SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்காத செல்வம் அருள்வாள் அங்காள பரமேஸ்வரி

2019-03-18@ 17:31:31

நம்ம ஊரு சாமிகள் : மேல் மலையனூர் - செஞ்சி

முன்பு சிவனைப்போன்று பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. ஐந்து தலையுடன் இருந்த பிரம்மன், ஒரு சமயம் கயிலாயம் வந்தார். அப்போது தூரத்தில் இருந்து பார்த்த பார்வதிதேவி, சிவன் தான் வருகிறார் எனக்கருதி எழுந்து நின்று மரியாதையுடன் வணங்கி நின்றாள். பிரம்மன் நகைத்தார். அருகில் வந்ததும் தான் தெரிந்தது அது சிவனல்ல, பிரம்மன் என்று. தான் அறியாது செய்ததை ஆணவமாக எடுத்துக் கொண்டு ஏளனமாக பிரம்மன் சிரிக்கிறாரே என்று சினம் கொண்ட சிவசக்தி, சிவனிடம் நடந்தைக்கூறி முறையிட்டாள்.ஆத்திரம் கொண்ட ஆதிசிவன் பிரம்மனின் 5வது தலையை வலது கரத்தால் கொய்தார். சிரசு கொய்யப்பட்ட பிரம்மன் அலறினான். அந்நேரம் நான்முகன் நாயகி மீட்டுக்கொண்டிருந்த வீணையின் தந்தி அறுபட்டது. ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததை உணர்ந்த வாணி, விழிகளை மூடி ஞானத்தால் நோக்க, கயிலையில் நடந்த சம்பவம் அவள் முன் வந்து சென்றது.

வேகம் கொண்டு எழுந்தாள் வேதவாணி, கயிலையை அடைந்தாள். அங்கே ஐந்து தலையில் ஒன்று கொய்யப்பட்டு நான்கு தலையுடன் மயங்கி கிடந்த தன் பதியைக் கண்டு கதறினாள் கலைவாணி. பிரம்மனிடமிருந்து கொய்யப்பட்ட தலை, சிவனின் வலக்கையில் ஒட்டிக்கொள்ள, கைகளில் பிரம்ம கபாலத்துடன் நின்று கொண்டிருந்தார் கயிலை நாதன். ‘‘வேத சொரூபமான என் கணவரின் சிரசைக் கொய்த சிவனே, உம்மை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும். நீர், இனி உண்ண, அன்ன ஆகாரமற்று சுடுகாட்டுச் சாம்பலை மேனியெங்கும் பூசிக்கொண்டு, பிணத்தை உண்டு திரியுங்கள். உறைந்த ரத்தத்தை உறிஞ்சி தாகம் தணித்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பித்தனாக, ஒரு கோட்டியாக அலைவீர். மாட்டை வாகனமாக்கி அதன் மேலேறி சுடலையை சதா வலம் வரும் மாடனாக போக கடவீர்’’ என்று ஆக்ரோஷமாக சாபமிட்டாள். ஈசன் யாதும் உரைக்காமல் சிலை போல் நின்றார் கலைமகள் முன்னே. வெண்ணிற ஆடைக்காரி, சினம் நிறைந்த செந்நிறக்கண்களோடு அவ்விடம் விட்டு புறப்பட்டாள். எதிரே தென்பட்டாள் எழிலரசி பார்வதிதேவி.

‘‘என் பதி உனைப்பார்த்து நகைத்தார் என்பதற்காக, அவரின் சிரத்தை பலியாக கேட்டவளே, அழகம்மையே உன் அழகு இன்றோடு கெட்டு, கோர முகம் கொண்டு, கோரைப்பல்லும், கொடுஞ்சடையும் தரித்து வனத்தில் திரியக்கடவாய். உன் பதியோடு சரீரத்தை பாதியாக கொண்டவளே, இனி இருவரும் இணையாது வேறு வேறு திக்குகளில் திரிவீர்கள். கொக்கின் சிறகும், மயிலின் சிறகும்தான் இனி உடை. உன், தாதிப் பெண்கள் பூதகணங்களாக மாறட்டும். ஆடும், கோழியும் உனது உணவாகட்டும், புழுங்கலரிசி சாதத்தோடு முட்டையும், முருங்கையும் படையலாகட்டும். என சர்வலோகேஸ்வரியான பார்வதிதேவியை சபித்துவிட்டு வெறிபிடித்தது போல் அலறினாள் வேதநாயகி. பிரம்ம கபாலத்தை திருவோடாக ஏந்திய நீலகண்டன், தாகம் அதிகரிக்க  நாக்கைத்துருத்தி வெளியே நீட்டிக் கொண்டு பித்து பிடித்தவர்போல் கயிலையை விட்டு வெளியேறி ஆதாளி போட்டுக்கொண்டு பூலோக மயான காட்டுக்கு வந்தார். உருக்குலைந்த உமையன்னை, கோர உருவம் தாங்கி, தலைவிரி கோலமாய் புறப்படலானாள். மலைகளிலும், வனங்களிலும்  அலைந்து திரிந்தாளே மலைமகள்.

