SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிர்ஷ்டம் தருவாள் அஷ்டலட்சுமி

2019-08-06@ 15:21:27

பெசன்ட்நகர், சென்னை

திருமாலோடு மகாலட்சுமியும், அஷ்டலட்சுமிகளும் சேர்ந்து வங்கக்கடல் ஓரத்தில் கோயில் கொண்டருளும் தலம் இது. இக்கோயில் அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சந்நதிகளுடன் திகழ்கிறது. மேரு அமைப்புடன், படியேறி இறங்கி சந்நதிகளை அடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை ஓம் வடிவத்தில் இருப்பது அற்புதம். இத்தலம் ஓங்காரத்தலம் என்றும் போற்றப்படுகிறது. கடலே கோயிலின் தீர்த்தமாக விளங்கும் வெகு சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கே வங்கக்கடல், சமுத்ரபுஷ்கரணி எனும் பெயரில் தீர்த்தமாக அமைந்திருக்கிறது.

தல விருட்சம் வில்வமரம். வில்வ தளத்தில் மகாலட்சுமி வசிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. குபேரனின் உப வடிவங்களான சங்கநிதி, பதுமநிதி போன்றவர்கள் இங்கே உண்டியல் உருவில் சந்நதி கொண்டுள்ளனர். தங்கள் சங்கடங்கள் நீங்க சங்கநிதியிலும், நலன்கள் பெருக பதுமநிதியிலும் காணிக்கை செலுத்துவது பக்தர்கள் வழக்கம். காஞ்சி முனிவரின் எண்ணத்தில், முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் ஊக்கத்தில், பக்தர்கள் உதவியால் எழுப்பப்பட்ட ஆலயம் இது. அஹோபிலமடம் 44வது பட்டம் வேதாந்த தேசிக யதீந்த்ர மகாதேசிக சுவாமிகளால் மூர்த்தங்கள் நிறுவப்பட்டன.

மூலவராக மகாலட்சுமியும், திருமாலும் அருள, உற்சவராக ஸ்ரீனிவாசன் இருக்கிறார். மகாலட்சுமியும், திருமாலும் திருமணக்கோலத்தில் அருள்வதால் மகாலட்சுமிக்கு எப்போதுமே ஒன்பதுகஜம் புடவையும், திருமாலுக்கு 10 முழ வேஷ்டியும் மட்டுமே சாத்தப்படுகின்றன. இந்த மூல சந்நதியில் அபிஷேக காலங்கள், பூஜா காலங்களில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது. மற்ற எல்லா நேரங்களிலும் தைரியலட்சுமிக்கே அர்ச்சனை. திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள லட்சுமிநாராயணருக்கு திருக்கல்யாண உற்சவம் செய்து வைத்து திருமண வரம் பெறுகின்றனர்.

உடல் நலம் வேண்டுவோர் ஆதிலட்சுமியையும், வேளாண் தொழில் புரிவோர் தான்யலட்சுமியையும், மனவலிமை இல்லாதோர் தைரியலட்சுமியையும், மழலை வரம் வேண்டுவோர் சந்தான லட்சுமியையும், தொழில் வெற்றி கிடைக்க விஜயலட்சுமியையும், கல்வி கேள்விகளில் சிறக்க வித்யாலட்சுமியையும், செல்வவளம் பெருக கஜலட்சுமியையும், ஏழ்மை விலக தனலட்சுமியையும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தல தசாவதார சந்நதியை வழிபட நவகிரக தோஷங்கள் நீங்கும். 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார விருட்சங்கள் இந்தக் கோயிலில் பராமரிக்கப்பட்டு வருகிறது. குருவாயூரப்பன் சந்நதியில் அன்னப்பிராசனம் எனும் குழந்தைகளுக்கு முதன்முதலில் அன்னம் ஊட்டும் நிகழ்வு விசேஷமாக நடக்கிறது.

நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான், மகாலட்சுமியின் சந்நதிக்கு வடமேற்கு மூலையில் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். வரலட்சுமி விரதம் அன்றோ அல்லது மறுநாளோ இங்குள்ள ஒவ்வொரு லட்சுமி சந்நதியிலும் இரு மஞ்சள்களைக் கொடுத்து ஒன்றை திரும்ப பிரசாதமாகப் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள். அதன்மூலம் திருமகள் அருள் கிட்டுவதாக நம்பிக்கை. கார்த்திகை மாத பஞ்சமியை ஸ்ரீபஞ்சமி என அழைத்து அன்று எட்டு லட்சுமிகளுக்கும் பால் நிவேதனம் செய்வது வழக்கம். தீபாவளி அன்று பக்தர்களுக்கு அஷ்டலட்சுமிகளின் அருளோடு லட்டும் பிரசாதமாக இத்தலத்தில் கிடைக்கிறது. சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2020

    26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-09-2020

    25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்