SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலைபேசியால் தொலைகிறதா நற்பண்புகள்

2019-08-19@ 16:35:53

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது : 29

சமீபத்தில் வெளியூருக்கு சென்றிருந்த போது காலை நேர நடை பழக்கத்தை மேற்கொண்டிருந்தேன். நான் தங்கியிருந்த விடுதி  அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளியின் பரந்துவிரிந்த மைதானம் அது. காலை 7 மணி இருக்கும்.  நடைப்பழக்கத்தின்  நிறைவு நேரம். சுற்றுகளை நிறைவு செய்துகொண்டு சற்றே மெதுவாக வந்து கொண்டிருந்தேன். அந்த பள்ளியில் மாணவர்கள் சிலர் நாட்டு நலப்பணித்திட்ட உறுப்பினர்கள் போலும். அதற்குரிய சீருடையில் அமர்ந்திருந்தனர். நான் கடந்து செல்லும் போது ஒரு மாணவன் சொல்லிக்கொண்டு இருந்தான் “நான் மூன்றுபேரை கொன்னுட்டு நான்காவது ஆளுக்கு குறி வச்சேன்”. ஒரு விநாடி எனக்கு தூக்கி வாரி போட்டது. பின்னர் தான் செல்போனில் விளையாடும் ஏதோ ஒரு விளையாட்டு பற்றி அந்த பையன் சொல்கிறான் என்பது புரிந்தது.

திரைப்படங்களில் ஒரு பாத்திரத்தை காட்டும்போது காட்சியை கொஞ்சம் உறையவைத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் பத்து வருடங்களுக்கு முன்னால் என்றெல்லாம் பெரிய எழுத்து ஸ்லைட்  போட்டுவிட்டு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை காட்டுவார்கள்’அதுபோல பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இந்தச் சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவன் கைகளில் பெற்றோர்கள் செல்போனில் தந்து அழகு பார்த்திருப்பார்கள். வளர வளர அவன் அழும் போதெல்லாம் அவன் கவனத்தை திசை திருப்ப அவனிடம் செல்போனை கொடுத்து விட்டு அவர்கள் தொலைக்காட்சியிலோ அல்லது திரைப்படத்திலோ ஆழ்ந்து இருப்பார்கள்.

“என் குழந்தைக்கு செல்போன் எல்லாம் அத்துப்படி’’ என்று பெருமை பேசிய காலம். அந்த  ஒன்றுதான் அவன் அறிவாளி என்பதற்கு ஆகச்சிறந்த அடையாளம் என்று நம்பியிருந்த காலம். வருடங்கள் செல்லச் செல்ல பையனுக்கு படிப்பில் கவனம் குறையும் போதும் பெற்றோருடன் பேசுவது குறையும் போதும் மெல்ல மெல்ல படர்ந்த கலவரம் அன்னையும் தந்தையும் அன்றாடம் பேசி கவலைப்படுகிற விஷயமாக மாறிப் போயிருக்கும்.
செல்போனில் தான் விளையாடிய விளையாட்டு பற்றி  பையன் நண்பர்களிடம் பெருமையாகப் பேசப் பேச அதுவே பெற்றோர்கள்  வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாக மாறிக் கொண்டிருக்கும்.

பெரும்பாலான வீடுகளில் இந்த நிலை ஏற்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். பொறுப்புமிக்க கல்வி நிலையங்களும் சமூக அமைப்புகளும் குழந்தைகளை இதுபோன்ற மெய்நிகர் உலக பாதிப்பிலிருந்து மீட்பதற்கு பயிற்சி வகுப்புகளையும் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். இணைய போதையிலிருந்து மீள்வது பெரியவர்களுக்கே சிரமமாக இருக்கிற போது குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தி விட்டு பாதியில் நிறுத்தப் பார்த்தால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்றுதான்.

