SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகவை எழுபதெல்லாம் ஒரு முதுமை அல்ல

2019-06-27@ 17:42:22

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 21

முன்னொரு காலத்தில் முதுமை என்பது வயது சார்ந்து வரையறுக்கப்பட்டது. தள்ளாமையை அடிப்படையாகக் கொண்டு உறுதி செய்யப்பட்டது. காலப்  போக்கில் இந்த இரண்டு வரையறைகளும் அர்த்தமிழந்து  போயின. மனிதர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களால் மேல் நாடுகளில் 70 வயது கூட  முதுமை என்று கருதப்படுவதில்லை. இந்தியச்சூழலில் ஒளி காட்டும் விளக்குகளாய் விளங்கும் முதியவர்கள் வாழ்வு என்ன சூழலில் இருக்கிறது  என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.இந்திய  முதியோர்களின்  வாழ்க்கை  முறையை  எண்ணிப்  பார்க்கும்  போது கவியரசர்  கண்ணதாசனும்   இந்த  வரி  தான்  நம்  நினைவுக்கு  வரும்.

“காற்றினிலே.... பெரும் காற்றினிலே......
ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்”

சலிப்பிலும்  அச்சத்திலும் சட  சடக்கும் இந்த சுடர்களின்  சுருங்கிய உள்ளங்களில் நம்பிக்கையின் எண்ணையை வார்க்க வேண்டுமென்றால்  அவர்களும்  வாழ்க்கை முறையை  நாம்  எண்ணிப்  பார்த்து  எடைபோடுவது அவசியம்.    நமது  மரபில்  முதுமையடைகையில் மனித வாழ்வு  அமைதியென்னும்  மகத்துவம்  நோக்கி ஆற்றுப் படுத்தப்பட்ட காலம் உண்டு. இன்று பல முதியவர்கள்  வாழ்வு  மருத்துவம்  நோக்கி   ஆற்றுப்படுத்தப்படும் அளவு  மகத்துவம்  நோக்கி ஆற்றுப்படுத்தப்படுவதில்லை. சீன நாட்டில் முதுமையை நோய்களின் துறைமுகம் என்று சொல்லும்  முதுமொழி ஒன்றுண்டு. துறைமுகம் என்றால் கப்பல்கள் வருவதும் போவதுமாய் இருக்க வேண்டும். ஆனால் முதுமைத் துறைமுகத்தில் வருகிற  கப்பல்கள் இன்று நகர்வதாயில்லை. மாறாக  சின்னச் சின்ன கப்பல்கள் புதிது புதிதாய் முளைக்கின்றன.  முதியவர்களின்  உடல்வாகு பழைய கால  மென் மருந்துகளுக்குப்  பழகிய  அளவு வீரியமிக்க புதிய மருந்துகளுக்கு ஈடு கொடுக்குமா தெரியவில்லை. பக்க விளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும்  பெயர் பெற்ற மருத்துவ முறைகள் தங்கள் நோய்கள் குறித்தும், சிகிச்சைகளின் பக்கவிளைவுகள் குறித்துமே எந்நேரமும் முதியவர்களை சிந்திக்க வைக்கிறது.

வாழ்வை  எளிதாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் அவர்கள் மனங்களில் இருந்தாலும்  வாரிசுகளின்  அளவிறந்த அக்கறை காரணமாக கடும்  சிகிச்சைகளை மேற்கொள்ள நேர்வதால் அவர்கள் அதிகம் சோர்வடையவே வாய்ப்புகள் உண்டு.மருத்துவத்தால் முதியவர்களுக்கு வரும் மனச்சோர்வு  என்பது வெவ்வேறு படி நிலைகளில் இருப்பதாலேயே அவை நம் கவனத்துக்  குரியவை  ஆகின்றன. நோய் குறித்த  விபரங்கள்  முழுவதும்   தெரியப்படுத்தப்படாத  போது  வருகிற  சோர்வு  ஒரு  வகை.  தங்கள்  நிலையென்ன என்பதைத் தாங்களே அறியாத போது மிகுந்த மன  அழுத்தமும் பதட்டமும் ஏற்படுவது இயற்கை. இரண்டாவது அம்சம் முதியவர்களுக்குத் தரப்படும் சிகிச்சைகளின் படிநிலைகள். ஆளை அச்சுறுத்தும்  எந்திரங்களும் கருவிகளும் ஒருபுறம் மிரட்டும். நரம்புகளை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் குறுக்கும் நெடுக்கும் ஓடும் வயர்கள் வேறு  வயிற்றைக்  கலக்கும். “இந்த சிகிச்சையெல்லாம் வேண்டாமே’’ என்று, மனம் ஒருபுறம்  தவிக்கும்.  இத்தனை இடர்ப்பாடுகளும் தங்கள் உடலுக்கான  சிகிச்சையே  தங்கள்  கைமீறி  நடக்கிறதோ  என்ற கவலையாலும் கலக்கத்தாலும்  ஏற்படுபவைதான்.

