SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறவாமை வேண்டும்

2019-06-19@ 11:10:00

* குறளின் குரல் 106

பிறவாமை என்பது ஓர் இந்துவின் கடைசி லட்சியமாகக் கருதப்படுகிறது. பலப்பல பிறவிகளை எடுத்த ஜீவான்மா இறுதியில் இறையருளால்  பிறப்பில்லாத நிலையை அடைகிறது. இந்நிலை உண்டு என்பதை வள்ளுவம் ஒப்புக் கொள்கிறது. பிறவி எண்ணற்றது. கடல் போன்றது. அந்தப்  பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடந்து இனிப் பிறவாத நிலையை அடைய வேண்டுமானால் இறைவன் திருவடியைச் சரணடைய வேண்டும் என  வலியுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.

‘‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்’’  (குறள் எண் 10).

  இறைவன் அடிகளை நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடப்பர். இறைவன் அடிகளைச் சேராதவர் பிறவிப் பெருங்கடலைக் கடக்க  மாட்டார். மீண்டும் மீண்டும் பிறக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் வள்ளுவம் வலியுறுத்துகிறது.
 
‘‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.’’
(குறள் எண் 38)

  ஒருவன் அறத்தைத் தவறாமல் நாள்தோறும் பின்பற்றுவானேயானால் அது அவன் மீண்டும் பிறக்கும் வழியினை அடைக்கும் கல்லாக அமையும்.  எனவே பிறவாமையை விரும்புகிறவர்கள் அறநெறியைப் பின்பற்ற வேண்டும்.

‘‘கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
மற்றீண்டு வாரா நெறி.’’ (குறள் எண் 356)

 கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பம் அடைவதில்லை. அவர்கள் பிறவாத தன்மையை  அடைகிறார்கள்.  

‘‘பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு.’’
(குறள் எண் 358)

  பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முக்தி என்று சொல்லப்படும் சிறந்த நிலைக்குக் காரணமான செவ்விய பொருளைக்  காண்பதே மெய்யுணர்வு.

‘‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.’’ (குறள் எண் 362)

ஒருவன் ஒன்றை விரும்புவதானால் அவன் பிறவாத நிலையை விரும்ப வேண்டும். அவா அற்ற நிலையை விரும்பினால் பிறவாத நிலை  உண்டாகும்.இவ்விதம் பல குறட்பாக்களில் இந்த மண்ணுலகில் மீண்டும் பிறவாத நிலையை அடைவதே இறுதி லட்சியம் என்பதை வள்ளுவர்  வலியுறுத்துகிறார். இறைவனைச் சார்ந்து வாழ்வதே அதற்கு வழி என்றும் தெரிவிக்கிறார். பிறவாமை என்பது மீண்டும் பிறத்தல் இல்லாத முக்தி  நெறியைக் குறித்தது. பிறவாமை பற்றிய நெறி அறியாதவர்களை 'முக்தி நெறி அறியாத மூர்க்கர்’  எனத் திருவாசகத்தில், தாம் அருளிய அச்சோப்  பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிடுகிறார் மாணிக்கவாசகர்.

 ‘‘முக்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
 பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
 சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
 அத்தனெனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே!’’

ஒருவர் காலமானால் எழுதப்படுகிற அறிவிப்பு மடலில், சைவர்கள், 'இன்னார் கைலாச பதவி அடைந்தார்’ என்றும் வைணவர்கள் 'இன்னார் வைகுண்ட  பதவி அடைந்தார்' என்றும் குறிப்பிடுவது, இறந்தவர் பிறவா நிலையை அடைந்தார் என்கிற கண்ணோட்டத்திலேயே. இந்த வாசகங்கள் இறந்தவர்  அடையவேண்டிய இறுதி லட்சியத்தை அடைந்து விட்டார் என்பதைக் கூறுகிறது. எனவே இத்தகைய அறிவிப்புகளில் 'சிவபதவி அடைந்தார் என்பதை  வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்’ என்றும் 'வைகுண்ட பதவி அடைந்தார் என்பதைத் துயரத்துடன் தெரிவிக்கிறோம்’ என்றும் அச்சிடலாகாது.  சிவபதவியும் வைகுண்ட பதவியும் கிடைத்தற்கரிய பெரிய பேறுகள். அதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? வருத்தம் என்ற வார்த்தையைச் சேர்க்க  விரும்பினால் இன்னார் இறந்தார் என்று மட்டுமே அச்சிடவேண்டும். மரபார்ந்த சிவபதவி, வைகுண்ட பதவி ஆகிய சொற்களைச் சேர்த்து அச்சிடுவது  சரியல்ல.
 