நாரதர் மூலம் நடந்ததை அறிந்த நாராயணன், தங்கையின் நிலை கண்டு, அவளுக்கு உதவு முன்வந்தார். கானகம் வருகிறார். அக்னி மலையான அண்ணாமலை அருகே இருக்கும் மலையோர பகுதிக்கு வருகின்றனர். அவ்விடம் வந்த சிவனின் நிலை கண்டு மனம் பதைக்கிறாள் மகமாயி. அண்ணனை அழைக்கிறாள். தங்கையின் குரல் கேட்டு அண்ணன் மகாவிஷ்ணுவும் வருகிறார். பசியோடு இருக்கும் சிவனுக்கு உணவு கொடுக்க வேண்டும். வலக்கரத்தில் பிரம்மனின் தலை ஒட்டிக்கொண்டிருப்பதால் அவரால் உண்ண முடியாது என்பதால். மயான காட்டில் நின்ற பனை மரத்தின் ஓலையால் பட்டை பிடித்து அதனுள் மூன்று கவளமாக உணவை உருட்டி, சிவனுக்கு ஊட்ட முன்வந்தாள். அவரின் வலக்கர்த்தில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்ம கபாலம் அதை உண்டு விட்டு, மீண்டும் வந்து சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. இரண்டாவது கவளம்(உருண்டை) கொடுக்கும் போதும் முன்பு போலவே நடந்தது. மூன்றாவது கவளம் கொடுக்கும் முன் பராசக்தி, மகா உருவம் கொண்டு எழுந்தாள்.

மூன்றாவது கவளத்தை சிவனுக்கு ஊட்டுவது போல் பாவனை செய்து கீழே போட்டாள் பவானி. பிரம்ம கபாலம் தரையில் சென்று அந்த உணவை உட்கொள்ள அந்த நேரம் உமையவள் தனது காலால் அந்த கபாலத்தை மிதித்து பூமியோடு சேர்த்து மண்ணோடு மண்ணாக்கினாள். தோஷம் கலைந்தது. உமையவள் சிவனாரிடம் தன்னை கயிலாயம் அழைத்துச் செல்லுமாறு கூற, அவரோ உன் கோர உருவம் மாறட்டும். அதன் பின் அழைத்துச் செல்கிறேன் என்று பதிலுரைத்தார்.‘‘கோர உருவம் மாற என்ன செய்யவேண்டும் என கோரினாள்’’ பார்வதி தேவி அண்ணன் மகாவிஷ்ணுவிடம். அவர், ‘‘திருவண்ணாமலை சென்று அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி வா கோர ரூபம் மாறும்.’’ பின்னர் மலையாரம் ஏரியுடன் கூடிய நந்தவனம் ஒன்று இருக்கும். அங்கே ஈசனை நினைத்து தவமியற்று, நினைத்தது நிறைவேறும். பரமன் வந்து உன்னை ஏற்றுக்கொள்வார். இருவரும் இணைவீர்கள் என்றார். அதன் படி திருவண்ணாமலை சென்றாள் திரிபுரசுந்தரி. பிரம்ம தீர்த்தத்தில் நீராடினாள் தன் சுய ரூபம் அடைந்தாள்.

பின்னர் அண்ணாமலையிலிருந்து மலையோரம் நடைபயின்றாள். மகாவிஷ்ணு ஒளியாய் மிளிர்ந்து மலையோரம் ஒரு நந்தவனத்தை காட்டி மறைந்தார். அங்கே ஒரு ஏரியும் இருந்தது. ஏரிக்கரையை ஒட்டிய கிராமம் அது. மலை அருகே இருந்த ஊர் என்பதால் மலையனூர் எனப்பெயர் பெற்றது. பர்வத ராஜ குலத்தவர்கள் அங்கே இருந்தனர். இந்த வனத்தில் தான் தவமியற்ற வேண்டும் என்று எண்ணிய தேவி, முன்னதாக அங்குள்ள ஏரியில் நீராடினாள். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த தாசன் என்பவன் தனது நான்கு மகன்களோடு வலைகளை தோளில் போர்த்திக் கொண்டு மீன் பிடிக்க கிளம்பினான். வலையை நீரில் வீசினான். முன்னதாக அந்த ஏரியில் மூழ்கியிருந்தாள் பார்வதிதேவி. அவள் மேல் அந்த வலை விழுந்தது. வலையை இழுத்தான் தாசன். பெரிய மீன் அகப்பட்டதாக ஆனந்தம் கொண்டான். வேகம் கொண்டு வலையை இழுத்த தாசன், இழுக்க முடியாமல் உறவினர்களையும் உதவிக்கு அழைத்தான்.  வலையை இழுக்க போராடும் மீனவர்களிடம் தேவி பேசினாள்.

