SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

2019-08-28@ 15:27:15

168. வீரக்னே நமஹ: (Veeraghne namaha)

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள முக்கூர் என்னும் ஊரில் ராஜகோபாலாச்சாரியார் என்னும் மகான் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை காஞ்சிபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தம் நண்பரோடு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கர், முக்கூர் ராஜகோபாலாச்சாரியாரை வித்தியாசமாகப் பார்த்தார். “ஏன் அப்படிப் பார்க்கிறாய்?” என்று ராஜகோபாலாச்சாரியார் கேட்டார். “இல்லை! உங்களது குடுமி, நெற்றியிலுள்ள நாமம், உங்கள் பூணூல், பஞ்சகச்சம் இவற்றை எல்லாம் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது!” என்றார் வழிப்போக்கர்.

“இதில் சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரியார். அதற்குள் அவரது நண்பர், “சுவாமி! இவன் பெரிய நாத்திகன். நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை! இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்!” என்று கூறினார். ஆனால் ராஜகோபாலாச்சாரியார் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. “சொல்லப்பா! சிரிப்பதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டார்.

வழிப்போக்கர், “நீங்கள் வேதத்தை நம்புகிறீர்களா?” என்று கேட்டார். “நிச்சயமாக நம்புகிறேன்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “ஒவ்வொரு அந்தணரின் வலக்கையிலும் நெருப்பு இருப்பதாக வேதம் சொல்லியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் வலக்கையைக் காட்டுங்கள். அதிலுள்ள நெருப்பைக் கொண்டு என் பீடியை நான் பற்ற வைத்துக் கொள்கிறேன்! அவ்வாறு நெருப்பு வராவிட்டால் நீங்கள் அந்தணரே இல்லை.

உங்கள் குடுமியையும் பூணூலையும் வெட்டி எறிய வேண்டும்!” என்றார் வழிப்போக்கர்.
“பார்த்தீர்களா! இவனிடம் பேச்சு கொடுத்தால் இப்படித்தான் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்!” என்றார் ராஜகோபாலாச்சாரியாரின் நண்பர். ஆனால் இதற்கெல்லாம் ராஜகோபாலாச்சாரியார் அசரவில்லை. “தீயவர்களுக்கு நெருப்பாகவும், அடியவர்களுக்கு அமுதமாகவும் இருக்கும் அழகிய சிங்கரான நரசிம்மனை மனதில் கொண்ட நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்! நெருப்பு தானே வேண்டும்? நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது!” என்றார்.

“என்ன சிக்கல்?” என்று கேட்டார் வழிப்போக்கர். “இப்போது சூரியன் அஸ்தமிக்கப் போகிறது. நெருப்பை வரவழைக்கும் மந்திரத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் சூரியன் அஸ்தமித்து விட்டால் அப்புறம் நெருப்பு வராது. அதனால் உன் தாயை அழைத்துச் சூரிய அஸ்தமனத்தைக் கொஞ்சம் தாமதப் படுத்தச் சொல்!” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.“என் தாயால் எப்படிச் சூரிய அஸ்தமனத்தைத் தாமதப்படுத்த முடியும்?” என்று கேட்டார் வழிப்போக்கர்.

“கற்புடைய பெண் தன் கற்பின் மேல் சபதம் செய்தால் சூரிய அஸ்தமனத்தையே மாற்றலாம் என்று மகாபாரதம் சொல்கிறதே. உன் தாயைக் கூப்பிடு!” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “என் தாயின் கற்பைப் பழிக்கிறாயா?” என்று கோபத்துடன் ராஜகோபாலாச்சாரியாரைத் தாக்க வந்தார் வழிப்போக்கர். “அக்காலத்தில் வாழ்ந்த பெரும் கற்புக்கரசிகளுடன் உன் தாயை ஒப்பிட்டு, அவளது கற்பைப்பற்றிப் பேசுவது தவறு என்று உனக்குப் புரிகிறதல்லவா? அதுபோலத் தான் அக்காலத்தில் வாழ்ந்த சான்றோர்களின் தவ வலிமையோடு எங்கள் தவ வலிமையை ஒப்பிட்டு எங்கள் பூணூலை அறுப்பேன் என்று சொல்வதும் மிகத்தவறு. அந்நாளில் வாழ்ந்த அந்தணர்கள் மிகுந்த தவ வலிமையுடன் இருந்தார்கள்.

