SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எப்போதும் துணை இருப்பான் மதுரை வீரன்!!

2019-09-07@ 15:58:40

நம்ம ஊரு சாமிகள்

சிவபெருமானிடமும், பராசக்தியிடமும் அனுதினமும் குழந்தைப்பேறு வேண்டி வந்தான். ஒரு நாள் இரவு மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், உனக்கு சுந்தரவீரன், சண்டிவீரன், ஆகாச வீரன், ஏம வீரன், சாம வீரன், காம வீரன், உச்சி வீரன், குதிரை வீரன் ஆகிய அஷ்ட வீரர்கள் ஒன்று சேர்ந்த ரூபமாக ஒரு குழந்தை பிறக்கும் என்று அருளினார்.அதன்படி காசிராஜன் மனைவி செண்பகவல்லி கர்ப்பமுற்றாள். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மகிழ்ச்சி நிரம்பி இருந்த அந்த தருணத்தில் அரண்மனை ஆஸ்தான ஜோதிடரை வரவழைத்து, பெற்ற தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வகையில் எவ்வாறு இருக்கும் அவன் பிறந்த நேரம் என்று ஆருடம் பார்க்க கூறினார் மன்னன். மன்னன் சொல்படி ஆருடம் பார்த்த ஜோதிடர், மன்னா மழலை பிறந்த நேரம் இந்த மனைக்கு ஆகாது. மாலை சுற்றி மழலை பிறந்ததால் மன்னருக்கு ஆகாது, கொடி சுற்றி குழந்தை பிறந்துள்ளது. இது குடிமக்களுக்கும், கோட்டைக்கும் ஆகாது என்றுரைத்தார்.

அப்படியானால் என்ன செய்வது என்றெண்ணிய மன்னனிடம் ஜோதிடர் கூறினார். மன்னா குழந்தையை காட்டில் கொண்டு விடுவதே சிறந்தது. என்று விளக்கம் அளிக்க, அதுவே நல்லது என்றால் அப்படியே ஆகட்டும் என்ற மன்னர். அரண்மனை காவலர்களை அழைத்து குழந்தையை காவேரி கரையோரம் தொட்டியம் அருகேயுள்ள காட்டில் கொண்டு விடுங்கள் என்றார். பெற்றவள் குழந்தையை கொடுக்க மனமில்லாமல் பரிதவித்தாள், மன்றாடினாள். மயக்கமுற்றாள். யாதுமறியா அந்தக் குழந்தையை காட்டில் கொண்டு விட்டனர் அரண்மனை காவலர்கள்.யாருமில்லா கானகத்தில் தங்கத் தாம்பூல தட்டில் மழலை கை கால்களை அசைக்க, அருகே நாகம் குடை பிடித்து நின்றது. மான்களும், முயல்களும் துள்ளி விளையாடி குழந்தைக்கு குதூகலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இது இவ்வாறு இருக்க, கோனேரிப்பட்டினத்தை (தற்போது கோனேரிப்பாளையம் பெரம்பலூர் அருகில் உள்ளது) ஆண்டு வந்த மன்னன் பொம்மன நாயக்கர் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளில் இரண்டு வாம நோய் வந்து இறந்துவிட்டது. அந்த மாடுகளின் தோல்களில் குதிரைகளுக்கு அங்குசமும், கடிவாளமும் செய்யுமாறு அரண்மனை பணியாளர் சின்னானிடம் கூறினார் பொம்மன நாயக்கர்.அங்குசமும், கடிவாளமும் செய்ய ஆவாரம் மர பட்டைகளை வெட்டி வரலாம் வா காட்டிற்கு என்று தனது மனைவி சின்னாத்தியை உடன் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர். காட்டில் சின்னாச்சி ஆவாரம் பட்டைகளை சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்கும் போது அந்த காட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. சின்னாத்தி. அழுகுரல் கேட்ட திசை நோக்கி ஓடினாள். கொஞ்ச தூரத்திலேயே வீரி மரத்தடியில் புற்றுக்கு முன்பாக தங்கத் தாம்பாளத்தில் குழந்தை மின்னியது. அந்தக் குழந்தைக்கு நிழலாக நாகம் படமெடுத்து நிற்க, புலி குழந்தைக்கு பால் கொடுக்க முயல், மான்களும் முயல்களும் அங்கும் இங்கும் ஓடி குழந்தைக்கு விளையாட்டு காட்ட இப்படிப்பட்டக் காட்சிகளைக் கண்டு அதிசயித்தவாறே சின்னாத்தி குழந்தையிடம் சென்றதும் அவை எல்லாம் ஒதுங்கி வழிவிட்டன. குழந்தையை ஆசையோடு வாரியெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

