SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்

2019-07-17@ 10:12:30

பிரெஞ்சுக்காரர்கள் வடிவமைத்த புராதன நகரம் என்ற பெருமை கொண்ட புதுச்சேரியில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. வரலாற்று எச்சங்கள் நிரம்பிய நகராகவும், கேளிக்கை அம்சங்கள் நிறைந்த நகரமாகவும் விளங்கும் புதுச்சேரி ஆன்மிகத்திலும் ஒரு தனித்த
அடையாளத்துடன் விளங்குகிறது. இந்த வகையில் புதுச்சேரியில் உள்ள ஆன்மிக தலங்களில் குறிப்பிடத்தகுந்த ஒரு தலமாக முத்தியால்பேட்டையில் லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் சென்னை நங்கநல்லூர், கடலூர் தேவனாம்பட்டினம் என பல இடங்களில் லட்சுமி ஹயக்ரீவர் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். ஆனால் அங்கெல்லாம் அவருக்கென்று தனிக்கோயில்கள் அமைக்கப்படவில்லை.

அங்குள்ள கோயில்களில் தனி சந்நதி மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் உலகிலேயே லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என்ற பெருமையை கொண்டருக்கிறது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள இக்கோயில். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியால்பேட்டை கடற்கரைக்கு மேற்கு பகுதியில், சற்று தூரத்தில் அமைந்திருந்த ஒரு பகுதி, ஓர் அழகிய குளத்துடன் கூடிய கிராமமாக விளங்கியிருக்கிறது. அந்த குளத்தின் கரையில் பறவைகள் வந்தமரும் ஒரு பசுமையான அரசமரம் இருந்திருக்கிறது. அரசமரத்தின் அடியில் இரண்டு நாகர் சிலைகளை அமைத்து அப்பகுதியினர் வணங்கி வந்திருக்கின்றனர்.

இதனிடையே முத்தியால்பேட்டை புதுச்சேரி நகரின் மையப்பகுதியாக விளங்க தொடங்கியதால், லட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமைந்த பகுதி, குடியிருப்பு பகுதியாக மாறி, ராமகிருஷ்ணா நகர் என பெயர் பெற்றது. இந்நிலையில் 1971ம் ஆண்டில் புதுச்சேரியில் ஆர்எஸ் சாரி என்பவர் அரசின் தலைமை செயலராக இருந்திருக்கிறார். லட்சுமி ஹயக்ரீவர் பக்தரான அவர் புதுச்சேரியில் லட்சுமி ஹயக்ரீவருக்கு கோயில் அமைக்க வேண்டும் என விரும்பினார். அப்போது அவருக்கு  ராமகிருஷ்ணா நகரில் நாகர் வழிபாடு செய்யப்படும் பகுதியில் ஒரு இடம் இருப்பது தெரியவந்தது. அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால், அங்கே லட்சுமி ஹயக்ரீவர் கோயிலை கட்டினார்.

கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. பின்னர் 1983, 1995, 2012 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 2012ம் ஆண்டில் திருப்பணிகள் நடைபெற்றபோது, மூலவருக்கு மூன்றுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டது. ரூ.1 கோடி செலவில் மூலஸ்தானம், கொடிமரம், முன்மண்டபம் ஆகியவற்றுக்கு தங்கமுலாம் பூசப்பட்டது. 3 நிலை ராஜகோபுரத்தை தரிசித்து விட்டு உள்ேள சென்றால் நம்மை வரவேற்பது போல கொடிமரம் அமைந்திருக்கிறது. அதன் எதிரில் தங்கமுலாம் பூசப்பட்ட மூலஸ்தானத்தில் மூலவர் வைகுண்டத்தில் சேவை சாதிப்பதை போல காட்சி அளிக்கிறார். மூலவருக்கு எதிரில் கருடன் சந்நதி உள்ளது. மூலவருக்கு பின்புறம் 700 வருடம் பழமை வாய்ந்த நாகர்களின் கற்சிலைகள் உள்ளன.

மூலஸ்தானத்தின் முன்மண்டபத்தில் மிகப்புராதனமான ஹயக்ரீவ கல்பம் என்னும் நூலில் கூறப்பட்டது போல ஹயக்ரீவரின் வடிவங்கள் சிமெண்டில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்தின் வலது புறம் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தனி சந்நதியில் பால ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார். மேலும் பஞ்சலோக விக்ரகங்களாக தீர்த்த ஹயக்ரீவர், ஏசக ஹயக்ரீவர், டோலை ஹயக்ரீவர், லட்சுமி வராகர், லட்சுமி நரசிம்மர், ராமலட்சுமணசிதை அனுமன், புதுவை கடலில் கண்டெடுக்கப்பட்ட வேணுகோபாலன், சந்தான கிருஷ்ணன், வாமன பெருமாள், தன்வந்திரி பகவான், ஆண்டாள், விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், அமிர்தகலச கருடன், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் உள்ளிட்டோர் உற்சவ ரூபமாக எழுந்தருளியுள்ளனர்.

கோயிலின் இரண்டாம் தளத்தில் அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்ம மூர்த்திகள் மற்றும் பானக நரசிம்மர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தியுள்ளனர்.
முக்கிய விழாக்கள் ஆவணித்திருவோணத்தில் ஹயக்ரீவ ஜெயந்தியை முன்னிட்டு வெகு விமரிசையாக 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. புதன் கிழமைகளில் கல்வி வளம் சிறக்க விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. வியாழக்கிழமைகளில் வியாபார அபிவிருத்தி ஏற்படவும், குடும்ப ஒற்றுமைக்காகவும், திருமணத்தடை அகலவும், சந்தான பாக்கியம் ஏற்படவும் வழிபாடு நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் சந்தானலட்சுமிக்கு சிறப்பு வழிபாடும், மகாலட்சுமி ஸஹஸ்ரநாம அர்ச்சனையும் நடத்தப்படுகிறது.

லட்சுமி நாராயண இருதய தீர்த்தத்தில் ஜபித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு நடத்தப்படுகிறது.
இதுதவிர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாட்களில் மாணவ, மாணவியரின் கல்வி வளம் சிறக்க தொடர்ந்து 108 நாட்களுக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடத்தப்படுகிறது. லட்சுமி ஹயக்ரீவரை பூஜித்து மனமுருக வழிபட்டால் மாணவ, மாணவியரின் மனதில் தெளிவு பிறக்கும், தீய சிந்தனைகள் அணுகாது, கிரகிப்புத்திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும், வயதுக்கு சம்பந்தமில்லாத தவறான எண்ணங்கள் நீங்கும், வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒழுக்கம், தன்னடக்கம், பண்பு, வாக்குவன்மை, விவேகம், பெருந்தன்மை உள்ளிட்ட நற்குணங்கள் வாய்க்கும் என்பது நம்பிக்கையாக
உள்ளது.

படம்: கே.செல்வகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்