SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை

2019-03-19@ 16:54:08

மகாபாரதம் - 101

‘‘குந்தி தேவி கன்னிகையாக இருந்தபோது அவள் வயிற்றில் உதித்த குழந்தை நீ. பாண்டுவோடு திருமணத்திற்கு முன்பே நீ தோன்றினாலும் உனக்குத் தந்தை பாண்டுதான். பஞ்ச பாண்டவர்களுக்கு மூத்தவன் நீ. என்னுடன் தேர் ஏறி வா. நீ யுதிஷ்டிரருக்கு அண்ணன் என்று பாண்டவர்கள் தெரிந்து கொள்ளட்டும். திரௌபதியின் ஐந்து புதல்வர்களும், சுபத்ராவின் மகன் அபிமன்யுவும் உன்னை நமஸ்கரிக்கட்டும். பாண்டவர்கள் உன்னை அரியணையில் அமர்த்துவார்கள்.

உன்னுடைய சிங்காதனத்தை சூழ்ந்து இருப்பார்கள். நீ மூத்த சகோதரன் என்று தெரிந்ததால் யுதிஷ்டிரர் உனக்கு சாமரம் வீசுவார். பீம, அர்ஜுன, நகுல, சகாதேவன், பாஞ்சால தேசத்து க்ஷத்திரியர்கள், மகாரதியான சிகண்டி அனைவரும் உன் பின்னால் அணிவகுத்து நிற்பார்கள். நீ அவர்களின் துணை கொண்டு ராஜ்ஜியத்தை அனுபவி. எப்பேர்பட்ட சொர்க்கம் அது. எவ்வளவு கம்பீரம் அது. நட்சத்திரங்கள் சூழ்ந்த சந்திரனைப் போல நீ பிரகாசிப்பாய். குந்தி மிகுந்த ஆனந்தமடைவாள்.

கர்ணா, இன்றிலிருந்து பாண்டவர்கள் உன்னுடைய சகோதரர்கள் என்பதை அறிந்து புரிந்து அவர்களிடம் இனிமையாக நடந்து கொள். இந்த உலகம் நிம்மதியாக இருக்கும்.”என்று ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனிடம் கூறினார். கர்ணன் கை கட்டி தலை கவிழ்ந்து ஸ்ரீகிருஷ்ணர் முன் அமைதியாக நின்றிருந்தான். நிமிர்ந்தான். ‘‘கேசவா, என் மீது மிகுந்த அன்போடு நீங்கள் கூறிய செய்திகளை நான் முன் கூட்டியே அறிந்தவன். நான் குந்தியின் மகன் என்று எனக்குத் தெரியும். கன்னி வயதில் குந்தி சூரியனுடைய சேர்க்கையால் என்னை கர்ப்பத்தில் தரித்தாள். சூரிய தேவன் ஆணையால் என்னை நீரில் விட்டு விட்டாள்.

என்னுடைய பிறப்பை நான் அறிவேன். தர்மப்படி நான் பாண்டுவின் புதல்வனாக இருந்தாலும் குழந்தையாய் இருந்த என்னை குந்தி தேவி நிராகரித்து விட்டாள்.
அதிரதன் என்னும் தேரோட்டி என்னை நீரில் கண்டதும் வீட்டிற்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தார். அவர் மனைவி ராதைக்கு என்னை அணைத்ததுமே அவள் ஸ்தனத்தில் பால் பொங்கியது. என் மல மூத்திரம் துடைத்து என்னை வளர்த்தது ராதைதான். அவளுடைய கவளத்தை யார் பிடுங்க முடியும். அதிரதனும் என்னை தன் புதல்வனாகவே கருதுகிறார். நானும் அவரை தந்தையாக கருதுகிறேன்.

அக்னியின் முன்னே அமர்ந்து அவர்தான் ஜாதக கர்மம் செய்தார். எனக்கு வசுசேனன் என்று பெயரிட்டார். நான் வாலிபனானதும் எங்கள் குலத்தில் இருந்த பல கன்னிகைகளை எனக்குத் திருமணம் செய்தார். அவர்கள் மூலம் பிள்ளைகளும், ஏன் பேரர்களும் எனக்குப் பிறந்து விட்டார்கள். அந்தப் பெண்களிடம் என் மனம் முழு ஈடுபாடு கொண்டிருக்கிறது. அடடா, நான் குந்தியின் மைந்தனா என்ற மகிழ்ச்சியோடு அல்லது வேறு எந்த பயத்தோடோ இந்த உறவுகள் அனைத்தையும் நான் பொய்யாக்க விரும்பவில்லை. நான் துரியோதனனின் உதவி பெற்று பதிமூன்று ஆண்டுகள் எந்தத் தடையும் இன்றி ராஜ்ய சுகம் அனுபவித்தேன். துரியோதனன் என்மீது வைத்த நம்பிக்கையாலேயே ஆயுதம் ஏந்தி பாண்டவர்களை போரிடவும் துணிந்துள்ளான்.

