SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தடுத்தாட்கொண்ட தயாபரன்

2019-04-17@ 16:28:41

அருணகிரி உலா - 74

திருமுனைப்பாடி எனும் நடுநாடு, திருநாவுக்கரசரை மட்டுமின்றி சுந்தரமூர்த்தி நாயனாரையும் நமக்களித்தது என்று அறியும்போது மனம் மகிழ்கிறது. இங்குள்ள திருநாவலூரில்தான் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சுந்தரர் அவதரித்தார். பண்ருட்டி - விழுப்புரம் சாலையிலுள்ள இவ்வூர் தற்போது திருநாமநல்லூர் என்று மருவி வழங்கப்படுகிறது. இறைவன்: நாவலேஸ்வரர், பக்தஜனேஸ்வரர். இறைவி: சுந்தரநாயகி, மனோன்மணி. தலவிருட்சம்: நாவல் மரம். ஆதலால், நாவலூர் எனப்பட்டது.

கோயில் நுழைவாயிலின் இடப்பக்கம், சுந்தரர் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். கருவறைக்கு நேரே நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. வெளியே அறுபத்து மூவர் காட்சி அளிக்கின்றனர். சுந்தரரும் அவரை வளர்த்த அரசர் நரசிங்க முனையரையரும் பூசித்த லிங்கங்கள் உள்ளன.

‘‘நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்க
முனையரையன்
ஆதரித் தீசனுக் காட்செயும் ஊர் அணிநாவலூர்
என்று
ஓதநற் றக்கவன் றொண்டனா ரூரன்
உரைத்த தமிழ்
காதலித் துங்கற்றும் கேட்டவர் தம்வினை
கட்டறுமே.’’
- சுந்தரர் தேவாரம்

கருவறையில் அமைதியாக விளங்கும் ஈசனுக்கு, வன்தொண்டராம் சுந்தரர் மூலம் அழகிய பதிகங்களை நமக்களித்தமைக்கு நன்றி கூறுகிறோம். கருவறைக்கு நேரே வெளியே நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. கருவறைக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி அளிக்கிறார். சப்த மாதர்களையும், விநாயகரையும் வணங்கி, வள்ளி தெய்வானையுடன் விளங்கும் முருகனைத் தரிசித்து மகிழ்கிறோம். ‘கோலமறை’ எனத்துவங்கும் அகப்பொருள் பாடலை அருணகிரியார் இங்கு பாடியுள்ளார்.
 
‘‘கோலமறை யொத்த மாலைதனி லுற்ற
கோரமதன் விட்ட  கணையாலே
கோதிலத் ருக்கள் மேவுபொழி லுற்ற
கோகிலமி குத்த  குரலாலே
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
ஆரழலி றைக்கு  நிலவாலே
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
மாசைகொட ணைக்க  வரவேணும்
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
நாரணனு மெச்சு  மருகோனே
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
நாகமற விட்ட  மயில்வீரா
சேலெனும்வி ழிச்சி வேடுவர்சி றுக்கி
சீரணித னத்தி லணைவோனே
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
தேவர்சிறை விட்ட  பெருமாளே.’’

பொருள்: மறைந்த அழகிய வேஷத்துடன் மாலைப்பொழுதில் வந்து சேர்ந்த கொடும் செயலுடைய மன்மதன் செலுத்திய புஷ்ப பாணங்களாலும், நல்ல செழிப்பான மரங்கள் பொருந்திய சோலையில் வாழும், குயில்களின் வளமான குரலாலும், ஆலகாலம் போல தீ ஜ்வாலைகளை எரிந்து, வீசும் ஒளி மூலமாக நெருப்பைப் பரப்பும் சந்திரனாலும் ஆவியானது தளர்ச்சி அடைந்து சோர்ந்திருக்கும் என்னை தினமும் ஆசையுடன் தழுவ வரவேணும்.

நான்கு வேதங்களையும் ஓதும் பிரம்மனை தன் நாபிக் கமலத்தில் தோற்றுவித்த நாராயணர் போற்றும் மருகனே! விஞ்சையர்கள் மதிக்கும்படி, வேலாயுதத்தை  எடுத்து கிரவுஞ்சகிரி பிளவுபட செலுத்திய மயில் வீரனே! சேல் மீன் போன்ற கண்களை உடய வேடுவச் சிறுமியின் சீரான தனங்களில் அணைவோனே! குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநாவலூரில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்கள் சிறையை நீக்கியவனே!

