SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சம் போக்குவாள் பச்சையம்மன்!!!

2019-07-22@ 16:44:46

பெலாம்பட்டு, செய்யாறு

காஞ்சிபுரம் அருகேயுள்ள செய்யாறு அடுத்த பெலாம்பட்டில் வீற்றிருக்கிறாள் பச்சையம்மன்.அகில உலகங்களையும் காத்திடும் அன்னை பார்வதி தேவி பரமனின் இடப்பாகத்தை பெற வேண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வந்தாள். வழியில் ஓரிடத்தில் வாழை இலையினால் பந்தல் அமைத்து, அங்கு மணலினால் லிங்கம் பிடித்து வழிபட எண்ணினாள்.

அதற்கு நீர் தேவைப்படுவதால் விநாயகரையும், முருகனையும் அழைத்து நீர் கொண்டு வருமாறு அனுப்பினாள். இருவரும் நீர் எடுத்து வரச்சென்று வெகு நேரமாகவே அன்னையே தனது கைப்பிரம்பினால் பூமியைத் தட்டி ஓர் நீரூற்றை ஏற்படுத்தி மணலால் லிங்கம் பிடித்து முடித்தாள். பின்னரே விநாயகரும் முருகரும் ஆளுக்கொரு நதியோடு அங்குவந்து சேர்ந்தனர். ஆக அன்னை ஏற்படுத்திய நதியோடு சேர்ந்து அங்கே  மூன்று நதிகள் உருவாகின. மூன்று நதிகளும் கூடும் அவ்விடத்தை முக்கூட்டு நதி என்று அழைக்கின்றனர்.மேலும் தொடர்ந்து அன்னை சிவபூஜை செய்யும் வேளையில் அருகிலுள்ள கதலி வனத்தில் இருந்த அரக்கன் ஒருவன் பல இடையூறுகளைச் செய்து வந்தான். இதையறிந்த சிவனும், விஷ்ணுவும் வாமுனி, செம்முனியாக அவதாரம் எடுத்து அவ்வரக்கனை வதம் செய்தனர். பின்னர், அன்னை சிவவழிபாட்டை முடித்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டு சென்றாள். அம்பிகை முதலில் வந்த ஊர் பின்னர் முணுகப்பட்டு என்றும், பின்னர் கடைசியாக தங்கி பிரயாணப்பட்ட இடம் பிரயாணப்பட்டு என்றாகி, பின்னர் பெலாம்பட்டு என்றும் அழைக்கப்படுகின்றது.  

மூன்று நதிகளும் கூடி இருக்கும் இத்தலத்தில் அன்னை பிடித்த மணல் லிங்கம் தற்போது கல் லிங்கமாக மாறியதோடு, வளர்ந்துகொண்டே போவதாகவும் கூறுகிறார்கள். முதலில் 2 அடி உயரமே அந்த லிங்கம் இருந்ததாம்.இங்கு துவார பாலகர்கள் வலப்பக்கத்தில் சிவ வடிவமாகவும், இடப்பக்கத்தில் விஷ்ணு வடிவமாகவும் காட்சியளிக்கின்றனர். ஈசன், மன்னார் சுவாமியாக அம்மனுக்கு வலப்புறம் தனியாக அமர்ந்து அருள்புரிகின்றார். நடுவில் சுதை வடிவில் அம்பிகை. வெளியே விநாயகரும் முருகனும் சுதைவடிவில் அருட்காட்சி அளிக்கின்றனர். வாகன மண்டபத்தில் யானை, சிம்மம், மற்றும் மயில் வாகனங்கள் உள்ளன. ஆலயத்தைச் சுற்றிலும் ஜமதக்னி முனிவர், அஷ்ட விநாயகர்கள், நவவீரர்கள், சப்தரிஷிகள் ஆகியோர் அம்பாளை நோக்கி தவம் புரிந்துகொண்டிருக்கின்றனர். இத்தலத்தில் வில்வ மரமும் வேம்பு மரமும் இணைய அவற்றினடியில் நாகராஜர் சிலைவடிவில் காட்சி தருகின்றார்.3 நிலைகள், 3 கலசங்களுடன் சிறிய ராஜகோபுரம் கம்பீரத்துடன் காட்சியளிக்கின்றது.

அதில் துவாரசக்தியாக கண்டன், முண்டன். உள்ளே துவார கணபதியும் தேவேந்திரனும் வீற்றிருக்கின்றனர். பிராகாரத்தில் மிகப்பெரிய சுதை வடிவில் ஜடா முனி உள்ளார். விசேஷ காலங்களில் இவருக்கு வழிபாடு செய்த பின்னரே அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.ஆலயத்தின் வெளியே வலப்புறமாக சாலையையொட்டி செங்கல் சந்நதிகளில் வாமுனி, செம்முனி இருவரும் வரப்சாதிகளாக சுதைவடிவில் அருள்புரிந்து கொண்டிருக்கின்றனர். ஆலயத்திற்குள் நவகிரகங்களுக்கும், அனுமனுக்கும் சந்நதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் பிரசாதமாக பச்சைநிற குங்குமம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.இங்கு ஆடிமாத திங்கட்கிழமைகளே விசேஷமாகும். அம்மன் ஆலயம் ஆற்றங்கரைக்கு அப்பால் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த அந்தணர் ஒருவரால் ஆலயம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது.இந்தத் தலம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்