நான் அர்ஜுனனுடன் தனித்து போர் செய்யாவிடின் அது எனக்கும் இழுக்கு. அர்ஜுனனுக்கும் இழுக்கு. என் நன்மைக்காகவே இதை நீங்கள் சொன்னாலும் இதற்கு நான் ஒப்பமாட்டேன். நான்தான் குந்தியினுடைய மூத்த புதல்வன் என்பதை யுதிஷ்டிரர் அறிந்தால் அவர் ராஜ்ஜியத்தை ஏற்க மாட்டார். என்னிடம் கொடுத்து விடுவார். என்னிடம் கொடுத்த ராஜ்ஜியத்தை நான் துரியோதனிடமே ஒப்படைத்து விடுவேன். இது யுத்தமல்ல. மிகப் பெரிய யாகம். க்ஷத்திரியர்களுடைய கொட்டத்தை அடக்க நீ போட்டுள்ள திட்டம்.

துரியோதனனுக்கு பிரியமானதை செய்வதற்காக நான் பாண்டவர்களை கடுமையாக பேசியிருக்கிறேன். அதையெல்லாம் திரும்பப் பெற முடியாது. அர்ஜுனனுடைய கையால் நான் கொல்லப்படப் போகிறேன். பலசாலியான பீமன் துரியோதனனை வதம் செய்யப் போகிறான். மிக மோசமான ஒரு போர் நடக்கும். க்ஷத்திரிய பெண்கள் தலைவிரி கோலமாக அலறியவாறு தங்கள் புருஷர்களுடைய உடலை தேடுவார்கள். என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான். வித்தையில் முதியவர்களும், வயதில் முதியவர்களும் இந்தப் போரில் மரணமடையக் கூடாது. இந்த மகாபாரத யுத்தம் நடக்கும். இந்தப் போரில் ஈடுபட்டோர் புகழும், கதையும் காலம் காலமாய் சொல்லப்படும். பரத கண்டத்தின் பல இடங்களில் இந்த பாரத யுத்தத்தை வர்ணனை செய்வார்கள்.

இந்த நேரம் இதை நடக்கவொண்ணாது எதற்கு என்னை முன்னிலைப் படுத்தி மடை மாற்றுகிறீர்கள். இது ரகசியமாகவே இருக்கட்டும். அர்ஜுனனை நன்றாக தூண்டிவிட்டு போருக்கு அழைத்து வாருங்கள். இதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி.” ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனுடைய பேச்சுக்கு வாய்விட்டு சிரித்தார். ”நான் சொல்லுகின்ற இந்த ஆலோசனையை நீ ஏற்கவில்லை என்றுத் தெரிகிறது. உனக்கு உரிமையான இந்த ராஜ்ஜியத்தை நீ ஏற்க மறுக்கிறாய். இந்தப் போரின் தொடக்கத்திற்கு மிக சொற்ப காலமே இருக்கிறது. அதனால் தான் பதறுகிறேன்.

இதை தடுத்து நிறுத்துகின்ற எல்லா முயற்சியும் நான் செய்துதான் ஆக வேண்டும். தூது வந்ததும், சபையில் அமர்ந்ததும் , என்னை வெளிப்படுத்தியதும் போல உன்னை வசப்படுத்தும் முயற்சியும் செய்கிறேன். நீ நினைப்பதை விட மிக மோசமான போராக இது இருக்கும். யாரெல்லாம் அதி வீரர்கள் என்று நினைக்கிறாயோ அவர்களெல்லாம் அடிபட்டு மரணமடையப் போகிறார்கள். இப்போது அழகிய சுகம் தரும் மாதம் நடக்கிறது. பசுக்களுக்கு புல்லும், எரிப்பதற்கு விறகும் நிறைய கிடைக்கின்றன. பழம், மலர், கீரை போன்றவைகளால் காட்டின் செழுமை பெருகியிருக்கிறது.

தானியங்கள் வயலில் நன்றாக பக்குவப்பட்டிருக்கின்றன. ஈக்கள் குறைந்து விட்டன. பூமியில் சேறு சிறிதளவும் இல்லை. தண்ணீர் சுத்தமாகவும் ருசியுடனும் இருக்கிறது. அதிக குளிரும் இல்லை. அதிக வெயிலும் இல்லை. இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குப் பிறகு அமாவாசை வரப்போகிறது. அப்போதே போர் துவங்கப்படலாம். உன் பக்கத்து மன்னர்களிடம் போய் பாண்டவர்களை வெற்றி கொள்வேன் என்று உரத்துச் சொல். அவர்கள் உற்சாகமடையட்டும்.”

