SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிழவனாய் குருவியோட்டிய குமரனே!

2019-08-20@ 10:26:42

தேவியின் பெருமைகளைக் கூறும் மற்றுமொரு திருப்புகழைப் பாடியபின் காஞ்சிபுரம் கோயிலிலிருந்து புறப்படுவோம்.

‘‘பெரிய தண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறிய வஞ்சிக்கொத் தெய்த்த நுசுப்பும்
ப்ரிதி ஒழிந்தொக்கக் கைக்கிளை துத்தங்குரலாதி
பிரிவில் கண்டிக்கப் பட்ட வுருட்டும்
கமுகமுஞ் சிற்பச் சித்ர முருக்கும்
பிரதியண்டத்தைப் பெற்றருள் சிற்றுந்தியும் நீலக்
கரிய கொண்டற் கொப்பித்த கதுப்புந்
திலகமும் செப்பொற் பட்டமு முத்தின்
கன வடங் கட்டப் பட்ட கழுத்துந் திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சை வனப்புங்
கருதுமன்பர்க்குச் சித்தியளிக்கும்
கவுரியம்பைக்குப் புத்ர எவர்க்கும் பெருமாளே’’

பொருள்: பெரிய, குளிர்ந்த, குங்குமக் குழம்பு பூசிய, ரவிக்கை அணிந்த மலையன்ன கொங்கைகள், நுட்பமான வஞ்சிக் கொடி போன்று மெலிந்த இடுப்பு. இவற்றை உடையவள்; எல்லா இசை வகைகளையும் ஒன்று போல் பாவிப்பவள்; குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும் பிரிவுகளுடைய ஏழிசையில், வரையறுக்கப்பட்ட உருட்டும், கமகமும், ஸ்வரபேதமும், சிற்ப சாஸ்திரத்தில் வர்ணிக்கப்பட்ட அழகையும் உருகச் செய்யும் சௌந்தரியமும் உடையவள்; எல்லா அண்டங்களையும் பெற்றுக் காப்பாற்றும் சிறு வயிறும், இருண்ட மேகம் போன்ற கூந்தலும் நெற்றிப் பொட்டும், பொற்சுட்டியும், சிறந்த முத்து மாலைகள் அணிந்த கழுத்தும், தெய்வீகக் கிருபையும், தூய பசுமையான அழகும் கொண்டு விளங்குபவள் ; தனது திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்களுக்கு முத்திப் பேறு தருகின்ற பார்வதியின் குமரனே! ’’ என்று அன்னையையும் அவள் மைந்தனையும் போற்றிய வண்ணம் காமாட்சி தேவியின் கோயிலை நீங்கி வெளியே வருகிறோம்.

அம்மையையும், அப்பனையும் வணங்கி சுப்பனை வணங்காமல் இருக்க முடியுமா? காஞ்சிப்பதியில் அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் தலம் குமரக்கோட்டம். சோமாஸ் கந்த வடிவில் சிவனாரது இடப்புறம் உமையும், இருவருக்கும் நடுவே பாலமுருகனும் அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறோம். காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமக்கோட்டம் எனும் காமாட்சி அன்னையின் ஆலயத்திற்கும் நடுவே குமரக்கோட்டம் எனும் முருகப்பெருமானின் ஆலயம் அமைந்திருப்பது நமக்கு சோமாஸ்கந்த வடிவத்தை நினைவுபடுத்துகிறது; இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய அமைப்பாகும். பிரம்மன் பிரணவத்தின் பொருளைச் சரியாகக் கூறாததால் அவரைக் குட்டிச் சிறையிலிட்டான் முருகன். அருணகிரியார் இந்நிகழ்ச்சியைப் பின்வருமாறு பாடுகிறார்.

‘‘நாலு முகனாதியரி ஓம்என அதாரமுரை
யாத பிரம்மாவை விழமோதி பொருளோதுகென
நாலு சிரமோடு சிகை தூளிபட தாளமிடும் இளையோனே.’’