அதனால் அவர்களால் தங்கள் கரத்தில் நெருப்பைக் கொண்டு வர முடிந்தது. இன்று வாழும் நாங்களெல்லாம் அவர்களின் நிழலாகத்தான் உள்ளோம். இதை உனக்குப் புரிய வைக்கத்தான் நான் இவ்வாறு பேசினேனே ஒழிய உன் தாயை அவமதிக்கும் எண்ணத்தில் நான் சொல்லவில்லை!” என்று அமைதியாகச் சொன்னார் ராஜகோபாலாச்சாரியார்.
மேலும், “இறைவன் முன் அனைவரும் சமம். ‘அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும் நொந்தவரே முதலாக’ என அனைவருக்கும் அருள்புரிய இறைவன் காத்திருக்கிறான். அவன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கு!” என்று அறிவுறுத்தினார். வழிப்போக்கர் அங்கேயே அவரை விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றார்.

அங்கிருந்த மக்கள் எல்லோரும், “உங்களால் இந்த ஆசாமியிடம் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது!” என்று ராஜகோபாலாச்சாரியாருக்கு நன்றி சொன்னார்கள். “மிகுந்த வலிமையானவர்களையும் வீழ்த்துபவனான நரசிம்மன் தந்த வலிமையால் அவனை நான் வென்றேன்!” என்று பணிவுடன் கூறினார் ராஜகோபாலாச்சாரியார். பின்னாளில் அவர் தான் அஹோபில மடத்தின் 44-வது பீடாதிபதியான முக்கூர் அழகிய சிங்கராக வந்து திருவரங்க நாதனுக்கு ராஜகோபுரம் கட்டித்தந்தார்.

முக்கூர் அழகிய சிங்கர் கூறியதுபோல், வலிமையானவர்களையும் பெருவீரர்களையும்  வீழ்த்துபவராகத் திருமால் விளங்குவதால் ‘வீரஹா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 168-வது திருநாமம். “வீரக்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனைத்து விதமான தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி வெற்றி
காண்பார்கள்.

169. மாதவாய நமஹ: (Maadhavaaya namaha)

அக்கினிமுகர் என்ற முனிவருக்குக் கோபிலர், கோப்ரளயர் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். கண்ணனின் லீலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர்களுக்குக் கண்ணனை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. அதனால், தென் தமிழகத்தில் வாழ்ந்த அவர்கள் இருவரும், கண்ணன் ஆட்சி புரிந்து வந்த துவாரகையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள்.

துவாரகைக்குச் செல்லும் வழியில் காவிரியின் கிளை ஆறான பாமணியின் கரையிலுள்ள செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் நாரதரை அவர்கள் சந்தித்தார்கள். “வாருங்கள் முனிவர்களே! நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?” என்று கோபில - கோப்ரளயர்களைப் பார்த்துக் கேட்டார் நாரதர். “நாங்கள் கண்ணனுடைய சேஷ்டிதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் கண்ணனைத் தரிசிக்கத் துவாரகையை நோக்கி யாத்திரை சென்று கொண்டிருக்கிறோம்!” என்றார்கள்.

“என்ன? கண்ணனைத் தரிசிக்கப் போகிறீர்களா? அவன் தனது அவதாரத்தையே நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்று விட்டான். துவாரகை நகரமே இப்போது கடலில் மூழ்கி விட்டது!” என்றார் நாரதர். இத்துயரச் செய்தியைக் கோபில-கோப்ரளயர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “துர்பாக்கியசாலிகளான எங்களுக்குக் கிருஷ்ண லீலைகளைத் தரிசிக்கும் பாக்கியம் இனி கிடைக்கவே கிடைக்காதா?” என்று அழுது புலம்பினார்கள்.

“வருந்தாதீர்கள்!” என்று சொல்லி அவர்களைத் தேற்றிய நாரதர், அவர்களுக்குப் பன்னிரெண்டு எழுத்துக்களை உடைய வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார். “இந்த மந்திரத்தைச் சொல்லி இந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் நீங்கள் தவம் புரிந்தால் கண்ணன் உங்களைத் தேடி வந்து உங்களுக்குக் காட்சியளிப்பான்!” என்று கூறினார் நாரதர்.நாரதர் சொன்னபடி செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் இரு முனிவர்களும் பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு கடுந்தவம் புரிய, அவர்களின் தவத்துக்குத் திருவுள்ளம் உகந்த திருமால், கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்த முப்பத்தொன்று லீலைகளை அவர்களுக்கு அங்கே காட்டியருளினார். முப்பத்திரண்டாவது லீலையாக, ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக, ருக்மிணி சத்யபாமாவோடும், பசுங்கன்றுகளோடும் அவர்களுக்குக் காட்சியளித்தான்.

