SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறந்த தேதி பலன்கள் : ஏப்ரல் 6 முதல் 12 வரை

2013-12-11@ 16:00:48

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வெளிநாட்டுத் தொடர்பு இருக்கறவங்களுக்கு இந்த வாரம் அனுகூலமான செய்திகள் வந்து சேருமுங்க. அங்கே தொழில், வியாபாரம் அல்லது மேல்படிப்புக்காகப் போறவங்க வெற்றி வாகை சூடி வருவீங்க. உத்யோகஸ்தர்கள் மட்டும், முக்கியமா அரசாங்கப் பணியில் இருக்கறவங்க, அற்ப சலுகைகளை எதிர்பார்த்து, தகுதியில்லாதவங்களுக்கு சலுகை காட்டி, உங்க மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துக்காதீங்க. குடும்பத்ல பெற்றோர் உடல்நலம் மனவருத்தம் தரும்; ஆனா, உங்களோட ஆதரவான கவனிப்பால அவங்க உடனே குணமாகிடுவாங்க. சிலர் புது வீடு அல்லது மனை வாங்குவீங்க. இதுக்காக எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்குமுங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல சிலருக்குப் பிரச்னை வருமுங்க. வேறு சிலர் ஒவ்வாமையால பாதிக்கப்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் புகுந்த வீட்டை குறை சொல்லிகிட்டிருக்காதீங்க. ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்ங்க; வளம் கொழிக்கும்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

புதுமையான சிந்தனையால் புதிய உயரத்துக்குப் போவீங்க. குறிப்பாக படைப்பாளிகள் புதிய அங்கீகாரம் பெறுவீங்க. சிலர் அரசு விருதுகள் பெறவும் வாய்ப்பு இருக்குங்க. மனக் குழப்பங்கள் விலகி, தெளிவாகிடுவீங்க. உங்க கருத்துகளையும் யோசனைகளையும் பிறர் ஏற்றுப்பாங்க. இதனால குடும்பத்ல நிம்மதி உருவாகுமுங்க. தயக்கங்களை விலக்குங்க. தைரியத்தை வளர்த்துக்கோங்க. அனாவசியமா கற்பனை பண்ணிக்காதீங்க. பின்விளைவு எப்படியிருந்தாலும் அப்போ சமாளிச்சுக்கலாங்கற மன தைரியம் வளருமுங்க. இதனால புது கௌரவத்தையும் உயர்வையும் அடைவீங்க. தொழில், வியாபாரம், உத்யோகம் எல்லா இடத்லேயும் உங்க திட்டங்கள்லாம் எல்லோராலும் பாராட்டப்படுமுங்க. தொண்டை, உணவுக்குழாய், வயிற்றுப் பகுதிகள்ல உபத்திரவம் ஏற்படுமுங்க.

இந்தத் தேதிப் பெண்களுடைய யோசனைகளை எல்லோரும் கேட்டுப்பாங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கை தரிசனம் பண்ணுங்க; துக்கம் இனி அண்டாது.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு


குடும்பத்ல எதுக்காகவும் யார்கிட்டேயும் எந்த வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. நீங்க புத்திசாலிதான், சாமர்த்தியசாலிதான். ஆனா, உங்களுக்கும் சறுக்கும்ங்கறதை நினைவில வெச்சுக்கோங்க. யாரையும் குறைச்சு மதிப்பிட்டு தகாத வார்த்தைகளால நோகடிக்காதீங்க. செய்தொழிலில் அங்கீகாரம், சலுகைகள், ஆதாயங்கள் எல்லாம் கிடைக்குமுங்க. வியாபாரத்தை விரிவுபடுத்தவும் உப தொழில் தொடங்கவும் கூடுதல் வசதிகள், வருமானத்துடன் வேறு வேலைன்னும் நிறைய வாய்ப்புகள் எதிர்பாராமலேயே வந்து சேருமுங்க. உங்க திறமை உங்களுக்குப் பல சிறப்புகளைத் தருமுங்க. ஆடை, ஆபரணங்கள், அசையா சொத்துன்னு சேருவதற்கும் வாய்ப்பு இருக்குங்க. ஏற்கனவே முதுகு எலும்பு, ஜீர்ண பாதிப்பு இருக்கறவங்க, தொடர் சிகிச்சையைக் கைவிடாதீங்க.
 