பிஞ்சு வயதிலேயே குழந்தைகளை ஆக்கபூர்வமான பொழுதுபோக்கு நோக்கி ஆற்றுப்படுத்தினால் அந்த ஆர்வம் ஆற்றலாக மாறி அந்த குழந்தைகளை முழுவதும் மேம்பட்ட ஒரு வாழ்க்கை முறைக்கு தானாகவே கொண்டு செலுத்திவிடும். குழந்தைகள் நன்கு வளர்வதற்கு எந்தவிதமான சூழலை வழங்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இல்லை. இரண்டு மூன்று வயது  இருக்கும் போது குழந்தை சும்மா இருந்தால் போதும் என்று கைகளில் செல்போனை கொடுத்தவர்கள் அந்த குழந்தை வளர்ந்து வேலைக்கு போன பிறகும் கூட அதன் கைகளில் இருந்து செல்போனை வாங்கவே முடிவதில்லை.

கோடைவிடுமுறையில் பகல் வேளைகளில் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து குழந்தைகள் விளையாடும் ஆக்கபூர்வமான விளையாட்டுகள் முன்பெல்லாம் இருந்தன. நமக்கு முந்தைய தலைமுறைகள் விளையாடிய பல்லாங்குழி, பரமபதம் ஆகியவை தெரியாவிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் நம் தலைமுறையில் நாம் விளையாடிய சதுரங்கம், கேரம் போர்டு போன்றவற்றைக் கூட இன்று காண முடிவதில்லை. தகவல் தொடர்புக்காக உருவான ஒரு கருவியை கைகளில் கொடுத்து யாருடனும் தொடர்பிலேயே இல்லாத ஒரு தலைமுறை உருவாக்கி விட்டோம். “வித்திலே தவறு உண்டானால்விளைபொருள் தவறாகாதோ ’’ என்றார் கவியரசு கண்ணதாசன்.

கூர்மையாக சிந்திக்கவும் புதிது புதிதாய் கண்டறியவும் கண்டுபிடிக்கவும் மூளையைத் தூண்டும் விதமாக நம் கலைகளும் விளையாட்டுகளும் உருவாக்கப்பட்டன. அவை குழந்தைகளுக்கு இல்லங்கள் தோறும் சொல்லித் தரப்பட்டால் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான ஒரு சமூகம் உருவாகும்.
இந்த ரகசியத்தைத்தான் “வீடு தோறும் கலையின் விளக்கம்”என்ற வரியின் மூலம் மகாகவி பாரதியார் நமக்கு உணர்த்துகிறார். எல்லா குழந்தைகளுக்கும் ஏதேனும் ஒரு கலையிலோ அல்லது விளையாட்டிலோ மிக நிச்சயமாய் ஆற்றல் இருக்கும். அரும்பும் பருவத்தில் அதனை அடையாளம் காண்கிற போது அதுவே அந்த குழந்தையின் வாழ்வில் மிகப்பெரிய பலமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

ஒரு பெண் குழந்தைக்கு பாட்டு பாடுவதில் மிகவும் ஆர்வம். ஆனால் பள்ளிப்படிப்பில் கணக்கு சுத்தமாக வராது. கணக்கு ஆசிரியையோ மிகவும் கண்டிப்பானவர். நரம்பு வலிக்க கிள்ளுவார். பிரம்பை எடுத்துப் பின்னுவார். வலி தாங்காமல் அந்தச் சிறுமி அழுவதைப் பார்த்து அவருடைய தாயார் கவலைப்பட்டார். அழுது அழுது குரல் கம்மி விட்டால் தன் குழந்தையால் பாட முடியாதே என்னும் பதைப்பு ஏற்பட்டது. எனவே குழந்தையின் பள்ளிப்படிப்பை வேறுவழியின்றி நிறுத்தினார். குழந்தையை இசைத்துறையில்  ஈடுபடுத்தினார். அப்படி உருவானவர் தான் பாரத ரத்னா
எம்எஸ் சுப்புலட்சுமி அவர்கள்.