” ஸ்ரீகிருஷ்ணா, நான் மறுதலித்த பிறகு என்னை ஆசிர்வாதம் செய்கிறாய் . மறுதலிப்பேன் என்றுத் தெரிந்தும் பேசுவதற்கு முற்படுகிறீர்கள். இதற்கிடையே எனக்கு ஏன் ஆசை வார்த்தை காட்டுகிறீர்கள். அதில் மயங்கி நான் உங்களை பின் தொடர்வேன் என்று எப்படி நினைத்தீர்கள். நிச்சயம் பெரிய அழிவு ஏற்படும் . மகா ரதிகள் கொல்லப்படுவார்கள். எனக்கு பயங்கரமான கனவுகள் ஏற்படுகின்றன. அபசகுனங்கள் தோன்றுகின்றன.

தீட்சண்யம் உள்ள சனி கிரகம் பிரஜாபதி சம்பந்தமான ரோகிணி நட்சத்திரத்தை பீடித்து அதிகபட்ச துன்பத்தைத் தரப் போகிறார். செவ்வாய் வக்கிர கதி ஆரம்பித்து அனுஷ நட்சத்திரத்திற்குள் நுழையப் போகிறார். இது மன்னர்களையும், அவர் நண்பர்களையும் அழிப்பதாகும். மகா பாதகம் என்னும் கிரகம் சித்திரை நட்சத்திரத்திற்கு துன்பம் அளித்துக் கொண்டிருக்கிறது. இது மன்னர்களின் அழிவைச் சொல்லும். ராகு சூரியனுக்கு அருகே செல்லுகிறது.

யானைகள் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கின்றன. குதிரைகள் கண்ணீர் பெருக்குகின்றன. நிலைகொள்ளாமல் தவிக்கின்றன. துரியோதனனின் சேனை முழுவதும் இந்த அவஸ்தை காணப்படுகிறது. ஆனால் பாண்டவர்களுடைய பிராணிகள் நலமாக இருக்கின்றன. சூரியனைச் சுற்றி கருப்பு வட்டம் வந்துவிட்டது. உதயம், அஸ்தம் இரண்டு வேளைகளிலும் அழிகின்றன. துரியோதனனுக்கும் இந்த உபத்திரங்களெல்லாம் கண்ணுக்குத் தெரிகின்றன. யுதிஷ்டிரர் தங்கப் பாத்திரத்தில் நெய் கலந்த பாயஸத்தை அருந்திக் கொண்டிருப்பதாக கனவு கண்டேன். இந்த ராஜ்ஜியத்தை அவரே அனுபவிக்கப் போகிறார் என்பது உறுதி. அர்ஜுனனுடைய காண்டீபத் தீயில் நாங்களெல்லாம் எரிந்து விடப் போகிறோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ”

ஸ்ரீகிருஷ்ணர் இமை கொட்டாமல் அவனையே பார்த்திருந்தார். ‘‘இதோ இந்தப் புவியின் அழிவு துவங்கி விட்டது என்பதை உன் உறுதியான குரல் மூலம் அறிகிறேன். அதனால்தான் என் வார்த்தை உனக்குப் புரியவில்லை. ஒரு அநியாயத்தை நியாயம் என்று சொல்லுகிறாய். உன்னுடைய கூட்டத்தின் அழிவை தர்மம் என்று சொல்லுகிறாய். நேரம் சரியில்லாத போது நியாயமும், அநியாயமும் ஒரே மாதிரி தெரியும். இதுவும் சரி , அதுவும் சரி என்று பேசப்படும்.” ‘‘போதும் கிருஷ்ணா. இதுவே நீயும் நானும் சந்திக்கின்ற கடைசி சந்திப்பாக இருக்கட்டும். இதற்குப் பிறகு நீயும், நானும் சொர்க்கத்தில் சந்திப்போம்.

