SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவ குணம் மிக்க தீர்த்தங்கள்

2019-08-21@ 17:09:21

தீர்த்தங்கள் எனும் திருக்குளங்கள் பொதுவான நிலையில் தன்னில் நீராடும் அன்பர்களுக்கு உடல் தூய்மையுடன். மனத் தூய்மையையும் தருகின்றன. சில தலங்களில் அமைந்துள்ள தீர்த்தங்கள் அபூர்வ சக்தி கொண்டுள்ளன. இவற்றில் சில சித்தசுவாதீனமின்மை, மனநிலக்குறை ஆகியவற்றை நீக்குகின்ற. சில மலட்டுத்தன்மையை நீக்கிப் பிள்ளைப் பேற்றை அளிக்கின்றன. சில தீர்த்தங்கள் வசியத் தன்மையை அதிகரிக்கச் செய்து திருமணத் தடை. வறுமை ஆகியவற்றை நீக்குகின்றன. இவற்றில் சிலவற்றை இப்பகுதியில் அறிந்து மகிழலாம்.

சிலப்பதிகாரத்தில், கணவனைப் பிரிந்து வாடும் கண்ணகியிடம் அவளுடைய தோழியான தேவந்தி பூம்புகாரின் புறத்தேயுள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் தீர்த்தங்களில் மூழ்கி வழிபடின் அவள் கணவன் அவளிடம் திரும்பி வருவான் என்று கூறுகிறாள். இதன்மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்தவர் கூடி மகிழத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபடும் வழக்கமும் நம்பிக்கையும் இருந்ததை அறிய முடிகிறது. திருவெண்காட்டிலுள்ள சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் ஆகியவையே சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சோமகுண்டம். சூரியகுண்டம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவற்றுடன் அக்னி தீர்த்தமும் உள்ளது. இத்தலத்துக்கு எழுந்தருளிய திருஞானசம்பந்தர் இத்தீர்த்தங்களை ‘‘வெண்காட்டு முக்குளநீர்’’ என்றழைத்து இதில் மூழ்கினால். ‘‘பேய்’’ அண்டாது; பிள்ளைப்பேறு உண்டாகும். இதில் ஐயுற வேண்டா’’ என்று உறுதிபடக் கூறுகிறார். இந்தத் தேவாரப்பாடல்களில் நம்பிக்கை வைத்து இங்கு வந்து முக்குளங்களில் நீராடி வெண்காட்டாரை வழிபட்ட அச்சுதகளப்பாளர் என்ற சிற்றரசருக்குப் பிறந்த வரே வைச சித்தாந்தத்தை ஒளியூட்டிப் பரப்பிய மெய் கண்ட தேவ நாயனார். திருவெண்காட்டில் அக்னி தீர்த்தக் கரையில் சிறு தனிச்சந்நதியில் விநாயகருடன் மெய்கண்ட தேவநாயனாரும் எழுந்தருளியுள்ளார்.

திருமுருகன் பூண்டியில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் ஒரு மண்டலம் நீராடி ஆலயத்தை வலம் வர, மன சஞ்சலம், சித்தப்பிரமை ஆகியன நீங்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக நிலவிவருகின்றது. மனநோயாளிகள் பலர் இங்குத் தங்கி நீராடி வழிபடுகின்றனர். வடாற்காடு மாவட்டம் திருவிரிஞ்சிபுரம் மார்க்க சகாயசுவாமி ஆலயத்தில் பெரிய சிம்மதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் பெண்கள் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி பிராகாரத்தில் உறங்குகின்றனர். அவர்கள் கனவில் அம்பிகை தோன்றி பூ, பழம், பாலாடை முதலியவற்றை அளித்தால் அவர்களுக்கு புத்திரப்பேறு விரைவில் உண்டாகும் என்று நம்புகின்றனர். கார்த்திகை மாதக் கடை ஞாயிற்றுக் கிழமையில் ஏராளமான பெண்கள் இதில் நீராடி ஆலய வளாகத்தில் தங்குகின்றனர். இது காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.

மதுராந்தகம் திருவெண்காடீசர் ஆலயத்திற்கு முன்பாக, சிறுகுட்டையாக ஒரு தீர்த்தம் உள்ளது. இதில் மூழ்கி வழிபடக் கருங்குட்டம் வெண்குட்டம் முதலான சருமநோய்கள் தீருமென்று கூறுகின்றனர்.மயிராடுதுறையில் துலாக்கட்டத்திற்கு அருகிலுள்ள ஊர் கருங்குயில் நாதன் பேட்டையாகும். இந்நாளில் காணாப்பேட்டை என அழைக்கப்படுகின்றது. இங்குள்ள சத்திபுரீசுவரர் ஆலயத்தினையொட்டி கருணா தீர்த்தம் உள்ளது. இதில் மூழ்கிவரத் தோல் நோய்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது சில ஆண்டுகளுக்கு முன்பு குட்டநோயாளி ஒருவர் தொடர்ந்து ஓராண்டு காலம் மூழ்கி அந்த நோய் நீங்கப் பெற்றார் என்று அன்பர்கள் குறித்துள்ளனர்.

திருத்தினைநகர் எனப்படும் தீர்த்தனகிரியில் சிவக்கொழுந்தீசர் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தாமரைக்குளத்தில் நீராடி வந்தால் குட்டநோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. அக்னி வழிபட்டுப் பேறுபெற்ற தலமான அன்னியூரிலுள்ள அக்னி தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டால் ரத்தக்கொதிப்பு, உஷ்ணரோகம் முதலிய நோய்கள் நீங்கும் என்று நம்புகின்றனர். தலையாலங்கானம் என்னும் வரலாற்றுப் புகழ்பெற்ற தலத்திலுள்ள தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டுவர வெண்குட்டம் தீரும் என்கின்றனர்.

திருப்பயற்றூர் எனும் தலத்திலுள்ள தீர்த்தத்தில் மூழ்கினால் கண்ணொளி கிடைக்கும் என்று நம்புகின்றனர். இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள ஓர் கல்வெட்டு கண்ணோயால் வருந்திய பஞ்சநதவாணன் என்பவன் இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் மூழ்கி அந்நோய் நீங்கப் பெற்றுக் காணிக்கையாக நிலம் அளித்துள்ளான் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது.    காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்திலுள்ள தீர்த்தம் இஷ்டசித்தி என்பதாகும். இதில் மூழ்கி இதன் கரையிலுள்ள சூரியனை வழிபட்டால் இழந்த கண்ணொளியைப் பெறலாம் என்பது நம்பிக்கையாகும். வடநாட்டு அரசன் காஞ்சியில் தங்கிப் படித்து வந்தபோது கண்களை இழந்தான். அவன் பெரியோர்களின் ஆலோசனைப் படி இஷ்டசித்தி தீர்த்தத்தில் மூழ்கிக் கச்சபேசரரையும் சூரியனையும் வழிப்பட்டு வந்ததன் பயனாக கண்ணொளியை மீண்டும் பெற்றான். இதனை நினைவூட்டும் வகையில் மயூக சதகம் நூலை பாடியுள்ளான். இதனை சூரிய சதகம் என்றும் அழைப்பர். இதுபோன்று மருத்துவகுணம் மிக்க அனேக தீர்த்தங்கள் தென்னகமெங்கும் உள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jayallithaa_mmeerrr

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

 • 27-01-2021

  27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramukudi

  குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

 • autoooo_maaa

  சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

 • vilaaaa_neeemm

  அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்