இது ஒரு உதாரணம் தான். வெவ்வேறு துறைகளில் சாதனையாளர்களாக மலர்ந்தவர்கள் அனைவருமே குழந்தைப் பருவத்திலேயே ஆக்கபூர்வமான ஒரு பொழுதுபோக்கை தேடிக்கொண்டு அதை ஆர்வமுடன் பயின்று ஆற்றலை வளர்த்து அதன் மூலம் சாதித்தவர்கள்தான். பொழுதுபோக்கு என்பது அடம் பிடிக்கும் குழந்தைகள் கவனத்தை திசைதிருப்புவதற்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் திசையையே தீர்மானிப்பதற்காக. இதை நம் இல்லங்களிலும் சாத்தியமாக்க வேண்டும் என்றால் முதலில் குழந்தைகளும் இருக்கும் திறமை என்ன? என்பதைக் கண்டறிய வேண்டும். ஓவியம் வரையும் திறமை. நாட்டியம் ஆடும் திறமை. பாட்டுப் பாடும் திறமை. கவிதை எழுதும் திறமை. என எவ்வளவு இருக்கலாம். இவற்றை ஆங்கிலத்தில் talent என்று
சொல்வார்கள்.

உதாரணமாக ஒரு குழந்தைக்கு ஒரு பாடலைக் கேட்டால் அதை அப்படியே பாடும் திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தைக்கு ஒரு நல்ல பாட்டு வாத்தியாரை வைத்து முறையாக பாடக் கற்றுக் கொடுக்க வேண்டும். கூடவே ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைக்கவும் கற்றுத்தர வேண்டும். இப்போது திறமை ஆற்றலாக மாறுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் Skill என்று பெயர். உரிய இடங்களில் உரிய நேரத்தில் அந்த ஆற்றல் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் வந்தால் அந்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது சமூகத்தின் பார்வை, பாராட்டு சன்மானம் புகழ் எல்லாமே தாமாக வந்தடையும்.

தனக்குப் பிடித்த ஒன்றை செய்வதற்கு வாய்ப்பில்லாத குழந்தைதான் தன்னை பிடித்துக் கொள்கிற பழக்கங்களையெல்லாம் பழகிக் கொள்கிறது. கலைகளிலும் விளையாட்டுகளிலும் தற்காப்புக் கலைகளிலும் ஆர்வத்துடன் அந்தக் குழந்தை ஈடுபடத் தொடங்கினால் அந்தக் கலைகளே அவற்றின் நியமங்களின் படி குழந்தைகளிடம் ஒழுக்கத்தைக் கொண்டு வந்து சேர்க்கிறது.ஆயிரம் போதனைகள் சொல்லியும் குழந்தைகள் அறிந்து கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாத நல்லொழுக்கமும் நற்பண்பும் கலைகளின் வழியே குழந்தைகளை வந்தடைகின்றன.

கோவையில் ஒரு முறை புகழ் பெற்ற நடன கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் ஆகியோர் ஒரு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்தனர். அவர்கள் வருகைக்கு முன்னால் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நடனம் முடிந்து மேடை ஓரமாக நின்றிருந்த அந்த குழந்தைகள் அவர்களை நமஸ்கரித்து ஆசி பெற்றனர். அந்த வயது குழந்தைகள் வீட்டுக்கு யாராவது வந்தால் வணக்கம் சொல்ல கூட சங்கோஜப் படுவதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு பிடித்த ஒரு கலையில் ஈடுபடுத்தும் போது இதுபோன்ற நற்பண்புகளும் நல்லொழுக்கங்களும் தாமாக வருகின்றன. ஆச்சாரம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று  பொருள். கலை உள்ளுக்குள்ளேயே ஒழுக்கம் இருப்பதனால் அதற்குப் பெயர் கலாச்சாரம். கலைகளே வாழ்வின் சாரம்.

(தொடரும்)
-மரபின் மைந்தன் முத்தையா


ஆண்டாள் வழிபட்ட கிருஷ்ணன்

மதனகோபாலசுவாமி எனும் பெயருடன் பாமா, ருக்மிணியுடன், மதுரையில் கண்ணன் அருள்பாலிக்கிறான். ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன் பெரியாழ்வாருடன் வந்து இந்த மதனகோபாலரை தரிசனம் செய்து விட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்