முருகனைப் போற்றித் தொடர்ந்து நடக்கையில் பக்தவத்சலப் பெருமாள், சண்டிகேஸ்வரர்,  யுக லிங்கங்கள், துர்க்கை ஆகியோரை வணங்கி, நவகிரகங்களைத் தொழுகிறோம். பார்கவீஸ்வரர், பைரவர், சூரியன் மற்றும் நாவல் மரம் போன்ற வற்றை தரிசித்து, தனிக்கோயிலில் வீற்றிருக்கும் மனோன்மணியை வணங்கி வெளிவருகிறோம்.
சுந்தரர் அவதரித்த திருநாவலூரிலிருந்து புறப்படும் நாம் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்ட திருவெண்ணெய் நல்லூரை நோக்கி ஆவலுடன் பயணிக்கிறோம். அங்கு சென்றடைவதற்கு முன் சுந்தரருக்கும் இவ்வூருக்குமான தொடர்பைச் சற்று பார்ப்போம்.

சுந்தரர், கயிலையில் மலர் கொய்துகொண்டிருந்த கமலினி, அநந்திதை என்ற இரு பெண்கள் பால் ஈர்ப்பு கொண்டார். இறைவன் ‘நீ தென்னாட்டில் பிறந்து அவ்விருவரையும் மணந்து மீண்டும் கயிலைக்கு வருவாயாக’ என்று கூறிவிட்டார். ‘‘இவ்விருவர் தவிர வேறு யாருடனாவது மணவாழ்வில் இசைய வேண்டி வந்தால் அச்சமயம் நீ வந்து எனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும்’’ என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்.

பூவுலகில், திருநாவலூரில், ஆதிசைவஆந்தண குலத்தில் பிறந்த சுந்தரருக்கு உரிய பருவம் வந்ததும் சடங்கவி சிவாச்சாரியரது மகளைத் திருமண நிச்சயம் செய்தனர். இறைவன் ஒரு கிழ வேதியராக வடிவம் கொண்டு அங்கு வந்து ‘‘இம்மணமகன் எனக்கு வழிவழி அடிமை; ஆகவே இத்திருமணம் செல்லாது’’ என்று உறுதிபடக் கூறினார். ‘‘ஒரு வேதியர் மற்றொரு வேதியருக்கு அடிமையாக முடியாது; இது அறியாத நீர் ஒரு பித்தர்தாம்’’ என்று கோபித்தார் சுந்தரர். கிழவர் கொண்டு வந்திருந்த சாட்சி ஓலையைப் பறித்துக் கிழித்து எறிந்தார்.

கிழவர் கொண்டு வந்தது நகல் ஓலை என்று யாரும் அறிந்திருக்கவில்லை. அனைவரையும் தன் ஊரான திருவெண்ணெய் நல்லூருக்கு அழைத்து வந்தார். அவையோரிடம் சுந்தரது பாட்டன் எழுதியிருந்த மூல ஓலையைக் காட்டினார் வேதியர். அதிர்ந்த சுந்தரர், ‘இவ்வூரில் உமது இருப்பிடத்தைக் காட்டும்’ என்று கூற, வேதியர் ‘அருள்துறை’ சிவாலயத்துள் வேகமாக நுழைந்து  கணப் போதில் மறைந்து போனார். ‘‘சுந்தரா! நீ முன்பு விண்ணப்பித்தபடி உனைத் தடுத்தாட்கொள்ளவே நான் வந்தேன்’’ என்ற இறைவனது அசரீரி வாக்கைக் கேட்ட சுந்தரர் ‘‘பெருமானே! உன்னைப் புரிந்துகொள்ளாமல், ‘பித்தா’ என்று அழைத்து அவமதித்தேனே’’ என்று கதறி அழுதார். எம்மைப் பித்தா என்று அழைத்ததால் ‘‘பித்தா என்று துவங்கிப் பதிகம் பாடுக’’ என்றார் அருள்துறை இறைவன்.