நவீன  மருத்துவம், மிக நன்றாக வளர்ந்து விட்ட நிலையிலும் கூட, விரைவில் குணம்  பெறச் செய்யும் வீரியமிக்க மருந்துகள் பலத்த பக்க  விளைவுகளை ஏற்படுத்தி, பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. பக்க விளைவுகளுக்கான தொடர் சிகிச்சைகள்  இன்னொருபுறம்  இடர்ப்பாடுகளை  ஏற்படுத்துகின்றன. இந்த நிலைக்கு  என்ன  மாற்று  என்பதையும்  நாம்  சிந்திக்க  வேண்டியவர்கள் ஆகிறோம்.மாற்று மருத்துவ முறைகளை  இன்றைய தலைமுறையினர் அதிகம் நம்புவதில்லை. ஆனால் முதியவர்களுக்கு சில மாற்று மருத்துவ முறைகள் பலவிதங்களில்  பயனளிக்கக்   கூடும்.  எந்த சிகிச்சை முறை ஏற்புடையது என்பதைக் கண்டறிந்து ஆவன செய்யும் நேரமும் பொறுமையும் முதியவர்களின் பிள்ளைகளுக்கு  இருப்பதில்லை. முதியவர்களாகக் கண்டறிந்து  சின்னாலும் கேட்கும் பொறுமை பெரியவர்களுக்கில்லை.

 அதே நேரம் நூறு வயது வாழும் முதியவர்கள், நூற்றிப்பத்து வயது வாழும் முதியவர்கள் என்று மிக அரிதாய் சிலர் குறித்து கேள்விப்படுகிறோம்.   இதில்  நாம் ஓர் உண்மையை உணரத்  தவறுகிறோம்.  110 வயதினருக்கு  அடுத்த தலைமுறை  என்றால்  30  வயது  கழித்தால்  அவர்கள்  80   வயதினர். அதாவது , நாம்  அரிதாகக்  கேள்விப்படும் 100/110  வயதினர் முதிய முதியவர்கள். அதற்கடுத்து வருபவர்கள் புதிய முதியவர்கள்.முதிய முதியவர்களின் வாழ்க்கை முறைக்கும் புதிய முதியவர்கள் வாழ்க்கை முறைக்குமே பல வேறுபாடுகள் உண்டு.  முதிய  முதியவர்கள் வாழ்க்கை , இளமை  தொட்டே  இயற்கைக்கும் இயல்பான வாழ்க்கை முறைக்கும் நெருக்கமாக இருந்தது. உடலுழைப்பு, சத்து மிக்க உணவுப் பழக்கம்,  மாசுபடாத காற்று, நெறிசார்ந்த வாழ்க்கைமுறை என எத்தனையோ அம்சங்கள் அவர்களை ஊட்டமும் உக்கமும் உற்சாகமும் மிக்கவர்களாக  உருவாக்கின.