(நான்கு முகங்களைக் கொண்டவனும் ‘ஆதி அரி ஓம்’ என்பதற்கு ஆதாரமான பொருளைச் சொல்லத் தெரியாதவனும் ஆகிய பிரம்மாவை விழும்படித் தாக்கி ‘சரியான பொருளைச் சொல்லுக’ என்று அவனது நான்கு தலைகளும், குடுமிகளும் சிதறுண்டு அலையத் தாளமிடுவது போலக் குட்டின இளைஞனே!’’)சிவபெருமானின் ஆணைப்படி நந்தி வந்து பிரம்மனை விடுவிக்கும்படிக் கேட்டுக்கொண்டபோது முருகன் மிகுந்த கோபமுற்றான். நந்தி இதைக்கூறக்கேட்ட சிவபெருமான் பிரம்மனைச் சிறையிலிட்ட குற்றத்திற்காகவும், தந்தையின் பேச்சை மதிக்காததற்கும் பிராயச்சித்தமாக முருகனைப் பூமியிற்சென்று தம்மைப் பூஜிக்கும்படி பணித்தார்.

அதன்படி, முருகப்பெருமான் ‘தேவசேனாபதீஸ்வரர்’ என்ற பெயரால் லிங்கம் அமைத்து வழிபட்டார்; அவ்விடமே இன்று குமரக்கோட்டம் என அழைக்கப்படுகிறது. (விமானத்தில் சுதைச் சிற்பமாக இவ்வரலாறு குறிக்கப்பட்டுள்ளது) இடையில் மான் தோலும், தர்ப்பைக் கயிறும், கரங்களில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் ஏந்தி இன்றளவும் முருகப்பெருமான் இங்கு காட்சி அளிக்கிறான். தேவசேனாபதீசர் சந்நதி முருகப்பெருமான் சந்நதிக்கு நேரே அமைந்துள்ளதைக் காணலாம். இதை,

‘‘புள்ளிமான், தோல் உடுக்கை, முஞ்சி நாண் அரைப்பொலிய அக்கமாலை
தெள்ளுநீர்க் கண்டிகையும் சுரத்தொளிரத் திருக்குமர கோட்டம் என்னும்
உள்ளியோர் பிறப்பறுக்கும் ஆச்சிரமத்தினிதிருந்தான்.’’

- என்று காஞ்சி புராண ஆசிரியர் மாதவ சிவஞான முனிவர் கூறுகிறார். ஆனால், பிரம்மனைச் சிறையிலிட்டுப் படைப்புத் தொழிலை மேற்கொண்ட பிரம்ம சாஸ்தாவாக முருகன் இங்கு விளங்குகிறான் என்கிறார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

‘‘......குமர கோட்டத்துச் செவ்வேள்
கண்டிகை வடமும் தூநீர்க் கரகமும் கரத்திலேந்திப்
பண்டையில் அயனை மாற்றிப் படைத்தருள் வேடம் தாங்கி .......’’

- என்று பாடியுள்ளார். காஞ்சி புராணம் எழுதிய மற்றொருவரான கச்சியப்ப சிவாச்சாரியாரும் இதே கருத்தைத் தெரிவிக்கிறார்.

‘‘ஒரு கரந்தனில் கண்டிகை வடம்பிடித்து ஒரு தன்
கரதலந்தனில் கண்டிகை தரித்து இருகரங்கள்
வரதமோடு அபயந்தரப் பரம்பொருள் மகன் ஓர்
திருமுகம் கொடு சதுர்முகன்போல் விதி செய்தான்.’’

காஞ்சிபுரத்தில் உள்ள மேற்கு ராஜ வீதியில் சாலை ஓரம் அமைந்துள்ளது குமரக்கோட்டம் திருக்கோயில்.  ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே வரும்போது பாம்பன் சுவாமிகள் இத்தலத்திற்கு வந்த விவரம் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டு விளங்குவதைக் காண்கிறோம். காஞ்சிபுரக் கோயில்களைத் தரிசித்துவிட்டு வந்து கொண்டிருந்த சுவாமியை, ஒரு சிறுவன் வழி மறித்து, ‘குமரகோட்டத்தைத் தரிசித்து விட்டீர்களா?’ என்று அவரிடம் கேட்டான். ‘அத்திருக்கோயில் இங்குள்ளதை யாரும் என்னிடம் கூறவில்லையே’ என்று சுவாமிகள் கூறியபோது சிறுவன் அவர் கையைப்பிடித்து வந்து, கீரைப்பாத்திகளுக்கிடையே இருந்த முருகன் சந்நதியைக் காட்டி மறைந்துவிட்டானாம். தரிசனம் முடிந்து சென்னை ரயிலைத் தவற விட்டிருப்போம் என்ற எண்ணத்துடன் சுவாமிகள் ஓடி வந்தபோது, வழக்கத்திற்கு மாறாக அன்றைய தினம் ரயில் தாமதமாக வந்து சேர்ந்திருந்தது! தனது ‘குமாரசுவாமியம்’ எனும் நூலில் இந்நிகழ்ச்சியை சுவாமிகள் பாடியுள்ளார்.

