SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்மையை போற்றுவோம்!

2019-07-12@ 17:13:51

எங்கள் தீபங்களில்ஒளி வந்தது 22

முதியோர்கள் குறித்து நடுத்தர வயதினர் குறித்தும் கடந்த சில இதழ்களாய் விவாதித்தோம். இல்லங்களுக்கு மட்டுமின்றி சமூகத்திற்கு ஒளிவீசும் தீபமாய் இருக்கும் பெண்களைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா என்ன?பாரத மரபு பெண்ணுக்கான இடத்தை சரி சமமாக அடையாளப்படுத்தியுள்ளது. வேத காலங்களில் யாகம் வளர்த்த பெண்கள் இருந்திருக்கிறார்கள். வேறு சில மதங்களின் பாதிப்பு வந்த பிறகுதான்பெண்ணுக்கு தவம் செய்யும் உரிமை இல்லை பெண்ணுக்கு முக்தி இல்லை என்பன போன்ற அபத்தமான சிந்தனைகள் வலம் வரத் தொடங்கின.

ஒரு புறம் பார்த்தால் பெண்களுக்கு எல்லாமே இருக்கிறது என்று மிகையாகப் பேசும் உணர்ச்சிமிக்க வரிகளும் இலக்கியங்களில் தென்படுகின்றன. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா இந்த வரியை ஒரு பெண் கவிஞர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாகவி பாரதி பெண்ணுரிமை பேசுவதற்கு தூண்டுகோலாகவும் திருப்பு முனையாகவும் நின்றவர் நிவேதிதா தேவி என்பதை அறிகிறோம்.
ஆனாலும் கூட படைப்புக்கு ஆண் - பெண் என்கிற பேதம் கிடையாது. ஒரு பெண்ணின் மனதை மிக நன்றாக உணர்ந்து அவற்றை தன்னுடைய வரிகளில் துல்லியமாக படம் பிடித்தவர் கவியரசர் கண்ணதாசன்.கண்கள் ஆன்மாவின் ஜன்னல்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட ஒரு பெண்ணின் கண்களைப் பார்த்தே அவள் உள்ளத்தை உணர்கிற அளவிற்கு பக்குவம் கொண்டவர்கள் மிகவும் குறைவு.கலை பார்க்கிறபோது உள்ளே இருக்கிற இடம் நம் கண்களுக்கு தெரியாதது போல பெண்களுடன் கண்களை பார்க்கிறபோது அவருடைய மனதின் ஓட்டங்களை ஒருவரால் புரிந்து கொள்ள முடியாது என்கிறார் கண்ணதாசன்.

கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்

என்கிற அவரின் வரிகளை இங்கே நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம். அதே பாடலை அவர் அடுத்த படி நிலைக்கு நடத்திச் செல்வார்.பெண்ணை அழகுப் பொருளாக பார்க்கிற பலரும் அவளுக்கென்று ஒரு மனம் இருப்பதை மறந்துவிடுகின்றனர்.

சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனமெனும் ஞானி
என்கிறார் கவிஞர்.

எப்படி பெண்ணின் மனதை புரிந்து கொள்ள கூடுதல் கவனம் தேவைப்படுகிறதோ அதுபோல பெண்களைப் பேண நமது பழைய மரபில் ஏற்படுத்தப்பட்ட சில அம்சங்கள், அடிமைத்தனம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன.இன்னொரு பக்கம் பெண்களுக்கு எதிரான சில கருத்துருவாக்கங்கள் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டன. பெண்ணுக்கு மருதாணி  வைத்து  திலகமிட்டு கால்களுக்கு செம்பஞ்சுக் குழம்பு  தீட்டி தாம்பூலமும் தரிக்க வைத்து அழகுபார்ப்பது நம் நாட்டினுடைய சம்பிரதாயங்களில் ஒன்று. மருதாணி இடுவதால் விரல்கள் சிவக்கின்றன. வெற்றிலை இடுவதால் இதழ்கள் சிவக்கின்றன. செம்பஞ்சு குழம்புகால்களில் சிவப்பு வண்ணம் மின்னச் செய்கின்றன. இவையெல்லாம் வெறுமனே அழகுப் பொருளாக பெண்ணைப் பார்ப்பதற்கு இல்லை. அவள் வாழ்வில் இரண்டு முக்கிய சம்பவங்கள் குருதியோடு தொடர்புடையவை.