ஆதிசங்கரரின் அத்வைதம் என்பது ஜீவான்மாவும் பரமான்மாவும் ஒன்றுகலந்து இரண்டற்று ஒன்றேயாகி நிற்கும் நிலையைக் குறித்தது. ராமானுஜர்  கண்ட துவைதம், இறுதியில் பிறவாத நிலையடையும் பக்தர்கள் திருமாலுக்குத் தொண்டர்களாய்  வைகுண்டத்தில் இறப்பின்றி மீண்டும்  பிறத்தலுமின்றிப் பேரானந்தத்தோடு வாழ்வார்கள் என்று பேசுகிறது. நூற்றியெட்டு வைணவத் திருத்தலங்களில் வைகுண்டம் ஒன்று. வீடுபேறு என்றும்  முக்தி என்றும் மோட்சம் என்றும் குறிக்கப்படும் நிலையை எய்திய அடியவர்கள் இறுதியில் சென்றுசேரும் இடம் இந்த வைகுண்டம் என்னும்  திருத்தலமே. எட்டு ஆழ்வார்களால் முப்பத்தியாறு பாசுரங்களில் இந்த வைகுண்டமாகிய திருத்தலம் பாடப்பட்டுள்ளது. வைணவர்களின் லட்சியம்  இந்தப் பரமபதத்தை அடைவதுதான்.

இதை ஆழ்வார்கள் 'திருநாடு’ என்றும் கூறுகிறார்கள். எனவே இறந்தவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர் திருநாட்டை அலங்கரித்தார் என்று  சொல்லும் மரபு வைணவத்தில் உண்டு. ராமானுஜர் அருளிய 'வேதாந்த சங்கிரகம்’ என்னும் நூல் வைகுண்டத்தைப் பற்றித் தெளிவாக விளக்கிப்  பேசுகிறது. ராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் 'வைகுண்ட கத்யம்’ என்ற பகுதியில் வைகுண்டத்தைப் பற்றிய வர்ணனைகள் உண்டு.  ராமானுஜரின்  வரலாற்றைச் சொல்லும் 'பிரபந்தாம்ருத தர்ப்பணம்’ என்ற நூலிலும் வைகுண்டம் எப்படி இருக்கும் என்பது அழகாக விளக்கப்பட்டுள்ளது.  வைணவத்தைப் பொறுத்தவரை பிறவாமையை அடைவதென்பது வைகுண்டத்தைச் சென்று சேர்வதே.

வைகுண்டத்தைச் சென்று சேரும் ஜீவாத்மாக்கள் 'நித்ய சூரிகள்’ என அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் அழிவேயில்லாத சக்தியைப்  பெறுகிறார்கள். அவர்களுடைய வடிவம் இறைவனைப் போன்றதாகவே மாறுகிறது. வைகுண்டத்திற்குப் பிறகு அறிவதற்கோ அடைவதற்கோ  வேறொன்றும் இல்லாததால் அது 'எல்லை நிலம்’ எனவும் குறிப்பிடப்படுகிறது. வைகுண்டத்தில் அடையும் நலத்திற்கு முடிவே இல்லை என்பதால்  'நலமந்தமில்லதோர் நாடு’ எனவும் அது சொல்லப்படுகிறது. வைகுந்த இன்பத்தை 'அந்தமில் பேரின்பம்’ என்று முடிவேயில்லாத ஆனந்தமாகக் கண்டு  போற்றுகிறார் நம்மாழ்வார்....  

அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூவர் மட்டுமே பெண்கள். இசைஞானியார், மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார் ஆகிய அந்த மூவரில்  காரைக்கால் அம்மையார் சிவபெருமானாலேயே தன் தாய் எனப் போற்றப்பட்டவர். பேயுரு எடுத்துத் தலையாலேயே நடந்து கயிலாயம் வந்த  காரைக்கால் அம்மையாரைப் பார்த்து வியந்தாள் பார்வதி தேவி.  இவர் யார் எனத் தன் நாயகனான சிவபெருமானிடம் வினவினாள். சிவனார்,  'நம்மைப் பேணும் அம்மைகாண்!’ என பதிலிறுத்து 'அம்மையே வருக!’ எனக் காரைக்கால் அம்மையாரை வரவேற்றார் என்றால் அவர் பெருமை  புலப்படும். 'வேண்டுவன கேள்!' எனச் சிவன் காரைக்கால் அம்மையாரிடம் வினவியபோது, மீண்டும் பிறவாதிருத்தலையே வரமாகக் கேட்டார் அவர்.

'இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும்போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.’  
 
என்பது காரைக்கால் அம்மையார் இறைவனிடம் வேண்டிப் பாடிய தமிழ்ச் சுவை நிறைந்த பாடல். பிறவாமையையும் ஒருவேளை மறுபடிப் பிறக்க  நேர்ந்தால் சிவபெருமானை என்றும் மறவாமையையும் வரமாகக் கேட்கும் பாடல் இது.
 
'பிறவா வரம் தாரும் பெம்மானே பிறந்தாலுன் திருவடி மறவா வரம் தாரும் மாநிலமேலினிப் பிறவா வரம் தாரும் பெம்மானே....’ என்று  அண்மைக்காலத்தில் எழுதப்பட்ட பாபநாசம் சிவன் கீர்த்தனை, காரைக்கால் அம்மையாரின் வேண்டுதலைத் தானும் வழிமொழிந்து எழுதிய  கீர்த்தனைதான்.அருணகிரிநாதர் அவிநாசித் திருத்தல முருகப் பெருமானைப் பற்றித் தாம் எழுதிய திருப்புகழில் இறவாமல் இருப்பதையும் பிறவாமல்  இருப்பதையும் ஒருசேர வேண்டுகிறார்:

‘‘இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத்
தருவாயே!
குறமாதைப் புணர்வோனே! குகனே!
சொற் குமரேசா
அறநூலைப் புகல்வோனே! அவிநாசிப்
பெருமாளே!’’

ராமலிங்க வள்ளலாரும் பிறவாமை வழியை உணராதிருக்கும் மானிடரை எண்ணி இரங்குகின்றார்.

'ஆயாமை யாலே நீர் ஆதி அனாதி
  ஆகிய சோதியை அறிந்துகொள் கில்லீர்
மாயாமை பிறவாமை வழியொன்றும் உணரீர்
  மறவாமை நினையாமை வகைசிறி தறியீர்
காயாமை பழுக்கின்ற கருத்தையும் கருதீர்
  கண்மூடித் திரிகின்றீர் கனிவொடும் இரப்போர்க்கு
ஈயாமை ஒன்றையே இன்துணை என்பீர்
  எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.’

வள்ளலார் ஐம்பது ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் இவ்வுலகில் உடல் தரித்து வாழ்ந்தார். பிறவா நிலையை அடைய விரும்பிய அவர் தன் உடலை  பிரபஞ்சத்தில் கரைத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. தம் வாழ்வின் கடைசி மூன்று மாதங்கள் அவர் மோனத்தில் ஆழ்ந்தார். 1874 ஜனவரி  முடிவில் மூன்று மாத மோனத்தைத் துறந்து பேசலானார்.  பல முக்கியமான அறிவுரைகளை அன்பர்களுக்கு வழங்கினார். படுக்கையில்  சாய்ந்துகொண்டார். தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாகி குருநிலை பெற்று சித்துகள் புரியும் என்று  அவர் குறிப்பிட்டதாய்ச் சொல்கிறார்கள்.   அவர் கட்டளையிட்டபடி, அறைக் கதவுகள் மூடப்பட்டன. அறையில் காற்றுப் போவதற்கும் இடமில்லை.  சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறந்தபோது அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலாரது உருவத்தின் எந்த ஒரு சுவடும்  அங்கே  தென்படவில்லை. வள்ளலார் தாம் சொன்னவாறே இந்தப் புவியெங்கும் கலந்து நிறைந்துவிட்டார்.