சுமார் 1000 ஆண்டுகள் புராதனமான இக்கோயிலுள் நுழைந்ததும் நேரே கந்தபுராண அரங்கேற்ற மண்டபம் தெரிகிறது. குமரகோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தமது நூலான கந்தபுராணத்தை இவ்விடத்தில்தான் அரங்கேற்றினார் என்பர். கந்தபுராணப் பகுதியைத் தினம் தினம் அர்த்தஜாமம் ஆனபிறகு முருகன் திருவடிக் கீழ் வைக்க, மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். ‘திகட சக்கர’ எனும் சொற்களின் இலக்கண விதியை இறைவனே வந்து சபையினருக்கு உணர்த்தி அருளினான்.

பலிபீடம், கொடிமரம், மயில் மண்டபம் இவை தரிசித்து, கொடிமரத்தைச் சுற்றி வருகிறோம். இடப்புறம் பாம்பன் சுவாமிகளும், முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். பெரிய உருவம் கொண்ட வரசித்தி விநாயகர் வலப்புறம் வீற்றிருப்பதைக் காண்கிறோம். மண்டபத் தூணிலுள்ள ஆஞ்சநேயரை வணங்குகிறோம். வெளிப்பிராகாரத்தில் கிழக்கு பக்க கோபுரத்தினை ஒட்டி திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலின் வாயில் கதவுகளைக் கடந்து உள்ளே சென்றால் இடப்புறம் சந்தான கணபதியைத்் தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். ஒரு ஓரத்தில், சில படிகள் ஏறி கையில் தண்டாயுதத்துடன் நிற்கும் முருகனைத் தரிசிக்கிறோம். இச்சந்நதியின் இருபுறமும் விநாயகரும், மீனின் மீது அமர்்ந்து ஜடா முடியுடன் காட்சி தரும் மச்சமுனியும் இருப்பதைக் காணலாம்.

அடுத்ததாக ஆறுமுகப் பெருமானின் சந்நதி முன்வருகிறோம். மயிலின் மீது அமர்ந்திருக்கும் இவரது இருபுறமும் ‘வள்ளியும், தெய்வயானையும்’ நின்று கொண்டிருக்கின்றனர். யாகசாலை, வயிரவர் சந்நதி, பள்ளியறை இவை கடந்து தாயார் சமேத உருகுமுள்ளப் பெருமாள் சந்நதியைக் காண்கிறோம். சிறையிலிடப்பட்ட பிரம்மனின் நிலையைக் கண்டு உள்ளம் உருகி அவரை விடுவிக்கும்படி ஈசனிடத்தில் இறைஞ்சியதால், இவர் ‘உருகும் உள்ளப் பெருமாள்’ எனப்பாடுகிறார். சோமாஸ்கந்தரையும் நவவீரர்களையும் பஞ்ச லோகத்திருமேனி வணங்கி முத்துக்குமாரசுவாமி சந்நதிக்கு வருகிறோம். மற்ற பல ஆலயங்களைப் போலவே இங்கும் முருகன் சந்நதிக்கருகில் கஜவல்லித் தாயார் சந்நதி உள்ளன.

