவுக்குப் பிறகு கப்பன் பார்க்கில் வாக்கிங் செல்லலாம் என்று மருமகனை அழைத்தாராம். அரைமணி நேரம் நடைப்பயிற்சி செய்கையில் அந்த சிக்கல் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் சொல்லவில்லையாம். பொதுவான விஷயங்களையே பேசிக் கொண்டிருந்தாராம். பின்னர் மறுபடியும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றவர் விவாதங்களில் மறுபடியும் முழு மூச்சுடன் பங்கேற்றாராம்.

கூட்டம் முடிந்து கோவைக்கு விமானத்தில் திரும்பும் போதும் நடந்த விவாதங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையாம். மனதை இலகுவாக வைத்திருக்கத் தெரிந்தவர்களுக்குத்தான் அப்போது என்ன செய்கிறோமோ அதை மட்டும் செய்யவும், அடுத்தடுத்த நேரங்களில் அதை மனதில் சுமந்து கொண்டு திரியாமல் இருக்கவும் முடியும். இந்தப் பக்குவம் பயிற்சியாலும் வாழ்க்கை அனுபவங்களாலும் வருவது. எல்லோருக்குமே சாத்தியப்படக் கூடியது. வாழ்க்கை ஆண்டுகளின் கணக்கு. ஆண்டுகளோ மாதங்களின் கணக்கு. மாதங்கள் வாரங்களின் கணக்கு. வாரங்கள் நாட்களின் கணக்கு. நாட்களோ மணிநேரங்களின் கணக்கு. மணிநேரங்களோ நிமிடங்களின் கணக்கு. நிமிடங்கள் ஒவ்வொன்றும் விநாடிகளின் கணக்கு. ஆம் நண்பர்களே! அர்த்தமுள்ள விநாடிகளால் ஆனதுதான் நம் வாழ்க்கை.  வாழும் ஒவ்வொரு விநாடியையும் கொண்டாடுங்கள். வாழ்வைக் கொண்டாடியவர் ஆவீர்கள்.‘
(தொடரும்)

- மரபின் மைந்தன் முத்தையா


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்