சித்தர்கள் மறைந்தாலும் மறைவதில்லை. அவர்கள் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை. வள்ளுவர்  சொல்லும் பிறவாமை என்ற  நிலையைச் சித்தர்கள் அடைந்துவிடுகிறார்கள். ராகவேந்திரர், சதாசிவப் பிரம்மேந்திரர் போன்றோர் ஜீவசமாதி  அடைந்தவர்கள். அவர்கள் சமாதியில் இருந்தாலும்  ஜீவனுடன் இருப்பதாக அடியவர்கள் உணர்கிறார்கள். திருச்சி அருகே கரூரை அடுத்துள்ள  நெரூரில் அமராவதி நதிக்கரையில் மகான் சதாசிவப் பிரம்மேந்திரரின் ஜீவ சமாதி இருக்கிறது. அங்கு மாலை நேரங்களில் பிரம்மேந்திரர்  உலவுவதாலும் தியானத்தில் ஆழ்வதாலும் அங்கு வரும் அடியவர்கள் சப்தம் செய்யலாகாது என எழுதி வைத்திருக்கிறார்கள். கி.பி. பத்தொன்பதாம்  நூற்றாண்டில் மானிய நிலங்களையெல்லாம் அரசுடைமை ஆக்கவேண்டும் என்று அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.  ராகவேந்திரர் மடத்திலிருந்தும் மற்றும் மந்திராலயத்திலிருந்தும் வரும் வருவாயை மடம் அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தது.

 தாமஸ் மன்றோ என்ற செட்டில்மென்ட் அதிகாரி ஸ்ரீராகவேந்திரரின் ஜீவசமாதி இருக்கும் மந்திராலய நிலத்தை அரசுடைமை ஆக்குவதற்கு  அந்நிலத்தை அளவெடுக்கும் பொருட்டு அங்கு  வந்தான். அப்போது என்ன ஆச்சரியம்! ஜீவசமாதியிலிருந்து நிலவுபோல் வெளிப்பட்டு தாமஸ்  மன்றோவுக்குக் காட்சி தந்தார் மகான் ராகவேந்திரர். 'இந்த அடாத செயல் தகாது’ என அன்போடு அறிவுறுத்தி மறைந்தார். இயற்கையிலேயே ஆன்மிக  மனம் கொண்ட தாமஸ் மன்றோ, ராகவேந்திர தரிசனத்தால் பரவசம் கொண்டார். தனது அறிக்கையை மடத்திற்கு சாதகமாக வழங்கி ஆணை  பிறப்பித்தார். இச்செய்தி அன்றைய மதராஸ் அரசாங்க கெஜட் புத்தகத்திலும் பதிவாகியுள்ளது. தாமஸ் மன்றோ வெளியிட்ட ஆணை இன்றும்  மந்திராலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மகான் ராகவேந்திரர் பிறவாமையை அடைந்துவிட்டார் என்பதையும் நிரந்தரமாக வாழ்கிறார்  என்பதையும்இச்செய்தி உறுதிப்படுத்துகிறது.  

ரமண மகரிஷி சித்தி அடைந்த அதே நேரத்தில் வானில் ஒரு நட்சத்திரம் தோன்றி உயரே சென்று கலந்தது. இதுகுறித்து எழுத்தாளர் கல்கி  கிருஷ்ணமூர்த்தி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்துள்ளார். ரமண மகரிஷியும் வள்ளுவர் சொல்லும் பிறவாத நிலையை அடைந்தார் என்பதை  அவர் சரித்திரம் புலப்படுத்துகிறது. இந்து நெறிப்படி வாழ்பவர்கள் அடையவேண்டிய இறுதி லட்சியம் என்பது, மறுபடி இந்த மண்ணுலகில்  பிறவாதிருப்பது தான். அந்த லட்சியத்தை வள்ளுவரும் வலியுறுத்துகிறார் என்பதை உணரும்போது உலகியல் நெறிகள் பலவற்றை போதித்த அவர்,  எவ்வளவு சிறந்த ஆன்மிகவாதியாகவும் திகழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

 • drawing20

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்