SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்லன அருளும் நவ கணேச பீடங்கள்

2019-08-30@ 14:59:58

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான எட்டு விநாயகர்கள் உள்ளனர். அவர்கள் ‘அஷ்ட கணபதிகள்’ என்று போற்றப்படுகின்றனர். அதே போன்று, தமிழ் நாட்டில் ஒன்பது கணபதி பீடங்கள் உள்ளன. அவற்றை ‘நவ கணேச பீடங்கள்’ என்கிறார்கள். அவை கணேச பீடம், ஸ்வானந்த கணேச பீடம். தர்ம பீடம், நாராயண பீடம், ஓங்கார பீடம், காம தாயினி பீடம், புருஷார்த்த பீடம், புஷ்டி பீடம், ஷட்சக்தி பீடம் எனப்படும்.

காவிரி நதி கடலோடு கலக்கும் கடைமுகப் பகுதியில் உள்ள திருத்தலம் திருவெண்காடு பதியாகும். இதற்கு சுவேத வனம் என்ற பெயரும் உண்டு. சீர்காழிக்கு அருகில் இத்திருத்தலம் உள்ளது. ஒரு சமயம் தேவர்களுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்த இந்திரன், சீர்காழிப்பதியில் தவம் செய்து வந்த நேரம். அப்போது அங்கே கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியது. சிவபூஜை செய்ய அவன் மிகவும் சிரமப்பட்டான். தேவர் தலைவன் இந்திரனுக்கு உதவி செய்யவே விநாயகப் பெருமான் காவிரியைப் பெருக்கெடுத்து ஓடச் செய்தார் என்கிறது கந்த புராணம்.

குடகு மலையில் காவிரி நதியைத் தோன்றச் செய்து, சோழ நாட்டிற்கு வளம் சேர்க்கக் காரணமானவர் கணபதி. காவிரி, இவள் பிரம்ம தேவனின் மாஸை புத்திரி. கவேரி மகரிஷி என்ற முனிவரால் வளர்க்கப்பட்டவள். அகத்திய மா முனிவரின் அன்பு மனைவி உலோபா முத்திரை இவளே. இவள் ஸ்தீரீ ரூபம், நதி ரூபம் என்னும் இரு வகை வடிவங்கள் கொண்டவள். உரிய காலத்தில் நதியாகும். வரத்தினைச் சிவபெருமானிடம் பெற்றவள். குடகு மலையில் அகத்தியர் தவம் செய்து வந்த நேரம். ஒரு மரத்தடியில், நதி ரூபத்தில் உலோபா முத்திரை இருந்த கமண்டலத்தை வைத்து விட்டுத் தியானத்தில் ஆழ்ந்தார் அகத்தியர். புனித நதியாக காவிரி வெளி பட வேண்டிய நேரம் வந்த நிலையில் தேவர்கள் வேண்டு கோளுக்கிணங்க விநாயப் பெருமான், காக்கை வடிவம் எடுத்து வந்து கமண்டலத்தைக் கவிழ்த்தார்.

உடனே  காவிரித்தாய் நதியாய்ப் பெருக்கெடுத்து ஓடினாள். காவிரி தோன்றும் குடகு மலையில் கணபதி வழிபாடு மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. காவிரி நதி கடலோடு கலக்கும் பகுதியில் அமைந்துள்ள திருவெண்காடு திருத்தலம் விநாயகர் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகும். இத்திருவெண்காட்டை ஒட்டி ‘ஒன்பது கணபதி பீடங்கள் ’ இருந்தன என்கிறது வடமொழி ஸ்காந்தம். இதனை உலகிற்குத் தெரியப்படுத்தியவர் பரத்வாஜ முனிவர்.
புதனுக்குரிய இந்தத் திருவெண்காடு திருத்தலம் மிகச் சிறந்ததொரு பரிகாரத்தலமாகும். சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள் என்று மூன்று திருக்குளங்கள் இங்கே உள்ளன. இளங்கோவடிகளின் சிலப்பதிகார காவியத்திலும், தேவாரத் திருமுறைகளிலும் குறிக்கப் பெற்ற சிறப்புக்குரியவை. இத்திருத்தலத்தைச் சுற்றிலும் தான் ஒன்பது நவ கணேச பீடங்கள் அமைந்திருந்தன. அவை களைப்பற்றிச் சுருக்கமாகக் காண்போம்.

கணேட பீடம் :-  காவிரி நதி கடலோடு கலக்கும் பகுதியில் உள்ள திருவெண்காடு , விநாயகப் பெருமான் வழிபாட்டுக்குச் சிறந்த தலமாகக் கருதப்படுகிறது. அதனை ஒட்டி அமைந்துள்ள ஒன்பது பீடங்களில் முதலாவது கணேச பீடம் இதுவாகும். இது சித்த பிலம் என்ற இடத்தில் உள்ளது என்கிறது ஒரு வடமொழி ஸ்துதி. தற்போதுள்ள பெரும் பள்ளம் என்கிற ஊரே சித்த பிலம் ஆகும். இது நவ சக்தி மயமான பீடமாகும். இங்கு எழுந்தருளியுள்ள கணேச சக்திக்கு ‘மயூரா’ என்று பெயர். ெபரும் பள்ளம் சிவாலயத்தில் உள்ள கணபதியே இவர்.