சிவனருளால் பிறந்த குழந்தை அல்லவா, அதனால் அந்த குழந்தையை எடுத்து வாரி அணைத்து முத்திமிட்ட மறு விநாடியே, சின்னாத்தியின் மார்பில் பால் சுரந்தது. சின்னானும், சின்னாத்தியும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சின்னான் செருப்பு செய்யும் தொழில் செய்து வந்தார். மன்னன், தளபதியார், அமைச்சர்கள் என அரண்மனையை சார்ந்தவர்களுக்கு சின்னான் தான் செருப்பு செய்து கொடுப்பார்.தான் புரியும் வேலையை மகன் பார்க்கவேண்டாம் அவன் மாபெரும் படை வீரனாக வேண்டும். மன்னனின் தளபதியாக திகழ வேண்டும் என்று கனவு கண்டிருந்தான் சின்னான். ஆகவே காட்டில் கண்டெடுத்த பிள்ளைக்கு வீரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.

வீரன், விளையாட்டு, கல்வி, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கினான். அந்த காலகட்டத்தில் கோனேரிபட்டினத்து பொம்மன நாயக்கருக்கு பொம்மி என்ற  மகள் இருந்தாள். பொம்மி பருவம் எய்தினாள். பொம்மன நாயக்கர் வம்ச வழக்கப்படி பருவம் வந்த கன்னி பனை ஓலையால் வேயப்பட்ட குடிசையில் நாளொரு நாள் ஒரு குடிசை என 48 நாள் தனித்து இருந்து வந்தால் கன்னித்தீட்டு கழியும் என்பது அவர்கள் வழக்கம். அதன்படி பொம்மிக்கு அரண்மனையோரம் உள்ள சோலையில் தினமும் ஒரு குடில் அமைத்து அதில் அவள் தனித்து இருந்து வந்தாள் நாட்கள் நாற்பத்தைந்து கடந்தது. அது வரை சின்னான் தினமும் குடிலுக்கு இரவு காவலுக்கு சென்று வந்தான். பகலில் பொம்மியின் தோழிகள் உடனிருந்தனர்.

நாற்பத்தி ஆறாவது நாள் இரவு பெய்த மழையில் காவலுக்கு இருந்த சின்னான் நனைந்ததால் சின்னானுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. காய்ச்சலால் வீட்டில் படுத்திருந்த சின்னானுக்கு பச்சிலை தடவிக்கொடுத்த சின்னாச்சி, மகன் வீரனிடம் தந்தையின் நிலையை கூற, வீரன் இனி இளவரசியின் குடிலுக்கு இரவு நேரக்காவலுக்கு நான் போகிறேன். அப்பா போக வேண்டாம் என்று கூறினார்.அந்த நிலையிலும் சின்னான் தடுத்தான். வேண்டாம் வீரன். நீ வாலிபன். இளவரசி குடிலுக்கு இரவு நேர காவலுக்கு நீ செல்லக்கூடாது. மன்னர் இதை அறிந்தால் நிச்சயம் கோபம் கொள்வார். வேண்டாம் மகனே என்றார். மன்னருக்கு தெரியாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எந்த நிலையிலும் அவப்பெயர் வாங்கிக்கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அவ்விடத்திலிருந்து வீரன் கிளம்பினான் இளவரசியின் குடிலுக்கு இரவு நேரக்காவலுக்கு.
 அவன் குடிசை கட்டிக் கொடுக்க, உள்ளே திரையிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் தங்கியிருந்தாள் பொம்மி. அன்று மாலை இடி,
மின்னலுடன் கனமழை கொட்டியது.