இந்தத் தேதிப் பெண்கள் கோபத்தால் அவமானப்பட வேண்டியிருக்குமுங்க; எச்சரிக்கையா இருங்க. பெருமாளை வழிபடுங்க; பெருமைகள் சேரும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எல்லாமே அனுகூலமாகவே நடக்கும்னு நம்பிக்கையை வளர்த்துக்கோங்க. மனசைத் தளர விடாதீங்க. குடும்பத்ல வேண்டாத விவாதம் மனக்கசப்பை அதிகரிக்குமுங்க. எந்த விஷயத்திலும் காலந்தாழ்த்துவது அல்லது ஒத்திப்போடுவது வேண்டாங்க. சோம்பேறித்தனத்தை அறவே விலக்கிடுங்க. அதிகாலையில், சூரிய உதயத்துக்கு முன்னால எழுந்து அன்றன்றைய வேலைகளைப் பட்டியல் போட்டுக்கிட்டு ஒண்ணொண்ணா முடிங்க. எளிமையான வழி இருக்கும்போது, எதுக்கு அனாவசியமா கஷ்டப்படறீங்க? தலையைச் சுற்றிக் கொண்டு வாயைத் தொடற சுற்றுப்பாதை உத்தியால சின்ன சமாசாரத்தையும் பெரிசாக்கிகிட்டு, நீங்கதான் தேவையில்லாம  சிரமப்படுவீங்க. காது, மூக்கு, தொண்டை பகுதிகள்ல பிரச்னை வருமுங்க. கண் பரிசோதனையைக் கட்டாயமாகச் செய்ங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பொறுமை காத்தால் பெருமையடைவீங்க. மகான் ராகவேந்திரரை வணங்குங்க; நன்மைகள் அணிவகுக்கும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல சுமுகமான சூழ்நிலை தெரியுதுங்க. பெற்றோர் மனங்கோணாமல் நடந்துக்கோங்க. எந்த காரணத்திற்காகவாவது குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருக்கறவங்க ஒண்ணு சேருவீங்க. வீடு, மனை வாங்கறதா இருந்தா, பத்திரத்தில் வில்லங்கம் இல்லாம பார்த்துக்கோங்க; இல்லாட்டி சட்டச் சிக்கல் ஏற்படலாமுங்க. அரசாங்கம் சார்ந்த சமாசாரங்கள், எதிர்பார்த்தபடி, நன்மையாகவே முடியுமுங்க. கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தைரியமும் செயல்திறனும் கூடிவருமுங்க. புதிதாக வெளிநாட்டுத் தொழில்ல ஈடுபடறவங்களுக்கும் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்றவங்களுக்கும் இது ரொம்பவும் சாதகமான காலகட்டமுங்க. ஆதாயங்கள் அதிகரிக்கும். ‘ரிஸ்க்’ எடுத்துகிட்டு ஈடுபடற ஆக்கபூர்வமான விஷயங்கள்ல வெற்றி நிச்சயமுங்க. கழிவுப்பாதை உபத்திரவம் தெரியுதுங்க.

இந்தத் தேதிப் பெண்களுக்கு மனதைரியம் கூடுமுங்க. பார்வதிதேவியை வழிபடுங்க; பார் புகழ வாழ்வீங்க.
 
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில், உத்யோகமெல்லாம் சுமுகமாகவே போய்கிட்டிருக்குங்க. புதிய வரவு சந்தோஷம் தருமுங்க. ஆனா, குடும்பத்ல மறைமுகப் பகை வளரக்கூடிய காலமுங்க. அதனால குடும்ப விவகாரத்ல யாரையும் தலையிட அனுமதிக்காதீங்க. அப்படி தலையிடறவங்க உங்களுக்குத் தீராத தலைவலியை உண்டு பண்ணிடுவாங்க. குடும்பப் பிரச்னை மட்டுமில்லை, உங்க உடல்நலக் கோளாறுக்கும் எல்லார்கிட்டேயும் போய் யோசனை கேட்டுகிட்டிருக்காதீங்க. அவங்க பயமுறுத்தி ஒண்ணுமில்லாத விஷயத்தைப் பெரிசாக்கிடுவாங்க. நீங்களும் விபரீதமா கற்பனை பண்ணிகிட்டு அவதிப்படுவீங்க. ஒற்றைத் தலைவலி, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுன்னு வரும்ங்கறதால முழு உடல் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் தங்கள் குடும்பத்தார் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணுமுங்க. வெள்ளிக்கிழமை விநாயகர் கோயில் அபிஷேகத்திலே கலந்துக்கோங்க; பயம் போய் மனம் தெளியும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்ல வாழ்க்கைத் துணையின் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க; சலிச்சுக்காதீங்க. சிலபேர் குடும்ப பிரச்னையை கோர்ட்டுக்குக் கொண்டு போகக் கூடுமுங்க; எச்சரிக்கையாகப் பேசி, நடந்துகிட்டு, இல்லறத்தை நல்லறமாக்கிக்கோங்க. உத்யோகத்ல இருக்கறவங்க சக ஊழியர்கள்கிட்ட எந்த கருத்து வேற்றுமையையும் வளர்த்துக்காதீங்க; யாரையும் புறஞ்சொல்லாதீங்க. புது அணுகுமுறையால வியாபாரத்ல போட்டிகளை முறியடிப்பீங்க; தொழில்ல, சமீபத்திய சட்ட நுணுக்கங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, முறைப்படி அனுசரிச்சீங்கன்னா பிரச்னையில்லீங்க. வெளிநாட்டிலிருக்கற உறவுக்காரங்க, நண்பர்கள் சமயத்துக்கு உதவுவாங்க. சிலருக்கு மூட்டு வலி வரலாம்; வேறு சிலருக்கு கால்ஷியம் குறைபாட்டால எலும்பு பிரச்னை ஏற்படலாமுங்க.

