SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறைவில்லா செல்வம் அருளும் கோல்ஹாபூர் மகாலாட்சுமி

2019-08-06@ 15:20:52

மும்பை

மராட்டிய மாநிலத்திற்கு செல்வ வளத்தை தரும் மகாலட்சுமி கோல்ஹாபூரில் எழுந்தருளியுள்ளாள். இத்தலம் ‘‘தட்சிண காசி’’ என்றும் அழைக்கப்படும் பெருமைக்குரியது. இந்தியாவின் எப்பகுதியிலிருந்தும் எளிதில் கொல்ஹாபூரை அடையலாம். மும்பையிலிருந்து மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்’ இத்தலத்திற்கு செல்கிறது. கோயிலுக்கு அருகில் பஞ்ச கங்கா நதி ஓடுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மகாலட்சுமி, சௌந்தர்ய ரூபவதி. துர்கா லட்சுமி ஐக்ய ரூபத்தை எடுத்துக் காட்டுவதைப் போல் அமைக்கப்பட்டுள்ள தேவியின் கிரீடத்தில் நாகம் படமெடுத்தாடுகிறது. அன்னையின் பாதத்தில் சிம்மத்தின் ரூபமும், தாமரையின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமில்லாமல் ஸ்ரீ மகாலட்சுமி விஷ்ணு விஸ்வரூபமாக இருப்பதாகவே பக்தர்கள் நம்புகிறார்கள். ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி ஸ்ரீ மகா விஷ்ணுவின் அம்சமே ஆனதால், இங்குள்ள துர்கா லட்சுமி, மகாவிஷ்ணுவாக போற்றப்படுவதில் வியப்பில்லை. கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கு சக்தியை கொடுப்பதற்காக அதன் பீடங்களில் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை இடுவார்கள். ஆனால் கோல்ஹாபூர் மகாலட்சுமி சிலையிலேயே நவரத்தினங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. புராண வரலாறு. முன்பொரு சமயம் சிவனுக்கும் சக்திக்கும் ஒரு சர்ச்சை ஏற்பட்டதாம். சிவபெருமை சேர்க்கும் வாரணாசி க்ஷேத்ரம் பெரியதா அல்லது சக்தியின் க்ஷேத்ரம் பெரியதா என்பதே அது.

இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் ஒரு தராசில் இரண்டையும் வைக்க, தேவியின் பக்கமே தராசின் தட்டு தாழ்ந்திருந்ததாம். இரண்டு தலங்களும் சிறந்ததே ஆயினும் தேவியின் திருத்தலம் ஒரு மணி அளவு அதிக பெருமை உடையதென்று மகாவிஷ்ணு தீர்ப்பளித்தாராம். சிவனுக்கும் சக்தியைக் கொடுப்பவளல்லவா அந்த பராசக்தி! ஆதலால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பாவங்களை போக்கிட காசிக்கு செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆனால், பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு மட்டுமின்றி, கேட்ட வரங்களை அள்ளிக் கொடுத்து அருள்வது கோலாப்பூர் மகாலட்சுமி அன்னையின் சிறப்பம்சம். காசியை விட ஒரு அரிசி எடை மிகுந்த புண்ணியம் பெற்றது இந்த தலம்.

இத்தளம் கரவீரபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையும் ‘கரவீரவாஸினி’ என்றே போற்றப்படுகிறாள். ஆதியில் பிரம்ம தேவர், கயா, லவணன், கோலன் என்ற மூன்று மானஸ புத்திரர்களைப் படைத்ததாகவும் இதில் லவணாசுரன் மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்டதாகவும் கோலன், இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து பின் தன் மூத்த மகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கானகம் ஏகியதாகவும், கூறப்படுகிறது. மூத்தமகன் கரவீரன் கொடுங்கோலனாக இருந்ததால், மும்மூர்த்திகளும் அவனுடன் போரிட்டு அவன் உடலை சுக்கு நூறாக சிதைத்தனர். அவன் உறுப்புகள் விழுந்த இடங்கள் தீர்த்தங்களாக உருப்பெற்றன. அவன் நினைவாக இந்த க்ஷேத்ரமும் கரவீரபுரம் என்று அழைக்கப்படுகிறது.

வனம் சென்ற கோலன், கரவீரனின் முடிவைக் கேள்வியுற்று, தேவர்களை எதிர்க்கத் துணிந்தான். ஸ்ரீ மகாலட்சுமியின் துணையாலேயே, மும்மூர்த்திகளும் வெற்றி பெற்றதை அறிந்தான். மகாலட்சுமியைக் குறித்து தவமியற்றி, அன்னை காட்சி தந்த போது நூறு வருடங்களுக்கு, லட்சுமி இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டுமென்று வரம் கேட்டான். வரத்தை தந்து விட்டு லட்சுமி அவ்விடத்தை விட்டகன்றாள். 100 வருடம் சென்றதும் மகாலட்சுமி தனது சக்தி சேனையுடன் வந்து கோலனுக்கு முடிவுகட்டினாள். கோலன் ஆண்ட ஊர் கோல்ஹாபூர் ஆயிற்று. அகஸ்தியர், பராசரர், துர்வாசர், இந்திரன், நாரதர் உட்பட பலரும் இங்குள்ள மகாலட்சுமியை வழிபட்டுள்ளனர். தானும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை பராசர முனிவருக்கு உணர்த்திய தலம் இது.