அந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரம் தான் இன்று மன்னார்குடி என்று அழைக்கப்படும் திருத்தலமாகும். அங்குள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சந்நதியின் பிராகாரத்தில் கண்ணன் கோபில-கோப்ரளயர்களுக்குக் காட்டிய முப்பத்திரண்டு லீலைகளையும் சித்திரங்களாக வடித்திருப்பார்கள். முனிவர்களைப் பார்த்து, “முனிவர்களே நான் உங்களுக்கு இங்கே காட்டியது வெறும் லீலைகள் அல்ல. இவை முப்பத்திரண்டும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகள் ஆகும். இவைகளுள் ஒன்றைப் பின்பற்றி என்னைத் தியானிப்பவன் முக்தி அடைவான்!” என்று கூறினார். இவ்வாறு முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளை விளக்கியபடியால், ‘ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்’ என்று அப்பெருமாள் அழைக்கப்படுகிறார்.

மன்னார்குடியில் கோயில் கொண்ட அதே ராஜகோபாலன், கும்பகோணம் கடைவீதியிலும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக எழுந்தருளியிருந்து அருட்பாலிக்கிறார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்னும் மகான், கும்பகோணம் ராஜகோபால ஸ்வாமியை வணங்கி, அப்பெருமாளின் அருளால் முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளிலும் சிறந்த பாண்டித்யம் பெற்றார். பிரம்ம சூத்திரங்களில் உள்ள பிரம்ம வித்யைகளுக்கு நடாதூர் அம்மாள் அருளிய விளக்கங்களை ‘ச்ருதப்ரகாசிகை’ என்னும் நூலில் காணலாம். இன்றும் குடந்தை ராஜகோபால ஸ்வாமி கோயிலில், பெருமாளுக்கு அருகே பிரம்ம வித்யைகளை விளக்கியவரான நடாதூர் அம்மாளும் விக்கிரக வடிவில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மா’ என்றால் இறைவனை அடையும் வழியாக இருக்கும் பிரம்ம வித்யை என்று பொருள். ‘தவ:’ என்றால் தலைவன் என்று பொருள். கோபிலர், கோப்ரளயர், நடாதூர் அம்மாள் போன்றோருக்குப் பிரம்ம வித்யைகளை உபதேசித்தவராகவும், அனைத்து பிரம்ம வித்யைகளுக்கும் தலைவராகவும் திருமால் விளங்குவதால், ‘மாதவ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 169-வது திருநாமம். (73-வது திருநாமமான ‘மாதவ:’ என்பதற்கு மகாலட்சுமியின் கேள்வன் என்று பொருள். இங்கே ‘மாதவ:’ என்பதற்குப் பிரம்ம வித்யைகளின் தலைவன் என்று பொருள்.)

“மாதவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்கள் கல்வியிலும், இணைப் பாடங்களிலும், கூடுதல் பாடங்களிலும் (co-curricular activities & extra-curricular activities) சிறந்து விளங்குவார்கள்.

170. மதவே நமஹ: (Madhave namaha)

பாற்கடலிலிருந்து வெளிவந்த மகாலட்சுமி, அங்கு நின்றுகொண்டிருந்த திருமாலைக் கண்டாள்; தேன் போலத் தித்திக்கும் அவரது வடிவழகில் மயங்கினாள். எனினும், அவள் உள்ளத்திலுள்ள அன்பை அவளது நாணம் மறைத்துவிட்டபடியால், தன் அன்பைத் திருமாலிடம் நேரில் அவளால் வெளிப்படுத்த இயலவில்லை. நாணம் தலைதூக்கிய நிலையில் பாற்கடலில் இருந்து விரைந்தோடினாள்.

திருவாரூரை அடுத்துள்ள திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்தாள். அக்காலத்தில் அவ்விடம் ‘லட்சுமிவனம்’ என்றழைக்கப்பட்டது. நாணத்தால் திருமாலை விட்டு அவள் விலகி ஓடி வந்தாலும், அவளது மனக்கண்களில் திருமாலின் தோற்றம் நன்கு பதிந்திருந்தது. அங்கேயே தியானத்தில் அமர்ந்துகொண்டு தேனெனத் தித்திக்கும் திருமாலின் அழகைத் தன் மனக்கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்.