ஸ்வானந்த கணேச பீடம் :- திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது பால மாயூரம் என்னும் தலம். இங்குள்ள பீடம் சிவன், சக்தி, சூரியன், திருமால், பிரமன் ஆகியோரால் கிருத யுகத்தில் நிறுவப்பட்ட தாகும். இங்கு சித்தி, புத்தி தேவியருடன் விநாயகப் பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.

தர்மபீடம் :- காவிரிப் பூம்பட்டினம் செல்லும் பாதையில் உள்ள குளக்கரையை ஒட்டி ஒரு விநாயகர் கோயில் உள்ளது. இதைதர்மபீடம் என்கிறார்கள். இங்குள்ள விநாயகருக்கு தர்ம விநாயகர் என்று பெயர். இயக்க உருவம் கொண்ட தர்ம தேவதையால் ஸ்தாபிக்கப்பட்டவரே தர்ம விநாயகர். பஞ்சபாண்டவர்களால் வழிபட்ட இவரை வழிபட தர்மம் செய்யும் எண்ணம் அதிகரிக்கும் . அதனால் மிகுந்த புண்ணியம் சேரும் என்கிறார்கள்.

நாராயண பீடம் :- காவிரி நதி கடலோடு கலக்கும் இடம் ‘ சங்கு முகம்’ எனப்படும். இந்த சங்கு முகத்தில் முன்பு ஒரு அழகிய சிவாலயம் இருந்தது என்றும். காலப் போக்கில் அது  அழிந்து போனதாகச் சொல்லப்படுகிறது. அங்கே காவிரியுடன் கடலரசன் விநாயகப் பெருமானை நிறுவி வழிபட்டதால் இக்கணபதி தீர்த்த விநாயகர் எனப்பட்டார். இதுவே நாராயண பீடம் எனப்பட்டது.

ஓங்கார பீடம் :- சீர்காழித் திருத்தலத்தின் ஒரு பகுதியாக இருப்பது நெப்பத்தூர் என்ற திருத்தலமாகும். இதன் புராணப் பெயர் வேதபுரம் என்று போற்றப்பட்டது. இங்குள்ள கணபதி பீடம். ஓங்கார பீடம் எனப்பட்டது. இந்த விநாயகப் பெருமான் பரமேஸ்வரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அதனால் இவருக்கு பரமேஸ்ர விநாயகர் என்பது பெயர். ஓங்கார பீடத்தில் வீற்றிருக்கும் பிரணவப் பொருளான இப்பிள்ளையாரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.

காமதாயினி பீடம் :-  பூம்புகார் செல்லும் பாதையில் மேலையூர் என்ற ஊர் உள்ளது. இதற்கு அருகில் செங்கழுநீர்ப்படித்துறை என்ற பகுதி உண்டு. கௌதம ஆசிரமம் என்பது இதன் பழைய பெயர் ஆகும். செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்திருந்த கரையில் இந்திரன் நிறுவி வழிபட்ட விநாயகர் என்பதால் கல்ஹார விநாயகர் அல்லது செங்கழுநீர் விநாயகர் எனப்பட்டார். இதுவே காமதாயினி பீடம் எனப்பட்டது. இந்த விநாயகர் தன்னை வழிபடும் பக்தர்களின் விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றும் வல்லமை மிக்கவர்.

புருஷார்த்த பீடம் :-  சீர்காழி நாங்கூருக்கு அருகில் உள்ளது மதங்க ஆசிரமம் இங்கு மதங்க முனிவர் என்பவரால் உருவாக்கிய கணேச பீடம் உள்ளது. இதுவே மதங்க பீடமாகும். இங்குள்ள விநாயகரை சிவனும் உமையம்மையும் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இவரே புருஷார்த்த விநாயகர் என்று போற்றப்படுவதால் இது புருஷார்த்த பீடம் எனப்பட்டது. இவர் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருளும் தருபவர், வரப்பிரசாதி.

புஷ்டி பீடம் :- கீழப் பெரும் பள்ளம் எனும் கேது தலத்தில் உள்ளது இந்த புஷ்டி பீடம். இத்தலத்து விநாயகர் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிப்பவர் என்றும், வேண்டும் வரத்தையும் தருபவர் என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள நாகநாதர் சந்நதியில் உள்ளது புஷ்டி பீடம். இது என்பத்தெட்டாயிரம் ரிஷிகளால் பூஜிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவரை வழிபட உடல் பலமும் மன பலமும் சிறக்கும் என்பர்.

ஷட் சக்தி பீடம் :  பெரும் பள்ளத்தில் இருக்கும் இதே தலத்தில் அமைந்திருக்கும் இன்னொரு பீடம் இந்த ஷட் சக்தி பீடமாகும். இங்கு பல கணேச மூர்த்திகள் உள்ளனர். இவர்கள் கேட்கும் வரங்களை அளிக்கும் வரப்பிரசாதிகள். ஷட்சக்திகளால் நிரம்பப் பெற்றவர்கள் என்பதால் இது ஷட் சக்தி பீடம் எனப்பட்டது.

டி.எம். ரத்தினவேல்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்