SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்

2019-04-22@ 17:24:02

நம்ம ஊரு சாமிகள் - குருசாமிபுரம், பாவூர்சத்திரம், நெல்லை

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது குருசாமிபுரம். இந்த குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனினைந்தபெருமாள், சண்முகவடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் குலதெய்வம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தேரிக்குடியிருப்பில் அருள் பாலிக்கும் கற்குவேல் அய்யனார். அங்கு சென்று வழிபட்டு வந்தனர். அதன் பயனாக சண்முக வடிவம்மாள் கருவுற்றாள். அவளுக்கு அழகான பெண் குழுந்தை பிறந்தது. அய்யனார் அருளால் பிறந்ததாலும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்ததாலும் சிவனினைந்த பெருமாள் தனது மகளுக்கு ஆதிபரமேஸ்வரன் அருணாசலம் பெயரை விட எண்ணி அருணா என்றும் முதலாவதாக பிறந்தது பெண் குழந்தையானதால் மகாலட்சுமியே வந்து பிறந்ததாக எண்ணி, லட்சுமி என்கிற பெயரையும் சேர்த்து அருணா லட்சுமி என பெயரிட்டார். தனது மகள் தெய்வமகள் என்றெண்ணி அன்போடும், பாசத்தோடும் செல்லமாக வளர்த்து வந்தார்.

அருணா லட்சுமியைத் தொடர்ந்து இரண்டு ஆண்குழந்தைகளும், அதனையடுத்து ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. சில ஆண்டுகள் கடந்த நிலையில் சிவனினைந்தபெருமாள் இறந்துவிட்டார். அவரது தம்பிகள் பாண்டி நாடார், சமுத்திர நாடார், ஆறுமுகநாடார், தாய் மாரியம்மாள் ஆகியோர் குழந்தைகளை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். தனது தாயை விட, பாட்டி மீது அதிக பாசம் கொண்டிருந்தாள் அருணா லட்சுமி. அவளது 19 வயதில் கல்லூரணி ஊரிலுள்ள முத்துக்குமார் நாடார் மகன் ராமச்சந்திரனுக்கு மணமுடித்து வைத்தனர். திருமணம் முடிந்த மறு வருடம் அருணா லட்சுமி கர்ப்பமானாள். ஏழாவது மாதம் அருணா லட்சுமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி அவளை தாய் வீட்டுக்கு அழைத்து வந்தனர் உறவினர்கள்.

பத்தாம் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தாள் அருணா லட்சுமி. வீட்டில் வைத்து நல்ல முறையில் பிரசவம் பார்த்த வைத்திய பெண்ணுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தனர். அவளது சித்தப்பாமார்கள். பாட்டி மாரியம்மாள் பேத்திக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தாள். ஐந்தாவது நாள் பக்கத்து ஊரிலுள்ள அவர்கள் உறவினர் ஒருவர் இறந்ததால் சித்தப்பாமார்கள் மற்றும் பாட்டி ஆகியோர் அங்கு சென்று விட்டனர். வீட்டில் அருணா லட்சுமியும், அவளது தாயும், தங்கையும் இருந்தனர். பிரசவ கால மூலிகை மருந்துகளை சாப்பிட கொடுக்கையில் தாயுக்கும், மகளுக்கும் தகராறு ஏற்பட்டு விடுகிறது. ‘‘எப்ப பாத்தாலும் சள், சள்ளுன்னு விழுற, நான் என் புருஷன் வீட்டுக்கே போறேன்’’ என்று கோபம் கொண்டு பெற்றெடுத்த கைக்குழந்தையுடன் புறப்பட்டாள் அருணா. அவளது தாய் சண்முகவடிவம்மாள் தடுத்தாள். ‘‘பதினாறு கழியுமுன் படி தாண்ட கூடாது, வெட்ட வெளியில நிக்காத, வெள்ளிக்கிழமை கருக்கலாகுது போகாத, தாய் உனக்கு நல்லதுக்கு தானே சொன்னேன்.

இதுக்கு போய் இப்படி கோபிச்சிட்டு போறிய ஆத்தா. உன்னால நான் தான் சாகனும். உன்னப்போல இன்னும் ஒருத்தி இருக்காளேன்னு என் உசுர கையில ஏந்தி இருக்கேன். இல்லேன்னா, அவரு போன அன்னைக்கே நானும் போய் சேர்ந்திருப்பேன். என்ன பவுச கண்டேன். உங்களுக்காக தானே இருக்கேன். ஏ தங்கம், என் பேச்சே கேளு, கருத்த பூனை எதுக்க வருதே, அடை கோழி பறந்து வருகுதே, அடுப்பில வச்ச பாலு பொங்கி சிந்துதே, அடுத்த வீட்டு நாயி ஊள இடுதே, முற்றத்து முருங்க முறிஞ்சி விழுதே, போகாத தங்கம், அந்தி பொழுதில சந்தி தெருவ கடந்து போகாத, நான் பெத்த மொவளே… தல புள்ள பொறப்ப தாயி தானே பாக்கனும். என்ன மீறி போன, நான் இருந்தும் செத்ததுக்கு சமம்தானே, ஏன் செல்லம் போகாதே! ’’ என்றுரைத்த தாயின் பேச்சை மீறி சென்றாள்.
அந்தி கருக்கல் நேரம் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. பிஞ்சுக்குழந்தையை, தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு நடையாய் நடந்து ஊர் எல்லைக்கு அருணா சென்றாள்.