கருவறைக்குப் பின்னால் இரு ேகாடியிலும் வள்ளி தெய்வயானையின் தனிச்சந்நதிகள் அமைந்துள்ளன. இடையில் வரிசையாக தட்சிணாமூர்த்தி, திருமால், நவகிரஹங்கள், நாகலிங்கப் பிரதிஷ்டைகள் காணலாம். தெய்வயானை சந்நதிக்கு அருகில் அருணகிரி நாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியர் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. ஒரு பீடத்தில் வஜ்ராயுதம் மட்டும் உள்ளது. வள்ளி தெய்வயானையுடன் முருகன் கல்யாண சுந்தராகக் காட்சி அளிக்கிறார். இவர்கள் திருமுடிமேல் நாகர்கள் உள்ளனர். பல உற்சவ மூர்த்திகளின் சிலைகள் உள்ளன.

நீண்ட சதுர மேடையின் ஒருபுறம் மூலவர் தரிசனம் தருகிறார். அவரது அழகைப் பார்த்து மயங்கித் திருப்புகழைப் பாடுகிறோம்.

‘‘அறிவிலாப் பித்தர், உன்றன் அடிதொழக் கெட்ட வஞ்சர்,
அசடர் பேய்க் கத்தர், நன்றி அறியாத
அவலர் மேற் சொற்கள் கொண்டு கவிகளாகக்கிப் புகழ்ந்து
அவரை வாழ்த்தித் திரிந்து பொருள் தேடிச்
சிறிது கூட்டிக் கொணர்ந்து தெருவுலாத்தித்திரிந்து
தெரிவைமார்க்குச் சொரிந்து அவமேயான்
திரியுமார்க்கத்து நிந்தையதனை மாற்றி பரிந்து
தெளிய மோக்ஷத்தை என்று அருள்வாயே.’’

- என்பது பாடலின் முற்பகுதி.

பொருள்: மெய்யறிவிலாத பித்தர்கள், உன் திருவடிகளைப் பணியாத நன்றி மறந்த வஞ்சகர்கள், முட்டாள்கள், பேய்போல திரிபவர்கள், செய்நன்றி மக்கள் மேல் புகழ்ச்சிச் சொற்கள் மிக்க கவிதைகள் புனைந்து பாடி, இவர்களை வாழ்த்துவதிலேயே பொழுதைப் போக்கி, பணம் சம்பாதித்து, சம்பாதித்த பொருளை விலை மாதர்கள் வாழும் வீதிகளில் திரிந்து அவர்களுக்குக் கொட்டிக் கொடுத்து பயனற்ற வாழ்க்கை நடத்துகிறேன். இத்தகைய நடத்தையால் எனக்குக் கிட்டும் வசைச்சொற்களை ஒழித்தருளி, என்மீது அன்பு கூர்ந்து முக்தி நிலையை என்று அருள்வாயோ முருகா!

பாடலின் அடுத்த பகுதியில்

‘‘இறைவர் மாற்றற்ற செம்பொன் வடிவம் வேற்றுப் பிரிந்து
இடபமேற் கச்சி வந்த உமையாள் தன்
இருளை நீக்கத் தவஞ் செய்தருள நோக்கிக் குழைந்த
இறைவர் கேட்கத் தகுஞ் சொல் உடையோனே
குறவர் கூட்டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட்டித் திரிந்த தவமானைக்
குணமாதாக்கிச் சிறந்த வடிவு காட்டிப் புணர்ந்த
குமரகோட்டத் தமர்ந்த பெருமாளே.’’

- என்று முருகனைப் போற்றுகிறார். அம்பிகை கம்பையாற்றங்கரையில் தவம் செய்த குறிப்பும் உள்ளது.

பொருள்: பரமேஸ்வரரின் கலப்பற்ற தூய பொன் உருவத்திலிருந்து (இடப்பக்கத்திலிருந்து) பிரிந்து, தனி உருவம் எடுத்து ரிஷப வாகனத்தில் ஏறி காஞ்சிப்பதிக்குத் தவம் புரிய வந்தாள் பார்வதி அன்னை; தன்னுடைய அஞ்ஞான இருள் நீங்கவும், விளையாட்டாகப் பெருமானின் கண்களைப் பொத்தி அதனால் பிரபஞ்சத்தில் இருள் படர்ந்ததற்குப் பரிகாரமாயும் அன்னை கடும் தவம் செய்தபோது, அதற்கு இரங்கி, மனமும் மேனியும் குழையும்படி வந்த இறைவர் கேட்டு மகிழும்படிப் பிரணவத்தை உபதேசித்தவனே!

