SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவை வணங்கு குழப்பம் தீரும்,,!

2019-07-02@ 10:17:54

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?2014ல் திருமணம் ஆகி 2018 டிசம்பர் முதல் மனைவியைப் பிரிந்து வாழ்கிறேன். 28 வருடங்களாக பிறந்த ஊரில் இருந்தும் உறவுகளை விட்டு தனித்தே வாழ்ந்து வருகிறேன். இதுவரை குழந்தை இல்லை. மனைவி, குடும்பம், தொழில் என நான் சிறப்பாய் வாழ முடியுமா? அந்த வாழ்க்கை மனைவியின் ஊரில் என்றால் ஏற்கலாமா? குழப்பம் தீர வழிகாட்டுங்கள்.
- மலையரசன், திருவண்ணாமலை.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியும், மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியும் புதன் ஒருவரே ஆவார். அந்த புதன் ஜென்ம லக்னத்தில் இணைவு பெற்றிருப்பது நல்ல நிலையே. மனைவியின் மூலமாக அல்லது மனைவி வழி உறவினர் வழியில் அமையும் ஜீவனம் என்பது நிரந்தரமானதாக அமையும். எனவே மனைவியின் ஊரிலேயே சொந்தமாக தொழில் செய்ய முற்படுங்கள். உங்கள் முயற்சிக்கு மனைவி வழி உறவினர்கள், நண்பர்கள் துணையிருப்பார்கள். 28 வருடங்களுக்கும் மேலாக சொந்த ஊரிலேயே உறவின்றி வாழ்ந்து வரும் உங்களுக்கு இந்த வாய்ப்பு நல்லபடியாக அமையும். வாழ்வின் பெரும் பகுதியை வீணாகக் கழித்திருக்கிறீர்கள். தற்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என்பதை உணர்ந்துகொண்டு மனைவியோடு சேர்ந்து வாழ முயற்சியுங்கள். ஜென்ம லக்னத்திலேயே இணைவு பெறும் சூரியன் உங்கள் கௌரவத்தை என்றென்றும் கட்டிக் காப்பார். கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் சூரியலிங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நாளில் அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். உங்கள் மனக்குழப்பம் முடிவிற்கு வரும்.

?என் மகன் ஒரு பெண்ணை விரும்புகிறான். இருவரின் ஜாதகங்களை ஜோசியர்களிடம் காண்பித்தபோது ரஜ்ஜூ பொருத்தம் இல்லை, திருமணம் செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு ஜோசியர் மட்டும் இதனால் பாதிப்பில்லை, திருமணம் செய்யலாம் என்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதால் திருமணம் செய்யலாமா? அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற உதவிடுங்கள்.
- சோமசுந்தரம், கும்பகோணம்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. இவர்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி பொருத்தம் என்பது மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளது. ஆரோகண அவரோகண ரஜ்ஜூவாக இருப்பதால் ரஜ்ஜூப் பொருத்தம் என்பதும் நன்றாகவே உள்ளது. பத்து பொருத்தங்கள் பார்ப்பதை விட ஜாதக ரீதியான பொருத்தம் என்பதே மிக
முக்கியமானது. இவர்கள் இருவரின் ஜாதகங்களும் நன்றாகப் பொருந்தியுள்ளது. உங்கள் மகனின் ஜாதகப்படி ஏழாம் வீடு என்பது கடகமாகி அதுவே அந்தப் பெண்ணின் ஜென்ம ராசியாக அமைந்துள்ளது. அந்தப் பெண்ணின் ஜாதகப்படி ஏழாம் வீடு என்பது விருச்சிகமாகி, விருச்சிக ராசியின் அதிபதி ஆகிய செவ்வாயின் மற்றொரு சொந்த வீடான மேஷம் உங்கள் மகனின் ஜென்ம ராசியாக அமைந்துள்ளது. இந்த ஒரு நிலையே சிறப்பான பொருத்தத்தினைத் தரும். ஜாதக ரீதியான பொருத்தம் நன்றாக இருப்பதாலும், இருவருக்கும் மனப்பொருத்தம் என்பது கூடியிருப்பதாலும் எந்தவிதமான தயக்கமும் இன்றி திருமணத்தை நடத்துங்கள். 01.11.2019ற்குப் பின் திருமணத்தை நடத்துவது நல்லது. பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?35 வயதாகும் என் மகன் ஏதோ ஒரு வேலை என்று கோயிலில் சிறிய சம்பளத்தில் இருந்து வருகிறான். வாழ்வில் நிலை பெற வேண்டிய 18 வயது முதல் 30 வயது வரை அவனது வாழ்க்கை விரயமாகிவிட்டது. இனியாவது அவன் வாழ்வில் வேலை, திருமணம், குழந்தை என வசந்தம் வருமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- பத்மா, நாங்குநேரி.

பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்திருப்பதும், ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்ற சனியுடன் இணைந்து நான்கில் அமர்ந்திருப்பதும் சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது. போராட்டமான வாழ்வினை எதிர்கொள்ளத் தெரியாமல் தடுமாறிப்போய் கிடைத்த வரை போதும் என்ற மனநிலையோடு வாழ்ந்து வருகிறார். தற்போது நடந்து வரும் கேது புக்தியானது வாழ்வினில் ஞானத்தை போதிக்கும். கேது சிந்தனையைத் தூண்டும் ஐந்தாம் வீட்டில் உச்ச பலம் பெற்றிருப்பதால் மனம் நோகும்படியான சம்பவங்கள் நடந்து அதன் மூலம் அனுபவப் பாடத்தினைப் பெறுவார். வாழ்வினில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். 03.12.2019ற்குப் பின் அவரது மன நிலையில் மாற்றத்தைக் காண்பீர்கள். இவரைப் புரிந்துகொண்ட உறவுமுறையில் உள்ள ஒரு பெண்ணை அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு நன்றாக உள்ளது. திருமணத்திற்குப் பின் மனைவியின் வழிநடத்தலின் பேரில் இவரது வாழ்வு நல்லபடியாக அமையும். செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள புற்றுக்குப் பாலூற்றி ஏழுமுறை வலம் வந்து வணங்கி வாருங்கள். கோயிலில் இவர் செய்து வரும் கைங்கர்யம் வாழ்வினில் ஒளி பிறக்க வழி செய்யும். கவலை வேண்டாம்.

?திருமணத்திற்காக என் பேத்தியின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவருக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகவும், தகப்பனார் வழி மூத்தோர் சாபம் உள்ளதாகவும் ஜோதிடர் கூறுகிறார். மேலும் தற்போது ஏழரைச் சனி நடப்பதாகவும் சொல்கிறார். மேற்சொன்ன குறைகள் நீங்கவும், என் பேத்தியின் வாழ்க்கை நல்லபடியாக அமையவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
- பழனி, திருவண்ணாமலை.

 திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தற்போது நடந்து வரும் தசையின் அதிபதி சுக்கிரன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் தற்போது உடனடியாக திருமணத்தை நடத்த இயலாது. ஏழரைச்சனி நடக்கிறது என்பதற்காக அது முடியும் வரை இன்னும் ஏழரை ஆண்டுகளுக்கு காத்திருக்க இயலாது. அவரது ஜாதகத்தை  மேலோட்டமாகக் காணும்போது திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் இணைந்திருப்பது தோஷம் போல தோன்றினாலும் உண்மையில் கடுமையான தோஷம் ஏதும் இல்லை என்பதையே அவரது ஜாதகம் காட்டுகிறது. மாங்கல்ய தோஷம் என்பதோ, மூத்தோர் சாபம் என்பதோ அவரது ஜாதகத்தில் இல்லை. இன்னமும் திருமணத்திற்கான நேரம் வரவில்லை என்பதே அவரது ஜாதகத்தில் இருக்கும் உண்மையான நிலை. 10.05.2020ற்கு மேல் அவரது ஜாதக பலத்தின்படி நல்ல குடும்பத்து சம்பந்தம் தேடி வரும். மணமகன் இவர் பணி செய்யும் துறையைச் சார்ந்தவராக இருப்பார். பேத்தியின் திருமணத்தை அபீதகுஜாம்பாள் சந்நதியில் வைத்து நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருகின்ற தை அமாவாசை நாளில் 27 சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கி நல்லபடியாக திருமணம் நடந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்.

?என் கணவரின் வயது 62. அவரது தந்தை இறந்து 40 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு வருடமும் அவரது அண்ணன் வீட்டிற்குச் சென்று திதி கொடுத்து வருகிறார். நாங்கள் தனியாக எங்கள் வீட்டில் திதி கொடுக்கலாமா அல்லது மூத்தவர் வீட்டில்தான் செய்ய வேண்டுமா? ஒருவர் இறந்து 40 வருடங்கள் ஆகிவிட்டால் அதற்கு மேல் திதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்களே, இது உண்மையா? குழப்பம் தீர வழி கூறுங்கள்.
- சரஸ்வதி, அரக்கோணம்.

