SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்

2019-04-20@ 08:58:53

அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் : 19.04.2019

ஒவ்வொருக்கும் ஏதோ ஒன்று மனதை ஆட்டிப்படைக்கும், படிப்பு, தேர்வு, வேலை, திருமணம், குழந்தை, மகளுக்கு வரன், மகனுக்கு திருமணம், நல்ல சம்பளம், மேலதிகாரியின் கரிசனம், உறவுகள், நட்புகள் இடையே அன்பு பாராட்டல், தொழில், நிலம், நோய், கடன் என ஏதோ ஒன்று தீரா பிரச்னையாக தோன்றி, அதனால் அமைதியின்றி தவிக்கின்றனர். அதற்கு தீர்வு காண தெய்வத்தின் இருப்பிடம் நாடி பக்தர்கள் பல தூரம் செல்லும் நிலையில் மக்களைக்காண பல கி.மீ தூரம் வருகிறார் கள்ளழகர். மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. இத்தல கருவறையில் பெருமாள் ஸ்ரீபரம ஸ்வாமி எனப்படுகிறார். உற்சவ மூர்த்தி அழகர் என்ற சுந்தரராசப் பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

அழகர்மலை அடிவாரத்திலிருந்து சுமார் 2 கி.மீ. உயரத்தில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஆறாவதான பழமுதிர்சோலை முருகன் கோயில் உள்ளது. பழமுதிர்சோலை முருகன் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது. இந்த ராக்காயி அம்மன் சந்நதியிலிருந்து தான் நூபுரகங்கை நீரூற்று உருவாகி வருகிறது. இந்த நீருற்றில் சுதபமுனிவர் நீராடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு முறை நீராடும்போது எதிர்பட்ட துர்வாசர் முனிவரை, கண்டும் காணாதது போல் இருந்து விட்டார். இதனால் ஆத்திரம் கொண்ட துர்வாச முனிவர், சுதபமுனிவரை மண்டூகமாக (தவளையாக) போககடவாய் என சாபமிட்டார். மண்டூகமாக மாறிய சுதபமுனிவர் அழகா, உன் சந்நதி முன்னே சாபம் பெற்றுள்ளேன். இந்த சாப விமோசனம் பெற நீ வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டினார். அழகர் அவர் முன் தோன்றி, வைகை ஆற்றில் நான் இறங்க, அவ்விடம் நீ இருந்தால் அந்நேரம் நீ சாபவிமோசனம் பெறுவாய் என்றுரைத்தார். அதன்படி சாபவிமோசனம் பெற சுதபமுனிவர் வைகை ஆற்றில் மண்டூக(தவளை) வடிவில் நீண்ட காலம் தவமிருந்தார்.

சித்ராபௌர்ணமி அன்று அழகர் வைகையாற்றில் இறங்க, அங்கு மண்டூக வடிவில் இருந்த சுதபமுனிவர் சாபவிமோசனம் பெற்றார். இயல்பு நிலையை அடைந்தார். இந்த நிகழ்வை மெய்ப்பிக்கும் வகையிலும் தங்கை மீனாட்சியின் திருக்கோலத்தை காணவும் அழகர் ஆற்றில் இறங்குவதாக கூறப்படுகிறது. அழகர் என்றால் அழகியத்தோளுடையான் (தமிழில்), சுந்தரபாஹூ (வடமொழியில்). பக்தர்களின் உள்ளம் கவர்ந்தவன். வெண்ணையை திருடி தின்றவன் என்ற காரணங்களால் கள்ளழகர் எனப்பெயராயிற்று. கள்ளழகர் கோயிலில் அவர் ஆற்றில் இறங்கும் வைபவம் விழாவாக கொண்டாடப்படுகிறது. அழகர்மலையிலிருந்து தங்க உற்சவ விக்ரகத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அழகர். பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு உற்சாக முகத்தோடு, புன் முறுவல் கொண்டு கோயிலில் இருந்து புறப்பாடு ஆகிறார். வெளியே புறப்படும் முன் கோயில் காவலரான பதினெட்டாம் படி கருப்பன் சந்நதி முன்பு வந்து நின்றதும். கோயில் அர்ச்சகர், அதிகாரி மற்றும் அழகரை சுமந்து வரும் நபர்கள்.

கோயிலிலிருந்து எந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்கிறோம் என்பதை சத்தமாக பட்டியலிட்டு ஒப்புவிக்கின்றனர். கருப்பன் கேட்க வேண்டும் என்பதற்காக... அதை முடித்துக்கொண்டு புறப்படுகின்றனர். வரும் வழியில் ஒரு ஊரில் வந்து சற்று ஓய்வு எடுக்கும் அழகர். அங்கிருந்து புறப்படும் முன்பு தன்னை அலங்கரித்துக் கொள்கிறார். அவ்வாறு அழகர் அலங்காரம் செய்து கொண்ட ஊரே அலங்கார நல்லூர் என்றானது. அதுவே பின்னர் அலங்காநல்லூர் என்று மருவியது. கடந்த சில வருடங்களாக அழகர் அலங்கார நல்லூர் செல்வதில்லை. தற்போது அழகர் கோயிலிலிருந்து புறப்பாடு ஆகும் அழகர், நேராக மதுரை வருகிறார் மதுரை மூன்று மாவடி என்ற இடத்தில் வைத்து அழகரை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதை எதிர்சேவை என்கின்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் வந்து இறங்குகிறார். அங்கே வைத்து ஆண்டாள் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக் கொடுத்த மலர் மாலையை அணிந்து கொள்கிறார்.

