SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒளி வீசும் வேலாயுதனே!

2019-09-05@ 15:47:25

அருணகிரி உலா 79

முப்பத்திரண்டு அறங்களை வளர்த்த அன்னை காமாட்சியின் திருவைபவங்களை இன்னும் அறிந்து கொள்வோம். அதற்கு முன்பாக ஏகாம்பரேஸ்வரரை  குறித்த சில அபூர்வ விஷயங்களை இந்த அத்தியாயத்தில் காண்போம். புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்  கோயில். கோயில் மகாமண்டபத்தை அடுத்து உள்ளே சென்றதும் கர்ப்ப கிரகத்தில் பிருத்வி லிங்கமாக விளங்கும் ஏகாம்பரேஸ்வரரையும், பின்சுவரில்  சோமாஸ்கந்தரையும் வணங்கி, சண்டிகேஸ்வரரைத் தரிசிக்கிறோம்.

அடுத்த பிராகாரத்தில் காஞ்சியில் முக்தி அடைந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர்  திருவுருவங்களை வணங்குகிறோம். ஓரத்தில் கழற்சிங்க நாயனாரும் காட்சி அளிக்கிறார். பாலச்சந்திர கணபதி, ஸ்படிக லிங்கம், பிரம்மனால்  பூஜிக்கப்பட்ட வெள்ளக்கம்பர், சிவலிங்க பாணங்கள், திருமாலால் பூஜிக்கப்பட்ட கள்ளக்கம்பர்(கம்பா நதியை மீறி நின்ற கள்ளக்கம்பர்) ஆகியோரைத்  தரிசிக்கிறோம்.

‘‘வெள்ளம் காட்டி வெருட்டிட, வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக்கம்பனை, எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே’’

திருவொற்றியூரில் இழந்த இடக்கண் பார்வையை காஞ்சியில் திரும்பப் பெற்ற சுந்தரர் இவ்வாறு பாடுகிறார். ஆறுமுகன் சந்நதியை அடைந்து  மற்றுமொரு காஞ்சித் திருப்புகழைப் பாடுகிறோம். ‘சீசி முப்புர’ என்று தொடங்கும் இப்பாடலின் முற்பகுதியில், மும்மலங்களாகிய காடு எரிந்து  போகவும், பாசங்கள் அற்று விடவும், நம்மை மூடியுள்ள ஐந்து கோசங்களும் (கோசம் = உறை.

அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் எனும் பஞ்ச கோசங்களும் ஆன்மாவை  மூடிக்கொண்டிருக்கின்றன) அடியோடு ஒழியவும், அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலாதிருக்கவும், முருகனுடைய பாதத்  தாமரைகளைத் தன் தலையில் ஆபரணமாகச் சூட்டும்படி வேண்டிக் கொள்கிறார். பாடலின் பிற்பகுதியைப் பார்ப்போம்.

‘‘தேசில் துட்ட நிட்டூர கோதுடைச்
சூரை வெட்டி எட்டாசை ஏழ் புவித்
தேவர் முத்தர்கட் கேதமே தவிர்த்தருள்வோ ன
சீர்படைத்தழற் சூல மான் மழுப்
பாணி வித்தருப் பாதன் ஓர்புறச்
சீர் திகழ்ப் புகழ்ப் பாவை ஈன்பொற் குருநாதா
காசி முத்தமிழ்க் கூடலேழ்மலைக்
கோவலத்தியிற் காண நான் மறைக்
காடு பொற்கிரிக் காழி ஆருர் பொற் புலிவேளூர்
காள அத்தி அப்பால் சிராமலைத் தேசமுற்று முப்பூசை மேவி நற்
காம கச்சியில் சால மேவு பொற் பெருமாளே.’’

ஞான ஒளியற்ற துஷ்டனும், கொடிய குற்றங்கள் புரிபவனுமாகிய சூரபத்மாவை வெட்டி, எண் திக்குகளிலும் ஏழுலகங்களிலும் வாழ்கின்ற  தேவர்களுக்கும், ஜீவன் முத்தர்களுக்கும் ஏற்படுகின்ற துன்பங்களை விலக்கி அருள்புரிபவனே! தாருகாவன முனிவர்களால் ஏவி விடப்பட்ட நெருப்பு,  சூலம், மழு, மான் முதலானவற்றைக் கரங்களில் ஏந்தியுள்ளவரும், பவளம் போன்ற திருவடிகள் உடையவரும் ஆகிய சிவபிரானின் ஒருபுறம் சேர்ந்து  புகழ் ஓங்கியுள்ள பார்வதிதேவி பெற்ற அழகிய குருநாதனே!