    அதைக் கண்ட முனிவர்கள் சிலர், பிருகு முனிவரிடம், “மகாலட்சுமியால் இதே போல் எத்தனை நாட்கள் திருமாலைத் தியானிக்க முடியும்?” என்று கேட்டார்கள். அதற்குப் பிருகு, “சாந்தோக்ய உபநிஷத்தில் மது வித்யை என்றொரு பகுதி உள்ளது. அதில், ஒளிமிக்கதான வைகுண்ட லோகம் சூரியனாக உருவகப் படுத்தப்படுகிறது. சாதாரண சூரியனுக்கு உதயம், அஸ்தமனம் இரண்டும் உண்டு. ஆனால் வைகுண்டத்திலோ எப்போதும் பகல் தானே ஒழிய உதயம், அஸ்தமனம் இரண்டுமே இல்லை. அந்த வைகுண்டமாகிய சூரியனுக்குள்ளே திருமால் தேனாகத் திகழ்கிறார்.

தேனாகத் தித்திக்கும் திருமாலின் அழகை அங்குள்ள நித்யசூரிகளும் முக்தாத்மாக்களும் இடைவிடாது பருகிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு பருகினாலும், போதும் என்ற திருப்தி ஏற்படாத படி திகட்டாத அமுதமாக அவரது அழகு விளங்குகின்றது என்று உபநிஷத் விளக்குகிறது. திருமாலைக் குறித்துச் செய்யும் தியானம் தேன் போல இனிப்பதால், இந்த வித்யைக்கு ‘மது வித்யை’ என்று பெயர். (மது என்றால் வடமொழியில் தேன் என்று பொருள்.) எனவே திகட்டாத அமுதாகிய திருமாலின் அழகில் ஈடுபட்டிருக்கும் மகாலட்சுமிக்கு இந்த தியானத்தில் அலுப்பே ஏற்படாது. அதனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தியானிப்பாள்!” என்றார்.

மற்ற முனிவர்கள், “தியானிப்பது இருக்கட்டும். இவள் தான் வெட்கத்தால் விலகிச் செல்கிறாள் என்றால், திருமாலாவது இவளைத் தேடி வந்து மணந்து கொள்ளக் கூடாதா?” என்று கேட்டார்கள். “இவளது தியானம் முதிர்ச்சி அடையும் நிலையில் திருமாலே இவளைத் தேடி வருவார்!” என்றார் பிருகு. சில காலம் கடந்தது. திருமாலின் தளபதியான விஷ்வக்சேனர் மகாலட்சுமியிடம் ஒரு ஓலையைக் கொண்டு வந்து தந்தார். அதில், “நான் உனக்காக இங்குள்ள தர்ச புஷ்கரிணியின் மேற்குக் கரையில் காத்திருக்கிறேன்!” என்று திருமால் எழுதியிருந்தார்.

அந்த வார்த்தைகளைப் படித்த அளவில், அவளது காதல் நாணத்தை வென்று விட்டது. தன் மனம் கவர்ந்த நாயகனைக் காணும் ஆர்வத்துடன் குளத்தின் மேற்குக் கரையை அடைந்தாள் மகாலட்சுமி. அங்கே தேவர்களும் முனிவர்களும் புடைசூழத் திருமால் நின்று கொண்டிருந்தார். முனிவர்கள் நான்கு வேதங்களை நான்கு தூண்களாக்கி ஒரு மண்டபத்தை அங்கே அமைத்தார்கள். அம்மண்டபத்தில் திருமால் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்தார். அதனால் ‘அபிஷேகவல்லி’ என்று மகாலட்சுமி பெயர் பெற்றாள். திருமாலை அங்கேயே திருக்கல்யாணம் செய்து கொண்டாள். கடல் போன்ற அன்போடு மகாலட்சுமியைத் தேடி வந்தமையால், அவ்வூரில் திருமாலுக்குப் ‘பெரும்புறக்கடல்’ என்ற பெயர் ஏற்பட்டது.