இன்று போலவே அமைதியாகவும், இன்னும் ஆனந்தமாகவும் பேசுவோம். பாபமற்ற ஸ்ரீகிருஷ்ணா, போய் வா. ” கர்ணன் கை கூப்பி ஸ்ரீகிருஷ்ணருக்கு விடை கொடுத்தான். ஸ்ரீகிருஷ்ணர் வெளியேற கர்ணன் கை கட்டி வெகுநேரம் தனிமையில் நின்றிருந்தான். ஸ்ரீகிருஷ்ணர் உபப்லவ்யம் நகரை அடைந்தார். ஸ்ரீகிருஷ்ணர் கர்ணனோடு பேசிய பேச்சு தோல்வியடைந்ததை கௌரவர் பக்கம் அறிந்து கொண்டது. விதுரர் கவலைப் பட்டார். ஸ்ரீகிருஷ்ணரே நேரிடையாகப் பேசியும் கர்ணன் கேட்கவில்லையா. இனி அந்த கௌரவர்களின் கதிதான் என்ன, ரத்தச் சேறாகாமல் இந்த பூமியை காப்பாற்ற முடியாதா.

சரியாக உணவில்லாமல், தூக்கமில்லாமல் அல்லாடினார். சட்டென்று குந்தியின் நினைவு வந்தது. தெய்வத்திற்கு அசையாதவன் தாய் பேச்சுக்கு அசைவான். குந்தி கர்ணனிடம் போய் அவனை உன் மகன் என்று சொல்லி பாண்டவர்கள் பக்கம் சேரச் சொல். கர்ணன் தன் பக்கம் இல்லையென்ற பயத்திலேயே துரியோதனன் போரை தவிர்த்து விடுவான். குருகுலம் உயிர் பிழைக்கும் என்று எண்ணினார். குந்தியிடம் போய்ப் பேசினார்.

போரை விரும்பும் குந்தி விதுரர் கேட்டுக் கொண்டதால் கர்ணனிடம் பேச சம்மதித்தாள். துரியோதனனையும், துச்சாதனனையும் கர்ணனை வைத்துக் கொண்டு தண்டிப்பது எளிது என்று எண்ணினாள். கர்ணன் எங்கே இருக்கிறான் என்று ஆட்களை விட்டு தேடச் செய்தாள். கங்கை நதிக் கரையில் சூரிய ஒளியில் குளித்த வாறே கர்ணன் ஜபம் செய்து கொண்டிருக்கிறான் என்றுத் தெரிந்து தேரேறி அங்கு சென்றாள். காற்றில் அசையும் கர்ணனின் மேல் துண்டு நிழலில் அவன் ஜபம் முடிக்கட்டும் என்று அமைதியாக நின்றிருந்தாள். கர்ணன் ஜபம் முடித்தான். மேல் துண்டை தோளில் இழுத்து போர்த்திக் கொண்டான். திரும்பி நடக்க, மிக அருகே குந்தி இருப்பதைக் கண்டான்.

‘‘குந்தி தேவி, நான் ராதா அதிரத தம்பதியினரின் புதல்வன் கர்ணன். தங்கள் பாதங்களை வணங்குகின்றேன். இவ்வளவு தொலைவு என்னைத் தேடி வரும் கஷ்டத்தை ஏன் ஏற்றீர்கள். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும?”; என்று வணக்கம் செலுத்தி பணிவாகக் கூறினான். ‘‘கர்ணா, நீ ராதாவின் மகனல்ல. இந்த குந்தி தேவியின் புதல்வன். நீ சூத குலத்தில் தோன்றியவன் அல்ல. உன் தந்தை அதிரதன் அல்ல. கன்னி வயதில் என் கர்ப்பத்தில் என் மூத்த புதல்வனாகத் தோன்றினாய். உலகத்திற்கு ஒளியும், வெப்பமும் வழங்கிய சூரிய பகவான் உன்னைப் போன்ற வீர மகனை என் கர்ப்பத்தில் தோற்றுவித்தார்.

பிறந்த போதே கவசமும், குண்டலுமும் தரித்திருந்தாய். துரதிருஷ்ட வசத்தால் உன் சொந்த சகோதரர்களோடு அறிமுகமில்லாது திருதராஷ்டிரன் புதல்வர்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறாய். தர்ம சாஸ்திரத்தில் தாயும், தந்தையும் திருப்தியாக இருக்க வேண்டும். அது மகனுடைய கடமை என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த ராஜ்ஜியம் உனக்கு சொந்தமானது. நீ ஆட்சி செய்ய வேண்டியது. கர்ண அர்ஜுன சேர்க்கையை துரியோதனன் பார்க்கட்டும். நீங்கள் இருவரும் பலராமரும், கிருஷ்ணரும் போல ஒளி மிகுந்த பலசாலியாய் திகழுங்கள். தேரோட்டி மகன் என்று உன்னை யாரும் அழைக்கக் கூடாது.”

