SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலாயுதத்தைப் பிரயோகித்த பெருமானே!

2019-05-30@ 10:22:28

* அருணகிரி உலா 77

ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் நுழையு முன் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பூட்டிய இரு பெரிய கதவுகள் தென்படுகின்றன. வெளியே நின்றபடி  எட்டிப் பார்த்தபோது சற்றும் பராமரிக்கப்படாத குளம் ஒன்று கண்ணில்படுகிறது. இதுதான் குளமாக மாறி விட்ட கம்பையாறு என்று கேள்விப்பட்டு  மனம் வருந்துகிறது. துப்புரவுப் பணி செய்யும் இரண்டு பெண்கள் பூட்டிய வாயிலைத் திறந்து உள்ளே செல்வது கண்டு நாமும் ஆர்வமுடன் உள்ளே  நுழைகிறோம். பக்கவாட்டில் குளமும், எதிரே மிகப்பழமையான ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன.

ஆயிரங்கால் மண்டபம் தமிழ்நாட்டுப் புலவர்கள் கூடுமிடமாகவும், நூல்கள் அரங்கேற்று மிடமாகவும், இலக்கிய இலக்கணங்கள் கற்குமிடமாகவும்  இருந்து வந்துள்ளது என்று கேள்விப்படுகிறோம். கோட்டை போன்ற அமைப்பும் காவலும் உடையதாக இருந்ததால் முஸ்லிம் ஆட்சியிலும், ஆங்கில  பிரெஞ்சு ஆட்சிகளிலும் போரில் படைகள் தங்கி, பீரங்கிகளுடனும் துப்பாக்கிகளுடனும் போரிடும் தளமாகவும் விளங்கியுள்ளது. சென்ற நூற்றாண்டில்  உடைந்த தூண்கள் பல சீரமைக்கப்பட்டு வேதபாடசாலையாகவும் திகழ்ந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால் மண்டபத்தில் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக விளங்குகின்றது. பொது மக்கள் தவறான முறைகளில் இவ்விடத்தைப்  பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இன்று இதன் வாயில்கள் அடைக்கப்பட்டுவிட்டன. மண்டபத்தின் பரந்த மேற்கூரையில் நின்று கோயிலின்  கோபுரங்களைத் தரிசிக்க முடிந்தது. ஆயிரக்கால் மண்டபத்தின் மறுபகுதிக்குச் சென்றபோது பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. கந்தபுராணத்திலும்,  காஞ்சி புராணத்திலும் போற்றப்படும் விநாயகர் இங்கு அமைதியாக வீற்றிருக்கிறார். அருகில் ஆறுமுகனும் மறுபுறம் காட்சியளிக்கிறார். தெய்வ  சகோதரர்களைக் கண்டு மகிழ்கிறோம். விநாயகர் ‘விகட சக்கர விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இப்பெயர்க்காரணத்திற்கான புராணக்குறிப்பு மிகவும் சுவையானது. வீரபத்திரன், தட்சன் வேள்வியை அழித்த பொழுது அவர் மீது திருமால் ஏவிய  சக்கரத்தை அவரது மார்பிலிருந்த வெண்தலை ஒன்று வாயில் கவ்விக் கொண்டது. வீரபத்திரர் காஞ்சி வழியாகச் சென்றபோது அவரை வணங்கி  விஷ்வக்சேனன் சக்கரத்தைத் தருமாறு விண்ணப்பித்தார்.

‘‘திருமால் சக்கரம் நம் வெண்டலை வாயிலுள்ளது; எப்படியேனும் பெறுக’’ என்றார் வீரபத்திரர். பார்த்தவர்களுக்கு நகைப்பு உண்டாகும் படி  விஷ்வக்சேனன் சில விகடக் கூத்துக்களை ஆடிய பொழுது யாவரும் பெருநகைப்பாகச் சிரித்தனர். வெண்டலையும் சிரித்த பொழுது சக்கரம் கீழே  விழுந்தது. அதை விநாயகர் விரைந்து எடுத்துக் கொண்டு ஒன்றுமறியாதவர் போல் நின்று விட்டார். விஷ்வக்சேனர் முன்பு ஆடிய விகடக்கூத்தை  மீண்டும் விநாயகர் முன் ஆடினார். அதைக் கண்டு மகிழ்ந்து விநாயகர் சக்ரத்தைக் கொடுத்தருளினார். விகட நடனத்தை விரும்பிக் கண்டு களித்து  சக்கரத்தைக் கொடுத்தமையால் ‘விகடசக்கர விநாயகர்’ என்ற பெயருடன் விளங்குகின்றார்.