‘‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே’’

- என்று துவங்கிப் பாடினார் சுந்தரர். பித்தா! பிறையணிந்தவனே! பெருமை உடையவனே! அருளாளா! என் மனத்துள் உன்னை மறவாது வைத்தாய். பெண்ணை நதியின் தென்திசை உள்ள திருவெண்ணெய் நல்லூர் ‘அருள்துறை’ எனும் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள அத்தனே! முன்பே உனக்கு அடிமையாகி இப்பொழுது ‘உனக்கு அடிமை அல்லன்’ என்று கூறுவது நியாயமோ? (அல்ல என்றபடி) கல்வெட்டுகளில் ‘வழக்கு வென்ற திருஅம்பலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெரியதொரு மண்டபம் கோயில் முகப்பில் உள்ளது. ‘வாதாடீஸ்வரர் வழக்காடு மன்றம்’ என்று தற்போது எழுதி வைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியை விளக்கும் சிற்பங்கள் உள்ளே உள்ளன.

தமிழ்த் தாத்தா அவர்கள் திருவெண்ணெய் நல்லூர் பற்றிய ஏராளமான குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றுள்ளார். இறைவன்: தடுத்தாட்கொண்ட நாதர், அருள்துறை நாதர். இறைவி: வேற்கண்ணியம்மை; மங்களாம்பிகை. அம்பிகை வெண்ணையால் கோட்டை அமைத்து அதனுள் இருந்து தவம் புரிந்து சிவபெருமானைத் துதித்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய் நல்லூர் எனப்பட்டது. அம்பிகை திருவருள் பெற்றமையால் கோயில் ‘அருள்துறை’ என்று பெயர் பெற்றது. எனவே தலத்தின் பெயர் கிருபாபுரி என்று வடமொழியில் வழங்கப்படுகிறது. இறைவனுக்கு கிருபாபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

புதிய கோபுரம் கட்டப்பட்டு வருகிறது. வலதுபுறம் வழக்காடு மன்றம் உள்ளது. கோயில் நுழைவாயிலுக்கருகிலுள்ள சிறு மண்டபத்தில் சுந்தரர் வீற்றிருக்கிறார். உள்ளே விநாயகர், நந்தி, பலிபீடம், கொடிமரம் உள்ளன. நந்தியின் உருவம் மிகப்பெரியது. கருவறைக்கருகில் சென்று சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட ஈசனை வணங்கி கண்ணீர் மல்க நிற்கிறோம். கல் நந்தியை வணங்குகிறோம். நடராஜர், கால பைரவர், நர்த்தன விநாயகர், சூரியன் ஆகியோரை வணங்கி வெளிப்பிராகாரத்தை அடைகிறோம். அறுபத்து மூவர், யோக குரு, சப்த மாதர்கள், மஹா விஷ்ணு சிவஞான போதம் அருளிய மெய் கண்டார் ஆகியோரைத் தரிசிக்கிறோம்.

கருவறைக் கோட்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரை வணங்குகிறோம். பொல்லாப்பிள்ளையாரை வணங்கி, முருகப்பெருமான் தேவியருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் சந்நதி வாசலில் நிற்கிறோம். முருகப்பெருமான் தேவர்கள் வேண்டியபடி மயில் மிசை திருநடனம் செய்தருளிய திருத்தலம் இது. ‘பல பல தத்துவம்’ எனத்துவங்கும் திருப்புகழ் இத்தலத்திற்குரியது.
 
‘‘பல பல தத்துவ மதனை எரித்திருள்
பரை அரணப்படர் வடவனலுக்கிரை
பட நடனச்சுடர் பெருவெளியிற்கொள விடமேவிப்
 
பவனம் ஒழித்(து) இரு வழியை அடைத்தொரு
பருதி வழிப்பட விடல்  சுகனத் தொடு
பவுரி கொளச் சிவமயமென முற்றிய பரமூடே
கலகலெனக் கழல் பரிபுர பொற்பத
ஒலி மலியத் திரு நடனமியற்றிய
கனக சபைக்குளில் உருகி நிறைக்கடலதில் மூழ்கி
கவுரி மினற்சடை அரனொடு நித்தமொ
  டனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கினி நிறமென நவிற்றுடல்
அருள்வாயே.’’
-  என்பது பாடலின் முதற்பகுதி.