ஒரு பெண் பூப்பெய்தும் போதும், பிள்ளை பெறும் போதும் குருதியைக்காண நேர்ந்தால் அவள் மிரட்சி அடையக்கூடாது என்று தான் சின்ன வயதில் இருந்தே சிவப்பு நிறத்தை அவளுக்கு நெருக்கமான வண்ணமாக அறிமுகம் செய்கிறார்கள்.கடந்த கால கட்டமைப்புகளில் இருந்த பெண்ணுக்கான முக்கியத்துவத்தை கடந்து நிகழ்காலத்தில் என்று பார்த்தால் இன்று பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றவராகத் திகழ்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் பணிபுரிய செல்வதென்பது காலத்தின் கட்டாயம் ஆகவே மாறியிருக்கிறது.

கல்வி, சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இவற்றோடு நூற்றுக்கு 70 சதவீதம் பெண்களுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வந்துவிட்டது. ஆனால் பொது இடங்களில் கூட பாலியல் ரீதியாக பெண்ணுக்கு தரக்கூடிய துன்பங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை பெண்களுக்கான  பெரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன. இவை பெண்கள் சார்ந்த பிரச்னையாக பேசப்படுகின்றனவே தவிர இதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது ஆண்கள் சமுதாயம் தான். வளர்ந்து வந்த சூழல், பழகுகின்ற நண்பர்கள், பார்க்கின்ற பொழுது போக்கு காட்சிகள் இவை அனைத்துமே குற்றம் புரிகிற ஆணுக்குள் இருக்கும் மிருகத்தை தூண்டும் அம்சங்களாக திகழ்கின்றன.

கண்காணிப்புகள் பலமாகிற போது, சட்டங்கள்  கடுமையாகிற போது இந்தக் குறை முற்றிலும் நீக்கப்பட்டு விடலாம். இன்னும் சில ஆண்டுகளில் இது சாத்தியமாகும் என்று நம்பலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு மிகவும்  வேண்டியது உளவியல் சார்ந்த உரம். தானாய்முடிவெடுக்கும்  திறம். தோல்விகளை கையாள்வதில் ஒரு பெண் இன்னும் இயல்பாக மாறவேண்டுமென்றால் அதற்கேற்ற விதமாக சமுதாயம் முதலில் மாற வேண்டும். வேதனையான வேடிக்கை என்னவென்றால் பொதுவிலோ அல்லது தொழில் உலகிலோ ஒரு பெண் வெற்றி பெற்றால் அந்த வெற்றி சிலரால் கொச்சைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் ஒரு பெண்ணுடைய தோல்வியும் சிலரால் பெண்களுக்கு என்ன தெரியும் எனும் விதமாக பேசி பரிகாசிக்கப்படுகிறது.

வெற்றியும் தோல்வியும் அணுகுமுறையாலும் சிந்தனைத் திறனாலும் செயல்படுத்தும் விதத்தாலும் தான் ஏற்படுகிறதே தவிர இதில் ஆணென்றும் பெண்ணென்றும் பேதப்படுத்தி பார்க்க ஒன்றுமில்லை. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகளை ஒரு பெண் எதிர்கொள்ளுகிற போது அவள் விபரீத முடிவுகளை எடுத்தால் அந்த மரணம் கூட யாருடைய வளர்ச்சிக்கோ அடியுரமாக பயன்படுத்தப்படும் அவலம் இன்றும் தொடர்கிறது. பெண்ணினம் வளர்ந்து விட்டாலும் பெண்களைக் குறித்த புரிதலும்  பக்குவமும் வளர வேண்டியிருக்கிறது. அனைவராலும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது காந்தியடிகள் கனவு வாசகம் ஒன்று. நிறைய நகை அணிந்த அழகியபெண் நள்ளிரவில் எந்த அச்சுறுத்தலும் இன்றி வீதியில் தனியாக நடந்து செல்வது காந்தி கண்ட கனவுகளில் ஒன்று.
 
திருடர்களின் தொல்லை இல்லாத காமுகர்களால் தொல்லை இல்லாத சமூகமொன்றை தான் காந்தி கனவு கண்டார். இந்த மாற்றம் நிகழ வேண்டுமேயானால் ஓர் ஆண் குழந்தையை வளர்ப்பதில்தான் சமூகம் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்ப அளவில் போதிய அன்பும் பண்பாடும் போதிக்கப்பட்டு, கல்வியிலும் அத்தகையவிழுமங்கள் மூடப்பட்டால் ஆரோக்கியமானசிந்தனையுள்ள ஆண்களை இந்த உலகம் காணத்தொடங்கும்.வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணுக்குப்  பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்கிற கூற்று நமக்கெல்லாம் தெரியும். அதேபோல தோல்வி அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவருடைய வெற்றிப் பாதையை மறைத்துக்கொண்டு ஒருவர் நிற்கிறார். பல நேரங்களில் அவர் ஒரு ஆண். சில நேரங்களில் அப்படி மறைத்து நிற்பவர் ஒரு பெண்ணாகவும் இருக்கக்கூடும்.