இந்தத் தேதிப் பெண்கள் குடும்ப வளர்ச்சித் திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்பீங்க. துர்க்கையை மந்திரம் சொல்லி, வழிபடுங்க. மனதுக்கு இனியதே நடக்கும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

குடும்பத்தாரோடு தொலைதூரப் பயண வாய்ப்பைத் தவிர்க்கப் பாருங்க. ரொம்பவும் அவசியம்னா நீங்க மட்டும் போய் வாங்க. குடும்பத்ல பெற்றோர் உடல்நலத்ல அதிக அக்கறை காட்டுங்க. அதேபோல துணைவியார் உடல்நலத்தையும் கருத்தில் கொள்ளுங்க. தியானம், யோகா பழகி மன உளைச்சலை விரட்டுங்க. யாரையும் எந்தச் சூழ்நிலையிலும் பகைச்சுக்காதீங்க. பழைய பகைகளையும் நட்பாக மாத்திக்க முயற்சி பண்ணுங்க. உறவினர், நண்பர்களிடையே வாக்குவாதம் வேண்டாங்க. மனசுக்குள்ள ஒண்ணு நினைச்சுகிட்டு, வாய் ஒண்ணு பேச, அதனால பகைதான் வளருமுங்க. வியாபாரம், தொழில்ல லாபம் அதிகரிக்குமுங்க. உத்யோகத்ல தன்னம்பிக்கை வளரும். ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதிச்சுக்கோங்க. உணவுக் கட்டுப்பாடு தேவைங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பழைய கசப்பான சம்பவங்களை மறந்திட்டு பிறரிடம் பழகணுமுங்க. தட்சிணாமூர்த்தியை வழிபடுங்க; தகுதிகள் வளவும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வியாபாரம், தொழில், உத்யோகம் எல்லாம் பிரச்னை இல்லாம போகும்னாலும் அரசுத்துறை ஊழியர்கள் கவனமா இருக்கணுமுங்க. யாரோ செய்த தவறுக்கு நீங்க பொறுப்பேற்க வேண்டியிருக்கும். மறைமுக எதிரிகளோட பலம் அதிகரிக்குதுங்க. இந்த சந்தர்ப்பத்திலே உங்க பேச்சு, நடவடிக்கைகள்ல ரொம்பவும் நிதானம் காட்டணுமுங்க. எல்லாரும் கவனிக்கறாங்க, முக்கியமா கடவுள் கவனிக்கிறார்ங்கறதை உணர்ந்து செயல்படணுமுங்க. சட்டத்துக்குப் புறம்பான சமாசாரங்களை நினைச்சும் பார்க்காதீங்க; எந்த சபலத்துக்கும் ஆளாகாதீங்க. நரம்பு உபத்திரவம் ஏற்படலாமுங்க. சர்க்கரை நோயாளிகள் பாதங்களில் அடிபடாமல் பார்த்துக்கணுமுங்க. வழுக்கும் இடங்கள், உயரமான பகுதிகள்லேயும் நெருப்புடன் பணியாற்றும்போதும் ரொம்பவும் எச்சரிக்கையா இருங்க.

இந்தத் தேதிப் பெண்கள் பிறர் மனம் வருந்தப் பேசிடாதீங்க. சிவ காயத்ரி சொல்லுங்க; சிவ அபிஷேக தரிசனம் பண்ணுங்க. சிக்கல் எல்லாம் தீரும்.

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-senthilbalaji-8

  சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!

 • athisayangal

  நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்

 • perunad

  பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!

 • turkeydeath11

  துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!

 • lantern-festival-china

  உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்