ஒரு முறை பராசர முனிவர் (பிள்ளை வரம் வேண்டி) அன்னையை நோக்கி தவமியற்றிய போது அவருக்கு விஷ்ணுவாகக் காட்சி தந்து, தானும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை உணர்த்தி வரமும் தந்தாள் தேவி. அவ்வாறு தோன்றியவரே  வேதவியாசர். ‘கரவீரம்’ என்றழைக்கப்பட்ட இன்றைய கோல்ஹாப்பூரும் முக்கியமானது. இங்கு மகாலட்சுமி அன்னையுடன் திருமாலும் வாசம் செய்வது விசேஷம் ஆகும். மகாபிரளயம் நிகழ்ந்த காலத்தில் கூட அன்னையும் திருமாலும் இத்தலத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதால், இத்தலம் ‘அவிமுக்தி’ க்ஷேத்திரமாக புகழ் பெற்றுள்ளது. அத்துடன் திருமால் வாசம் செய்வதால் அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கப்பட்ட தலமாக ‘கரவீரம்’ விளங்குவதாக இத்தல வரலாறு கூறுகிறது.

வைகுண்டத்தில் வாசம் செய்வதை விட அன்னை மகாலட்சுமியின் இஷ்ட தலமான கோல்ஹாபூரில்தான் திருமால் அதிக காலம் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் கரவீரபீடமாக துலங்குகிறது. இத்தலதேவியின் சிரசில் சிவலிங்கம் ஒன்று உண்டு. பதினெட்டு கரங்களோடு கூடியவள். மஹிஷாஸுரமர்த்தினியான மகாலட்சுமியே அவள்.  பஞ்சகால பூஜைகள் தினமும் நடக்கிறது. பூஜையின் போது வித விதமான பணியாரங்கள் படைக்கப்படுகின்றன. தேவி தன் திருக்கரங்களில் வாள், கேடயம், கதை, மாதுளை போன்றவற்றை ஏந்தியிருந்தாலும் அவை அனைத்தும் பட்டாடைகளால் முழுதுமாக மறைக்கப்படுகின்றன.

தலையின் வைரக்கிரீடம், ஐந்துதலை வெள்ளி நாகம் குடைபிடிக்க சர்வாலங்கார பூஷிதையாக அம்பிகை ஜொலிக்கிறாள். தேவியின் தலையில் நாகங்கள் ஏன்? பராசர முனிவர் செய்த கடுந்தவத்தால் பாதாளலோக நாகங்கள் துவண்டன. நீர் நிலையில் நீராடு நீரைக்குடிப்பதால்தானே பராசரருக்குபலம் என நினைத்த நாகங்கள் அத்தனை நீரையும் குடித்துவிட பராசரரிடம் சாபம் பெற்றன நாகங்கள். கோல்ஹாபூர்சென்று மகாலட்சுமிக்கு உபசாரங்கள் செய்தால் சாபம் நீங்கும் என்றார் பராசரர். அதன்படி கோல் ஹாபூர் வந்த நாகங்கள் தேவியை ஓங்காரரூபிணி. காமினி விஷ்ணுஹ்ருதயகமல வாஸினி என பல்வேறு துதிகளால் துதிக்க அதில் மகிழ்ந்த தேவி நாகங்களுக்கு சாபவிமோசனம் அளித்து தன் தலையிலும் சூட்டிக்கொண்டாள் என்கிறது தலபுராணம்.

மகாலட்சுமி அஷ்டகம் இவளை கோலாசுரபயங்கரீ என துதிக்கிறது. ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் எட்டு சிவலிங்கங்களும், நான்கு திசைகளிலும் நான்கு தடாகங்கள் உள்ளதும் இத்தல அற்புதம். 1715ம் ஆண்டில் அன்னையின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழுக்க முழுக்க கருங்கல்லால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலில், நான்கு திசைகளை விளக்கும் வகையில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு திசையில் கோயிலின் பிரதான நுழைவு வாயில் இருந்தாலும், பக்தர்கள் வடக்கு வாசல் வழியாகவே கோயிலுக்குள் பிரவேசம் செய்கின்றனர். ஏனெனில் அங்கிருந்துதான், கோயிலின் ஒவ்வொரு பிராகாரமாக வழிபாடு துவங்குகிறது.