(ஆண்டாள் கோயில் மாலை 3 பேருக்கு மட்டும்தான். 1, சித்திரை மாதம் கள்ளழகர். 2,புரட்டாசி மாதம் திருப்பதி திருவேங்கடநாதன். 3, பங்குனி மாதம் ஸ்ரீரங்க நாதர்.) பின்னர் அங்கிருக்கும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி இரவு, வீதி உலா வருகிறார். நள்ளிரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு ஆழ்வார்குளம் வைகை ஆற்றுபடித்துறை வழியாக ஆற்றில் இறங்குகிறார். அப்போது வௌ்ளிக்குதிரை வாகனத்தில் வீரராகவப்பெருமாள் வந்து ஆற்றுக்குள் இறங்கி, அழகரை எதிர்கொண்டு வரவேற்பார். அவரைப்பார்த்து புன்னகைக்கும் அழகரிடம், வீரராகவப்பெருமாள் தன் இருப்பிடம் வந்து செல்லுமாறு கூறுவது போல ஒரு நிகழ்வு அங்கே அரங்கேறும். அதன்பின்னர் வண்டியூர் வைகை கரையில் மண்டூகமாக (தவளையாக) இருக்கும் சுதபமுனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார். (மண்டூர் என்பதே மண்டியூர் ஆகி, பின்னர் வண்டியூர் ஆனது.) ஆற்றுக்குள் வேகமாக அழகர் இறங்கி வர, கூடியிருக்கும் பக்தர்கள் ‘‘மீனாட்சிக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு, உன் தங்கச்சிக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு’’ என்று குரல் கொடுப்பார்கள்.

உடனே வேகம் குறைந்து திரும்பி செல்வார் கள்ளழகர். அந்த நேரம் ஐநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தோல் பைகள் மூலம் நீர் நிரப்பி, அதை கள்ளழகர் மேல் பீய்ச்சி அடிப்பார்கள். (நேர்ச்சை கடன் என்றும் இதை கூறுகிறார்கள்). கோடை வெயிலில் வந்த அழகரை குளிர்விப்பதாக கூறப்படுகிறது. அதை எதிர்கொண்டு வரும் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வார். 4 மணிக்கு ராமராயர் மண்டபம் வருகிறார். அங்கே இரவு 9 மணிக்கு, தான் அவதரித்த தசாவதார கோலங்களை பக்தர்களுக்கு காட்டுகிறார். அங்கிருந்து புறப்பாடு ஆகி, ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்து சேருகிறார். அங்கே பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். மறுநாள் அதிகாலை அங்கிருந்து புறப்படுகிறார். மதுரை ஆட்சியர் பங்களா அருகேயுள்ள மாரியம்மன் கோயிலுக்கு வருகிறார். அங்கிருந்து புறப்பட்டு கடச்ச நேந்தல் வழியாக மாலை 5 மணிக்கு அப்பன் திருப்பதி என்ற கிராமத்திற்குள் நுழைகிறார். அங்கே அவரை வரவேற்று கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் என பலவகையான நாட்டியங்களும், பல்வேறு விதமான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அங்கிருந்து அடுத்தநாள் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு பகல் 10 மணியளவில் அழகர் கோயில் வருகிறார். தொலை தூரம் சென்று வந்ததாலும், தங்கை திருமணத்தை பார்க்காததாலும் ஒரு வித சோகம் அழகர் முகத்தில் இருக்கும். போகும் போது இருந்த முகம் வேறு, வரும் போது இருக்கும் முகம் வேறு என அழகரின் தோற்றம் இருப்பது விந்தையிலும் விந்தை. கோயில் வளாகம் வந்ததும், பல இடங்களில் பலபேர் கண் பட்டிருக்குமே அழகருக்கு அதனால் திருஷ்டி சுத்தி போடும் வகையில் 18 பூசணிக்காய் களுடன் 18 கன்னிப்பெண்கள் நிற்பார்கள். அவர்களிடம் இருந்து பூசணிக்காய்களை வாங்கி காளையர்கள் அழகருக்கு சுற்றி போட்டு உடைப்பார்கள். பின்னர் செம்பில் சர்க்கரை நிரப்பி அதை வாழை இலையில் மூடி, அதன் மேல் கற்பூரம் வைத்து தீபம் ஏற்று வார்கள். இதற்கு சர்க்கரை தீபம் ஏற்றுதல் என்று பெயர். கருப்பனிடம் கொண்டு வந்த பொருட்களின் பட்டியலை கூறிவிட்டு கோயிலுக்குள் வரும் அழகர் மூலவர் சந்நதிக்கு செல்வார். தங்க குதிரை வாகனம் அதற்குரிய இடம் செல்லும். இத்துடன் நிறைவு பெறுகிறது அழகர் கோயில் சித்திரை திருவிழா.
                              
சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்