பெரும்புறக்கடலாகிய திருமாலுடன், அபிஷேகவல்லியாகிய திருமகள் இணைந்திருக்கும் காட்சியைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் தேனாக இனிக்கும் இந்தச் சேர்த்தி அழகை எப்போதும் பருக வேண்டுமென விரும்பினார்கள். அதனால் தாங்களே தேனைப் பருகும் தேனீக்களாக வடிவெடுத்து, திருக்கண்ணமங்கையில் அபிஷேகவல்லித் தாயார் சந்நதியின் எதிரே குடிகொண்டு, திருமாலுடன் திருமகள் இணைந்திருக்கும் அழகாகிய தேனைத் தினமும் பருகுகிறார்கள்.

(திருக்கண்ணமங்கை தாயார் சந்நதியில் இன்றும் அந்தத் தேன் கூட்டை நாம் காணலாம்.)     இவ்வாறு தன் அடியார்களுக்குத் தேனாகத் தித்திப்பதால், திருமால் ‘மது:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 170-வது திருநாமம். “மதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எல்லா நாட்களும் தேனெனத் தித்திக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

171. அதீந்த்ரியாய நமஹ: (Atheendhriyaaya namaha)

ஒருவனுக்கு மிகவும் தாகமாக இருந்ததாம். அதனால் தனது நண்பனிடம் சென்று, “தாகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் வேண்டும்!” என்றான். அதற்கு அவன் நண்பன், “தண்ணீர் தானே! அதற்கென்ன பஞ்சம்? நேராக ஆகாய கங்கைக்குச் சென்று, வேண்டும் அளவு தண்ணீரைப் பருகிக் கொள்!” என்றான். “அவசரத்துக்குத் தண்ணீர் கேட்டால் ஆகாய கங்கைக்கு வழிகாட்டுகிறாயா?” என்று சொல்லி விட்டு, இரண்டாவது நண்பனிடம் சென்றான்.

இரண்டாவது நண்பன், “நீ பாற்கடலுக்குச் சென்றால் பாலையே அள்ளிப் பருகலாம்!” என்றான். “பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்டவற்றை வரைபடைத்தைக் கொண்டாவது தேடலாம். பாற்கடலை எங்கு போய் தேடுவேன்?” என்று சொல்லி விட்டு, மூன்றாவது நண்பனிடம் சென்றான். மூன்றாவது நண்பன், “அருகிலுள்ள காட்டாற்றுக்குச் சென்றால் தண்ணீர் கிடைக்கும்!” என்றான். இவனோ, “எனக்குத் தாகம் இருக்கையில், காட்டாற்றில் தண்ணீர் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதில் தண்ணீர் வரும் போது எனக்குத் தாகம் ஏற்படுமா என்றும் சொல்ல முடியாது!” என்று சொல்லி விட்டு நான்காவது நண்பனிடம் சென்றான்.

நான்காவது நண்பன், “புதிதாக ஒரு ஆழ்குழாய் போட்டு நிலத்தடி நீரை எடுத்து அருந்திக்கொள்!” என்றான். “இது அவசரத்துக்கு ஆகும் காரியமா? எத்தனை அடி தோண்டினாலும் தான் இந்நாட்களில் தண்ணீர் வருவதில்லையே!” என்று புலம்பி விட்டு ஐந்தாம் நண்பனிடம் சென்றான். ஐந்தாவது நண்பன், “குடம் குடமாகத் தண்ணீர் பிடித்து வைத்துள்ளேன். வேண்டும் அளவு எடுத்து பருகிக்கொள்!” என்றான். மகிழ்ச்சியுடன் இவனும் பருகினான். தாகம் தீர்ந்தது.

மாபெரும் வைணவ குருவான பிள்ளை லோகாசாரியார் இக்கதையைத் தனது சீடர்களுக்குச் சொன்னார். “இதற்குள் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கிறது!” என்றார். “என்ன கருத்து?” என ஆவலுடன் சீடர்கள் கேட்டார்கள். பிள்ளை லோகாசாரியார் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்தார்: இறைவனைக் காண விரும்பும் பக்தன் தான் இக்கதையில் வரும் தாகம் கொண்ட மனிதன். இறைவனைக் காண வேண்டுமென்று தாகத்துடன் இருக்கும் அவனிடம், “வைகுண்டத்தில் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்!” என்று சொல்வது “ஆகாயகங்கைக்குப் போய்த் தண்ணீர் பருகு!” என்று சொல்வதற்குச் சமம். ஏனெனில், ஆகாயகங்கை எப்படி நம் புலன்களுக்கு அப்பாற்பட்டதோ, அதுபோலத் தான் வைகுண்டமும் அங்குள்ள பெருமாளும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