ஊர் எல்லையில் கல் தடுக்கி கீழே விழுந்தாள். எழுந்திருக்க முடியாமல் கடின முயற்சியில் எழுந்த அருணா, தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கு சென்ற நாள் முதல் உடல் நலம் குன்றி, உணவு உண்ண முடியாமல் அவதி பட்டாள். ஒட்டிய முகத்தோடும் மெலிந்த தேகத்தோடும் உருமாறியிருந்த அருணா, தனது கணவனிடத்தில் தனது தாய் பேச்சை மீறி வந்ததால் இன்று அவதிப்படுகிறேன். எங்க அம்மாவ வரச்சொல்லுங்க என்று கூறினாள். தகவல் அருணாவின் தாய்க்கு தெரிவிக்கப்பட்டது. உடன் அவளது தாய், பாட்டி மற்றும் அவளது சித்தப்பா மார்கள் என உறவினர்கள் புடை சூழ அனைவரும் அருணாவின் கணவர் வீட்டுக்கு சென்று அவளையும், குழந்தையும் உடன் அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த அருணா மறுநாள் காலை தனது சித்தப்பா மார்களை அழைத்தாள்.‘‘மூனு சித்தப்பாக்களும் வந்திட்டீங்களா, நான் தாய் பேச்ச கேக்காம போனதுக்கான தண்டனைய அனுபவிச்சிட்டேன்.

ஆளு அரவம் இல்லா இடத்தில என்ன யாரோ தள்ளிவிட்டாங்க, புருஷன் வீட்டுக்கு போனப்போ, அவரு கேட்டாரு, உன் சென்னக்கரயோரம் அஞ்சு விரலு பதிஞ்சிருக்கு, யாரு உன்ன அடிச்சதுன்னு. அதனால வேண்டாத வாதை என்னை அடித்து விட்டது போலும். வரும் செவ்வாய் மதிய பொழுதில் நான் கயிலாசம் போயிருவேன். என் புள்ளையும் கூட்டிட்டுத்தான். என் தங்கச்சி கல்யாணிய என் புருஷனுக்கு கட்டி வைங்க. என்னை, நம்ம வழக்கப்படி எரிக்க வேண்டாம். அடக்கம் பண்ணுங்க. அந்த இடத்தில எனக்கு நடுகல் வச்சு, எனக்கு பூச பண்ணுங்க. எந்த வாதையும் உங்களயும், நம்ம குடும்பத்தயும் சீண்டாம காவல் காப்பேன். அது மட்டுமல்ல என்னை மதிச்சு யார் என்னை வணங்கினாலும் அவங்களுக்கும், அவங்களை சார்ந்தவங்களுக்கும் காவலாய் இருப்பேன்.’’ என்ற படி ம்ம்…ம்…ம் என்று மூச்சிறைக்க குரல் கொடுத்தவாறு உயிர் மூச்சை நிறுத்திக்கொண்டாள்.

அருணா லட்சுமி கூறியபடியே அவளை அடக்கம் செய்த இடத்தில் நடுகல் நட்டு பூஜை செய்தனர். பின்னர் கையில் குழந்தையுடன் நிற்கும் பெண் ரூபத்தில் சிலை கொடுத்து கோயில் கட்டி கொடை விழா நடத்தி பூஜித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கோயில் புணரமைக்கப்பட்டது. கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் அருணா லட்சுமி அம்மன் சிலையும், அருகில் சிறுமி வடிவில் அம்மனின் மகள் சிலையும் உள்ளது. ஆதி மூலஸ்தான கருவறையில் அம்மன், மற்றும் சிறுமியின் சிலைகளுடன், ராமர், லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. புற்றுமாரியம்மன், சுடலைமாடன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களும் வீற்றிருக்கின்றன. கோயில் வளாகத்தில் நின்ற நிலையில் காயத்ரி சிலை பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடை விழா நடத்தப்படுகிறது. மாதம்தோறும் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் காயத்ரி அம்மனுக்கு ராகு காலபூஜையும், சிறப்பு யாகமும் நடைபெறுகிறது. இக்கோயிலில் புத்ரதோஷம், நாகதோஷம், செய்வினை, பில்லி சூன்யம் இவற்றிற்கு தீர்வு கிடைக்கிறது. அம்மனால் பலன் பெற்றவர்கள் பிடிமண் கொண்டும் அம்மனை நினைத்தும் பல்வேறு பகுதிகளில் கோயில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். சிவகாசி அருகே பண்டிதன்பட்டி மற்றும் குஜராத், மும்பை பகுதியிலும் கோயில் உள்ளது. அம்மன் அருள் வந்து ஆடும் அருணா லட்சுமியின் தங்கையின் வாரிசு சுடரொளி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுகின்றார். இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் அமைந்துள்ளது.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்