இறந்தவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் திதி கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து. நமது உடல்நிலை ஆரோக்யமாய் இருக்கும் வரை திதி கொடுப்பதை தவறாமல் செய்ய வேண்டும். அதேபோன்று சகோதரர்கள் தனித்தனியே குடும்பம் செய்து வரும் பட்சத்தில் அதாவது தனித்தனியே சமைத்து சாப்பிடுகிறார்கள் என்றால் தனித்தனியாகத்தான் சிராத்தம் செய்ய வேண்டும். சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்தாலும் சமையல் என்பது தனித்தனி என்றாகிவிட்டால் சிராத்தமும் தனித்தனியேதான் செய்ய வேண்டும். மூத்தவர் வீட்டில்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் தவறான கருத்து. உங்கள் குடும்ப விஷயத்தைப் பொறுத்த வரை இந்த வருடம் முதலாவது தனியாக உங்கள் வீட்டில் சிராத்தம் செய்ய முயற்சியுங்கள். உங்கள் கணவரின் ஆரோக்யம் நன்றாக இருக்கும் வரை அவர் தொடர்ந்து தன்னைப் பெற்றவர்களுக்கு தவறாமல் திதி கொடுக்க வேண்டும். மாதந்தோறும் அமாவாசை நாட்களிலும் தவறாமல் முன்னோர் வழிபாட்டினைச் செய்ய வேண்டும். முன்னோர் வழிபாட்டினை குறையின்றி செய்து வந்தாலே நிம்மதியுடன் வாழ இயலும். வம்சத்திலும் எந்தவிதமான குறையும் உண்டாகாது.

?25 வயதாகும் என் மூத்த மகள் அவளது வருமானத்தில் கல்விக்கடனை அடைத்து சிறிது சேமித்து வருகிறாள். என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவளின் திருமணத்தை நடத்திப் பார்க்க ஆசைப்படுகிறோம். அவள் தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கூறுகிறாள். இதைக் கேட்டதில் இருந்து குடும்பத்தில் அனைவரும் வருத்தமாக உள்ளோம். அவள் மனம் மாற நல்வழிகாட்ட வேண்டுகிறேன்.
கீதா, காஞ்சிபுரம்.

அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்காலம் குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய் ஒன்பதில் நீசம் பெற்றிருப்பதும், திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றில் அமர்ந்திருப்பதும் சற்று சிரமத்தைத் தருகிறது. அதோடு உங்கள் மகள் தனது 13வது வயதில் சந்தித்த கசப்பான சம்பவம் ஒன்று திருமண வாழ்வின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி இருக்கிறது. என்றாலும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குரு அமர்ந்திருப்பதால் இதுபோன்ற குறைகள் அத்தனையும் காணாமல் போய்விடும். தற்போது அவரது திருமணத்திற்கு அவசரப்பட வேண்டாம். அவரது ஜாதகக் கணக்கின்படி 27வது வயதில் திருமணம் என்பது நடைபெறும். 11.03.2020க்குமேல் நடக்கும் சம்பவங்கள் அவரது மனதில் உள்ள குழப்பத்தைப் போக்கி தெளிவினைத் தரும். தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவசர, அவசரமாக பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள். மகளின் நல்வாழ்வு கருதி சற்று பொறுமையாக இருங்கள். 17.02.2021ற்குப் பிறகே உங்கள் மகளின் மனநிலையானது திருமண வாழ்விற்குத் தயாராகும். அதற்குப் பின் செய்யும் திருமணமே அவரது வாழ்விற்கு முழுமையான மகிழ்ச்சியைத் தரும். வியாழன் தோறும் குரு பகவானை வணங்கி வர குழப்பம் தீரும்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,
பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்
தினகரன்
ஆன்மிக மலா்
229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,
ராசியை குறிப்பிடவும்.

சிவனாரின் சில ரூபங்கள்

 கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன், நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.


 அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப் போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

 அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

 செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

- ஜோ ஜெயக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 300kg11

  பிரான்சில் 300 கிலோ எடையுள்ள நபரை, வீட்டினை உடைத்து கிரேன் மூலமாக மீட்ட மீட்புப் படையினர்!!

 • monkey_thaayklannn1

  குரங்குகளுக்கு உணவு வழங்கும் திருவிழா : தாய்லாந்தில் வினோதம்!!

 • eelephanttt11

  35 ஆண்டுகள் சிறை வாழ்க்கை வாழ்ந்த உலகின் தனிமையான காவன் யானைக்கு புதிய வாழ்க்கை : துதிக்கையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

 • muskes_ambani11

  27 தளங்கள், 3 ஹெலிகாப்டர் இறங்கு தளம், 168 கார் பார்க்கிங், 9 விரைவு லிப்டுகள்,600 ஊழியர்கள்... உலகின் 2வது பிரமாண்டம் மிகுந்த முகேஷ் அம்பானியின் வீடு!!

 • delhi_farmnmmmeee

  திறந்தவெளியில் சமைத்து, கடும் குளிர் சாலையில் உறங்கியபடி, 7ம் நாளாக தொடர் போராட்டம் :டெல்லியில் மிரளவைக்கும் வைக்கும் விவசாயிகளின் கிளர்ச்சி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்