‘‘மூன்று கற்கள் தருகிறேன். ஒன்று ஞானக் கல். மற்றொன்றை நீரில் வீசுங்கள். வலை நீண்டு மீன்கள் சிக்கும். மூன்றாவதை நீரில் கரைக்க மீன்கள் பெருகும் ’’ என்றாள். அதன்படி இரண்டாவது கல்லை நீரில் வீச, வலை நீண்டு மீன்கள் சிக்கியது. கூடைகள் நிரம்பின. மூன்றாவது கல்லை நீரில் கரைக்க, மீன்கள் பெருகியது.  பின்னர் ஏரியை விட்டு வெளியேறிய தேவி, அந்த வனத்தில் தவமிருக்க அமர்ந்தாள். ஏரியிலிருந்து வெளியேறிய பார்வதிதேவி அப்பகுதியில் வந்தமர்ந்தாள். தோஷம் நீங்கிய சிவனார் தன்னை மணம் புரிய வேண்டும். கயிலாயம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அரனாரை வேண்டி தவமிருந்தாள். இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ஏய் பெண்ணே இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு” என்று எச்சரித்தான்.

“மகனே இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா. நான் இங்குதான் தவம் செய்வேன்” என்று சொன்னாள் பராசக்தி. அதற்கு அந்த காவலன், “ஏதோ உனக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். அதான் பாவம் இங்கு வந்து மாட்டிக்
கொண்டாய்” என்றான். அப்போது உமையவள், நாகமாக உருமாறினாள். சூறைக்காற்றை வீசச் செய்து புற்றாக்கி அதனுள் அமர்ந்து கொண்டாள். அந்த பலவேசக்காரி. அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். நந்தவனத்தில் திடீர் புற்று உருவானதை அறிந்த மக்கள் அதிசயித்தனர். புற்றை பலர் வந்து பார்த்தார்கள். இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்” என்று உத்தரவிட்டான்.

புற்றை இடிப்பது பெரும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவில்லை அரசர். இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் பூந்தோட்டத்தில் இருந்த புற்றை உடைக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த தாசன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான். புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள். அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் தாசன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது. இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். இதுக்கெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன், அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான்.

உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது. கை வேலை செய்யவில்லை. இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான். அப்போது பராசக்தி பேசினாள் அசரீரியாக ‘நான் சரஸ்வதியின் சாபத்தால் இங்கிருக்கிறேன். என்னை பூஜித்து வாருங்கள். சந்திர சூரியர் உள்ளவரை உங்கள் பரம்பரையை நான் பாதுகாக்கிறேன்’’ என்றாள். தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன். சிவனோடு இணைவதற்காக தேவி தவமிருக்கும் இடம். இணைதல் என்றால் அங்காளம் என்று பொருள். தவத்தால் பரமனுடன் இணைந்த ஈஸ்வரி என்பதால் அங்காள பரமேஸ்வரி எனப்பெயர் பெற்றாள். அங்கு என்றால் புற்று. காளம் என்றால் பாம்பு. புற்றுக்குள் பாம்பாக நின்றவள் என்பதால் அங்காளம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.

மலையனூரில் உள்ள மீனவர்கள் அங்காளம்மனுக்கு கோயில் கட்டினார்கள். அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள். இன்றும் மேல்மலையனூரில் வலப்பக்கத்தில் ஈசன் அமர்ந்திருக்க, தன் பாதத்தில் பிரம்ம கபாலத்தின் தலையை அழுத்தியபடி உக்கிரம் பெருக்கி அங்காளம்மன் அமர்ந்திருக்கிறாள். சுடுகாட்டுக்கு மத்தியில் திவ்ய தம்பதியர் தழலாய் அமர்ந்திருக்கிறார்கள். மயானக் கொள்ளையும், ஆடிவெள்ளியும், மாசித் தேர் திருவிழாவும் இங்கு மிகப் பிரசித்தம். சுடுகாட்டுச் சாம்பலும், புற்று மண்ணும், குங்குமமும்தான் இங்கு பிரசாதமாய் வழங்குகின்றனர். இத்தலம் திண்டிவனம் செஞ்சி சாலையின் நடுவே பிரியும் சாலையிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில் உள்ளது மேல்மலையனூரில் அமைந்திருக்கிறது.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 02-05-2021

  02-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்