 ஒருவன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வானேயானால் அவனிடம் கோபத்தோடு எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி நீ அக்கா, தங்கையோடு பிறந்தவனா என்பதுதான் இந்தக் கேள்வியில் ஆழமான உளவியல் அம்சம் ஒன்று அடங்கியிருக்கிறது. ஒரு பெண்ணை பார்க்கையில் அவளுடைய நெற்றியோ, கண்களோ, கூந்தலோ அல்லது அவளது சிரிப்போ,  குரலோ ஒருவனுக்கு தன்சகோதரியை நினைவுபடுத்தும். அந்தப் பெண்ணுக்கு தீமை செய்யத் தோன்றாது.இங்கேயும் நாம் கண்ணதாசனை தான் துணைக்கு அழைக்க வேண்டி இருக்கிறது.

‘‘பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ’’
 என்று கேட்கிறார் கவிஞர்.
“சித்திரத்தில் பெண்ணெழுதி சீர்ப்படுத்தும் மானிடமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட
மாட்டாயா”என்றும் கேட்கிறார்.
 
எல்லா பெண்களிடமும் தான் பாதுகாக்க விரும்பும் ஏதோ ஒரு பெண்ணின்  சாயலை மனிதன் காண்பான் என்கிற உளவியல் அம்சத்தின் கூர்மையான வெளிப்பாடுதான், நீ அக்கா, தங்கையோடு பிறந்தவனா என்கிற கேள்வி.கல்லூரி மாணவனாக இருந்தபோது கோவை அருள்மிகு கோனியம்மன் கோவிலில் ஒரு கவியரங்கில் கலந்து கொண்டேன். எங்கள் குழுவினருக்கு அதிகம் அறிமுகமில்லாத கவிஞர் ஒருவர் அதில் கலந்து கொண்டார். அவர் பெயர் கூட எனக்கு இப்போது நினைவில் இல்லை.ஆனால் கோனியம்மன் கோயில் தேர் உற்சவத்தை பார்த்துவிட்டு ஊரில் இருக்கும் தன் தங்கைக்கு அவர் கடிதமாய் எழுதிய கவிதை ஒன்றின் ஆரம்ப வரிகள் இன்றும் என் மனதில் ஆணிவேராக பதிந்திருக்கின்றன. பல்லாக்கு ஒண்ணு பார்த்து வந்தேன் கண்ணுசொல்லப்போனால் அதன் முகமும், உன் முகமும் ஒண்ணுதங்கையின் சாயலை தெய்வத்திடமும் பார்க்கிற பக்குவத்தை பெறுகிற ஆண்கள் நிறைந்த சமூகத்தில் தான் காந்தியின் கனவு நனவாகும்.

(தொடரும்)

மரபின் மைந்தன் முத்தையா


காஞ்சிக்கு இல்லை பல்லி தோஷம்

ஒரு முறை காஞ்சி மகாப் பெரியவர் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு விஜயம்  செய்தார். பெருமாளை தரிசித்து விட்டு திரும்புகையில் கோயிலின் இரண்டாவது  பிராகாரத்தில் வைத்து அவரது உச்சந்தலை மேல் பல்லி விழுந்தது. பின்னால் வந்த  அவரது சீடர் ஒருவர் அதைத் தட்டிவிட்டார். உடனே உடன் வந்த ஊர் பிரமுகர்கள்  சுவாமி. உச்சந்தலையில் பல்லி விழுந்தால் மரணம் என்று பல்லி சாஸ்திரம்  கூறுகிறதே, இதற்கு பரிகாரம்ஏதும் செய்யக்கூடாதா என்று கேட்டதற்கு. இது  சத்திய விரத க்ஷேத்திரம் (காஞ்சிபுரம்). இந்த மண்ணில் பல்லி தோஷம் என்பதே  கிடையாது என்று அருளினார்.

- ரேணுகா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • doublee_engineflightt1

  உலகிலேயே மிக நீண்ட, மிகப் பெரிய இரட்டை எஞ்சின் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!!!

 • chennai_rebbb

  சென்னையில் குடியரசு தின விழா : கண்ணை கவர்ந்த கலாச்சாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள்

 • 11kudiyrasu12

  விண்ணில் சாகசம் காட்டிய விமானப்படை, முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் : குடியரசு தின கொண்டாட்டத்தின் கண்கவர் படங்கள்

 • 27-01-2020

  27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-01-2020

  26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்