‘‘இவரது திருவுருவம் ஆயிரங்கால் மண்டபத்தோடு ஒரு காலத்தில் மண்மேட்டில் மறைந்து ஒருவர் கண்ணிலும் படாமல் இருந்தது. அக்காலத்தில்  இரட்டைப் புலவர்கள் தாங்கள் பாடிய’ ஏகாம்பர நாதர் உலா’ எனும் நூலில் இவ்விநாயகரை ஆயிரங்கால் மண்டபத்துடன் காப்புச் செய்யுளில்  பாடினார்கள். இதையறிந்த அரசர்கள் பிற்காலத்தில் மணல் மேட்டை அகழ்ந்து ஆயிரங்கால் மண்டபத்துடன் விகட சக்கர விநாயகரையும் கண்டு  மகிழ்ந்தனர்’’ என்று குறிப்பிடுகிறார் மகா வித்துவான், சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கள்.
 கச்சியப்ப முனிவர் காஞ்சி புராண நூலில் விகட சக்கர விநாயகரைக் காப்புச் செய்யுளில் பின்வருமாறு பாடுகிறார்

‘‘பகட சக்கர முதற்பல பவமெனும் துயரின்
  நிகட சக்கரம் கடத்திடு நெடும்புனை விண்போழ்
  முகட சக்கர வாளத்திற் சூழ் வினை முடிக்கும்
  விகட சக்கர தந்தி மென் மலரடித் துணையே’’

பொருள்: யானை (பகடு) அசம் (ஆடு) கரம் (கழுதை) ஆகிய பல பிறவிகள் என்னும் நெருங்கிய துயர்க்கடலில் இருந்து நம்மைக் கரையேற்றும் பெரிய  தெப்பமாக உள்ளவை, விண்ணைப் பிளக்கும் உயர்ந்த சிகரங்களை உடைய சக்கரவாளகிரி போன்று, நம்மைப் பிணிக்கும் இருவினைகளை அழிக்கின்ற  விகட சக்கர  விநாயகருடைய மெல்லிய மலர் போன்ற இரு திருவடிகளே ஆகும். கந்தபுராணத்திலும் காப்புச் செய்யுளில் விகடச் சக்கர விநாயகரைப்  போற்றியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

‘‘திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரர் மெய்ப்பதம் போற்றுவாம்’’

என்பது அப்பாடல்  காஞ்சித் திருப்புகழொன்றை சகோதரர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘கன க்ரவுஞ்சத்தில் சத்தியை விட்டன்று    
அசுரர் தண்டத்தைச் செற்று அவிதழ்ப்
 பங்கயனை முன் குட்டிக் கைத்தளை யிட்டும் பரையாளுங்கடவுள் அன்புற்று கற்றவர் சுற்றும்
பெரிய தும்பிக்கைக் கற்பகம் முன்தம்
கரதலம் பற்றப் பெற்ற வொருத்தன் ஜகதாதை
புன இளந் தந்தைக்கு இச்சை உரைக்கும்
புரவலன் பத்தர்க்குத் துணை நிற்கும்    
புதியவன் செச்சைப் புட்ப மணக்கும் பலபாரப்
புயனெனும் சொற் கற்றுப் பிற கற்கும்    
பசையொழிந்து அத்தத்து இக்கு என நிற்கும்
பொருள் தொறும் பொத்தப் பட்ட தொர் அத்தம் பெறுவேனோ’’

வலிய பொன்மலையாம் கிரௌஞ்சகிரி மீது வேலைப் பிரயோகித்து, அதன் மூலம் அரக்கர் படையை அழித்தவன்; பல இதழ்களுடைய தாமரையில்  உதித்த பிரமனைக் குட்டி விலங்கிட்டு தேவர்களைக் காத்த கடவுள். புலவோர்கள் ஞான நூல்களைக் கற்று அன்புடன் பிரதட்சிணம் செய்யும் பெரிய  துதிக்கை உடையவரும், கற்பகம் போன்றவருமான கணபதியால் முன்பு கைப்பிடித்து அழைத்துச் செல்லப்பட்ட பால குமாரன், உலகிற்குத் தந்தை.

