SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

2019-08-29@ 10:21:07

நாம் நினைக்கிறபடியேதான் எல்லா நேரங்களிலும் எல்லாச் செயல்களும் நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ நாம் நினைத்தபடி அந்தச் செயல் நடைபெறவில்லை எனில் உடனே கோபமும் வெறுப்பும் நிராசையும் அடைவதோ இஸ்லாமிய வழிமுறை அல்ல. இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களுக்கும் மக்கா குறைஷிகளுக்கும் ஹுதைபியா எனும் இடத்தில் ஓர் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் திருப்பங்களை ஏற்படுத்திய நிகழ்வுகளுள் ஒன்று இந்த ஹுதைபியா உடன்படிக்கை. ஆனால் இதில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் குறைஷிகளுக்கு சாதகமாகவுமே இருந்தன. எடுத்துக்காட்டாக, குறைஷிகளில் யாரேனும் ஒருவர் இஸ்லாமிய அணியில் சேர்ந்துவிட்டால் அவரை உடனே குறைஷிகளிடம் திருப்பி அனுப்பிவிட வேண்டும்;

ஆனால் இறைத்தூதரின் அணியிலிருந்து யாரேனும் ஒருவர் குறைஷிகளுடன் சேர்ந்துவிட்டால் அவர் இறைத்தூதரிடம் திருப்பி அனுப்பப்பட மாட்டார். இவ்வாறு பல நிபந்தனைகள் இஸ்லாமிய அணிக்கு எதிராகவே இருந்தன. ஆயினும் நபிகளார்(ஸல்)  எந்த மறுப்பும் சொல்லாமல் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். நபித்தோழர்கள் பலருக்கும் இதில் மனவருத்தம் இருந்தது.  இறைத்தூதரின் முடிவை எப்படி எதிர்த்துப் பேசுவது என்று யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர். ஆனால் உமர் அவர்களால் அப்படி இருக்கமுடியவில்லை. “இது என்ன கோழைத்தனமான ஒப்பந்தம்” என்று கொதித்து எழுந்தார். இறைத்தூதரிடமே நேரடியாகக் கேட்கவும் செய்தார்.

“இறைத்தூதர் அவர்களே, நீங்கள்
உண்மையிலேயே இறைவனின் தூதர்தானே?”
“நிச்சயமாக, நான் இறைவனின் தூதர் ஆவேன்.”
“இஸ்லாம் என்பது உண்மையிலேயே
இறைவனின் மார்க்கம் தானே?”
“ஆம். இறைவனின் மார்க்கம்தான்.”
“குறைஷிகள் நமது எதிரிகள்தானே?”
“ஆம்.  எதிரிகள்தான்.”
“அப்படியிருக்க இந்த இழிவான ஒப்பந்தத்தை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? நமது மார்க்கத்தையும் ஏன் இழிவுபடுத்த வேண்டும்?”
“நான் இறைவனின் தூதர். அவனுடைய கட்டளைகளை நான் மீற மாட்டேன்” என்று அமைதியாகப் பதில் சொன்னார் நபிகளார். ஆனாலும் உமரின் கோபம் அடங்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை  இழிவான ஒப்பந்தம் என்றே நினைத்தார். அதனால் மனம் புழுங்கினார். மூத்த நபித்தோழர் அபூபக்கரிடமும் சென்று  இது குறித்து கோபமாக முறையிட்டார். ஹுதைபியாவிலிருந்து நபிகளாரும் தோழர்களும் மதீனா திரும்பும் வழியிலேயே இந்த ஒப்பந்தம் தொடர்பாக இறைவன் ஒரு வேத வசனத்தை அருளினான். “நபியே, நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்.”(குர்ஆன் 48:1)

எந்த ஒப்பந்தத்தைக் கேவலமானது, கோழைத்தனமானது என்றெல்லாம் உமரும் இன்னும் சில தோழர்களும் நினைத்திருந் தார்களோ அந்த ஒப்பந்தத்தை “வெளிப்படையான வெற்றி” என்று வர்ணித்தான் இறைவன். ஆம்...! அப்படித்தான் நடந்தது. ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்று  நிகழ்வுகள் அனைத்தும் இஸ்லாம் மேலோங்குவதற்கான பாதையை அமைத்தன. கத்தியின்றி, ரத்தமின்றி மக்கா நகரை நபிகளார் வெற்றி கொள்ளும் அற்புதமும் நடந்தேறியது. தாம் அவசரப்பட்டது எத்தனை பெரிய தவறு என்பதைப் பின்னாளில் உமர் அவர்கள்
உணர்ந்துகொண்டார். நினைப்பதெல்லாம் நடக்காமல் போவதிலும் இறைவனின் அருள்மிகுத் திட்டம் ஏதேனும் இருக்கும் என்பதை நாமும் உணர்ந்துகொண்டால் வாழ்க்கையில் ஏமாற்றம் என்பதே இருக்காது.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை


“இறைவன்தான் தன்னுடைய தூதரை வழிகாட்டுதலுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பிவைத்தான். அவர் அந்த மார்க்கத்தை ஏனைய மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக.”(குர்ஆன் 48:28)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்