குந்தியின் பேச்சுக்கு கர்ணன் கை கொட்டி வாய் பொத்தி சிரித்தான். ‘‘பால் மணம் மாறா பருவத்திலிருந்த என்னை நீரில் எறிந்துவிட்டு இப்போது நீங்கள் பேசும் நியாயம் சிரிப்பாக இருக்கிறது. எனக்கு வரவேண்டிய புகழையும், ராஜ்ஜியத்தையும் என் தாயே அழித்தாள். க்ஷத்திரிய குலத்தில் பிறந்தாலும் நான் தேரோட்டி என்றுதான் அழைக்கப்பட்டேன். என் பகைவன் கூட இவ்வளவு பெரிய துரோகத்தை எனக்கு செய்திருக்க முடியாது. இதை செய்துவிட்டு உன்னைப் பெற்ற தாய் என்று எப்படி கூறிக் கொள்கிறாய். இதுவரை எனக்காக ஏதாவது செய்திருக்கிறாயா, இன்று உன்னுடைய நன்மைக்காக எனக்கு தாயாய் நின்று உபதேசம் செய்கிறாய்.

ஸ்ரீகிருஷ்ணனோடு சேர்ந்த அர்ஜுனனிடம் எந்த வீரன் பயப்படவில்லை. நான் இப்போது பாண்டவர்களோடு சேர்ந்தால் நானும் பயந்தவனாகி விட மாட்டேனா.
திருதராஷ்டிரனின் புதல்வர்கள் அடையாளமற்ற எனக்கு எல்லா விதத்திலும் உயர்வு கொடுத்திருக்கிறார்கள். தங்களுக்கு இணையாக நடத்தி கௌரவம் கொடுத்திருக்கிறார்கள். என்னை படகாக்கி போர் என்னும் சமுத்திரத்தை கடக்க நினைக்கிறார்கள். இந்த ஆபத்து நேரத்தில் அவர்களை நான் எப்படி கை விடுவேன். ஒரு மனிதன் செய்த உபகாரங்களைப் பார்க்காமல் அவனுக்கு துரோகம் செய்வது கடவுளின் அன்னத்தை திருடுவனுக்கு நிகராவான். அவனுக்கு இந்த லோகத்திலும் சுகம் இல்லை.

பரலோகத்திலும் சுகம் இல்லை. என் பலம் முழுவதும், சக்தி முழுவதும் திருதராஷ்டிரன் புதல்வர்களுக்காக ஏற்பட்டது. அந்த சக்தியை வைத்து உன் புதல்வர்களோடு போரிடுவேன். இதில் என்ன லாபம் வந்தாலும் இந்த இடத்தை விட்டு நீங்க மாட்டேன். உன் கட்டளையை ஏற்க மாட்டேன். ஆனால் நீயாக வந்து நீ என் புதல்வன் என்று சொல்கிறாய். ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள் என்கிறாய். உன்னுடைய இந்த கருணைக்காக உனக்கு ஒரு உதவி செய்கிறேன். இந்தப் போரில் அர்ஜுனனைத் தவிர மற்ற நால்வரை கொல்ல மாட்டேன்.

போரில் அர்ஜுனன் இறந்து போனால் என்னோடு சேர்த்து உனக்கு ஐந்து புதல்வர்கள். நான் இறந்து போனால் அர்ஜுனனோடு சேர்த்து ஐந்து புதல்வர்கள். இந்தப் போரால் உனக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று சொல்லி கேலியாகச் சிரித்தான். குந்தி தேவி மனம் நடுங்கினாள். முன்னேறி கர்ணனை அணைத்துக் கொண்டாள். கர்ணனின் இறப்போ, அர்ஜுனன் இறப்போ அவளுக்கு தாங்க முடியாததாக இருந்தது. ‘‘கர்ணா, நீ சொன்ன வாக்கை காப்பாற்று.

அர்ஜுனன் தவிர மற்ற நால்வருக்கு எந்த ஹானியும் உண்டாக்காதே. மற்றவை விதிப்படி நடக்கட்டும்.” கங்கைக் கரையிலிருந்து பிரிந்து அவர்கள் இருவரும் தத்தம் இடத்திற்கு போனார்கள். (போர் நடக்கின்ற நேரத்தில் குந்தி இந்த வரத்தை கேட்டதாக சில கதைகள் சொல்கின்றன. ஆனால் யுத்தம் ஆரம்பிக்கின்ற ஏழு நாட்கள் முன்பே கங்கைக் கரையில் பகல் முழுவதும் சூரிய ஜபம் செய்து ஜொலித்துக் கொண்டிருந்த கர்ணனிடம் இந்த யாசகத்தை குந்தி கேட்டாள். இது கௌரவர்களுக்கு பலவீனமாகத்தான் அமைந்தது.)

- பாலகுமாரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்