தினைப்புனக்கிளியிடம் தன் காதலை எடுத்துரைத்த தலைவன், முன்னைப் பரம் பொருளானாலும் தன் பக்தர்களுக்கு எப்போதும் துணைபோகும்  புதியவன். வெட்சி மலர் வாசம் திண்ணிய தோள்களை உடையவன் என்றெல்லாம் உன்னைப் புகழும் சொற்களைக் கற்றுக் கொண்டு மற்ற  உலகரீதியான சாஸ்திரங்களைக் கற்கும் பழக்கத்தை அறவே ஒழித்து, அர்த்தத்திலே கரும்பு போல் இனிக்கும் குணம் அமைய, செய்யுள் தோறும்  பொதியப்படுவதான ஒரு செல்வத்தை அடைவேனோ? [அடைய நீ அருள்வாயாக]விகட சக்கர விநாயகருக்கும், அறுமுகனுக்கும் பல்லவ கோபுரம் வழியாக உள்ளே வந்து பூஜை செய்து விட்டு மீண்டும் வாசலைப் பூட்டி விட்டு  அர்ச்சகர்கள் வெளியே செல்வதையும் கண்டோம்.

ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு வெளியே வந்து ராஜகோபுரம் அருகில் வருகிறோம். விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயர் காலத்தில் தான்  இக்கோயிலின் தெற்கு வாயில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோபுரம் 1509 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது என்பதை விதானத்தில்  காணப்பெறும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள இரு கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. கோபுரத்தின் உயரம் 192 அடி, அலகம் 82 அடி,  அன்பேசிவம் என எழுதப்பட்ட மண்டபம் தென்படுகிறது. முகப்பிலுள்ள ரிஷபாரூடனர் நம்மை மிகவும் கவர்கிறார். கோபுரத்தின்  இருபுறமும்  சிவகுமாரர்கள் வீற்றிருக்கின்றனர்.

தொலைவில் சரபேச மண்டபம் எனப்படும் வாகன மண்டபம் தென்படுகிறது. திருவிழாக் காலங்களில் சுவாமி இங்கு எழுந்தருளி வாகனத்திலமர்ந்து  வீதி உலா செல்வார். கோயிலருகே செல்லும் போது கொடி மரத்தையும் அழகுற அமர்ந்திருக்கும் அதிகார நந்தியையும் வணங்குகிறோம். எதிரே  கண்ணுக்குத் தெரிவது சிவகங்கைத் தீர்த்தமும் அதனருகே உள்ள மண்டபங்களுமே.

கொடி மரத்தருகே கச்சி மயானேஸ்வரர் தனிச்சந்நதி உள்ளது.   அப்பர் பெருமானின் வாக்கில் ‘‘மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி  மயானத்தான்....’’  என்று வரும் திருப்புகலூர்ப் பதிகத்திலிருந்து, இச்சந்நதி அவரது காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலே இங்கு இருந்திருக்கிறது  என்றறியலாம்! இச்சந்நதி பற்றிய புராணக் குறிப்பு உள்ளது. பந்தகாசுரன் எனும் அசுரன் அனைத்து தேவர்களுள்ளும் கலந்து அவர்களது வீரியங்களை  உணவாக உண்டு வந்தான், தன்னிடம் தஞ்சமடைந்த தேவர்களை யாகத் திரவியங்களாக  மாறிக்  காஞ்சியில் சென்றிருக்கும்படி ஆணையிட்டார்  சிவபெருமான்.

தனது வலப்பாகத்தில் குண்டம் ஒன்று உண்டாக்கி அதில் வாமதேவ மூர்த்தியை நெய் வடிவாக நிறைந்திருக்கச் செய்தார். பந்தகா சுரனையும் சேர்த்து  அனைத்து உயிரினங்களையும் யாகாக்னியில் இட்டார். அசுரன் நீங்கலாக அனைவரையும் உயிர்ப்பித்து எழச் செய்யும் பொறுப்பை லலிதா தேவியிடம்  கொடுத்தார். தேவியும் அவ்வாறே செய்ய, பிரம்மன் முதலான அனைவரும் உறங்கி எழுவது போன்று உயிர்த்து  எழு, பந்தகாசுரன் மட்டும் அழிந்து  போனான். இக்காரணத்தால் இறைவன் ‘திருக்கச்சி மயானேச்வரர் ’ என்று பெயர் பெற்றார்.

