SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெயிலுக்கு ஒதுங்க உதவுமா உடல் நிழல்

2019-05-30@ 10:26:49

*இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் : 26

‘அணிகளின் தாய்’ என உவமையை இலக்கண நூல் கூறும். ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும், அனுபவப் பெருக்கையும் அலங்காரமாகக் காட்டுவதே  உன்னதமான உவமைகள் தான்! இறைமை இன்பத்தை’ எதனோடு ஒப்பிடுவது?  பக்தர்களின் நெஞ்சத்தில் பரவும் பரவசத்தை எழுத்துக்களில்  காட்டிவிட முடியும் என்றால் அதை எல்லையற்ற உல்லாசம் என எவ்வாறு ஏற்க முடியும்? சின்னச் சின்ன இன்பங்களில் நாம் சிலிர்க்கிறோம்.  அதையே வார்த்தைகளில் எடுத்து வடித்துவிட முடிவதில்லையே! பாயசம் பந்தியில் பரிமாறப்பட்டதே! ஆஹா அற்புதம் எனச் சொல்வோமே தவிர,  முழு சுகத்தையும் எதிராளிக்குச் சொற்கள் மூலமே சொல்லிவிட முடிகிறதா ? அவரையும் பந்தியில் உட்காரவைத்து ‘அனுபவித்து அறிந்து  கொள்ளுங்கள் ’ என்று தானே ஆற்றுப்படுத்துகிறோம்.

சர்க்கரை ஒருவித இனிப்பு. வெல்லம் இன்னொருவகை இனிப்பு. கரும்பு தரும் களிப்பே தனி. பால் தரும் பரவசம் அது வேறு. தேனின் தித்திப்பு ஒரு  தேவசுகம். எல்லாமே இனிப்பு தான்! எந்த இனிப்பையுமே எப்படி இருக்கும் எனச் சொற்கள் சுட்டிக் காட்டாது. அற்புதம். ஆனந்தம்! என அனுபவப்  பெருமிதத்தில் தலையை அசைத்து நாவால் சப்புக் கொட்டலாமே தவிர இவ்வாறு இனித்தது என எழுத்தில் வடிக்க முடியுமா? அருணகிரி பாடுகிறார்:

 ‘‘அவ்வாறு அறிவார் அறிகின்ற தலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே!
தன்னந் தனிநின்றது தான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ!’’
 
ஆம்! ‘ இறைமை இன்பம்’ இதயம் முழுவதும் பரவும் சுகானுபவம். விநாடி நேர இனிமையையே நம்மால் விவரிக்க முடியவில்லையே! ஆத்மா  முழுதும் பரவும் ஆனந்தத்தை அறிந்தவர்களே அறிவார். தேனுக்குள் இன்பம் சிவப்போ? கருப்போ? ஆன்மிக இன்பத்தை  உண்ட நெஞ்சு அறிதேனே!  வானோர் பெருமாளே’

என உவமித்துப் பேரின்பச் சுவை பொங்கப் பேசுகிறார் அருணகிரியார். நூறாயிரம் நினைவுகள் நொடிக்கு நொடி வந்து போகிற இடமாக விளங்குகிறது  மனிதனின் மனம்.
சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது அரிது காண்’

என மகான்களே கூறுகிறபோது மனிதர்களாகிய நாமெல்லாம் எம்மாத்திரம்? இடையீடு என்பதே இல்லாமல் இயங்கிக் கொண்டே இருக்கும்  இம்மனத்திற்கு
உவமையாக எதை உபயோகிப்பது? ‘வாக்கிற்கு அருணகிரி’ எனக் கவிஞர்களே புகழும் அருணகிரியார் மனத்திற்குச் சொல்லும் உவமை என்ன  தெரியுமா? ஐங்கரனை ஒத்தமனம் ’- அப்படி என்றால் என்ன பொருள் என மனம் அவாவுகின்றதா?

ஆய்வாளர்கள் தோயத்தோய இதன் அர்த்தம் ஆகாயம்போல விரிந்து கொண்டே போகிறது. ‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை ’ என விநாயகரைப்  போற்றுகிறோம் நாம். ஐந்து கைகளால் யானைமுகக் கடவுள் தொழிற்படுவதுபோல் நம் மனமும் ஐம்பொறிகளால் செயல்படுகிறது. எனவே ‘ஐங்கரனை  ஒத்த மனம்’ என்றார் அருணகிரியார்.
அதுமட்டுமன்று, ஐங்கரன் என்பதற்கு ‘யானை’ எனவும் பொருள் கொள்ளலாம். யானை இடையறாது அசைந்து கொண்டே இருக்கும். ‘யானை அசைந்து  தின்னும் வீடு அசையாமல் தின்னும்’ என்ற பழமொழியை அறிவோமே! அசைந்து கொண்டே இருக்கும் யானைபோல இந்த ஆசை மனமும் ஆடிக்  கொண்டே இருக்கிறது என மனத்திற்குத் தொழில் உவமை கூறினார்.