வள்ளிமலையில் வாழ்ந்த குறவர் கூட்டத்தினுள் கிழ வேடத்துடன் புகுந்து, புறத்தில் புனத்தில் தினைப்பயிரைத் தின்ன வரும் பட்சிகளை ஓட்டியும், அகத்தில் பக்திப் பயிரை அழிக்க வரும் காம, குரோதம் போன்ற எதிரிகளைத் துரத்தி விட்டும் தவ வாழ்க்கை மேற்கொண்டமான் போன்ற வள்ளியை, பற்றுக்களனைத்தையும் விடும்படிச் செய்து தனது அருள் வடிவத்தைக்காட்டி அவளைத் தன்னுடன் சேர்த்துக்கொண்ட குமரக்கோட்டத்து கந்தப் பெருமாளே! மேடைப் பகுதியில் விளங்கும் தேவசேனாபதீஸ்வரரின் தனிச்சந்நதியின் முன் நின்று வணங்கி கீழே இறங்கி வருகிறோம். இச்சந்நதியின் சுற்றுச்சுவரிலுள்ள விநாயகருக்குத்தான் முலவர் அபிஷேகத்திற்குப் பின் படைக்கப்படும் நைவேத்யங்கள் முதலில் நிவேதிக்கப்படுகின்றன. இங்கு மற்றுமொரு திருப்புகழ் நினைவுக்கு வருகிறது. (மூத்தவருக்குப் பிடித்த பல பொருட்களின் பட்டியலை இப்பாடலில் அளித்துள்ளார்)

‘‘கனபெருந் தொப்பைக் கெட்பொரி அப்பம்
கனி கிழங்கிக்குச் சர்க்கரை முக்கண்
கடலை கண்டப்பிப் பிட்டொடு மொக்கும் திருவாயன்
கவள துங்கக் கைக் கற்பக முக்கண்
திகழுநங் கொற்றத்து ஒற்றை மருப்பன்,
கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் றனையீனும்
பனவி யொன் றெட்டுச் சக்ரதலப் பெண்
கவுரி செம்பொற் பட்டுத்தரியப் பெண்
பழைய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் பணிவாரை
பவதரங்கத்தைத் தப்ப நிறுத்தும்
பவதி, கம்பர்க்குப் புக்கவள் பக்கம்
பயில் வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே.’’

பொருள்: கனத்த பெரிய தொந்திக்குள் எள், பொரி, அப்பம், பழ வகைகள், கிழங்கு வகைகள், கரும்பு, நாட்டுச் சர்க்கரை, தேங்காய், கடலை முதலியவற்றோடு பிட்டையும் வாரி வாரி உண்ணும் திருவாயை உடையவன், உணவைக் கவளம் கவளமாக உண்ணும் தூய தும்பிக்கையைக் கொண்டவன், கற்பக விருட்சம் போன்றவன், மூன்று கண்கள் கொண்டவன், நமது வழிபடு தெய்வமான ஒற்றைத் தந்தத்தவன், அழகிய பிரகாசம் பொருந்திய புள்ளிகளை உடைய மலை போன்றவனைப் பெற்ற பார்வதி, நவ ஆவரண பீடத்துப் பெண், சிவந்த அழகிய பட்டாடையை உத்தரியமாக அணிந்தவள், புவனத்தை ஈன்ற புராதனி, தன்னை வணங்குபவரை பிறவிக்கடலினின்றும் நீக்கி வைப்பவள், ஏகாம்பரேசுவரரின் இல்லக்கிழத்தி ஆகிய காமாட்சி தேவியின் அருகிலிருக்கும் வரத்தைப் பெற்றுக் காஞ்சிப் பதியில் விளங்கும் பெருமாளே!

‘‘ ‘கம்பர்க்குப் புக்கவள் பக்கம் நிற்கும் பெருமாள்’ என்றதனால் காமாட்சி கோயிலின் பக்கத்திலுள்ள குமரக்கோட்டத்து முருகவேளுக்குரிய திருப்புகழ் பாடல் இது’’ என்கிறார் டாக்டர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளையவர்கள்.

-(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்