‘‘நம்மைத் துன்பத்திற்கு ஆளாக்கும் 36 தத்துவங்களின் சேட்டைகளை அறிவுக் கனலால் எரிக்க வேண்டும்; அஞ்ஞான இருளைச் சுட்டு சிவபிரானின் அருட்சக்தியே காவலாக துக்கங்களை வடவாமுகாக்னிக்கு இரையாகச் செய்ய வேண்டும்; நடன ஜோதியை இருவினை பொடியாக்கிய சுடர்வெளியில் கண்டு கொள்ளும்படியாக, வாயுவை அடக்கி, இடைகலை பிங்கலை எனும் இரு நாடிகளையும் அடைக்க வேண்டும்; ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் கலகல எனச் சுழலும் சிலம்பும் அழகிய திருவடியில்  ஒலிக்க, திருநடனம் இயற்றிய பொற்சபையில் உருகி நின்று சுகானந்தக் கடலில் மூழ்க வேண்டும். பார்வதி, மின்னல் போன்ற ஜடை உடைய சிவபெருமான் இவர்தம் திருவருளால் ‘எவரும் யாதும் யானாகும்’ நிலை வந்து கூடவும், இத்தகைய நன்மையால், புகழுடலே நிலைத்து நிற்குமாதலால் அத்தகைய உடலைத் தந்தருள்வாய்!’’
 பாடலின் பிற்பகுதி:

‘‘புலையர் பொடித்தளும் அமணருடற்களை
நிரையில் கழுக்களிலுற விடு சித்திர
புலவனெனச் சில விருது படைத்திடும் இளையோனே
புனமலையில் குறமகள் அயலுற்றொரு
கிழவனெனச் சுனை தனில் வளைப்புய
புளகிதமுற்று இபம்வர அணையப் புணர் மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவுளிடத்துறை
கிழவி அறச்சுக குமரி, தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலி-கை பெற்றருள் முருகோனே
மகிழ் பெணையிற்கரை பொழுதில் முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைகொடு திருநடமிற்றுறை
பெருமாளே.’’

பொருள்: இழிதொழில் செய்யும், திருநீற்றை விலக்கும் சமணர்களை வரிசையாக நடப்பட்ட கழுமரங்களில் ஏறும்படிச்செய்த சித்ரகவிராஜன் என வெற்றிச் சின்னங்களைப் பெற்ற
இளையவனே! தினைப்புனங்கள் நிறைந்த வள்ளிமலைக்குச் சென்று, ஒப்பற்ற கிழவர் வேடம் பூண்டு வள்ளியின் அருகிற்சென்று, மலைச்சுனையில் கணபதியை யானையாக வரச்செய்து, பூரிப்புடன் அவளை அணைத்தவனே! மேருமலையை  வில்லாகப் பிடித்த சிவபிரானது இடப்பாகத்தில் கலந்திருக்கும் உரிமை உடையவள், அறம் வளர்த்த நாயகி, சிவாபராதம் செய்த தந்தை தட்சனை (வீரபத்திரரால்) மழுவினால் வெட்டுவித்த நின்மலி அருளிய குழந்தையே!

திருவெண்ணெய் நல்லூரில் புகழுடன், அற்புத மாமயில் மீது எழுந்தருளித் திருநடனம் புரியும் பெருமாளே!’’ சுந்தரரைத் தடுத்தாட்கொண்டதை திருவருணையில் அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்.

‘‘ஒரு சிறுவன் மணமது செய் போதில் எய்த்து வந்து
கிழவடிவு கொடு முடுகி வாசலிற் புகுந்து
உலகறிய இவனடிமையாம் எனக் கொணர்ந்து சபையூடே
ஒரு பழைய சருகுமடி ஆவணத்தை அன்று
உரமொடவன் அது வலியவே கிழிக்க நின்று
உதறி முறையிடு பழைய வேதவித்தர் தந்த சிறியோனே.’’

சுந்தரருக்கு அருள்பாலித்த வேற்கண்ணியை அவளது தனிக்கோயிலில் வணங்கி, தூணிலுள்ள கம்ப விநாயகரையும், கம்ப தண்டபாணியையும் வணங்குகிறோம். விநாயகர், மூன்று சக்தி வடிவங்கள், துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரியை வணங்கி மீண்டும் ஈசன் கோயிலுள் நுழைந்து நவகிரகங்களைத் வணங்கி வெளிவருகிறோம்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்