காவலுக்கு நிற்பவர் தந்தையின் ஒத்த வயதுடையவர் தானே என்றெண்ணி இரக்கம் கொண்ட பொம்மி, சின்னா, மழை பெரிதாக வருகிறது. குடிலுக்குள் ஓரமாக வந்து நில்லுங்கள். உடல் நனையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள். பரவாயில்லை நான் நின்று கொள்கிறேன். என் தந்தை மழையில் நனைந்து உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். என்று வாலிபக்குரலில் பதில் வந்தது. குரலின் இனிமை கண்ட பொம்மி, குரலுக்கு சொந்த மான முகத்தை பார்க்க திரும்பினாள். அப்போது குடிலுக்குள் முகத்தை காட்டி பதிலுரைத்த வீரனின் முகம் கண்டாள்.
கன்னித்தீட்டு முடியும் வரை ஆடவர்எவரேனும் முகத்தை பார்க்கக்கூடாது. அப்படி பார்ப்பது என்றால் அது கட்டிக்கொள்ளும் உரிமை உள்ள மாமன் மகனோ, அல்லது அத்தை மகனோ வாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் தாய்மாமனாக இருக்கவேண்டும். இந்த எழுதப்படாத விதிமுறைகளை மீறினாள் பொம்மி.

வீரனுக்கு குடிசைக்குள் இடமளித்தாள். நாட்கள் இரண்டு கடந்த நிலையில், வீரன் மீது காதல் கொண்டாள் பொம்மி. 48 நாட்கள் முடிந்து. சடங்கு செய்து மகளைக் கூட்டிவர உறவுகள், பொம்மியின் தோழிகள் மற்றும் பெரும் சேனையுடன் புறப்பட்டார் பொம்மன நாயக்கர், சடங்கு வைபோகம் நடக்கும் சமயம் குடிசையில் இருந்த மணிவிளக்கை வீரனிடம் கொடுத்தாள். அப்போது அவளின் இதழோரம் பூத்த புன்னகையும், பதிலுக்கு வீரன் பார்த்த பார்வையும் அவர்கள் இருவரும் இருந்த காதலை அவர்களை அறியாமலே வெளிப்படுத்தியது. இதைக் கண்ட மன்னர் மறுநாள் சின்னான் சின்னாத்தியை அரண்மனைக்கு அழைத்து காவலுக்கு உன்னை வைத்தால் வாலிபனான உன் மகனை நீ அனுப்பி வைத்தாயா, உன்னால் முடியாவிட்டால் அரண்மனைக்கு தகவல் கொடுத்தால் நான், வேறு ஆளை அனுப்பியிருப்பேனே என்று கூறி, என் மகளை பார்க்க எண்ணினால் உன் மகனுக்கு மரணம் அந்த நேரமே நிகழும் என்று எச்சரித்தார். அரசனின் வார்த்தைகளால் அஞ்சிய சின்னானும், சின்னாத்தியும் வீரனை கண்டித்தனர்.
இவற்றிற்கு எல்லாம் அஞ்சாமல் வீரனும், பொம்மியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

இதனிடையே பொம்மிக்கு மணமுடிக்கும் ஏற்பாடுகளில் பொம்மன நாயக்கர் இறங்கினார். சிற்றரசர்களில் சிறந்தவரை தேடி பார்த்து வந்தார். இதை தோழியர் மூலம் அறிந்த பொம்மி, வீரனுக்கு தகவல் கூறினாள். மறுநாள் மாலைப்பொழுதில் வீரன குதிரையில் வந்துகோட்டைக்குள் புகுந்து பொம்மியைத் தூக்கிச் சென்றான். கோனேரிபட்டினத்திலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்ட அந்த குதிரை. காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆமுர் மடுவு கருங்கல் பகுதியில் வந்து  நின்றது. காதலர் இருவரும் அவ்விடமே தங்கினர். வீரன் பொம்மி இருவரையும் தேடிப் புறப்பட்ட பொம்மன நாயக்கர் படை கருங்கல் பகுதியில்  அவர்களைக் கண்டுபிடித்து விட்டனர். அந்தப் படைவீர்களோடு மோதி அனைவரையும் வெட்டி விழத்திய வீரன். அந்த வெற்றியோடும் பொம்மியோடும் மதுரை நகருக்குள் புகுந்தான். மதுரைக்குச் சென்ற வீரன் தன் வீரச்செயல்கள் மூலம் மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் அறிமுகம் ஆனார். அந்த அறிமுகமே அவரை திருமலை நாயக்கர் படையில் சேர வைத்தது. வீரனின் வீரதீர செயல்களைக் கண்ட நாயக்கர் தனக்கு நம்பிக்கையான தளபதியாக நியமித்துக் கொண்டார்.

தொடரும்...

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 02-05-2021

  02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்