ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேஸ்வரர் மாணிக்கம் விற்ற லீலை : மீனாட்சியம்மன் கோயிலில் கோலாகலம்
2019-09-04@ 11:47:50

மதுரை, : மீனாட்சியம்மன் கோயிலின் மகத்தான ஆவணி மூலப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சுந்தரேஸ்வரர் வியாபாரியாக வந்து, மாணிக்கம் விற்ற லீலை நடத்தப்பட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மாதம்தோறும் திருவிழா நடந்து வருகிறது. சித்திரைத் திருவிழாவிற்கு அடுத்ததாக, முக்கிய திருவிழாவாக ஆவணி மூலத்திருவிழா உள்ளது. இவ்விழாவில் சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்களில் 10 திருவிளையாடல்கள் அடுத்தடுத்து நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. ஆக. 26ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், செப். 1 முதல் கருங்குருவிக்கு உபதேசம் வழங்கிய லீலை துவங்கி ஒவ்வொரு திருவிளையாடல் நிகழ்வும் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் நாரைக்கு முக்தி கொடுத்த லீலை நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9 மணியளவில் அம்மன், சுவாமி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி கீழச்சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி வழியாக வந்து ஒண்டிமுத்து பிள்ளை மண்டபத்தில் எழுந்தருளினர். திருவிளையாடல் நிகழ்வின் 3ம் நாளான நேற்று மாணிக்கம் விற்ற லீலை நடந்தது. இரவு 7 மணிக்கு அம்மன் காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர்.சிவபெருமானின் திருவிளையாடலான மாணிக்கம் விற்ற லீலையின் விபரம் வருமாறு:
மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னன் வேட்டைக்கு சென்ற போது புலியால் கொல்லப்பட்டார். அச்சமயம் அரசரது காமக்கிழத்தியரின் மகன்கள் அரண்மனைக்குள் புகுந்து சகல செல்வங்களையும், மணிமகுடத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர். மன்னருக்கும், ராணிக்கும் முறையாக பிறந்த இளவரசனுக்கு முடிசூட்டலாம் என அமைச்சர்கள் முடிவு செய்தனர். மணிமகுடம் முதலானவை களவு போனதை அறிந்து சுந்தரேஸ்வரரிடம் முறையிட எண்ணி கோயிலுக்குச் சென்றனர்.
அப்போது சுந்தரேஸ்வரர் ஒரு நவரத்தின வியாபாரியாக தோன்றி புதிய மணிமகுடம் செய்ய விலையுயர்ந்த நவமணிகளை வழங்கினார். மேலும், அம்மணிகளின் வரலாறு, குணம், குற்றங்கள், யார் எந்த மணியை அணிய வேண்டும் போன்ற செய்திகளையும் கூறினார். புதிய மகுடத்தை சூட்டி இளவரசரை அபிஷேகபாண்டியன் என அழையுங்கள் எனக்கூறி மறைந்தார். இதையடுத்து கவர்ந்து செல்லப்பட்ட செல்வங்களும், மணிமகுடமும் மீண்டும் கிடைக்கப் பெற்றது. அபிஷேகப் பாண்டியனும் செங்கோல் வழுவாமல் ஆட்சி புரிந்து நற்பெயர் பெற்றான்.
விழாவின் 4ம் நாளான இன்று சிவபெருமான் தருமிக்கு பொற்கிழி வழங்கிய லீலை நடைபெறுகிறது.
மேலும் செய்திகள்
ஆதவன் வழிபட்ட அற்புத ஆலயங்கள்
அனுமனின் அருள் பெருக்கும் அற்புத ஆலயங்கள்
அஞ்சு மலை வாசன் ஐயப்பனின் ஆலயங்கள்
புத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்
சனி பகவான் பரிகார தலங்கள்
திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டிய நாட்கள்
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!