வடக்கு திசையில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை முழு முதற்கடவுள் விநாயகப் பெருமான் வரவேற்கிறார். இங்கு கோயிலின் கருங்கல் சுவற்றில் விநாயகர் விக்ரகம் செதுக்கப்பட்டு காவி நிறத்தில் காட்சியளிக்கிறார். ‘சாக்ஷி கணேஷ்’ என்றழைக்கப்படும் விநாயகரை பக்தர்கள் மூன்று முறை கரவொலி எழுப்பி வணங்கி விட்டு உள்ளே சென்றால், வலது பக்கத்தில் மகாகாளியம்மன். எல்லா கோயிலிலும் காளி விக்ரகம் ஆக்ரோஷத்துடன் காணப்படுவதுதான் வழக்கம். ஆனால் இத்தலத்திலோ சிவப்பு பட்டு உடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள்.  மகாகாளியை தரிசித்து விட்டு எதிரில் திரும்பினால் இடது பக்கத்தில் ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம். அம்மன் உருவப்படத்துக்கு கீழ், கண்ணாடிப் பேழையில் யந்திரம் பத்திரப்படுத்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு குங்குமம் தூவி வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அதற்கு நேர் எதிர் திசையில் வருண பகவான் தலம். இதற்கு அடுத்ததாக நான்காவதாக வருவது கருவறை. அழகிய வேலைப்பாடுகளுடன் 12 கருங்கல் தூண்களுடன் வடிவமைத்த கருவறையில், கருங்கல் பீடத்திற்கு மேலே, வெள்ளியால் உருவாக்கப்பட்ட சிங்கத் தலை சிம்மாசனத்தில் மகாலட்சுமி திருவருட்பாலிக்கிறாள். 3 அடி உயரத்துக்கு செதுக்கப்பட்ட அற்புதமான விக்ரகத்தில் பட்டுடுத்தி, தலையில் தங்க கிரீடமும் உடல் முழுவதும் பொன்னகையலங்காரத்துடன் மகாலட்சுமி தரிசனம் அளிக்கிறாள். ஸ்ரீ மகாலட்சுமி கருவறை அருகில் ஸ்ரீ தனவந்திரி விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தின் உடல் முழுவதும் விரல்களால் அமுக்கி விட்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

இப்படி வணங்குவதன் மூலம், நம்மை பிடித்த பிணிகள் விலகி, தனபாக்கியம் பெருகும் என்பது ஐதீகம். எல்லா கோயில்களிலும் கருவறை விக்ரகம் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருப்பதுதான் வழக்கம். ஆனால், இத்தலத்திலோ மகாலட்சுமி அன்னை மேற்கு திசையை நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருட் பாலிக்கிறாள். இதுவும் இத்தலத்தின் மகிமைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கோயிலின் மேற்கு திசை சுவற்றில் சிறிய துவாரம் சிறப்பு வாய்ந்தது. வருடத்தின் 6 நாட்கள் இந்த துவாரத்தின் வழியாக சூரியபகவான் தன் கதிர்களின் மூலம் அன்னையை தரிசிக்க வருவதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்த சிறு துவாரத்தின் வழியாக சூரிய கதிர்கள் அன்னையின் மேல் படர்கிறது.

முழு நிலவு நாட்களில் மட்டும் அன்னை கருவறையில் இருந்து வெளியே வந்து தன்னை நாடி வரும் மக்களுக்கு தரிசனம் அளிக்கிறாள். அன்றைய தினம் வெள்ளி சப்பரத்தில் கோயில் வளாகத்தில் அன்னை வீதி உலா வருவதுண்டு. முக்கியமாக கோயிலின் வடக்கு வாசல் அருகில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தனி ஆலயம் இருப்பது இன்னும் சிறப்பு. இங்கும் கருங்கல்லில் தோற்றம் கொண்டு தரிசனம் அளிக்கிறார் முருகக்கடவுள். இது தவிர சிவ பெருமானுக்கும் தனி சந்நதி இருக்கிறது. இத்தலத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அன்னைக்கு தினசரி 5 கால பூஜை நடத்தப்படுகிறது.

ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இத்திருக் கோயிலில் உள்ள சிலை ஒருமுறை முகலாய மன்னர்களின் படையெடுப்புக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டது. பின்னர் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை கூறி 1712ம் வருடம் செப்டம்பர் திங்கள் 26ம் தேதி மீண்டும் இத்திருக்கோயிலில் குடி கொண்டாள் தேவி. அன்னை மகாலட்சுமியானவள் ஜீவன்களின் பாபமூட்டைகளைத் தன் கடைக்கண் பார்வையாலே சுட்டெரிப்பவளாகத் திகழ்கிறாள். நம்மை வருத்தும் பாபங்களும் துன்பங்களும் அன்னையைக் கண்ட கணப் பொழுதிலேயே மறைந்துவிடும்.

அன்னையானவள் அம்மா பவானி என்றும் அழைக்கப்படுகின்றாள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஒவ்வொரு வரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கோல்ஹாப்பூர் மகாலட்சுமி கோயிலுக்கு சென்று அன்னையை தரிசனம் செய்வதை முக்கியமான ஆன்மிக கடமையாக கருதுகின்றனர் மும்பையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் புனேயில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கோல்ஹாபூர். கோல்ஹாபூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 5 நிமிட பயணத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலை சென்றடையலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்