புராணப்படி பார்த்தால் இந்த உவமை மேலும் பொலிவு பெறுகிறது. பழம் பெறுவதற்காக விநாயகர் பெற்றோரைச் சுற்றியே கனி பெற்றார் என்ற  கதையை மனதில்
இருத்திப் பாருங்கள். இருந்த இடத்தில் வலமாகச் சுற்றியே ஏழுலகங்களும் சுற்றிய பெருமை விநாயகருக்கு உண்டு. நம் மனமும் ஓரிடத்தில்  இயங்கியபடியே எல்லா உலகையும் வலம் வருகிறதே! எனவே இந்நோக்கிலும் ‘ஐங்கரனை ஒத்தமனம்’ என்பது அற்புதமாகப் பொருந்துகிறது  அல்லவா! மேலும் அனைத்து வழிபாட்டு நெறியினரும் முதலில் விநாயகரைத் தொழவேண்டும் என்பது தானே இந்து மக்கள் இதயத்தில் பதித்த  இனிய விதி! அவர்தான் முதல்வர்! அவரின்றி எச்செயலும் நிகழாது. அது போல் மனம்தான் எல்லாவற்றிற்கும் மூலம்! முதல்! மனம் வைத்தால்  தானே எதுவும் நடக்கும்! எனவே தான் ‘ஐங்கரனை ஒத்தமனம்’ என அழகாக உரைத்தார் அருணை முனிவர்.

பல பொருள் தருகிறது இந்த ஒரு உவமை. உலகத்தில் பிறந்த அனைவரும் நற்செயல் செய்து மனித பிறப்பின் மகத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்.  ஏதோ ‘பிறந்தோம். இருந்தோம், இறந்தோம்’ என்கிற வெறும் சாரமற்ற சொற்களாகச் சரிந்து விடலாமா நம் வாழ்வு, சுடர்விட வேண்டாமா ?  அற்புதமான செயல் இலி’ எனக் கடிந்து கொள்கிறார். பழநித் திருப்புகழில் நமது பரமகுருநாதர், நெல்மணிகள் நிறைய உள்ள கதிர்போல நம் வாழ்வு  இருந்தால் அடுத்தவர்களுக்கும் அன்னம் அளிப்போம், வெறும் பதராக சாவியாக ஆனால் பதற வேண்டாமா? ‘ஆவி சாவியாகாமல் நீ சற்று  அருள்வாயே’ என வேலவனிடம் வேண்டுகோள் விடுக்கிறார் அருணகிரியார்.

அடுத்தவர்களுக்கு உதவுவதுதான் மனித வாழ்வின் அடிப்படை லட்சியமாக அமையவேண்டும். ‘பரோபகார்த்தம் இதம் சரீரம் ‘இந்தப் பிறப்பு ஒரு  விபத்து, ஒருவன் நினைத்து ஒரு குலத்தில் பிறப்பதில்லை. அவ்வாறே இடம், இனம், உயர்குடி என எதுவும் நாம் எண்ணிப் பிறப்பில் வந்ததல்ல,  இங்கு இவன் பிறக்க வேண்டும்’ எனும் தேர்வு தெய்வத்தின் கையில் அல்லவா’ இருக்கிறது. செல்வந்தனுக்குப் பிறந்தவன் தங்கக் கிண்ணத்தில்  பால்சோறு அருந்துகிறான்.

ஏழைக்குப் பிறந்தவனோ ஏன் இந்த நிலை என வருந்துகிறான். எனவே வளமான வாழ்வு, வசதி முன்வினைப் பரிசு. ‘ பதவி பூர்வ புண்யாணாம்’ எனத்  தேர்ந்து தெளிந்து வறுமையுற்றவர்களுக்கு வழங்கி மனிதன் மேம்பட வேண்டும். வையிற் கதிர் வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்  நொய்யிற் பிளவு அளவேனும் பகிர்மின்கான்’ என்கிறார் அருணகிரிநாதர்.

நாம் செய்யும் அறச்செயல்கள் மட்டுமே நம்மோடு கூடவரும். ‘பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவங்களே ’ என்பார் பட்டினத்தடிகள்.  ஈத்துவக்கும் இன்பம் அறியாமல் பெரும் பொருள் சேர்த்து வைத்தால் அது நம் கூடவா வரப்போகிறது ?’ ஆழப் புதைத்து வைத்தால் வருமோ தும்  அடிப் பிறகே !’ என எச்சரிக்கிறார் அருணகிரியார்.சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செருப்புகூட அணியாமல் பாலைவனத்தில் ஒருவன் பயணப்பட்டு விட்டான். சூடு தாங்காமல் தவிக்கிறான். ஒதுக்கி  நிற்க ஒருமரம் கூட இல்லை. தகிக்கிறது சூரியன்! அவனுக்குத் தெரிவது அவன் நிழல் மட்டுமே! தன் நிழலில் தானே ஒதுங்க முடியுமா? அப்படித்தான் உன்  செல்வ வளம் உன் கடைசி காலத்தில் உனக்கு உதவாது. உடன் வராது என

‘வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின்
வெறு நிழல் போல்
கையிற் பொருளும் உதவாது
சாணும் கடைவழிக்கே!’

என்கிறார் அருணகிரியார். உள்ளத்தில் நிற்கும் உவமை கேட்டபிறகும் மனிதநேயம் மலராத மனம் இருக்க முடியுமா? இதைப்போல் உவமைகள்  ஆயிரமாயிரம் உள்ளன அருணகிரியாரின் நூல்களில்.அவை அனைத்தையும் படிப்போம்!
அகத்தில் பதிப்போம்!
(இனிக்கும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-05-2020

  22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்