கோயிலுள் நுழையுமுன் இடப்புறம் கரிகால் சோழனின் உருவச்சிலையைக்  காணலாம். நுழைவாயிலருகே 3500 ஆண்டுகள் புராதனமான மாமரத்தின்  ஒரு பகுதி கண்ணாடிப் பேழைக்குள்  காப்பாற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அம்பிகை லிங்கத்தைப் பூஜை செய்யும்  காட்சி அதைச் சிற்பமாக  அமைக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ளது, பவித்ர உற்சவ  மண்டபம். இங்கிருந்து நேரே பார்த்தால் ஏகாம்ப ரேஸ்வரர் காட்சி அளிக்கிறார். மணல் லிங்கம்;  புனுகுச் சட்டம் சார்த்தப்பட்டு விளங்குகிறது. வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் உண்டு. லிங்கத்தின்  பின்புறம் சோமாஸ்கந்தர் காட்சி அளிக்கிறார். ‘‘சிந்தய மா கந்த மூல கந்தம் சே ஸ்ரீசோமாஸ்கந்தம் ’’ என்று இங்கு முத்து சுவாமி தீட்சிதர்  பாடியுள்ளார். மூலவரை வணங்கி ஒரு காஞ்சித் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘அமகர ஆசாம்பர அதுகர ஏகாம்பர
அதுலன நீலாம்பரம் அறியாத
அநகர நாளாங்கிதர் தமை உமையாள்
சேர்ந்தருள்
அறமுறு சீகாஞ்சியில் உறைவோனே.
 விமல கிராதாங்கனை தனகிரி தோய் காங்கெய
வெடிபடு தேவேந்திர நகர் வாழ
விரிகடல் தீமூண்டிட நிசிசரர் வேர்மாண்டிட
வினையற வேல் வாங்கிய பெருமாளே!

பொருள்: அமகர - உகாரத்தை இடையில் வைத்துள்ள அகர மகர சேர்க்கையான ஓங்கார உருவர்.

ஆசாம்பர :- திகம்பர -திக்குகளையே ஆடையாக உடையவர்.

அதுகர :- அது என்று அஃறிணை நிலையிலும் போற்றப்படும் பொருள்களுக்கும் தலைவர்.
ஏகாம்பர - ஒரு மாமரத்தின் கீழ் தோன்றியவர்.
அதுலன - ஒப்பற்ற.
அனம் நீல அம்பரம் அறியாத :- அன்னரூபம் கொண்ட பிரமனும், நீலக்கடல் போன்ற வண்ணமுடைய திருமாலும் அறியாத
அநகர் :- பாபமற்றவர்
அம்நாள அங்கிதர் :- இறைவி வெள்ளத்தைக் கண்டு பயந்தது இறுகத் தழுவிக் கொண்டதால் அவளது அழகிய முலைக்காம்பின் தழும்பைப் பெற்றவர்.இத்தகு பெருமைகளை உடைய சிவ பெருமானைத் தன் தவத்தினால் பார்வதி அடையப்பெற்றதும், முப்பத்திரண்டறங்கள் நிகழப் பெற்றதுமான ஸ்ரீ  காஞ்சித் தலத்தில் வீற்றிருப்பவனே!பரிசுத்தமானவனே! வேடர் குலப் பெண்ணான வள்ளியின் மார்பில் அணைபவனே! கங்கை மைந்தவனே! நறுமணம் கமழ்கின்ற தேவலோகம் வாழும்.  பொருட்டு பரந்த கடல் தீப்பற்றவும், அசுரர்கள் வேரோடு  அழியவும், அடியார்களின் தீவினை அனைத்தும் அழியும்படியும் வேலாயுதத்தைப்  பிரயோகித்த பெருமாளே![வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு எனும் இரு தனி வகுப்புகளை அருணகிரியார் பாடியுள்ளார்] வேதத்தின் முடிவானதும், பேரின்பமயமானதும் ஆன  முத்தி வீடாகிய நன்மை தரும் பாத கமலங்களைத் தந்தருள வேண்டும் எனவும் வேண்டுகிறார்.

‘‘வேதாந்த பரமசுக வீடாம் பொருள்
இதவிய பாதாம்புயம் அருள்வாயே’’

(உலா தொடரும்)
சித்ரா மூர்த்தி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்