சிவத்தலங்களுள் முதன்மையான காசி, சங்கம் வைத்து வளர்த்த நான்மாடக் கூடலாகிய மதுரை, திருவேங்கடம், அட்ட வீரத்தலங்களுள் ஒன்றான  திருக்கோவிலூர், திரு ஆனைக்கா எனும் ஜம்புகேசுரம், வேதங்கள் பூசித்த நான்மறைக்காடு எனும் வேதாரண்யம், ஆரணிக்கருகிலுள்ள கனககிரி,  சம்பந்தர் அவதரித்த சீகாழி, தியாகேசர் ஆட்சி செலுத்தும் திருவாரூர், திருச்சிராப்பள்ளி ஆகிய தலங்களிலெல்லாம் போற்றப்பட்டு, சிறப்பு மிக்க காஞ்சி  எனும் காம கோட்டத்திலும் மேன்மையுற விளங்கும் அழகிய பெருமாளே என்று பாடலை நிறைவு செய்கிறார்.

அடுத்ததாக நாம் தரிசிப்பது, மத்தள மாதவேஸ்வரர் (நந்தியைப் போன்று தானும் சிவநடனத்தின்போது மத்தளம் கொட்ட விரும்பிய திருமால் பூஜித்த  லிங்கம்) மார்க்கண்டேஸ்வரர் (பிரளய காலத்தின்போது காஞ்சியில் தோன்றிய வேதஸ்வரூபமான மாமரத்தின் மீதமர்ந்து அந்த மானவயும், மாவடியில்  தோன்றிய ஈசனையும் கண்டு களித்த மார்க்கண்டேயர் பூஜித்த லிங்கம்) அகத்தீஸ்வரர் (சான்றோர்கள் மிகுந்திருந்த காஞ்சியில்தான் வெளியாக்க  எண்ணியிருந்த தமிழை வெளிப்படுத்த வேண்டி அகத்தியர் பூஜித்த லிங்கம்) மற்றும் அறுபத்து மூவரின் உற்சவ விக்ரகங்கள், கருவறைக் கோட்டத்தில்  மூர்த்தங்கள் ஏதுமில்லை.

நேரே நிலாத்திங்கள் துண்டப் பெருமாள் காட்சி அளிக்கிறார். வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் 49 ஆவது தலம். திருமங்கையாழ்வாரால்  மங்களாசாசனம் செய்யப்பெற்றது. பாற்கடலில் தோன்றிய விஷ ஜுவாலையினால் திருமாலின் தேகம் சூடடைந்தபோது சிவாக்ஞையால் ‘‘எனக்கு  நேரே இருக்கப் பெறுவாயானால் என் ஜடையிலுள்ள பிறைச்சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள் பட்டு வெப்பம் நீங்கும்’’ எனக்கூறக்கேட்டு திருமால்  அங்கேயே நின்றதாகக் கூறப்படுகிறது.

அம்பிகையின் தவத்தைச் சோதிப்பதற்காகச் சிவபெருமானின் ஜடையிலிருந்து வெளிப்பட்ட ஜலப்பிரளயத்தைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு  விண்ணளாவி எழுந்த திருமாலின் கண்டத்தில் நிலவின் கிரணங்கள் பட்டு ஒளி வீசியதால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர். பெருமாள் சந்நதியில்  அவர் புகழ் பாடும் ஒரு திருப்புகழை அர்ப்பணிக்கிறோம்.

‘செறிதரும்’ எனத் துவங்கும் பாடலின் முற்பகுதியில் ‘‘சிவபெருமானுக்கு மெய்ப்பொருளை உபதேசித்தவன், அடியார்களுக்கு உலகியல் பயத்தை நீக்கி  அன்பை அளிப்பவன், அழகிய காஞ்சியில் விளங்கும் தெய்வம் என்று நெகிழும் அன்பும், பக்தியும் பூண்டு, மனம் லயமடைந்து, அதனால் வரும்  முதிர்ச்சியை என்று எனக்கு அருள்வாய்?’’ என்று முருகனிடம் இறைஞ்சுகிறார்.

‘‘குறியவன், செப்பப்பட்ட எவர்க்கும்
பெரியவன் கற்பிக்கப்படு சுக்ரன்
குலை குலைந்துட்கச் சத்யமிழற்றுஞ் சிறுபாலன்
குதலையின் சொற்குத் தர்க்கமுரைக்கும்
கனகன் அங்கத்திற் குத்தி நிணச் செங்
குடர் பிடுங்கித் திக்குற்ற முகச் சிங்க முராரி
பொறிவிடும் துத்திக் கட்செவியில் கண்
துயில் கொளும் சக்ரக்கைக் கிரி சுத்தம்
புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ஜகதாதை
புனித சங்கத்துக் கைத்தல நிர்த்தன்
பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்
புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும்
பெருமாளே.’’