“பாற்கடலுக்குப் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்!” என்று சொல்வது “பாற்கடலுக்குச் சென்று பாலை அருந்து!” என்று சொல்வது போன்றதாகும். தேவர்களால் தான் பாற்கடலுக்குச் செல்ல இயலும். “வராகன், ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் எடுக்கும் போது பெருமாளைத் தரிசித்துக் கொள்!” என்று சொல்வது “காட்டாற்றிலுள்ள நீரை நாடிச் செல்!” என்பது போல. ஏனெனில் நாம் விரும்பும் போது அவர் அவதரிக்க மாட்டார். அவர் அவதரிக்கும் காலத்தில் நாம் அவரைக் காண விரும்புவோமா என்ற உத்திரவாதமும் இல்லை.

“உனக்குள்ளேயே அந்தர்யாமியாகப் பெருமாள் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்து கொள்!” என்று சொல்வது, ஆழ்குழாய் மூலம் நீர் எடுக்கச் சொல்வது போல மிகவும் சிரமமான காரியம். கோயில்களிலும் வீடுகளிலும் விக்கிரக வடிவில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் பெருமாளைத் தரிசித்துக் கொள் என்று சொன்னால், அது குடங்களில் பிடித்து வைத்திருக்கும் நீரைப் பருகச் சொல்வது போல் மிக எளிதான காரியம்.

இவ்வாறு கதைக்குள் உள்ள தத்துவத்தை விளக்கிய பிள்ளை லோகாசாரியார், “வைகுண்டத்தில் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவராகத் திருமால் எழுந்தருளியிருந்தாலும், நம் மேல் கருணை கொண்டு விக்கிரக வடிவில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றுகிறார். அந்த அர்ச்சாவதார நிலையிலுள்ள இறைவனை வணங்கினால் உய்வடையலாம்!” என்று கூறினார்.

அர்ச்சாவதாரத்தில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றும் திருமால், வைகுண்டத்தில் நம் புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக விளங்குகிறார். வேதங்களைக் கொண்டு மட்டுமே அவரை அறிய முடியுமே ஒழிய, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய எந்தப் புலன்களாலும் வைகுண்டநாதனை அறிய இயலாது.
எனவே வைகுண்டத்திலுள்ள திருமால் ‘அதீந்த்ரிய:’ என்றழைக்கப்படுகிறார். ‘இந்த்ரிய:’ என்றால் புலன்கள். ‘அதீந்த்ரிய:’ என்றால் அவற்றுக்கு அப்பாற்பட்டவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 171-வது திருநாமம்.

“அதீந்த்ரியாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புலன்கள், சரியான கட்டுப்பாட்டுடன் இயங்கும்படித் திருமால் அருள்புரிவார். (‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள் வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.)

172. மஹாமாயாய நமஹ: (Mahaamaayaaya namaha)

இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாய்சுருட்டுவது போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். திருமால் பன்றி முகத்தோடு வராகராக அவதாரம் செய்து இரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார். இரண்யாட்சனை இழந்த அவனது மனைவிகளும் மக்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அங்கே இரண்யாட்சனின் அண்ணனான இரணியன் வந்தான். “வருந்தாதீர்கள்! உடல் என்பது அழியக் கூடியது. ஆத்மா தான் எப்போதும் அழியாமல் இருக்கக்கூடியது. பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கத்தானே செய்யும்? பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் என்பது உலக நியதி! அந்த வகையில் என் தம்பிக்கும் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்தாதீர்கள்! அழாதீர்கள்!” என்றெல்லாம் ஆறுதல் மொழிகள் சொன்னான்.

இதைக் கேட்ட இரண்யாட்சனின் குடும்பத்தினர், “ஏய் இரணியா! உன் அண்ணன் இறந்ததில் உனக்கு வருத்தமே இல்லையா? நீ அழாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் துக்கத்திலிருக்கும் எங்களிடம் வந்து சம்பந்தமில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறாயே! இது நியாயமா?” என்று கேட்டார்கள். “எனக்கு வருத்தமில்லை என்று யார் சொன்னது? எனது துக்கத்தை எல்லாம் மனத்துக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்! ஆனால் அழுது என்ன பயன்? இரண்யாட்சனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்க வேண்டாமா?” என்று கேட்டான் இரணியன்.

