SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்க குறையை நிவர்த்தி செய்வாள் பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

2019-03-26@ 15:57:14

நம்ம ஊரு சாமிகள் - சின்ன மலையனூர், திருவல்லிக்கேணி, சென்னை

மேல்மலையனூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பர்வத ராஜ குலத்தவர்கள் சேவை செய்து வருகின்றனர். அவர்களில் சிலர் வெளியூர்களுக்கு தொழில் நிமித்தமாக சென்றவர்கள் அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வழிபாட்டுத் தெய்வமான அங்காள பரமேஸ்வரிக்கு தங்கள் இருப்பிடத்திலேயே கோயில் எழுப்பி வழிபடலாயினர். அந்த வகையில் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியிலும் அங்காள பரமேஸ்வரி கோயில் கொண்டாள். அங்காளம்மன் கோயில் கொண்டதால் அந்தப்பகுதி சின்னமலையனூர் என்றும் அழைக்கப்படலாயிற்று. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இருந்து புற்று மண் கொண்டு வரப்பட்டு அதனால் உருவாக்கப்பட்ட அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். ஓலை குடிசையில் தான் கோயில் இருந்தது. மண் சிலை என்பதால் அபிஷேகம் மட்டும் இல்லை. ஆனால் தினம் தோறும் பூஜை மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது.

சுமார் 60 வருடங்களுக்கு முன் ஓலை குடிசை அகற்றப்பட்டு ஆலயம் எழுப்பப்பட்டது. சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய விமானம் அமைத்து, கற்சிலையில் அம்மன் விக்ரகம் அமைக்கப்பட்டது. உடன் வில்வ விநாயகர் விக்ரகம் உற்சவர் சிலையும் உருவாக்கப்பட்டு 2 கால அபிஷேகம் மற்றும் பூஜை,
ஆராதனைகள் சிறப்புற நடைபெற்று வருகிறது. மூன்றாவது தலைமுறையாக வி.தயாளன் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து வருகிறார். ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் மாசி பெருந்திருவிழா மிக விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி திருவிழா 4.3.19 திங்கள்கிழமை விநாயகர் பூஜை, காப்பு விழாவுடன் தொடங்கியது. 2ம் நாள் விழாவில் காலை 8.45க்கு அப்பகுதியிலுள்ள துலுக்கானத்தம்மன் கோயிலிலிருந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 1008 பால்குடம் புறப்பாடு நடந்தது. அந்த பால்குட பவனியில் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்களது அம்பாளுக்கு அலகு குத்துதல் மற்றும் பலவிதமான காவடிகளை எடுத்து வந்தனர். பகல் 12.30க்கு பால்குட பவனி, சந்நதியை அடைந்தது.

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு 64 விதமான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலையில் மஹா சிவராத்திரியை யொட்டி சிவ பூத கண கயிலாய வாத்யங்களை 250க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் வாசிக்க முதல் முறையாக சுவாமி அம்பாள் திருத்தேர் பவனி நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3வது நாள் விழாவில் பகல் 1.35க்கு மயான சூறைக்காக சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி தந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பழங்கள், காசு, பாலாடை, வெண்ணெய், பேனா, காய்கறிகள், கோழி முதலானவற்றை அம்மன் உற்சவர் மேல் வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். 4வது நாள் முதல் 15வது நாள் வரை உபயதாரர்களின் சார்பில் உற்சவம் நடைபெற்றது. விழா நிறைவில் கும்பம் மற்றும் காப்பு களைதல் இனிதே நடந்தது.

கும்ப பூஜை என்பது அம்மனுக்கு அசைவ படையல் வைக்கப்படும். அந்த அசைவ படையலில் அனைத்து வகையான மீன்கள், கருவாடு, முட்டை, கோழிக்கறி, ஆட்டு கறி இவையனைத்தும் சமைத்து படைக்கப்படும். இந்த விழா தவிர, தமிழ் வருட பிறப்பு, ஆடி மாதம் செவ்வாய், வெள்ளி சிறப்பு பூஜை, ஆடிப்பூரம் லலிதா ஸஹஸ்ஹரநாமம் பாராயணம், நவராத்திரி பூஜை, மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம், பௌர்ணமி கோபூஜை, சுமங்கலி பூஜை நடைபெறும். இந்த அம்மனை வேண்டினால் நிச்சயம் நிறைவேறும் என்றார் அப்பகுதியைச் சேர்ந்த சரவணன். அம்மன் எங்கள் தாய் மட்டுமல்ல எங்களுக்கும் மகளும் அவள் தான். அதுமட்டுமல்ல மகேஷ்வரன் எங்கள் வீட்டு மருமகன் என்றார். அது எப்படி என்ற போது தொடர்ந்தார்..... பர்வதராஜன் என்ற மீனவ இன தலைவனுக்கு, பராசக்தி மகளாக அவதரித்தாள். அந்த அவதாரத்தில் தான் சக்தியின் பெயர் பார்வதி. பர்வதவர்த்தினி என்ற பெயரோடு வளர்ந்து வந்தாள். பருவ வயதை அடைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய தந்தை பர்வதராஜன் முடிவு செய்தார். மணமகனை தேடும் படலம் தொடங்கியது.

தன் மகள் பர்வதவர்த்தினியை சிவபெருமான் மணமுடிக்க ஆசைப்படுவதை அறிந்து அதற்குண்டான ஏற்பாடுகளை செய்தார். திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், பர்வத ராஜன் உறவினர்களும் சூழ பிரம்மதேவன் புரோகிதராக இருந்து மிக விமரிசையாக திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணம் முடிந்ததும் கயிலாயம் சென்றனர் இருவரும். முன்னதாக பர்வதராஜன் தன் மகள் பர்வத வர்த்தினியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். உன்னுடைய இந்த அவதார காலத்தில் நம் இனத்தவராகிய பர்வதராஜகுலத்தவர் பூஜை மற்றும் பணிவிடைகள் செய்ய வரமளிக்க வேண்டும் என்றார்.

அப்போது சக்தி நான் அங்காள பரமேஸ்வரியாக நிற்கும் போது எனக்கு நம் இனத்தவர்கள் பணிவிடை செய்யலாம். அந்த கோலமும், காலமும் வரும் என்றாள். அதன்படியே அங்காள பரமேஸ்வரி கோலம் பூண்டாள் சக்தி. அந்த காலத்தில் தான் பர்வத ராஜகுலத்தோருக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பினை நல்கினாள் பார்வதி தேவி. சென்னை சின்னமலையனூர் பாலாடை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு குழந்தை பாக்யம் கிட்டாதவர்கள் தம்பதி சகிதமாக கோயிலுக்கு வந்து திருமணம் நடந்த தேதியில் 7 பாலாடை சாற்ற வேண்டும். இவ்விதம் 7 மாதங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் மழலை வரம் அளிப்பாள் அம்மன்.  திருமண தாமதம் ஏற்பட்டவர்கள் அவர்களது ஜென்ம நட்சத்திரத்தன்று 9 தாமரை மலர்கள் கொண்டு, 9 மாதம் அம்மனுக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் நிச்சயம் நடந்தேறும்.

சு. இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 02-05-2021

  02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்