பொருள் விளக்கம்: வாமன அவதாரம் எடுத்தவர், புகழப்படுகின்ற தேவர்களில் மூத்தவர், தனக்குக் கல்வி புகட்ட வந்த சுக்கிராச்சாரியார் பயத்தினால்  நடுநடுங்கும்படி ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் எட்டெழுத்தை ஜெபித்த பிரகலாதனின் மழலை வார்த்தைக்குத் தர்க்கம் புரிந்து நாத்திகம் பேசிய  இரணியனின் சிவந்த குடலைப் பிடுங்கியவர், எல்லாத் திக்குகளிலும் விளங்கும் முகத்தை உடைய நரசிம்மர், முரன் எனும் அசுரனைக் கொன்றவர்,  ஒளி வீசும் புள்ளிகளை உடைய ஆதிசேஷன் மீது யோக நித்திரை புரிபவர், சக்ராயுதம் ஏந்தி யமலையின்ன உருவினர், தூயமேகம் போன்ற அழகிய  நிறமுடையவர், இவ்வுலகை ரட்சிக்கும் தந்தை, பரிசுத்தமான ஓங்கார நாதத்தை எழுப்பும் பாஞ்ச சன்னியத்தைக் கையில் பிடித்திருப்பவர், காளிங்கன்  மேல் நடமாடியவர் ஆகிய திருமால். ‘பழைய சந்தத்தைப் பெற்ற மடப்பெண்’ என்றது ‘அரனுடைய சக்தியே அரி’எனும் பூர்வ நிலையைக் குறிக்கிறது  என்பார், திரு.செங்கல் வராயப்பிள்ளை அவர்கள்.

‘‘அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’’
‘‘காவியங் கண்ணளாகிக் கடல்வண்ணனாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயிற்றுரனாரே’’
- அப்பர்.

சிவசக்தியர் நால்வர்:
அருட்சக்தி = பவானி
கோபசக்தி = காளி
போர்சக்தி = துர்க்கை
புருஷசக்தி = திருமால்
திருமாலே பூர்வ நிலையில் சிவனாரின் தேவியாக விளங்கினார்.

புகலு கொண்டற்குச் சித்தி அளிக்கும்  பெருமாள்: இது, முருகப் பெருமான் ஞானசம்பந்தராக அவதாரம் செய்தபோது, சிவசாரூபம் வேண்டிக் கச்சியில்  திருமேற்றளியில் தவம் செய்துகொண்டிருந்த திருமாலுக்குச் சிவசாரூபம் அளித்த வரலாற்றைக் குறிக்கிறது.

‘‘மருகப் புத்தேள் அருள் விழிப்பார்வை தன்னால்
மேற்றளியில் முகுந்தன் ஓர் இலிங்கமானான்’’

- காஞ்சிபுராணம் திருமேற்றளிப் படலம். திருமாலைத் தரிசித்து அருகிலுள்ள வாசல் வழியாக அடுத்த பிராகாரத்தை அடைகிறோம். பிரமாண்டமான  பல (21) லிங்கங்களைத் தரிசித்த வண்ணம் செல்லும்பொழுது ஒரு தனிச்சந்நதி நம்மைக் கவர்கிறது. மாவடி சோமாஸ்கந்தரின் உற்சவ மூர்த்திகள்  இங்கு வைக்கப்பட்டுள்ளன. நாலாபுறமும் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளில் ஏகனை அநேகனாகத் தரிசிக்கலாம். 5008 ருத்ராட்சங்களாலான விதானம்  அழகுற விளங்குகிறது.

சந்நதியை விட்டு வெளியே இறங்கி வரும்பொழுது சிலிர்ப்பூட்டும் மாவடிக்காட்சி நம்மை வரவேற்கிறது. பரந்த மேடை மேல் பச்சைப் பசேல் என்ற  ஒரு மாமரம் நம் கண்களைக் கவர்கிறது. மேடைக்கு ஏறிச்செல்லும் படியருகில் விநாயகரும், முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர்.

‘‘மாவைக் குத்திக் கைத்தற எற்றிப் பொரும்வேலா
மாணிக்கச் சொர்க்கத்தொரு தத்தைக் கினியோனே
சேவற் பொற்கைக் கொற்றவ கச்சிப் பதியோனே
தேவச் சொர்க்கம் சக்கிர வர்த்திப் பெருமாளே’’

- என்று பாடி முருகனை வணங்குகிறோம். மாமரத்தைப் பற்றிய முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றும் இங்கு எழுதப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு பழைய  மரத்திலிருந்த திசுக்களை வைத்து மரபணு தாவர முறையில் புதிய கன்றை உருவாக்கிக் கோயில் நந்தவனத்தில் நட்டனர். மண்தரைப் பரிசோதனை  செய்து உரிய முறையில் பாதுகாத்து பழைய மரத்தை மீண்டும் உருவாக்கினர். வேளாண் துறையினரால் இப்பணி மேற்கொள்ளப்பட்டு பழைய மரமும்  நன்றாகத் துளிர்விட்டதாம். எனவே இம்மரத்தை பொதுமக்கள், எக்காரணம் கொண்டும் தொடவோ இலைகளைப் பறிக்கவோ கூடாது என்பதைக்  கருத்தில் கொள்ள வேண்டும்.