நிரந்தர  வைப்பு நிதியில் தொகையிட்டால் அது எப்படி வாழ்க்கை முழுவதும் வட்டி  தருகிறதோ  அதுபோல தங்கள் நலவாழ்வில் முதலீடு  செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அதன் பயனாகிய  உடல்நலன் என்னும் வட்டியை இன்னும்  அனுபவித்து  வருகிறார்கள். இதன் விளைவாக  அவர்கள் வாழ்க்கை கண்டு வியக்கும்  தரத்தில்  விளங்குகிறது. முதிய முதியவர்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு புதிய முதியவர்களுக்கு இல்லை.  அதற்கடுத்து வருபவர்களுக்கு இல்லவே இல்லை.  நம்மிடையே வாழும் முதியவர்களை  இயற்கைக்கு  இன்னும் நெருக்கமாய் கொண்டு செலுத்த  முடிந்தால்  அவர்கள்  இழந்த இயற்கை சார்ந்த வாழ்வின் மிகச்சிறு பகுதியையாவது மீட்டுத் தர முடியும்.அதேபோல நம் சமூகத்தில் எப்படி  குழந்தைகளுக்கேற்ற வாழ்க்கை என்பது இன்று தனியாக இல்லையோ, அதேபோல முதியவர்களுக்கேற்ற வாழ்க்கை முறை தனித்தன்மை  வாய்ந்ததாய் இல்லை. பொழுது போக்கு ஊடகங்கள் தொடங்கி, பயணங்கள்  வரை  வயதுக்கேற்ற  விதங்களில் அமையும் போது வாழ்க்கை மீதான   பிடிப்பு  வளரும். ஆனால்  இன்றைய வாழ்வின் பல அம்சங்கள் பெரும்பாலும்  இந்தியப்  பொதுக் கழிப்பறைகள் போலத் தான். முகத்தைச் சுளித்துக்  கொண்டே மூக்கைப் பொத்திக் கொண்டே பயன்படுத்தியாக  வேண்டிய கட்டாயம்.

 முன்பைவிடவும் இன்று மருத்துவ வசதிகள் பெருமளவு  முன்னேறியிருக்கின்றன என்பது உண்மை தான்.  ஆனால்  நோயை  குணப்படுத்தி விட்டு  உடற்சோர்வையும்  மனச் சோர்வையும் தரும் விதமாக சிகிச்சைகள் பல சமயங்களில் அமைந்து விடுகின்றன. எனவே இந்த விளைவுகளைத்  தாங்கவும் முடியாமல்  தள்ளவும்  முடியாமல்  தவிக்கின்றனர்  முதியவர்கள்.இன்னொருபுறம்  இன்றைய  வாழ்க்கை முறை.  முந்தைய   காலங்களில் கூட்டுக்  குடும்பங்களில்  பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருக்கவாவது யாரேனும்  இருப்பார்கள். இன்று ஒவ்வொரு நாளுமே ஓட்டப்  பந்தயமாய் இருக்கும் போது  தனித்து  விடப்படும் முதியவர்களுக்கு அந்தத் தனிமை இன்னொரு சவாலாய்  ஆகிறது.தனிமை என்பது பூதக்கண்ணாடி.  உள்ளே இருக்கும் உணர்வுகளைப் பெரிதுபடுத்திக் காட்டும். உள்ளே  இருக்கும்  உணர்வு  அமைதி  என்றால் அந்தத்  தனிமையே  ஏகாந்தம்.  உள்ளே   இருக்கும்  உணர்வு  பதட்டமென்றால்  அந்தப் பதட்டமே மனச்சோர்வாகவும் மனநோயாகவும் மாறுகிறது. தான் மட்டுமே பேசி தன்னிடம் யாரையும்  பேசவிடாத தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருக்கும் முதியவர்கள் தாங்கள் யாரிடமாவது  பேசமாட்டோமா  என்று தவிக்கிறார்கள்.  வேலை முடிந்து வீடு திரும்பும்  மகனோ மருமகளோ அவர்களும் சில ஒற்றை வார்த்தைகளைப் பேசி விட்டு நகர்கிறார்களே தவிர முதியவர்கள்  பேசுவதை விரும்புவதில்லை. நிறுத்திப் பேசும் மனிதர்களை விட  நீளப்பேசும்  தொலைக்காட்சிகளே பரவாயில்லை என்னும்  எண்ணம்   பெரியவர்களுக்கு  வருகிறது.  உடலளவிலும் மனத்தளவிலும்  ஒடுங்கி  உணர்வுகளும்  உற்சாகமும் சுருங்கி.

(தொடரும்)

விஸ்வநாதனின் விந்தை மிகு வடிவங்கள்

திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முக லிங்கமாக தரிசனம் அளிக்கிறார்.  அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும்  வணங்கப்படுகின்றனர்.
 
ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்டில்  காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.
 
பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை  வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
 
ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர்  மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

- ஜோ ஜெயக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-12-2019

  11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • jnu_studentss1

  குடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்

 • bushfire_aussiee1

  ஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்

 • asutra_bushfirr1

  ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு

 • parani_deepam11

  கார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்