“அதற்கு என்ன செய்யப்போகிறாய்?” என்று மற்றவர்கள் கேட்க, “என் தம்பியைக் கொன்ற அந்தத் திருமாலை எனது வாளால் குத்திக் கொன்று அந்தத் திருமாலின் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்!” என்று சபதம் செய்தான் இரணியன். திருமாலைத் தேடிக் காரிய வைகுண்டத்துக்குச் சென்றான். அங்கே சென்று பார்த்தால், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி உள்ளிட்ட நாச்சிமார்கள் இருந்தார்கள். கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகள் இருந்தார்கள். ஆதிசேஷன் படுக்கையும் இருந்தது. ஆனால் அந்த ஆதிசேஷன் மேல் திருமாலைக் காணவில்லை.

“எங்கே போனான் அந்த நாராயணன்? அவன் எங்கு சென்றாலும் நான் அவனை விட மாட்டேன். எனது வாளுக்கு அவனை இரையாக்குவேன்! அவன் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்!” என்றெல்லாம் கூச்சலிட்டான். வைகுண்டத்திலிருந்தோர், “இரணியா! நீ வருவதைக் கேள்வியுற்ற திருமால், உன்னைக் கண்டு அஞ்சி எங்கேயோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார். அவர் எங்கே ஒளிந்து கொண்டார் என்று எங்களுக்குத் தெரியாது!” என்று கூறினார்கள்.

“பதினான்கு உலகங்களுள் அவன் எங்கு இருந்தாலும் நான் கண்டறிவேன்!” என்று சொல்லிவிட்டு அனைத்துலகங்களிலும் தேடினான் இரணியன். ஆனால் திருமாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான் இரணியன். (அதன்பின் இரணியனுக்குப் பிரகலாதன் மகனாகப் பிறந்ததும், திருமால் நரசிம்மராக வந்து இரணியனை வதைத்ததும் வாசகர்கள் அறிந்த செய்தியே.)

இரணியவதம் ஆனபின், பிரகலாதன் திருமாலிடம், “என் தந்தை உன்னை அனைத்து உலகங்களிலும் தேடியதாகவும், எங்கு தேடியும் உன்னைக் காணமுடியவில்லை என்றும் சொன்னார். நீ எங்கே ஒளிந்து கொண்டாய்?” என்று கேட்டான். “உன் தந்தையின் இதயத்துக்குள் ஒளிந்து கொண்டேன். அங்கே அவன் தேட மாட்டான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்!” என்றார் திருமால்.

“என் தந்தையைக் கண்டு அஞ்சி ஒளிந்து கொண்டாயா?” என்று கேட்டான் பிரகலாதன். “இல்லை! அப்போதே அவன் முன் தோன்றி அவனைக் கொன்றிருந்தால், பக்தப் பிரகலாதனான உனது பெருமை உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அதனால் தான் நீ தூணிலும் உளன், துரும்பிலும் உளன் என்று சொல்லும் வரை காத்திருந்து, அதன்பின் தூணைப் பிளந்து வெளி வந்து இரணியனைக் கொன்றேன்!” என்றார்.

இவ்வாறு, அடியார்களுக்குத் தன் வடிவத்தை நன்கு காட்டினாலும், அசுரர்களுக்குத் தன்னைக் காட்டாமல் மாயங்கள் செய்து தன்னை மறைத்துக் கொள்வதால் ‘மஹாமாய:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். “மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்” என்று ஆழ்வார் பாடுகிறார். ‘மஹாமாய:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 172-வது திருநாமம். இதில் ‘மாய:’ என்பது திருமாலின் சக்தியைக் குறிக்கிறது. இந்த ‘மாய:’ என்ற சொல்லுக்குப் பொய் என்றோ மாயை என்றோ அர்த்தமில்லை. “மஹாமாயாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் பக்தர்கள், அனைத்து விதமான மயக்கங்களிலிருந்தும் வெளிவரும்படித் திருமால் அருள்புரிவார்.
(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர் உ.வே வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-12-2020

  01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • gurunanak30

  குருநானக் ஜெயந்தி!: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..!!

 • bushfire30

  ஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ!: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..!!

 • thiruvannamalai30

  அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!: புகைப்படங்கள்

 • vivasayigal30

  நைஜீரியாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்!: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்