மாவடியில் இறைவன் சோமாஸ்கந்தராகக் காட்சி அளிக்கிறார். ‘‘உலகெங்கும் மேவிய தேவாலயம் தொரு பெருமாளே’’ என்றும் ‘‘பதிஎங்கிலுமிருந்து  விளையாடிப் பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே’’ என்றும் அருணகிரியாரால் போற்றப்படும் முருகப்பெருமான், இங்கு மிக எளிமையாக, மாமர  நிழலில் பெற்றோருடன் அமர்ந்திருக்கிறான்! சுற்று சந்நதி உள்ளது. ‘‘காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி’’ என்றும் ‘கம்பை மாவடி  மீதேய சுந்தர’’ என்றும் இம்முருகனைப் பாடியுள்ளனர். இங்கு எழுதி வைக்கப்பட்டுள்ள திருப்புகழைப் பாடுகிறோம்.

‘‘அற்றைக்கிரை தேடி அத்தத்திலும் ஆசை
பற்றித் தவியாத பற்றைப் பெறுவேனோ
வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் தொளைசீலா
கற்றுற்றுணர் போதா கச்சிப் பெருமாளே’’

பொருள்: அனுதினமும் தனக்குத் தேவையான உணவைத் தேடுவதிலேயே காலத்தைக் கடத்தி, அதற்காக வேண்டிய பணத்தைத் தேடுவதிலேயே  முயன்று இம்மாதிரி உழலாமல் இருக்க உன்னைப் பற்றுக் கோடாக அடைய மாட்டேனோ? எப்போதும் வெற்றியையே காணும் ஒளி வீசும்  வேலாயுதனே! கிரௌஞ்ச கிரியைத் தொளைத்த குணசீலனே! சாத்திரங்களைப் படிப்பதால் உணரப்படும் ஞான சொரூபனே! காஞ்சியில் வீற்றிருக்கும்  அழகிய பெருமாளே!

ஷட்கோணமும் மலரும் செதுக்கப்பட்டுள்ள ஒரு வட்ட வடிவமான பழமை வாய்ந்த சிறு கல் ஒன்று மாவடிக் கந்தன் சந்நதி வாயிலில் உள்ளது.  இதன்மீது முருகப்பெருமானை அமர்த்தி விசேட நாட்களில் பூஜை செய்கின்றனர். ‘முட்டுப்பட்டு’ எனத் துவங்கும் பாடலில் வரும் ‘‘வட்ட புட்பத்  தலமீதே வைக்கத்தக்க திருபாதா’’ என்று அருணகிரியார் குறிப்பிட்டிருப்பது இதைத்தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ‘‘வட்டமாகிய என் இதய  பீடத்தின் மேலே வைத்துப் பூசிக்கத்தக்க திருவடிகளை உடையோனே’’ என்றும் இவ்வரிக்குப் பொருள் காண்பதுண்டு. மாமரத்தை வலம் வந்தபின்  திரும்பவும் பிராகாரத்தை அடைந்து ஐம்முக விநாயகரைத் தரிசிக்கிறோம்.

இவை தவிரவும் கோயிலில் மேலும் சில சிறு சந்நதிகளைக் காணலாம். அவற்றுள் ஒன்று பிரளயபந்தினி சந்நதி. இந்தச் சக்திதான், சிவபெருமான் தன்  சடையிலிருந்து கங்கையை இறக்கிவிட்டபோது அதை விஸ்வபட்சணம் எனும் கபாலத்தில் ஏந்தி அடக்கியவள். நடராஜர், திருமால் மத்தளம்  வாசித்தபோது, தான் ரக்க்ஷா தாண்டவம் ஆடித் தரிசனம் கொடுத்தருளினார். கருந்தங்கண்ணி எனும் அம்மை, தேவி கெளரியானபோது அவரது  திருமேனியிலிருந்து நீங்கிய கரிய கோசம் ஆவார்.

நடராஜர் சபையில் சிவகாம சுந்தரியும் மாணிக்கவாசகரும், விநாயகரும் காட்சி அளிக்கின்றனர். வெளியில் வரும்பொழுது தலையில் சடாரி  வைக்கப்படுவது புதுமையாக இருந்தது. இதை ருத்ரபதம்-பாத தீட்சை என்று குறிப்பிடுகின்றனர். வடுக பைரவரையும் ஆறுமுகனையும் தரிசிக்கிறோம்.

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்